Thursday, March 10, 2016

அன்புமணியாகிய நீங்கள்…




மாப்பிள்ளை தயாராக இருக்கிறார். மண்டபம், புரோகிதர், மாலை, தாலி எல்லாம் தயார். பெண் பார்க்க வேண்டியதுதான் பாக்கி. பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸின் நிலை அப்படித்தான் இருக்கிறது.

தேர்தல் களத்தில் முதலில் களமிறங்கியவர்களில் ஒருவர் என்று அன்புமணியைச் சொல்லலாம். தேர்தலுக்குச் சுமார் பத்து மாதங்களுக்கு முன்பே பா... அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. தமிழகத் தேர்தலைப் பொறுத்தவரை பிரதான கவனம் தி.மு.., .தி.மு.. ஆகிய இரு கட்சிகளின் மீதே விழும். பிற கட்சிகள் இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சியோடு சேரும் என்பது பற்றிய யூகங்கள் புழங்கும். கூட்டணி அமையாத நிலையிலேயே பெரும்பாலான கட்சிகள் தனித்து நிற்கின்றன.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என முடிவெடுத்த பா..., திட்டவட்டமான நடவடிக்கைகளுடன் களமிறங்கியது. தி.மு.., .தி.மு.. ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டது. கட்சியின் தேர்தல் முகமாகக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸை முன்னிறுத்தியது. ‘மாற்றம் முன்னேற்றம்என்னும் கோஷத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியது. மதுவிலக்கைத் தேர்தல் ஆயுதமாக மாற்றியது. பா...வின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று தெளிவாகச் சொன்னது.

தேர்தல் வியூகம் என்னும் முறையில் இவை அனைத்துமே முக்கியமான நகர்வுகள்தாம். ஆட்சி அமைப்போம் என்று சொன்னால் மட்டும் போதாது. பிற நடவடிக்கைகளும் அதற்கு இசைவாக இருக்க வேண்டும். அந்த வகையில், இரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றும் தங்கள் முதல்வர் வேட்பாளர் இன்னார் என்றும் இவரை ஏற்றுக்கொள்பவர்களுக்கே எங்கள் கூட்டணியில் இடம் என்றும் அறிவித்தது தெளிவான காய் நகர்த்தல் என்பதில் சந்தேகமில்லை.

பா... இளம் வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் அவர்கள் எங்களைத்தான் ஆதரிப்பார்கள் என்றும் சொல்லும் அன்புமணி 140 தொகுதிகளில் வெல்வோம் என்று புன்னகை மாறாமல் சொல்கிறார். இந்தத் தன்னம்பிக்கைப் பேச்சும் முக்கியமானதுதான். வெல்லக்கூடிய கட்சிக்கே வாக்களிப்பது பெருவாரியான மக்களின் பழக்கம். எனவே நாங்கள் வெல்வோம் என்பதை அழுத்தம் திருத்தமாகத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியது அவசியம். பொது உளவியலில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய செயல்களை அன்புமணி சரியாகவே செய்துவருகிறார்.

விசித்திரமான சதுரங்கம்

அரசியல் சதுரங்கம் சற்று விசித்திரமானது. சரியாகக் காய்களை நகர்த்துவதாலேயே அங்கு வெற்றி கிடைத்துவிடுவதில்லை. அன்புமணியின் கனவு நிறைவேற வேண்டுமென்றால் இத்தனையையும் தாண்டிச் சில அதிசயங்கள் நிகழ வேண்டும். தலா 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை வைத்துக்கொண்டு மாபெரும் சக்திகளாக இருந்துவரும் இரு திராவிடக் கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டுமென்றால் 20 சதவீதம் என்னும் மந்திரக் கோட்டைத் தொட்டாக வேண்டும். இதுவரை ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத பா...வின் வாக்கு சதவீதம் எப்படி இந்தச் சாதனையை நிகழ்த்தப்போகிறது?

இரு திராவிடக் கட்சிகளின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஏமாற்றம், இளைஞர்களின் வாக்கு ஆகிய இரு அம்சங்களை அன்புமணி உறுதியாக நம்புவதாகத் தெரிகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான இளைஞர்களின் வாக்குகள் நரேந்திர மோடிக்குக் கிடைத்தபோது அவை மாற்றத்துக்கான வாக்குகளாகவே பார்க்கப்பட்டன. அத்தகைய வாக்கையே அன்புமணியும் நம்புவதாகத் தெரிகிறது. மோடியின் பாணியிலேயே பா...வும் தனிநபரை முன்னிறுத்தி, வசீகரமான கோஷங்களை முன்வைத்து, மாற்றத்துக்கான தூதுவனாக அன்புமணியைச் சித்தரிக்கிறது. பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியிலிருந்து மாற்றத்தை மக்கள் விரும்பியபோது மோடியை முன்னிறுத்திய வியூகம் பலன் தந்தது. ஆனால், தேசிய அளவில் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான பா...வின் பக்கம்தான் மக்கள் சாய்ந்தார்கள். மூன்றாவது சக்தியை நாடவில்லை. தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளின் மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் மூன்றாவது கட்சியின் மீது கவனத்தைத் திருப்புமளவுக்கு அந்த அதிருப்தி இருக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி.

சாதியும் பண்பாடும்

இதைவிடவும் முக்கியமான பிரச்சினை ஒன்று இருக்கிறது. எவ்வளவுதான் மறுத்தாலும் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான கட்சி, சாதி ஆதிக்க உணர்வுள்ளவர்கள் நிரம்பிய கட்சி என்னும் படிமத்தைப் பா...வால் போக்க முடியவில்லை. பண்பாட்டுரீதியிலும் அக்கட்சியின் போக்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பொருளாதாரம், நிர்வாகம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, ஊழலை ஒழித்தல் ஆகிய விஷயங்களில் ஆக்கபூர்வமான மாற்றங்களைப் பற்றிப் பேசும் அக்கட்சி, காதல் முதலான பண்பாட்டு விஷயங்களில் பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகளையே முன்வைக்கிறது. தமிழர்களுக்கான உணவு, உடை, பொழுதுபோக்கு முதலானவற்றைக் கறாராக வரையறுக்கத் தலைப்படுகிறது. பண்பாட்டு அம்சங்களைக் கறாராக வரையறுத்தல் பாசிசப் போக்கு என்பது அரசியலின் அரிச்சுவடிப் பாடங்களில் ஒன்று. அத்தகைய குரலை வெளிப்படுத்துபவர்கள் ஆட்சியைப் பிடிக்க முனையும்போது அச்சம் ஏற்படுவது இயல்பானது.

பா... சாதிக் கட்சி அல்ல என்பதை அன்புமணி வலியுறுத்திச் சொல்கிறார். மூத்த தலைமுறையினரின் உணர்வுகளும் நம்பிக்கைகளும் எளிதில் மாற்ற முடியாதவை என்பதைத் தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும்போது ஒப்புக்கொள்ளும் அவர், தன்னுடைய அணுகுமுறை அப்படி இருக்காது என்று வாக்களிக்கிறார். ஆனால் அவரும் அமர்ந்திருக்கும் மேடைகளில் காடுவெட்டி குரு போன்றவர்கள் வெளிப்படுத்தும் சாதித் துவேஷமும் பெண் வெறுப்பும் பண்பாட்டு பாசிசமும் அன்புமணியின் கூற்றை நம்பவிடாமல் தடுக்கின்றன.

தீவிரமான குரலுடன் தன் பயணத்தைத் தொடங்கும் எந்தக் கட்சியும் பொது வெளியில் சட்டெனக் கவனம் பெற்றுவிடுவது இயல்புதான். 30 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியர் சங்கத்தின் சார்பில் மு. இராமதாஸ் எழுப்பிய தீவிரமான குரலும் முன்னெடுத்த அதிரடிப் போராட்டங்களும் மக்களின் கவனத்தை அப்படித்தான் ஈர்த்தன. பல்வேறு அனுபவங்களுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. தேர்தல் களத்தில் தனக்கு இருக்கும் ஆதரவைக் கட்சி பலமுறை நிரூபித்திருக்கிறது. சாமர்த்தியமான அரசியல் வியூகங்கள் மூலம் மத்திய ஆட்சியிலும் பங்குபெற்றது. தலித் விரோதக் கட்சி என்னும் களங்கத்தைப் போக்கிக்கொள்ளக் காத்திரமான பல செயல்பாடுகளையும் ஒரு கட்டத்தில் முன்னெடுத்தது.

இப்போது ஆட்சி அமைக்கும் தீவிரமான முனைப்புடன் களம் இறங்கியிருக்கிறது. ஒரு கட்சியின் பயணத்தில் இது மிக முக்கியமான கட்டம். மாற்று சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் களத்தில் தோற்க அஞ்சுபவர்களால் என்றுமே வெல்ல முடியாது.

ஆனால் வியூகங்களால் மட்டும் கனிந்துவிடுவதல்ல வெற்றி. தீவிரப் போக்குள்ள எந்தக் கட்சியுமே தங்கள் நிலைப்பாடுகளை நெகிழ்த்திக்கொள்ளாமல் வெகுஜன இயக்கங்களாகப் பரிணாமம் பெற்றதில்லை. நவீன வாழ்க்கை நமக்கு வசதி வாய்ப்புகளை மட்டும் தரவில்லை. சமத்துவத்துக்கான உத்தரவாதத்தையும் வழிமுறையையும் தந்திருக்கிறது. அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத எந்தக் கட்சியும் மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற முடியாது. அப்படிப் பெற்றாலும் அது நீடிக்காது.

அன்புமணிபதவிப் பிரமாணம்எடுத்துக்கொள்ளும் காட்சி தமிழகத்தின் சுவர்களையும் செய்தித்தாள்களின் பக்கங்களையும் அலங்கரிக்கின்றன. அந்தப் பிரமாணங்கள் மது, நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றைப் பேசுகின்றன. சாதி மேலாதிக்கம் பற்றிப் பேசவில்லை. பண்பாட்டு அடிப்படைவாதம் பற்றியும் பேசவில்லை. மக்கள் ஊழலற்ற, போதையில் தள்ளாடாத மாநிலத்தை மட்டுமல்ல, சாதி மேலாதிக்க உணர்வும் வன்முறையும் அற்ற தமிழகத்தையே விரும்புகிறார்கள். இவை குறித்து அன்புமணி ஆகிய நீங்கள் செய்ய விரும்பும் பிரமாணங்கள் என்ன? உங்கள் கட்சிக்குள்ளேயே எழும் சாதி, இனவாதக் குரல்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? மிக முக்கியமான இந்த விஷயங்களில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரியாமல் மக்கள் எப்படி உங்கள் பின் அணி திரளுவார்கள்?

No comments:

Post a Comment