Thursday, March 31, 2016

ஜனநாயகத்திலுமா மன்னராட்சி?


இன்னமும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் பிரச்சாரமும் முறையாகத் தொடங்கப்படவும் இல்லை. அதற்குள்ளாகவே பல அசிங்கங்களைக் கண்டுவிட்டது இந்த ஆண்டின் தேர்தல் களம். கூட்டணிக்கான பேரங்கள் குறித்த தலைவர்களின் அறிக்கைகள் பரஸ்பரம் சேறுவாரிப் பூசுவதோடு, தமிழக அரசியலின் நிஜ முகத்தையும் தோலுரித்துக் காட்டுகின்றன.

இந்தக் கூத்துக்கள் ஒருபுறம் இருக்க, இன்னொரு அபாயம் கேள்விக்கு அப்பாற்பட்ட யதார்த்தமாக நிலைபெற்று நிற்கிறது. பல கட்சிகளில் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் யாரென்று பார்த்தால், நேற்றைய அல்லது இன்றைய தலைவர்களின் நேரடி வாரிசுகள். அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள். அல்லது தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர்கள்.
 
தலையாய தகுதி என்ன?

திமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் இது வெளிப்படையாக நடக்கிறது என்றால், அதிமுகவில் சற்றே மறைமுகமாக! இங்கே நேரடி வாரிசுகள் கட்சியைக் கைப்பற்றவில்லைதான். ஆனால், தலைவருக்கு நெருக்கமானவர்தான் தலைவருக்குப் பின் அவரது வாரிசாக அறியப்படுகிறார். தலைமைக்கு அடுத்தபடியாகக் கட்சியின் அதிகார மையமாக விளங்குவதாக நம்பப்படுபவர்களும் கட்சியில் பணிபுரிந்து அந்த நிலையை அடையவில்லை. தலைமையுடனான நெருக்கமே அந்த அந்தஸ்தைப் பெற்றுத்தருகிறது.
திமுகவில் தலைமையில் மட்டுமல்லாது, அநேகமாக ஒவ்வொரு ஊரிலும் வாரிசுகளே பொறுப்பேற்றிருக்கிறார்கள் அல்லது பொறுப்பேற்கத் தயாராக இருக்கிறார்கள். வாரிசு அரசியலை முன்னெடுக்க மாட்டோம் என்று அறிவித்த பாமக நிறுவனரும் வாரிசையே முன்னிறுத்துகிறார். விஜயகாந்துக்கு இப்படிப்பட்ட கோட்பாட்டுச் சிக்கல் எதுவும் இல்லாததால், சகஜமாகத் தன் குடும்பத்துக்குக் கட்சியைத் தாரைவார்த்துவிட்டார்.

பொறுப்பில் இருப்பதற்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்பதுதான் முக்கியம் எனச் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமைகள் தொடர்ந்து கூறிவருகின்றன. ஆனால், தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் வாரிசுகளின் தலையாய தகுதி என்பது வெளிப்படை. அவர்களுக்குக் கிடைக்கும் அமைப்புரீதியான வாய்ப்புகள், அங்கீகாரங்கள், ஆதரவு ஆகிய அனைத்தும் மன்னராட்சிக் காலத்தில் இளவரசர்களுக்குக் கிடைத்துவந்த இயல்பான சாதகங்கள்.
 
தமிழகம் மட்டுமா?

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். பட்நாயக்குகளும் யாதவ்களும் ராப்ரி தேவிகளும் மெஹபூபாக்களும் நேரு முதல் ராகுல் வரை தொடரும் வாரிசுரிமையும் இதற்கான சான்றுகள். இதைப் பற்றிய விவாதம்கூட நடப்பதில்லை என்பது அவலம்.

அரசியலில் மட்டுமின்றி, இந்தியத் திரைத் துறையிலும் இதே நிலைதான். குறிப்பாக தமிழ்த் திரையுலகில், தற்போது உள்ள முக்கியமானவர்களில் முக்கால்வாசிப் பேர் இதற்கு முன்பு ஆதிக்கம் செலுத்தியவர்களின் குடும்ப வாரிசுகள்தாம். இதையெல்லாம் பார்க்கும்போது, இந்திய ஆழ்மனம் மன்னராட்சியின் பழக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லையோ எனத் தோன்றுகிறது. இத்தகைய போக்குக்குப் பின்னால் இருக்கும் பெரும் முதலீடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் குடும்ப வாரிசுரிமை பற்றி மேலும் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

அதிகாரம் கைமாறும் விதத்தில் மட்டுமல்ல, அதிகாரம் கையாளப்படும் விதத்திலும் மன்னராட்சியின் எச்சங்களைப் பார்க்க முடிகிறது. நமது அமைச்சர்கள் அனுபவிக்கும் வசதி, அதிகாரம் ஆகியவை மன்னர்களும் சிற்றரசர்களும் அனுபவித்த சுகபோகங்களுக்கு இணையானவை. அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கும் அவர்களது வாழ்க்கை வசதிகளுக்கும் இடையே இருக்கும் பெரும் இடைவெளி விவாதப் பொருளாக ஆவதே இல்லை. அரச குடும்பத்தினரின் வசதியான வாழ்க்கை விவாதப் பொருளாக ஆனதில்லை என்பதோடு இணைத்து, இதற்குப் பின்னாலுள்ள மனநிலையைப் புரிந்துகொள்ளலாம். ‘சாதனைகள்’ புரிந்தவர்களுக்கு வீர வாள், செங்கோல் ஆகியவற்றைப் பரிசளிப்பதும் பட்டங்கள் சூட்டப்படுவதும், ஒவ்வொருவரும் பட்டங்களாலேயே அடையாளம் காணப்படுவதும் மன்னராட்சிக் கால எச்சங்களே. நீதிபதிகளுக்குத் தரப்படும் அதிகாரபூர்வமான மரியாதையின் குறியீடுகளும் மன்னராட்சிக் காலத்தின் அடையாளங்கள்தாம். இவையெல்லாம் நமக்கு விசித்திரமாகவே தெரிவதில்லை என்பது நாம் இன்னமும் ஜனநாயகத்துக்குத் தயாராகவில்லையோ என்னும் கேள்வியை எழுப்புகிறது.

குடும்ப வாரிசுரிமை என்பதைப் பிறப்பின் அல்லது குடும்ப உறவுகளின் அடிப்படையில் உரிமை கைமாறுவதை உறுதிசெய்யும் போக்கு எனச் சொல்லலாம். பிறப்பின் அடிப்படையில் வாய்ப்பு என்றால் அதற்கு என்ன பொருள்? மன்னரின் மகன் மன்னன், புரோகிதரின் மகன் புரோகிதர், வணிகரின் மகன் வணிகர். சலவைத் தொழிலாளியின் மகன் சலவைத் தொழிலாளி. இதற்கு என்ன பெயர்? வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையிலான சமூக அமைப்பு என்றுதானே? அப்படியானால், தலைவரின் மகன் அல்லது மகள் தலைவராவதற்கு என்ன பெயர்?
 
நவீனத்துவப் பார்வை எங்கே?

ஜனநாயகம் என்பது நவீனத்துவத்தின் கனிகளில் ஒன்று. நவீனத்துவம் அறிவியல் பார்வையையும் சமத்துவத்தையும் சம வாய்ப்பையும் முக்கியக் கூறுகளாகக் கொண்டது. நவீனத்துவத்தின் எழுச்சியும் பரவலாக்கமும்தான் உலகம் முழுவதும் நிலவிவந்த பல்வேறு அநீதிகளைக் களைந்தன. சாதி, மதம், பாலினம், பிறப்பிடம் முதலான அடிப்படைகளில் நிலவிவந்த பாரபட்சங்களுக்குக் குறிப்பிடத் தக்க அளவில் முடிவுகட்டியது. காலங்காலமாக இழைக்கப்பட்டுவந்த அநீதிகள் பெருமளவில் களையப்பட்டன. பிணம் எரிப்பவரின் மகன் பிணம் எரிப்பவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்பதை இதுதான் நிலைநிறுத்தியது. மன்னரின் மகன்தான் மன்னராக முடியும் என்பதையும் இது மாற்றியது. இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் எனினும் நவீனத்துவம் போட்டுக்கொடுத்த பாதையே சமத்துவத்துக்கும் அறிவியல் கண்ணோட்டத்துக்குமான பாதையை அகலமாகத் திறந்துவைத்தது. அந்தப் பாதையில் நமது பயணம் எப்படி இருக்கிறது?

மன்னராட்சிக் காலத்தில் நடந்தவை எல்லாமே தவறானவை அல்ல. ஆனால், அப்போது நடந்த நல்ல விஷயங்கள் தனிநபர்களின் தார்மிக உணர்வுகளின் அடிப்படையில் நடந்தவை. அதிகாரத்தில் இருப்பவர்களின் இயல்புதான் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானித்தது. அனைவருக்கும் பொதுவான சட்டமோ சாசனமோ ஜனநாயகபூர்வமான விவாதங்களோ அல்ல.
இன்று பொதுவான சட்டங்கள் உள்ளன. சட்டங்களைப் போடுவதும் மாற்றுவதும் இன்று ஓரளவுக்குத் தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கின்றன. எனினும், இதே சட்டம் கொடுக்கும் அதிகாரம், சமத்துவச் சமன்பாடுகளை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாக மாற்றி எழுதுவதைப் பார்க்கிறோம். அதாவது, ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே ஒரு சிலரது சர்வாதிகாரம் நடக்க முடியும் என்பதைப் பார்த்துவருகிறோம். இதை மாற்று வதற்கான அம்சமும் ஜனநாயகத்திலேயே இருப்பதால் இதை ஓரளவேனும் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது என்றும் நம்பலாம்.

ஆனால், குடும்ப வாரிசுரிமை இந்தச் சூழலை மேலும் சீர்குலைக்கிறது. அதிகாரத்தைப் பிறப்பு அல்லது குடும்ப எல்லைகளுக்குள் முடக்குகிறது. இந்திய வரலாற்றின் மிகப் பெரும் களங்கங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் வர்ண அடிப்படையிலான நீதிக்கு இது வேறு வகையில் புத்துயிர் கொடுக்கிறது. வர்ண அடிப்படையிலான பேதத்தை ‘குண கர்ம விபாகஷஹ’ என்கிறது கீதை. அதாவது, மனித இயல்புகள் (குணம்), பணிகளின் (கர்மம்) அடிப்படையிலான பிரிவினைதான் (விபாகஷஹ) வர்ணாசிரம தர்மம் என்று சனாதனிகள் விளக்கம் அளிக்கலாம். நடைமுறையிலோ இது பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. பல நூற்றாண்டு கால யதார்த்தம் இது. இதை மறுக்க அவர்கள் முன்னிறுத்தும் வால்மீகிகளும் பாணாழ்வார்களும் விதிவிலக்குகளாகவே இருக்கிறார்கள். இதே கண்ணோட்டம்தானே தலைவரின் மகன் / மகள் தலைவர், முதல்வரின் மகன்/ மகள் அடுத்த முதல்வர் என்னும் நடைமுறையில் பிரதிபலிக் கிறது? மனு தர்மத்துக்கும் வர்ணாசிரம தர்மத்துக்கும் எதிரானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் இதே போக்கில் செயல்படுவதை எப்படிப் புரிந்துகொள்வது?

அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் காணப்படும் இந்தப் போக்கு ஜனநாயக இயக்கத்தைப் பின்னோக்கித் தள்ளுகிறது. ‘ஜனநாயகபூர்வ’மாகவே இதைச் செய்ய முடிகிறது என்பதுதான் காலத்தின் முரண்நகை.

Monday, March 28, 2016

யார் யாரைப் புறக்கணிக்கிறார்கள்?


நவீன தமிழ் இலக்கியவாதிகள் திராவிட இலக்கியவாதிகளைப் புறக்கணிப்பதாக வைரமுத்து தன் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழ்ந்ததா என்பதைப் பார்க்கும் முன், வேறொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக இங்கே திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.

அரசு அதிகாரம், மாபெரும் கட்சி அமைப்பு, பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்களின் மீதான செல்வாக்கு ஆகிய அனைத்தும் அமையப் பெற்றவர்கள் திராவிடக் கட்சிகளின் பிரதிநிதிகள். மாறாக, நவீன இலக்கியவாதிகள் என அறியப்படும் எழுத்தாளர்களோ அண்மைக் காலம்வரை ஆயிரத்துச் சொச்சம் வாசகர்களைத் தாண்டாதவர்கள். இந்நிலையில் யார் யாரைப் புறக்கணிக்க முடியும்?
கடந்த 50 ஆண்டுகளில் அரசு தரும் கலை இலக்கிய விருதுகளில் எத்தனை நவீன தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தாலே, யார் யாரைப் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
‘அறியப்படாத’ ஆய்வாளர்கள்

தீவிர எழுத்தாளர்களை விடுங்கள், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், திராவிட இயக்கச் சிந்தனை யிலிருந்து உத்வேகம் பெற்ற எழுத்தாளர்கள், வரலாற்றாய் வாளர்கள், சிந்தனையாளர்களை இவர்கள் அங்கீகரித் திருக்கிறார்களா? திராவிட இயக்கக் கருத்தியல்களையும் வரலாற்றில் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதி இந்திய, உலக அளவில் அவற்றுக்குக் கவனம் கிடைக்கச் செய்த எம்.எஸ்.எஸ். பாண்டியனை இவர்கள் அங்கீகரித்திருக்கிறார்களா?

திராவிட இயக்க வரலாறு, திராவிட இயக்கத்தின் முக்கியமான ஆளுமைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து எழுதிவரும் வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதியை அங்கீகரித்திருக்கிறார்களா? பெரியாரைப் பற்றிய மிக முக்கியமான நூலை எழுதிய வ. கீதா, எஸ்வி. ராஜதுரை ஆகியோரைப் பாராட்டியிருக்கிறார்களா? ‘பெரியாரின் நண்பர்’ என்னும் முக்கியமான நூலை எழுதிய பழ அதியமான், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு வித்திட்ட சேரன்மாதேவி குருகுலம் பற்றிய ஆய்வின் அடிப்படையில் செறிவான ஒரு நூலையும் எழுதியிருக்கிறார்.

அவரை இவர்களுக்குத் தெரியும் என்பதற்கேனும் ஏதாவது சான்று இருக்கிறதா? சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ம.இலெ. தங்கப்பாவுக்குப் பாராட்டோ அங்கீகாரமோ இவர்களிடமிருந்து கிடைத்திருக்கிறதா?

மறுபக்கம், தீவிர எழுத்தாளர்களும் அவர்கள் அதிகமாக எழுதிவந்த சிற்றிதழ்களும் திராவிட இலக்கியம் குறித்துப் பாராமுகமாக இருந்ததில்லை. திராவிட இலக்கியத்தைப் பொருட்படுத்தி விமர்சித்திருக்கிறார்கள். திராவிட இலக்கியம் பற்றி நேரடியாகப் பேசாதவர்கள் தங்கள் இலக்கியக் கோட்பாடுகளை முன்வைத்துள்ளதைப் பார்க்கும்போது, அவர்கள் ஏன் திராவிட இலக்கியத்தைப் பற்றிப் பேசவில்லை எனப் புரிந்துவிடும்.
புதுமைப்பித்தன், க.நா. சுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், அசோகமித்திரன், தமிழவன், கோவை ஞானி, பிரேம்-ரமேஷ், சாரு நிவேதிதா, ஜெயமோகன், பிரபஞ்சன் எனச் சிலர் இலக்கியம் குறித்த செறிவான பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். இந்த விமர்சனங்களைப் படிக்கும்போது, திராவிட இலக்கிய ஆக்கங்களை இவர்கள் ஏன் மேலான இலக்கியமாக மதிப்பிடுவதில்லை என்பது வெளிப்படுகிறது. இவர்கள் முன்வைக்கும் அளவுகோல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதைத் தெளிவுபடுத்திவிடுகின்றன.
தெளிவற்ற புரிதல்

ஆனால், திராவிட இலக்கியப் படைப்பாளிகளும் விமர்சகர்களும் தீவிர இலக்கியப் பரப்பைச் சேர்ந்தவர்களைப் பற்றிப் பொருட்படுத்தத் தக்கதாக எதுவும் கூறியதில்லை. புதுமைப்பித்தன், மெளனி, லா.ச. ராமாமிர்தம், அசோகமித்திரன், வண்ணநிலவன் முதலான எழுத்தாளர்களைப் பற்றி மவுனம் சாதிக்கிறார்கள். திராவிட முகாமினர் இவர்களைப் படிக்கிறார்களா என்பதை அறியவும் எந்தத் தரவுகளும் இல்லை. ஒரு உதாரணம் பாருங்கள்: 1990-களின் முற்பகுதியில் ‘சுபமங்களா’இதழுக்கு அளித்த பேட்டியில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. கருணாநிதி, நவீன இலக்கியம் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்:

“ஸ்ட்ரீட் கார்னர்லே சீதாவைப் பார்த்தவுடனே ராமுவுக்கு பாடி முழுவதும் ‘ஜிவ்’ என்று ஒரு ஃபீலிங்! ஹலோ ராமூ! என்று ஹேண்ட் பேக்கைச் சுழற்றியபடி சீதா ஒரு ரன்னிங் ரேஸ்! அவளது புளூ கலர் கண்கள், அதுக்கு மேட்ச்சா நைலான் சாரி, அதுக்கு மேட்ச்சா ஜாக்கெட் - அப்படியே ராமு அவளை ஒரு ஸ்டண்ட் ஹீரோ மாதிரி தூக்கி காரின் பேக் சீட்டிலே போட்டான்.’ அய்யா! இதுதான் நவீன இலக்கியமென்றால், அதனுடன் எனக்குத் தொடர்பு கிடையாது என்பது உண்மைதான்.”

முழுக்க முழுக்கக் கேளிக்கையை இலக்காகக் கொண்ட எழுத்தையே ‘நவீன எழுத்து’ என்று கருணாநிதி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை இந்தப் பதில் தெளிவுபடுத்துகிறது. புதுமைப்பித்தனையோ, மெளனியையோ, சு.ரா.வையோ, ஜி.நாகராஜனையோ அவரால் மேற்கோள் காட்ட இயலவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். திராவிட இலக்கியமும் நவீன இலக்கியம்தான் என்றும் அவர் சொல்லவில்லை.

தீவிர எழுத்தாளர்கள் திராவிட இலக்கியத்தைப் புறக்கணிப்பதாகப் புகார் சொல்லப்படுகிறது. உண்மை யில் நிலவரம் இதற்கு நேர் எதிரானது. தமிழுக்குத் திராவிட இயக்கம் ஆற்றிய ஆக்கபூர்வமான பங்களிப்பை பிரமிள் போன்ற சிலர் பதிவுசெய்திருக்கிறார்கள். அண்ணாவின் நூற்றாண்டின்போது அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை பெருமாள்முருகன் தொகுத்திருந்தார் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு).

திராவிட இயக்கச் சிந்தனைகள், ஆளுமைகள், வரலாறுகள் முதலான பல்வேறு நூல்களை இதே நவீன இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. ஆனால், புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா., ஜானகிராமன், அம்பை, சா.கந்தசாமி பற்றியெல்லாம் திராவிட இயக்கத்தினர் முக்கியத்துவம் அளித்துப் பேசியதே இல்லை. வைரமுத்து இப்போதுதான் புதுமைப்பித்தன் முதலானவர்களைப் பாராட்டுகிறார். தொண்ணூறுகளில் தலித்துகளும் பெண்களும் பெரிய எண்ணிக்கையில் எழுதத் தொடங்கினார்கள். இவர்களுக்குக் களமாக அமைந்தவை சிற்றிதழ்களும் அவை சார்ந்த பதிப்பகங்களும்தான். ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியப் பதிவுகளைப் பொருட்படுத்தி, திராவிட இயக்கத்தினர் பெரிதாகப் பேசியதில்லை.
மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம்

உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவதிலும் எழுத்தாளர்கள் மிகத் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். லியோ டால்ஸ்டாய், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி,காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், பாப்லோ நெரூடா, ஃப்ரன்ஸ் கஃப்கா, ஆல்பர் காம்யூ, ஓரான் பாமுக், இடாலோ கால்வினோ முதலான படைப்பாளிகளின் ஆக்கங்கள் நூற்றுக்கணக்கில் தமிழுக்கு வந்திருப்பதற்குக் காரணம், இவர்களுடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்புதான். எட்டுத் திக்கிலுமிருந்து கலைச் செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்த்துவரும் இவர்களின் தொண்டினைத் தமிழின் பெருமை பேசும் திராவிட இயக்க அறிஞர்களோ எழுத்தாளர்களோ பாராட்டியிருக்கிறார்களா?

மேலான இலக்கியம் எது என்பதற்கான திட்டவட்ட மான வரையறை எதுவும் இல்லை. எனினும் நோபல், புக்கர், ஞானபீடம் முதலான அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற ஆக்கங்களை வைத்து, மேலான இலக்கியத்துக் கான சில வரையறைகளையேனும் நாம் தொகுத்துக் கொள்ளலாம். அத்தகைய வரையறைகளின் அடிப்படை யில் இந்திய அளவிலோ உலக அளவிலோ முன்னிறுத்தக் கூடிய எழுத்துக்களை புதுமைப்பித்தன், அசோகமித்திரன், வண்ண நிலவன் முதலானவர்கள் படைத்திருக்கிறார்கள். தமிழின் பெருமையைப் பேசுவதற்கான வாய்ப்பைத் தவற விடாத திராவிட இயக்கச் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் உலகத் தரம் வாய்ந்த நவீன தீவிர இலக்கியப் படைப்பாளிகளை இனியேனும் அக்கறையுடன் படித்து அவர்களை தேசிய அளவிலும் உலக அளவிலும் முன்னிறுத்தலாம். அவர்களுடைய அரசியல் பார்வைக்கு அது பொருத்தமானதாகவே இருக்கும்.

Friday, March 25, 2016

தப்பிப் பிழைத்த இந்திய அணி

பந்தைக் கையில் எடுத்துக்கொண்டு மகேந்திர சிங் தோனி ஓடும்போது அரங்கிற்குள்ளும் வெளியிலும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களும் மானசீ கமாக அவருடன் ஓடியிருப்பார்கள். தோனி ஸ்டெம்பைச் சாய்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். இதயம் பலவீனமான பலர் மாத்தி ரையோ சிகிச்சையோ எடுத்துக்கொண்டி ருக்கவும் கூடும். புதிதாகச் சிலருக்கு ரத்தக் கொதிப்பு வந்திருக்கலாம். இப்படி ஒரு முடிவைப் பார்த்து எத்தனை நாளாயிற்று என்று கிரிக்கெட்டின் காதலர்கள் பலர் நினைத்திருப்பார்கள்.

மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை என்று சொல்வார்கள். அதுதான் புதன்கிழமை பெங்களூருவில் நடந்தது. எளிதாகக் கைப்பற்றியிருக்க வேண்டிய வெற்றியை இந்தியா கிட்டத்தட்டப் பறிகொடுத்துவிட்டுக் கடைசிக் கணத்தில் மீட்டெடுத்தது. எளிய சவாலை இமாலய முயற்சி எடுத்துச் சாதித்தது. அதுவும் எதிரணியின் அபத்தமான தவறினால். கடைசி ஓவரைப் போட்ட ஹர்திக் பாண்டியா தேவையான 11 ரன்களில் 9 ரன்களை முதல் 3 பந்துகளிலேயே கொடுத்து எதிரணியை ஆசுவாசப்படுத்தினார். இந்திய அணியினரும் இந்திய ஆதரவாளர்களும் பதற்றத்தின் உச்சிக்குச் சென்றார்கள்.
 
வங்கதேசம் செய்த தவறு

இன்னும் 3 பந்துகளில் 2 ரன். ஏற்கெனவே அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்த முஷ்பிகுர் ரஹீம் இன்னும் 2 ரன்களைப் பதற்றமில்லாமல் எடுத்திருக்கலாம். இதே 2007 உலகக் கோப்பையில் மார்ச் 23-ம் தேதியன்று வங்கதேசம் இந்தியாவை வெளியேற்றியது. அதேபோல் இந்த மார்ச் 23-லிலும் செய்திருக்கலாம். பாண்டி யாவின் அடுத்த பந்தை எல்லைக் கோட்டுக்கு அனுப்ப நினைத்தார் முஷ்ஃபிகுர் ரஹீம். அளவு குறைவாகவும் சற்றே மெதுவாகவும் வந்த அந்தப் பந்தை அவரால் எல்லைக் கோட்டுக்கு அனுப்ப முடியவில்லை. அது கேட்சாக மாறியது. ஜஸ்ப்ரித் பும்ராவும் ரவிச்சந்திரன் அஸ்வினும் எளிய கேட்சுகளைக் கோட்டைவிட்டது போல ஷிகர் தவண் விடவில்லை.

அடுத்த பந்தை எதிர்கொண்ட மொஹமதுல்லா, முஷ்ஃபிகுர் செய்த தவறையே தானும் செய்தார். அவருக்கும் ஆறு அல்லது நான்கு அடித்து ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை போலும். பந்தைத் தூக்கி அடித்தார். இந்த முறை ஜடேஜா பந்தை ஏந்திக்கொண்டார். இப்போது ஒரு பந்தில் இரண்டு ரன்கள். பாண்டியா அருமையாக வீசினார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே எகிறி வந்த பந்து. ஷுவாகதா ஹோம் மட்டையைக் காற்றில் வீச, பந்து தோனியின் கைகளில் தஞ்சம் அடைந்தது. ஷுவாகதா ரன் எடுக்க ஓட, தோனி பந்தை வீசி எறியாமல் அசுர வேகத்தில் ஓடி வந்து ஸ்டெம்பைச் சாய்த்தார். வங்க தேசத்தவரின் மனங்களும் சாய்ந்தன. ஒருவழியாக இந்தியா வென்றது. அரை இறுதி செல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டது.

இவ்வளவு கஷ்டப்பட்டு வென்றிருக்க வேண்டிய போட்டியே அல்ல இது. ஐ.சி.சி. தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு அணி 10-ம் இடத்தில் இருக்கும் அணியிடம் இவ்வளவு போராடி வெல்வது அதன் வலிமைக்குப் பெருமை சேர்ப்பதாகாது. இந்திய அணி தன் திறனில் பாதியைக்கூட வெளிப்படுத்தவில்லை என்பதே யதார்த்தம். 

இப்படிச் சொல்வது வங்கதேசத்தைக் குறைத்துச் சொல்வதாக ஆகாது. கச்சிதமான பந்து வீச்சு, கூர்மையான தடுப்பரண், அச்சமற்ற மட்டை வீச்சு ஆகியவற்றுடன் வங்கதேசம் அற்புதமாகப் போராடியது. கடைசி மூன்று பந்துகளில் கொஞ்சம் பக்குவமாக ஆடியிருந்தால் அணி வென்றிருக்கும். அதன் கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பொருத்தமான பரிசாக அது இருந்திருக்கும். இந்தியா போட்டியை வென்றது. வங்கதேசம் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றது.
 
சொதப்பிய மட்டைகள்

இந்தியாவின் நிகர ரன் விகிதம் குறைவாக இருப்பதால் வங்கதேசத்துட னான ஆட்டத்தில் ரன் விகிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சொன்ன தோனி, அணியின் அதிரடி மட்டையாளர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று போட்டிக்கு முன் வெளிப்படையாகவே கூறினார். அணியில் சிலர் தடுமாறிவந்தாலும் எந்த மாற்றமுமின்றி அதே அணியைக் களமிறக்கியது இந்தியா. ரோஹித் சர்மாவும் ஷிகர் தவணும் முதல் 6 ஓவர்களில் ஓவருக்கு 7 ரன் என்னும் விகிதத்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். ஆறாவது ஓவரின் கடைசிப் பந்தில் சர்மா ஆட்டமிழந்தார். ஏழாவது ஓவரின் முடிவில் தவண் நடையைக் கட்டினார்.

அதன் பிறகு இன்னிங்ஸின் வேகம் குறைய ஆரம்பித்தது. 23 பந்துகளில் சுரேஷ் ரெய்னா அடித்த 30 ரன்களைத் தவிர வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. தோனி, யுவராஜ் சிங், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் களத்தில் இருந்தும் கடைசி 5 ஓவர்களில் 34 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. தோனி சொன்ன அந்த அதிரடி மட்டையாளர்கள் எங்கே என்று தேட வேண்டியிருந்தது.

இந்தியா அதிக ரன் எடுக்க முடியாததற்கு அதன் மட்டையாளர்களின் தயக்கமும் தவறுகளும் மட்டும் காரணமல்ல. வங்கதேசப் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசினார்கள். குறிப்பாக ஷாகிப் அல் ஹஸன் 4 ஓவர்களில் 24 ரன் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தடுப்பு அரண் வலுவாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் கள வியூகமும் தடுப்பாளர்களின் முனைப்பும் சிறப்பாக இருந்தன. இன்னும் குறைந்தது 20 ரன் எடுத்திருக்கக்கூடிய வாய்ப்பை மட்டையாளர்களின் தவறும் எதிரணியின் கூர்மையும் சேர்ந்து குலைத்தன.
 
நழுவ விடப்பட்ட வாய்ப்புகள்

146 ரன்களைக் காப்பாற்றும் முயற்சி யில் இந்தியா தொடக்கத்திலிருந்தே சொதப்ப ஆரம்பித்தது. ஆஷிஷ் நெஹ்ரா எடுத்த எடுப்பில் கால் திசையில் பந்து வீச, தமிம் இக்பால் அதை ஃபைன் லெக் திசைக்கு அடித்தார். கைக்கு வந்த பந்தை நழுவவிட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா, பவுண்டரியைப் பரிசளித்தார். அதன் பிறகும் தடுப்பாளர்கள் நிறைய சொதப்பினார்கள். நெஹ்ரா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் ஆளுக்கு ஒரு கேட்சை நழுவ விட்டார்கள். துடிப்புடன் ஆடிய வங்கதேசம் இந்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றியை நோக்கிச் சென்றது. இந்தியா ஆடும்போது மட்டைக்கு வராமல் சண்டித்தனம் செய்த பந்து வங்கதேச மட்டையாளர்கள் ஆடும்போது சமர்த்தாக நடந்துகொண்டது. ஷாகிப், சபிர் ரஹ்மான் ஆகியோர் அனாயாசமாக அடித்த ஷாட்டுகள் இதற்குச் சான்று.

அவ்வப்போது விக்கெட்களும் விழுந்துகொண்டிருந்ததால் இந்தியாவின் நம்பிக்கையும் உயிர்ப்போடு இருந்தது. அஸ்வினின் அருமையான பந்து வீச்சு (4 ஓவர்களில் 20 ரன் கொடுத்து 2 விக்கெட்) இந்தியாவின் நம்பிக்கையைத் தக்கவைத்தது என்றும் சொல்லலாம். பும்ரா 19-வது ஓவரை நன்றாக வீசினார். 2 ஓவர்களில் 17 ரன்கள் என்னும் நிலையில் 6 ரன்கள் மட்டும் கொடுத்தார்.

கடைசி ஓவரை வீசிய பாண்டியாவுக்கு தோனி, கோலி, நெஹ்ரா உள்ளிட்டோர் அறிவுரைகளை வாரி வழங்கினார்கள். என்றாலும் நெருக்கடி பாண்டியாவைப் பாதித்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இலக்கில்லாமல் பந்து வீசினார். முதல் 3 பந்துகளில் 9 ரன்கள். நான்காவது பந்து அளவு குறைவான, சற்றே மெதுவாக வந்த பந்து. அதை புல் ஷாட் அடித்த முஷ்பிகுர் ரஹீம் பிடி கொடுத்து ஆட்ட மிழந்தார். அடுத்து ஃபுல் டாஸ் பந்தைத் தூக்கி அடிக்க முயன்ற மொஹமதுல்லாவும் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் முஸ்தாஃபிஸுர் ரன் அவுட் ஆக, ஒரு ரன்னில் இந்தியா வென்றது.
நான்காவது அல்லது ஐந்தாவது பந்தை மட்டையாளர் தூக்கி அடிக்காமல் இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்கும். தேவைப்படும் ரன் 2 என்னும்போது சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்கும் முனைப்பே வங்கதேசத்தைக் காவு வாங்கியது. பல தவறுகளும் செய்த இந்தியா தப்பிப் பிழைத்தது. ரன் விகிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுடனான போட்டியைக் காலிறுதிப் போட்டிபோல எதிர்கொள்ளவிருக்கிறது இந்திய அணி.

வெற்றியிலும் தோல்வியிலும் கிடைக் கும் பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கும் இந்திய அணி தன் நெருக்கடி யைத் தானே உருவாக்கிக்கொண்டி ருக்கிறது. அணியிலோ ஆடும் முறை யிலோ மாற்றம் எதுவும் இல்லையென்றால் பெங்களூருவில் கிடைத்த அதிருஷ்டம் இந்தியாவுக்குப் பலனில்லாமல் போகலாம்.

ஒரு தேசம், ஒரு கோஷம்



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்தியா வந்து இறங்கிய பாகிஸ்தான் அணியின் தலைவர் ஷாஹித் அஃப்ரிதி, தங்கள் அணிக்கு இங்கே வழங்கப்பட்ட வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்துபோனார். “பாகிஸ்தானில்கூட இத்தனை அன்பு எங்களுக்குக் கிடைத்ததில்லை” என்று உணர்ச்சிவசப்பட்டார். பாகிஸ்தானை இழிவுபடுத்திவிட்டதாகச் சொல்லி பாகிஸ்தானின் வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது தேச அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.

இந்தியாவில், “பாரத மாதா வாழ்க” என்று சொல்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம் என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார். மகாராஷ்டிர சட்டமன்றத்தில் ‘பாரத் மாதா கீ ஜெய்’ எனச் சொல்ல மறுத்ததற்காக ஆல் இண்டியா மஜ்லிஸ்-ஏ-இட்டேஹதுல் முஸ்லிமீன் கட்சியைச் செர்ந்த வாரிஸ் பதான் என்னும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

தேச பக்தி அல்லது நாட்டுப் பற்று என்றால் என்ன என்னும் கேள்வியை இந்த இரு சம்பவங்களும் எழுப்புகின்றன. யார் அதைத் தீர்மானிப்பது என்னும் கேள்வியையும் எழுப்புகின்றன.

தேசபக்தி என்பது ஒவ்வொருவரின் அந்தரங்க விஷயம். தாய் மீது இருக்கும் பற்றைப் போலத்தான் தாய் நாட்டுப் பற்றும். ஒவ்வொரு மகனும் மகளும் தனக்கே உரிய விதத்தில் தன் தாயிடம் அன்பு செலுத்தலாம். தாய் நாட்டின் மீதான அன்பும் பற்றும்கூட அப்படித்தான். ஒருவர் தன் நாட்டைத் தாயாக நினைக்கலாம், தந்தையாக நினைக்கலாம், தெய்வமாக நினைக்கலாம், அல்லது வெறும் நாடாக நினைத்தும் அன்பு செலுத்தலாம். பற்றின் அடையாளங்களும் வெளிப்பாடுகளும் பல விதங்களில் இருக்கலாம். சில குறியீடுகளுக்குள் அதை அடக்கி, அந்தக் குறியீடுகளையே நாட்டுப் பற்றைக் குறிப்பதற்கான பொது அளவுகோல்களாக மாற்றிவிடுவதில் ஆபத்து இருக்கிறது. எல்லோருக்கும் பொருந்தக்கூடிய குறியீடு என்று எதுவுமே கிடையாது.

தேசபக்தி என்னும் கருத்தாக்கமே நவீன வாழ்வில் வேர் கொண்டது. குறிப்பாக இந்தியாவில் இன்று நாம் சொல்லும் பொருளில் தேசபக்தி என்பது அதிகபட்சம் ஒன்றரை நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பது. அதற்கு முன்பு அந்தந்தப் பகுதியின் அரசுகளே மக்களின் விசுவாசத்திற்கும் பற்றுக்கும் மையமாக இருந்தன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் சேர, சோழ, பாண்டிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களை முறையே சேர, சோழ, பாண்டிய நாட்டு மக்களாகவே கருதிக்கொண்டார்கள். சுந்தந்திரப் போராட்டக் காலத்தில்தான் இந்தியா என்னும் கருத்தாக்கமும் தேசபக்தி என்னும் உணர்வும் ஒரு வடிவம் பெற்றன.

சுதந்திரப் போராட்டக் காலத்திலும் எல்லோரும் ஒரே விதத்தில் தங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்திவிடவில்லை. சிலர் ஆங்கிலேயர்களை எதிர்த்து நேரடியாகப் போராடினார்கள். சிலர் சமூக சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். காந்தியின் வருகைக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் வெகுஜன இயக்கமாக மாறிய பிறகும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களைவிடவும் ஈடுபடாத இந்தியர்கள்தான் அதிகமாக இருந்திருப்பார்கள். சுதந்திரப் போராட்டம் என்னும் ஒற்றை அளவுகோலை வைத்துக்கொண்டு அவர்கள் அனைவரையும் தேசத்துரோகிகள் என்று சொல்லிவிட முடியுமா? ஆங்கிலேயர்களின் கீழ் பணிபுரிந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்த இந்தியர்களைக்கூட யாரும் தேசத்துரோகிகள் என்று சொல்லுவதில்லை. தேசபக்தியை எந்த ஒற்றை அளவுகோலாலும் அளக்க முடியாது என்பதுதான் காரணம்.

தேச பக்தி என்பது சிக்கலான விஷயம். இந்தியாவில் அரசு செலவிடும் பொதுப் பணத்தின் உதவியுடன் உயர் கல்வி கற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் சம்பாதிக்கும் இந்தியர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களில் பலர் தாங்கள் பணிபுரியும் நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள். அதே சமயம், பாதுகாப்புப் படைகளிலும் இஸ்ரோ போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளிலும் எத்தனையோ பேர் அந்த அளவுக்கு அதிக சம்பளம் பெறாமல் பணிபுரிந்துவருகிறார்கள். இந்தியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதுடன் வருமானத்தையும் கணிசமாக உறுதிப்படுத்தும் பல ஆக்கங்களை இஸ்ரோவில் பணிபுரிபவர்கள் செய்துவருகிறார்கள். இவர்களது பணிகளின் விளைவுகள் இந்தியாவின் பெருமிதங்களாக, விண்வெளியில் இந்தியாவின்  இருப்பைப் பல விதங்களிலும் வலுப்படுத்துப்வையாக உள்ளன. அதிக வருமானம் ஈட்டக்கூடிய பிற துறைகளையோ வெளிநாட்டுப் பணிகளையோ நாடாமல் இங்கே பலர் பணிபுரிகிறார்கள். தேசபக்தியே இவர்களுக்கான உத்வேகமாக இருக்கக்கூடும். ஆனால், இதை அடிப்படையாக வைத்து, வெளிநாடுகளுக்குச் செல்லும் நிபுணர்களைத் தேசத்துரோகிகள் என்று சொல்லிவிட முடியுமா?

வந்தே மாதரம் என்றோ பாரத் மாதா கீ ஜெய் என்றோ சொல்வதில் முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆட்சேபம் அவர்களுடைய சமய நம்பிக்கைகள் தொடர்பானது. ஒருவரது தனிப்பட்ட, குடும்ப, சாதி, மொழி, சமயம் சார் நம்பிக்கைகள் அல்லது நலன்கள் தேச நலனுடன் முரண்படும் சமயங்களில் தேச நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது சரிதான். ஆனால் பாரத் மாதா கீ ஜெய் போன்ற கோஷங்களை எழுப்புவதை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியுமா?  இந்தியாவில் தனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பைக் கண்டு அஃப்ரிதி உணர்ச்சிவசப்பட்டதை அவருடைய தேச நலனுக்கு எதிரான செயல் என்று சொல்லிவிட முடியுமா?

இத்தகைய கோஷங்கள் வலிமையானவை. உணர்வுகளை எழுப்பக்கூடியவை, மக்களை ஒன்றுதிரட்டக்கூடியவை எனப்தில் ஐயமில்லை. குறிப்பிட்ட ஒரு காலச் சூழலில் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. வருங்காலத்திலும் அப்படி இருக்கக்கூடும். ஆனால், எல்லாருக்குமான, எல்லாச் சந்தர்ப்பங்களுக்குமான தேசபக்தியின் அடையாளங்களாக இவற்றைக் கட்டமைக்க முடியுமா?

முடியும் என்றால், இதை யார் தீர்மானிப்பது? வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய், ஜெய் ஹிந்த், மேரா பாரத் மஹான், என்பன போன்ற பல கோஷங்கள் தேசப்பற்றைக் குறிப்பவையாக உள்ளன. இவற்றில் எதை நாம் கட்டாயமாக்க முடியும்? இன்று உள்ள அரசு சில கோஷங்களை முன்னிலைப்படுத்தும் என்றால், நாளை வரக்கூடிய இன்னொரு அரசு வேறு சில கோஷங்களை முன்னிலைப்படுத்தும். பிறகு வேறொரு கட்சி வேறு சில கோஷங்களை முன்னிலைப்படுத்தலாம். இதற்கெல்லாம் எல்லையோ முடிவோ ஏதாவது இருக்கிறதா? தேசபக்தி என்றல்ல, எந்த ஒரு அம்சம் குறித்தும் கறாராக மேற்கொள்ளப்படும் எந்த வரையறையும் நாம் – பிறர் என்னும் எதிர்வுகளைக் கட்டமைக்கவே உதவும்.

இன்றைய உலக நடைமுறையின்படி தேசபக்தி என்பது முக்கியமானதுதான். ஆனால், ஒரு தேசத்தை எல்லோரும் ஒரே மாதிரி பார்ப்பது என்பது எந்தக் காலத்திலும் சாத்தியமற்றது. அமெரிக்கப் பெருமையைப் பற்றி அமெரிக்கர்கள் மார்தட்டிக்கொண்டால் அதே அமெரிக்கா கறுப்பின மக்களை நடத்திய விதம் பற்றி நினைவுபடுத்தி அந்தப் பெருமிதத்தைக் கேள்வி கேட்கும் குரலும் எழவே செய்யும். இந்தியப் பெருமையும் அப்படித்தான். இந்தியாவில் ஆதிக்கச் சாதியினர் உணரும் அதே விதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்தியாவைப் பற்றி உணர முடியுமா? கோயிலுக்குள் சிறப்பிடம் பெறுபவர்களும் கோயிலுக்குள் நுழைய அனுமதி அற்றவர்களும் அந்தக் கோயிலை ஒரே மாதிரி பார்க்க முடியுமா?

இந்த உலகில் எதுவுமே திட்டவட்டமானதல்ல. எந்தப் பார்வையும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க முடியாது. எனவே தேசபக்தி போன்ற உணர்ச்சி சார்ந்த விஷயங்களை வரையறுக்காமல் இருப்பதே விவேகமானது.

இடைநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பதான் நிருபர்களைச் சந்தித்தபோது இவ்வாறு சொன்னார்: “என் நாட்டை நான் நேசிக்கிறேன். நான் இங்குதான் பிறந்தேன். இங்குதான் சாவேன். இதை இழிவுபடுத்துவது பற்றி என்னால் கனவுகூடக் காண முடியாது. ஜெய் ஹிந்த். ஜெய் பாரத். ஜெய் மஹாராஷ்ட்ரா.”

கோஷம் அல்ல பிரச்சினை. குறிப்பிட்ட ஒரு கோஷம் போட்டால்தான் நீ தேசபக்தன் என்று சொல்வதுதான் பிரச்சினை. ஜாவேத் அக்தர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட எத்தனையோ முஸ்லிம்கள் வந்தே மதரம், பாரத் மாதா கீ ஜெய், ஜெய் ஹிந்த் போன்ற கோஷங்களைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இடைநீக்கம் செய்யப்பட்ட பதானும் ஜெய் ஹிந்த் என்கிறார். இதை வைத்து தேசபக்தியை அளக்க முனைந்தால் அது சிக்கலான பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.

சுந்தர ராமசாமி எழுதிய ‘- ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலில் வரும் ஒரு பகுதியை இங்கே நினைவுகூரலாம்:

மாணவர்கள் சிலர் கூடி, எதிர்ப்படுபவர்கள் அனைவரையும் நிறுத்தி, வற்புறுத்தி, ‘பாரத மாதாவுக்கு ஜே’, ‘மகாத்மா காந்திக்கு ஜேஎன்று குரல் எழுப்பச் செய்தார்கள். சிறு பையன்களின் தலையில் குட்டியும், செவியைத் திருகியும் இதைச் செய்யச் சொன்னார்கள் . வற்புறுத்தல் இன்றியே பல சிறுவர்கள் ஆர்வமாக உணர்ச்சிவசப்படக் கத்தினார்கள்.

வயதான ஒரு கிழவி கத்த மறுத்துவிட்டாள் . ‘கொன்றாலும் கத்த மாட்டேன்என்றாள் . கொள்கை காரணம் என்று நான் நினைக்கவில்லை. வற்புறுத்தலுக்கு இணங்கக் கூடாது என்ற வீம்பு அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த மனோபாவம்தான் சுதந்திரத்தை எப்போதும் காப்பாற்றி வந்திருக்கிறது.

பிரச்சினை கோஷம் அல்ல, கோஷத்தின் அடிப்படையில் எழும் வலியுறுத்தல்கள், வரையறைகள், அடையாளங்கள், விருப்பு வெறுப்புகள். இந்தியா தொன்மையும் பன்மையும் மிகுந்த நாடு. இதன் மீதான பற்றுக்கான ஒரே அடையாளமாக எந்த ஒரு கோஷமும் இருக்க முடியாது. வரையறுக்கப்படுபவை கோஷங்களின் தன்மைகள் மட்டுமல்ல. மனிதர்களின் அடையாளங்கள்கூடத்தான். வெளிப்பாடுகளையும் அடையாளங்களையும் கறாராக வரையறுப்பது பிளவுகளை அதிகரிக்கவே வழி வகுக்கும். பாரத மாதா அதை விரும்ப மாட்டாள்.

Saturday, March 12, 2016

ஏழு சிறுகதைகள்




2007 தொடக்கம் முதல் 2013 இறுதிவரையிலான ஏழாண்டுக் காலத்தில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு இந்த நூல். படைப்புரீதியாக மிகவும் குறைவாக எழுதிவந்த காலகட்டம் இது. ஆண்டுக்கு ஒரு கதை எழுதினால் பெரிய விஷயம் என்று இருந்த காலம். கதைகளைத் தொகுப்பாக வெளியிடும் முயற்சி பல காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இப்போதுதான் கைகூடியிருக்கிறது.

இதற்கு முன்பு வெளியான ‘குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது’ என்னும் தொகுப்புக்கு மதிப்புரைகள், விமர்சனங்கள் அதிகம் வரவில்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் பல வாசகர்கள் கதைகளைப் பற்றி ஆழமாகப் பேசினார்கள். குறிப்பாக ‘பொறி’ ‘சலனங்கள்’, ‘குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது’, ‘மழை தீர்ந்த மரம்’  ஆகிய கதைகளுக்குக் கிடைத்த வரவேற்பு மிகுந்த மனநிறைவை அளித்தது. ‘மழை தீர்ந்த மரம்’ கதையில் வரும் பெண்ணைப் போலவே குழந்தையுடன் தனியாக வாழும் சில பெண்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் நெகிழவைத்தன. ‘சலனங்கள்’ கதையில் வரும் காதலர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட காதலர்கள் பலர் அக்கதையை மிகவும் பாராட்டினார்கள். தலைப்புக் கதை அதன் வடிவத்திற்காகவும் விரிவான பல விஷயங்கள் மிகச் சிறிய கதையில் கையாளப்பட்டமைக்காகவும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து எழுதுவதற்கான உத்வேகத்தை இதுபோன்ற எதிர்வினைகள் அளிக்கின்றன.

இந்தத் தொகுப்பில் அனேகமாக எல்லாமே பெரிய கதைகள். வடிவம், உள்ளடக்கம் சார்ந்து ஒவ்வொன்றும் ஒவ்விரு விதமானவை. ஓரிரு கதைகள் உருவாகும்போதே அவற்றின் வடிவம் குறித்த தெளிவு இருந்தது. சில கதைகள் எழுதியபோது தம்மை வடிவமைத்துக்கொண்டன. சில கதைகள் தம் இலக்கை அடைந்திருக்கலாம். சில அடையாமல் போயிருக்கலாம். ஆனால் எழுதும்போது ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் இருந்த தீவிரத்திலும் ஈடுபாட்டிலும் எந்த வித்தியாசமும் இல்லை. என் மனதுக்கு நெருக்கமான சில தருணங்கள் ஒவ்வொரு கதையிலும் உள்ளன. இதைப் படிப்பவர்களுக்கும் நெருக்கமான தருணங்கள் இக்கதைகளில் இருக்கும் என நம்புகிறேன்.

நண்பர்கள் ஜே.பி.சாணக்யா, கோகுலக் கண்ணன் ஆகியோர் கதைகள் பிரசுரமாவதற்கு முன்பு படித்துப் பார்த்துக் கதைகளை மேம்படுத்த ஆலோசனை சொன்னார்கள். தொகுப்பாக இந்தக் கதைகளைப் படித்துப் பார்த்துக் கதைகளைப் பற்றிய தன் கறாரான மதிப்பீடுகளை முன்வைத்ததுடன் பிரதியை மேம்படுத்தப் பல யோசனைகள் சொன்னவர் நண்பர் ஆசைத்தம்பி. தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கும் இமையம் ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார். இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 

கதைகளை வெளியிட்ட காலச்சுவடு, தீராநதி, உயிர் எழுத்து, ஆனந்த விகடன், தி இந்து (பொங்கல் மலர்) ஆகிய இதழ்களுக்கு என் நன்றி.

சிறுகதைகளில் என்னுடைய ஆதரிசமான படைப்பாளுமைகளில் ஒருவர் அசோகமித்திரன். அவருக்கு இந்தத் தொகுப்பைக் காணிக்கையாக்குவதில் மிகுந்த மன நிறைவை அடைகிறேன்.

அரவிந்தன்
செப்டம்பர் 28, 2015.

Thursday, March 10, 2016

மறுபடியும் முதலிலிருந்தா?




சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அரங்கம் இப்போது இருந்ததைப் போலவே பரபரப்பாக இருந்தது. கூட்டணி பேரங்களும் ஊகங்களும் நடந்துகொண்டிருந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி சார்ந்த விவாதங்களின் மையமாக இருந்தார். கூட்டணி விஷயத்தில் அவர் என்ன முடிவெடுப்பார் என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது. தேர்தல் முடிவை அவர் தீர்மானித்தவராக இருந்தார்.

இன்றும் அவரது முடிவு தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் எனக் கணிசமானவர்களால் நம்பப்படுகிறது. திமுகவும் மக்கள் நலக் கூட்டணியும் அவரது கூட்டணிக்காகக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 5 ஆண்டுகளில் விஜயகாந்தின் முக்கியத்துவம் மாறிவிடவில்லை என்பதையே இதுகாட்டுகிறது. ஆனால், இதை அந்தக் கட்சியின் வலிமை என்று சொல்லிவிட முடியுமா?

மாற்று சக்தி என்னும் அஸ்திரம்

இந்தக் கேள்விக்குப் பதில் காண வேண்டும் என்றால், வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் விஜயகாந்தின் கட்சி தனித்துப்போட்டியிட்டது. “கடவுளோடும் மக்களோடும்தான் கூட்டணிஎன்று சொன்ன விஜயகாந்த், இரண்டு திராவிடக் கட்சிகளையும் விமர்சித்து, தன்னை மாற்று சக்தியாக முன்னிறுத்திக்கொண்டார். எம்ஜிஆர் பாணியில் தன் பிரச்சாரங்களை அமைத்துக்கொண்டார்.

மாற்று சக்தியாக முன்னிறுத்திக்கொண்ட உத்திக்குக் கைமேல் பலன் கிடைத்தது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக அந்தத் தேர்தல் அவரை அடையாளம் காட்டியது. ஒரே ஒரு தொகுதியில்(விஜயகாந்த் நின்ற தொகுதி) மட்டுமே கட்சி வென்றது என்றாலும், மாநிலம் முழுவதும் 9%-க்கும் அதிகமான வாக்குகளை அவர் கட்சி பெற்றது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் கட்சி தனியாகவே நின்றபோது கட்சி மேலும் 1.5% வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றது.

மாற்று சக்திக்கான தேவையும் தேடலும் மக்களிடம் இருந்ததையே அது காட்டியது. அரசியல் அரங்கில் இரு பெரும் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்துப் பல கட்சிகளும் ஆளுமைகளும் விஜயகாந்துக்கு முன்பே இருந்துவருகிறார்கள். இவர்கள் யாரும் பெறாத ஆதரவைப் பெற முடிந்தது விஜயகாந்தின் சாதனை என்று சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணம், யாருடனும் கூட்டணி கிடையாது என்று அவர் தீர்மானமாகச் சொன்னது. சாதிவாதம், மதவாதம் முதலானவற்றிலிருந்து விலகியிருந்ததும் ஒரு காரணம்.

அரசியல் பின்புலம் எதுவுமற்று, கொள்கை முழக்கங்களோ தத்துவ விளக்கங்களோ இல்லாமல், ஊழலை ஒழிப்பேன் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு அரசியல் செய்த விஜயகாந்த் பெற்ற வெற்றி, பிற கட்சிகளின் சித்தாந்த முழக்கங்களைக் கேலிப்பொருளாக்கியது எப்படி என்பது தனியே விவாதிக்க வேண்டியது.

கூட்டணி தந்தபரிசு

தமிழகத்தில் மாற்று சக்தியாக உருப்பெற விரும்பிய பல கட்சிகளும் செய்த அதே தவறைத்தான் விஜயகாந்தும் 2011-ல் செய்தார். அன்று அவருக்கு அது காலத்தின் கட்டாயமாக இருந்திருக்கலாம். ஆனால், அதன் மூலம் அவர் தன் தனித்தன்மையை இழந்துவிட்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டபோது அந்தத் தனித்தன்மை மேலும் பலவீனமானது. அவரது கட்சி ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை என்பதோடு, அவரது தனிப்பட்ட வாக்கு வங்கியிலும் சரிவு ஏற்பட்டது. மாற்று சக்தி என்னும் அஸ்திரத்தை இழந்த நிலையில் விஜயகாந்த் பத்தோடு ஒன்றாகிப்போனார்.

2011-ல் திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியின் விளைவாக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அவர், இன்று அதிமுக ஆட்சியின் மீதான அதிருப்தியின் விளைவாகத் திமுகவுடன் கூட்டணி சேருவார் என்று பேசப்படுகிறது. மீண்டும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் தனது தனித்தன்மை போய்விடும் என அவர் நினைப்பதால், மநகூவுடன் கைகோக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், கூட்டணி வைக்க ஆரம்பித்தபோதே தனித்தன்மை போய்விட்டது என்பதுதான் யதார்த்தம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விஜயகாந்துக்கு இருந்த வாக்கு வங்கி இப்போது இருக்கிறதா என்பது கேள்விக்குறி. தனித்து நின்றதன் மூலம் பெற்ற வலிமை அப்போது அவருக்குக் கைகொடுத்தது. தவிர, விஜயகாந்த் பொதுவெளியில் நாளுக்கு நாள் தன் பிம்பத்தைத் தானே உடைத்துக்கொண்டிருக்கிறார். பொது வெளியில் கேலிக்குரிய பிம்பமாக ஆகிவருகிறார். இது அவரது கட்சியின் பெருமையையோ வலிமையையோ கூட்டுவதாக இல்லை. கூட்டணி விஷயமாக முடிவெடுப்பதில் உள்ள தடுமாற்றமும் கட்சியின் வலிமையைக் குறைக்கக்கூடியதாகவே உள்ளது.

எப்படிப் பார்த்தாலும், இன்று திமுகவோடு அவர் சேர்ந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட வழி உண்டு. ..கூ.வோடு சேர்ந்தால் அக்கூட்டணியின் வாக்குகளைக் கூட்டலாம். இந்தக் கூட்டணி பலம்பெற்று, அதன் விளைவாகத் தேர்தல் முடிவுகள் குழப்பமாக அமைந்தால், ஆட்சியைத் தீர்மானிப்பதில்கூட இந்தக் கூட்டணிக்குப் பங்கு இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் விஜயகாந்த் இந்த முறையும்கிங் மேக்கர்ஆகத்தான் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மூன்று அணிகள் களத்தில் நிற்கும் நிலையில் தனியாக நின்றால், கட்சியின் நிலைமை என்ன ஆகும் என்பதைச் சொல்லவே முடியாது. தனது தனிப்பட்ட செல்வாக்கு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானாலும் இது விஜயகாந்துக்குப் பயன்படலாம். அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்குப் போய்ச்சேரலாம். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியில் சொல்வதானால், “மறுபடியும் முதல்லேருந்து...”

தே.மு.தி..வின் பலம் என்ன என்பது ஒருபுறம் இருக்க, அக்கட்சி எத்தகைய அரசியலை முன்வைக்கிறது என்பது முக்கியமான விவாதத்துக்குரியது. தனக்கென்று ஒரு அரசியல் பார்வையையோ அணுகுமுறையையோ முன்வைக்காத கட்சியாகவே தே.மு.திக. இருந்துவருகிறது. ஊழலுக்கு எதிராகவும் குடும்ப அரசியலுக்கு எதிராகவும் பேசும் கட்சி, குடும்பத்தின் பிடியில் முழுமையாக ஐக்கியமாகியிருக்கிறது. கடவுளோடும் மக்களோடும்தான் கூட்டணி என்று சொல்லி, மாற்று சக்தி என்னும் அளவில் வளர்ந்துவந்த ஒரு கட்சி, இன்று பொது வெளியில் கேலிப்பொருளாகச் சிறுத்திருக்கிறது. பத்தாண்டுகள் கழித்துத் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது.