Saturday, February 17, 2018

ஜே. கிருஷ்ணமூர்த்தி: பாதையற்ற நிலத்தின் பயணி


ஆன்மிக குருமார்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் பஞ்சமில்லாத நாடு இந்தியா. இந்த மண்ணில் பிறந்த மரபார்ந்த தத்துவ ஞானிகளில் ஒருவரல்ல, ஜே.கே. என்று அறியப்படும் ஜித்து கிருஷ்ணமூர்த்தி. இந்திய தத்துவ மரபின் எந்தப் பிரிவுக்குள்ளும் வகைப்படுத்தப்பட முடியாதவர்.
அவர் யோகியோ முனிவரோ அல்ல. குருவோ மடாதிபதியோ அல்ல. எந்தத் தத்துவத்தையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், 20-ம் நூற்றாண்டின் முக்கியமான தத்துவ ஞானிகளில் ஒருவராக உலகம் முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார்.
எந்த நூலையும் யாருடைய வார்த்தையையும் மேற்கோள் காட்டாமல் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் (அல்லது பொருளின்மை) பற்றியும் பேசியவர் கிருஷ்ணமூர்த்தி. உண்மையைத் தேடும் யாத்திரையை ஒவ்வொருவருக் குள்ளும் சாத்தியப்படுத்தும் வழிமுறை அவருடையது. கவித்துவமான சொற்களில் தன் எண்ணங்களை இயல்பாக வெளிப்படுத்தியவர்.
முக்கியமான அறிவியலாளர்களும் தத்துவச் சிந்தனை கொண்டோரும் படைப்பாளிகளும் அவரை மதிக்கிறார்கள். அவர் உயிரோடு இருந்தபோது சாமானிய மனிதர்களிலிருந்து அறிவுஜீவிகள், அறிவியலாளர்கள்வரை பலரும் அவரோடு தொடர்ந்து உரையாடிவந்தனர். அவர் மறைந்த பின்பும் அவரது உரையாடல்களின், உரைகளின் பதிவுகள் ஆழ்ந்த அக்கறையோடு கேட்கவும் படிக்கவும்படுகின்றன.
பீடங்களைத் தவிர்த்த பயணம்
ஜே. கிருஷ்ணமூர்த்தி 1895-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் (அன்றைய மதராஸ் மாகாணம்) உள்ள மதனபள்ளி என்னும் சிற்றூரில் பிறந்தார். அவரையும் அவரது சகோதரரையும் தியாசஃபிகல் சொசைட்டியின் தலைவராக இருந்த டாக்டர் அன்னிபெசன்ட் தத்தெடுத்து வளர்த்தார். தத்துவ ஞானிகளின் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் உலக குரு கிருஷ்ணமூர்த்திதான் என்று அன்னிபெசன்ட்டும் அவரது நண்பர்களும் அறிவித்தார்கள்.
அத்தகைய மகானின் வெளிப்பாட்டுக்கு உலகைத் தயார்ப்படுத்துவதற்காக உலகளாவிய ஓர் அமைப்பை (ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்) நிறுவி இளம் கிருஷ்ணமூர்த்தியை அதன் தலைவராக நியமித்தார்கள்.
பின்னாளில், பல்வேறு படிமங்களையும் பீடங்களையும் அதிகாரக் கோட்பாடுகளையும் கலைக்கவிருந்த இளம் கிருஷ்ணமூர்த்தி, 1929-ல் அந்தப் பதவியைத் துறந்தார். பெரிய அளவில் ஆதரவாளர்களையும் ஏகப்பட்ட சொத்துகளையும் கொண்டிருந்த அந்த அமைப்பையும் கலைத்தார். அதன் பிறகு, 1986 பிப்ரவரி 17-ல் மரணம் அடைவதுவரையிலும் சுமார் 60 ஆண்டுகள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். மனித இனத்தில் தீவிரமான மாற்றங்கள் நிகழ வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசிவந்தார்.
கிருஷ்ணமூர்த்தி என்ன சொன்னார்? அவர் எதையுமே சொல்லவில்லை என்று சொல்லலாம். எதையும் சொல்ல வில்லை. எதையும் கற்றுத்தரவில்லை. எந்தத் தத்துவத்தையும் கண்டுபிடிக்கவோ நிறுவவோ இல்லை. பிறகு எப்படி அவர் முக்கியமான தத்துவ ஞானியாகப் பார்க்கப்படுகிறார்?
கிருஷ்ணமூர்த்தி தெளிவாகப் பார்க்கச் சொல்கிறார். அதையும் அவர் கற்றுத்தருவதில்லை. பார்க்க உதவுகிறார். எதைப் பார்க்க உதவுகிறார்?
எல்லா ஞானிகளையும் மார்க்கதரிசிகளையும் போலவே அவரும் மனித துக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். துயரம், அவலம், பகைமை, பொறாமை, வன்முறை, நிம்மதியின்மை, துரோகம், மதம், சேவை, கள்ளத்தனம், அதிகாரம், மோசடி, தியாகம், உன்னதம் என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார். அவரிடம் வருபவர்கள் தங்கள் கேள்விகளையும் குறைகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர் உரைகளிலும் உரையாடல்களிலும் இவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். ஆனால், எந்தத் தீர்வையும் அவர் தருவதில்லை.
இவற்றையெல்லாம் நாம் அணுகும் விதத்திலேயே பிரச்சினை இருக்கிறது என்கிறார். நமக்கு உவப்பற்ற விஷயங்களை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் அணுகுமுறையில் பிரச்சினை இருக்கிறது என்கிறார். என்ன இருக்கிறது என்பதைப் பார்க்காமல் என்ன இருக்க வேண்டும் என்பதையே பார்த்துக்கொண்டும் யோசித்துக்கொண்டும் இருப்பதன் விபரீதத்தை அடையாளம் காட்டுகிறார்.
மோதல்கள் பற்றிப் பேசுகிறார். வெவ்வேறு மனிதர் களுக்கிடையிலும் இனக் குழுக்களுக்கிடையிலும் சமூகங்களுக் கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் இருக்கும் மோதல்கள் பற்றி மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் மோதல்கள் பற்றியும் பேசுகிறார். நாம் எதிர்மறையானது என்று நினைக்கும் ஒன்றின் இருப்பைப் போக்குவதாலோ அதை மாற்றுவதாலோ இந்த மோதல் இல்லாமல் ஆகிவிடாது என்கிறார். மாறாக, இத்தகைய முயற்சியால் அந்த மோதல் அதிகரிக்கவே செய்யும் என்கிறார். மாற்ற வேண்டும் என்ற முயற்சியே மோதலுக்கு வழிவகுக்கும் அல்லது மோதலை அதிகரிக்கும் என்கிறார் ஜித்து.
எனில், நம்மைத் துன்புறுத்தும் விஷயங்களை என்னதான் செய்வது? பாருங்கள் என்கிறார் ஜே.கே. நன்றாகப் பாருங்கள், அதன் சகல அம்சங்களையும் அவற்றின் வேர்களோடும் கிளைகளோடும் கண்டு உணருங்கள் என்கிறார். இந்த ஆழமான அறிதல் அல்லது உணர்தலே தேவை. இந்த உணர்தல் மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிறார். மாற்ற வேண்டும் என்னும் முயற்சி மோதலைத்தான் கொண்டுவரும். ஆகவே, நாம் செய்ய வேண்டியது நம்மைப் பற்றியும் நமது சூழலைப் பற்றியுமான நமது புரிந்துகொள்ளலை, விழிப்புணர்வை ஆழமாக்கிக்கொண்டே போவதுதான்.
சுய படிமங்கள் அற்ற, சுயநலம் அற்ற, உரிமைகோரல்கள் அற்ற, அதிகார வேட்கை அற்ற, வசதியைக் கருத்தில் கொள்ளாத நிஜமான விழிப்புணர்வாக, புரிந்துணர்வாக இது அமைய வேண்டும். இது இயல்பான மாற்றங்களை நமக்குள் ஏற்படுத்தும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
உரையாடல் என்னும் தரிசனம்
கிருஷ்ணமூர்த்தியைப் போல உரையாடியவர்கள் அரிது. கேள்விகளை எதிர்கொண்டவர்களும் அரிது. ஆனால், கேள்விகளுக்குப் பதிலளிப்பது தன் வேலை அல்ல என்று அவர் கருதுகிறார். ஆனாலும் அவரிடம் பேசுபவர்களுக்குத் தங்கள் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கவே செய்கின்றன. இது எப்படிச் சாத்தியம்?
கேட்டவரிடமிருந்தே பதில்கள் வருகின்றன. கிருஷ்ணமூர்த்தி கேள்விகளுக்குப் பதிலாகக் கேள்விகளையே முன்வைப்பார். எனக்குக் கோபம் அதிகமாக வருகிறது, இதுதான் என் பிரச்சினை என்று அவரிடம் ஒருவர் வருகிறார் என்றால், கோபம் என்பது என்ன என்று அவரைக் கேட்பார் ஜே.கே.
இது என்ன? எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? இதன் வேர்கள் என்ன? கிளைகள், விழுதுகள் என்னென்ன? விளைவுகள் என்ன? இவற்றையெல்லாம் கிருஷ்ணமூர்த்தியும் அவரைச் சந்திக்க வருபவரும் சேர்ந்து ஆராயத் தொடங்குவார்கள். பதில்கள் அந்த நபரிடமிருந்து வரும். உரையாடல் தொடரத் தொடர அந்த நபர் தனக்கான விடைகளைக் கண்டுகொள்வார். ஜே.கே-வுடனான உரையாடல் என்பது அகம் காட்டும் கண்ணாடி.
இதுதான் கிருஷ்ணமூர்த்தியின் ஆகப் பெரிய பங்களிப்பு என்று சொல்லலாம். அவர் சொன்ன ஒரே ஒரு சொல்லைக்கூட நீங்கள் நினைவுவைத்திருக்க வேண்டியதில்லை. அவர் சொன்ன எதையும் நீங்கள் பின்பற்ற வேண்டியதில்லை. உங்களை நீங்களே நிர்வாணப்படுத்திக்கொண்டு உங்களைப் பற்றிய அப்பட்டமான உண்மைகளை, பூச்சுகள் அற்ற உண்மைகளை உணரத் தலைப்பட்டீர்கள் என்றால், அந்தப் பாதையில் பயணிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஜே.கே-வைப் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்று பொருள்.
ஜே.கே-யின் சிந்தனைகளின் மூலம் வாழ்க்கையுடன் இயல்பாக உறவாடுதல் நமக்குச் சாத்தியமாகலாம். ஒரு மலையைப் பார்த்து ரசிக்கும்போது, அந்த மலையின் காட்சியில் தன்னை இழப்பது ஓர் அனுபவம். அந்த மலையின் நிலவியல் பற்றியோ அதன் கடந்த காலம், எதிர்காலம் பற்றியோ யோசிக்க ஆரம்பிக்கும்போதே அந்த மலைக்கும் நமக்குமான அனுபவம் நீர்த்துப்போகிறது.
இவ்வளவு அழகான மலையைப் பார்த்து ரசிக்க மற்றவர்களுக்குத் தெரியவில்லையே என்று நினைக்கும்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் மலை உங்களை விட்டு விலகுகிறது. காலம், இடம், ஆளுமைகள், உறவுகள், சொந்தம் கொண்டாடுதல், உரிமைகோரல், அறிவு, துக்கம், அதிகாரம், படிமம், விருப்பு, வெறுப்பு, பதற்றம், மார்தட்டல் என எந்தக் குறுக்கீடும் அற்று ஒன்றும்போதுதான் உண்மையான அனுபவம் சாத்தியமாகிறது. இந்த அனுபவம் சாத்தியமாகும் இடத்தில் மோதலுக்கோ வன்முறைக்கோ துயரங்களுக்கோ இடமில்லை.
உலகில் நமக்கான பாத்திரத்தை ஏற்றுச் செயல்படுவது ஒரு தளம். நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையானது இது. நம் சூழலோடு இசைவிணக்கத்துடன் உறவாடுவது இன்னொரு தளம். இந்த இரு தளங்களுக்கிடையிலும் சமநிலை காண்பதே நாம் செய்யக்கூடிய ஆகப் பெரிய சாதனை. இந்தச் சமநிலை நிலவும் சூழலில் வன்முறைக்கும் மோதல்களுக்கும் இடம் இருக்காது. ஜே.கே-யின் சொற் களோடு புழங்கப் புழங்க இதுபோன்ற எண்ணங்கள் உங்களுக்கு வரலாம். இதை அடைவதற்கான பார்வையை ஜே.கே-யின் சிந்தனைகளிலிருந்து பெறலாம்.
திறந்த சிந்தனையின் வீச்சு
கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள் பல்வேறு நூல் களிலும் ஒலிப் பேழைகளிலும் கிடைக்கின்றன. கல்வி, வன்முறை, சமாதானம், கடவுள், போர்கள், அறிவு எனப் பல விஷயங்களைப் பற்றியும் ஜே.கே. பேசுகிறார். இவை முன்கூட்டியே யோசிக்கப்பட்ட எண்ணங்களின் வெளிப்பாடு கள் அல்ல. அடிவாரத்திலிருந்து படிப்படியாக மலை ஏறும் அனுபவம் போன்றது. அந்தக் கணத்தில் நிகழும் பயணம். பயணத்தினூடே உருவாகும் பாதைகள்.
மனக் கட்டுப்பாடு, புலனடக்கம் ஆகியவற்றை ஜே.கே. ஏற்கவில்லை. கட்டுப்பாடு, நீக்குதல், களைதல் என்பவை எல்லாமே எதிர்மறையான அணுகுமுறைகள் என்கிறார் ஜே.கே. விழிப்புதான் தீர்வு என்கிறார். அன்பு செலுத்து என்று அவர் சொல்லவில்லை. தேர்வுகள் அற்ற மெய்யான விழிப்பு இருந்தால் அன்பு செலுத்தும் மனமும் பொறாமை அம்சங்கள் தவிர்த்த மனமும் இயல்பாக மலரும் என்பதே ஜே.கே-யின் அணுகுமுறை.
தேர்வுகள் அற்ற விழிப்புணர்வு, வாழ்வெனும் நீரோட்டத்தில் முடங்கிவிடாமல், மூழ்கிவிடாமல் மிதந்தபடி இருத்தல், படிமங்களின் சுமைகளிலிருந்து விடுதலை, அறிவின் சுமையிலிருந்து விடுதலை, அனுபவத்துக்கும் அனுபவிப்பவருக்கும் இடையேயான இடைவெளி தவிர்த்தல், தற்கணத்தில் வாழுதல் எனப் பல சொற்றொடர்களைக் கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளாகச் சொல்லலாம்.
இவற்றைப் பின்பற்ற முயற்சிசெய்யலாம். பிரச்சாரம்கூடச் செய்யலாம். ஆனால், தன்னை உள்ளது உள்ளபடியே அறிதல் என்னும் முயற்சியில் ஒரு சில எட்டுக்களேனும் எடுத்து வைக்க இயலாதவர்களுக்கு இந்தச் சொற்களால் எந்தப் பலனும் இல்லை.
இந்த இடத்துக்கு வந்து சேரப் பாதை இல்லை. ஜே.கே. சொல்வதுபோல, உண்மை என்பது பாதைகள் அற்ற நிலம். உண்மையான அறிதலை, விழிப்பை, விழையும் மன இயக்கம் கொண்டவர் ஜித்து கிருஷ்ணமூர்த்தியைத் தன் சக பயணியாகக் கண்டு உணர்வார்.

தி இந்து தமிழ் நாளிதழில் 2014, மே 11 அன்று பிரசுரமானது