Wednesday, June 29, 2016

சொல்லக் 'கூடாத' சில வார்த்தைகள்


சமீபத்தில் வெளிவந்த படமொன்றின் இடைவேளை நேரத்தில் ஒரு நண்பருடன் பேச நேர்ந்தது. படத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். பாராட்டிக்கொண்டே வந்தவரின் முகம் சட்டென்று மாறியது. “ஆனால் பாருங்க சார், இந்த ‘இது’வை வெச்சிக் காமெடி பண்றாங்களே… அதுதான் சார் சகிக்கல” என்றார்.

“எதுவை வெச்சி?” என்று கேட்டேன்.

நண்பர் அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டார். பத்து அடி சுற்றளவுக்கு வேறு யாரும் இல்லை என்றாலும் நண்பர் என் காதருகே வந்து, “அதான் சார், குசு விடறத வெச்சிக் காமெடி பண்றாங்களே, அதச் சொல்றேன்” என்றார்.
 
அவர் சொன்ன அந்தக் காட்சி, ரசக் குறைவான காட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த வார்த்தையைச் சொல்ல இவர் ஏன் இவ்வளவு சங்கோஜப்படுகிறார் என்று புரியவில்லை. மலச்சிக்கல் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பிக்கு’ என்னும் இந்திப் படம் நினைவுக்கு வந்தது. நண்பர் அதைப் பார்த்தால் என்ன ஆவார்?

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு அனுபவம். படம் பார்த்துவிட்டு வந்த ஒரு நண்பர் கொதித்துப்போயிருந்தார். “என்ன சார் இது, இவ்ளோ ஆபாசமா படம் எடுக்கறாங்க, கொஞ்சமாவது டீசன்ஸி வேணாமா?” என்று பொங்கினார்.

சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் மனிதர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்ட படம் அது. கதைப்போக்கை ஒட்டி ஓரிரு இடங்களில் பீ, மூத்திரம் போன்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. அவைதாம் நண்பரின் கோபத்துக்குக் காரணம். அந்தச் சொற்கள் ரசக் குறைவாகப் பயன்படுத்தப்படவில்லை. இயல்பாக, மக்களின் அன்றாட வாழ்வின் சொல்லாடல்களின் ஒரு பகுதியாக, படைப்பூக்கத்துடன் இடம்பெற்றிருந்தன.
 
விலக்கப்பட்ட கனிகள்

படைப்பில் எது ஆபாசம், தவிர்க்க வேண்டியவை எவை என்பதெல்லாம் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு, மறுவரையறைக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. வெகுமக்களுக்கான வெளிகளில் புழங்கும் படைப்புகளில் பாலியல் சொற்கள் / செயல்களின் பயன்பாடு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் சில சொற்களையும் பாலியல் சொற்களின் ரகத்தில் சேர்த்துவிடுவது ஆபத்தானது. அதன் மூலம் ‘கெட்ட வார்த்தை’களின் எண்ணிக்கைதான் பெருகும். அத்தகைய சொற்கள் காலப்போக்கில் வசைச் சொற்களாகவும் ஆகிவிடும். ‘விலக்கப்பட்ட கனி’களின் மீது ஆர்வம்கொள்வது இயல்புதானே?

வாயு பிரிதல், சிறுநீர் கழித்தல் போன்ற இயல்பான விஷயங்களுக்கு நேர்ந்த கதி இதுதான். இப்படியேபோனால், இருமல், சளி, தும்மல், புரையேறுதல் போன்றவையும் ‘விலக்கப்பட்ட கனி’களாகிவிடும். இவற்றைப் பற்றிய வசனங்களும் காட்சிகளும் ‘ஆபாச’மாகிவிடும். நமது படைப்புகள் வரவேற்பறையின் அழகியலுக்குள் மட்டுமே புழங்கத் தொடங்கிவிடும். வரவேற்பறை என்பது நாம் மற்றவர்களுக்குக் காட்ட விரும்பும் அம்சங்கள் மட்டுமே உள்ள இடம். சமையலறை, சாப்பாட்டு அறை, படுக்கை அறை, வாசிப்பு அறை, புழக்கடை, கழிவறை எனப் பல அம்சங்களுக்கும் நம் வாழ்வில் இடம் உண்டு. வரவேற்பறையை மட்டுமே பிரதிபலிக்கும் படைப்புகள் தட்டையாகவும் வண்ணங்கள் அற்று செயற்கையாகவும் இருக்கும்.
 
மொழியின் வண்ணங்கள்

இந்தப் போக்கு நமது மரபில் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மத்தியில் புழங்கும் பழமொழிகள், சொலவடைகளில் உடல் உறுப்புகளின் பற்றிய கொச்சை வழக்குகள் சகஜமாகப் புழங்குகின்றன. ‘குளத்து மேல கோவிச்சிக்கிட்டு குண்டி கழுவ மறந்த கதையாக,' என்னும் சொலவடை ஓர் உதாரணம். இதில் வெளிப்படும் கூர்மையான விமர்சனமும் உளவியல் நுட்பமும் அபாரமானவை. இப்படி நூற்றுக்கணக்கானவற்றைச் சுட்டலாம். இத்தகைய சொற்களை அருவருத்து ஒதுக்குவதன் மூலம் நமது சொற்களஞ்சியத்தின் முக்கியமானதொரு பகுதியை ஒதுக்கிவிடுகிறோம். மொழியின் வண்ணங்களைக் குறைத்து அதற்கு வெள்ளையடிக்கிறோம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விக்டோரிய காலத்து மதிப்பீடுகள் நம்மிடையே பரவின. ஆங்கிலேயப் பொதுப் பண்பாடு கறாரான சம்பிரதாய வரையறைகள் கொண்டது. ஒருவரைச் சந்திக்கும்போது எப்படிப் பேச வேண்டும், ஒரு விழாவை அல்லது பொதுச் சந்திப்பை எப்படி நடத்த வேண்டும், எப்படி விருந்து மேசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சிரிக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் கறாராக வரையறுத்து வைத்திருக்கும் சமூகம் அது. நாகரிகம், நாசூக்கு, சம்பிரதாயங்கள், முறைசார் பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றையும் அது வரையறுத்து வைத்திருக்கிறது.
 
செயற்கை நாகரிகம்

ஆட்சியாளர்களை அடியொற்றிய பண்பாடு அடிமைச் சமூகத்தில் உருவாவதில் வியப்பில்லை. ஆங்கிலேயர்களைப் பல விதங்களிலும் நகல் செய்த இந்திய மேட்டுக்குடியினர், அதன் தாக்கத்தில் நமது பொதுவெளியின் பண்பாட்டையும் கறாராக வரையறுக்கத் தொடங்கினார்கள். பெரும்பாலும் மேட்டுக்குடியினரின் பிடியிலேயே இருந்த கலை சாதனங்களும் ஊடகங்களும் இவற்றைப் பிரதிபலித்தன. இயல்பான பல சொற்கள் அருவருக்கத் தக்கவையாக மாறத் தொடங்கின. பொதுவெளியில் புழங்கும் சொற்களின் மீது செயற்கையான நாகரிக முலாம் பூசப்பட்டது. ஒரு சிலரது கண்ணோட்டத்தில் உருவான தூய்மைவாதம் பொதுவான அளவுகோலாக மாறியது. பொதுப் பண்பாட்டின் அலகுகள் மீது மேட்டுக்குடியினர் செலுத்திவந்த ஆதிக்கமே இதைச் சாத்தியமாக்கியது. எல்லாத் தூய்மைவாதங்களும் இன, சாதியக் கண்ணோட்டங்களைப் பிரதிபலிப்பவை என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்வது, நம் சமூகத்தில் இந்தப் போக்கு நிலைபெற்ற விதத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

தொண்ணூறுகளுக்குப் பிந்தைய சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மைய நீரோட்ட மதிப்பீடுகளையும் அழகியலையும் மறுத்த பின்நவீனத்துவப் போக்கு, மக்களிடையே புழங்கிவந்த பல சொற்களை மீட்டெடுத்தது. விளிம்பு நிலை மக்கள், அவர்தம் பண்பாடுகள், சொல்லாடல்கள் ஆகியவை படைப்புலகில் இடமும் மதிப்பும் பெற்றன. பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் படைப்புலகிலும் ஊடகங்களிலும் அதிகமாக இடம்பெறத் தொடங்கியதை அடுத்து, தூய்மைவாத அழகியலும் வரையறைகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. வெகுசனக் கலை வடிவமான திரைப்படத்திலும் அதன் பிரதிபலிப்புகளைப் பார்க்க முடிகிறது. கானா பாடல்கள் இடம்பெறத் தொடங்கின. பல்வேறு வட்டார வழக்குகள் துல்லியமாக ஒலிக்கின்றன. திருநங்கைகள் கேலிக்குள்ளாக்கப்படுவது குறைந்துள்ளது.

பொது வெளிக்கான நடத்தைகளைக் கறாராக வரையறுத்த ஒழுக்கவியலைப் பின்பற்றும் ஆங்கிலேயச் சமூகம், படைப்புகளில் அத்தகைய தூய்மைவாதத்தைக் கடைப்பிடிப்பதில்லை. பொது வெளியில் ஆங்கிலேயச் சமூகம் கடைப்பிடிக்கும் சமத்துவம், நிர்வாகச் சீர்முறைகள், பொதுச் சொத்துக்கள், பொதுச் சேவைகள் குறித்த பொறுப்புணர்வு ஆகியவற்றை இந்தியச் சமூகம் பெரிதாகக் கற்றுக்கொள்ளவேயில்லை. ஆனால், முறைசார் பண்பாட்டின் மேட்டுக்குடித் தூய்மைவாதத்தை இயன்றவரையிலும் எல்லாத் துறைகளிலும் கடைப்பிடிக்கும் முனைப்பு மட்டும் இங்கே காணப்படுகிறது.
 
நமது வாழ்வியல்.. நமது அழகியல்!

சில சொற்களைப் புனிதப்படுத்துதல், சிலவற்றை விலக்கிவைத்தல் ஆகிய இரண்டுமே ஒரே மனநிலையின் இரு பரிமாணங்கள். இரண்டுமே வாழ்வின் இயல்புக்கும் படைப்பூக்கத்துக்கும் எதிரானவை. சமத்துவ உணர்வை மறுப்பவை. புனிதப்படுத்துதலும் அசிங்கப்படுத்துதலும் சில சொற்களின் தன்மைகளையே மாற்றிவிடும். புனித அல்லது அசிங்கப்படுத்தப்பட்ட சொற்களை இயல்பாக யாரேனும் பயன்படுத்தும்போது அது உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும். ஏற்கெனவே பல சொற்கள் இத்தகைய ‘அந்தஸ்’தைப் பெற்றுவிட்ட நிலையில் இவற்றைக் கூட்டாமல் இருப்பது உத்தமம்.

வரவேற்பறை அழகியல் முக்கியமானதுதான். திட்டமிட்ட, பிசிறற்ற முறைசார் நிகழ்வுகளுக்கும் சமூகத்தில் முக்கிய இடம் உண்டு. ஆனால், ஒட்டுமொத்த சமூகமும் வரவேற்பறை அழகியலிலும் முறைசார் நிகழ்வுகளிலும் முடங்கிப்போக முடியாது. நமக்கான அழகியல் நமது வாழ்வியலிலிருந்து உருவாக வேண்டும். வாழ்வின் பன்முக வண்ணங்களை அவற்றின் இயல்பில் சித்தரிக்கும் படைப்புகள் அற்ற ஒரு சமூகம் தன்னைத்தானே செயற்கையாக வரையறுத்துக்கொள்கிறது. தனக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க மறுக்கிறது. பன்முகத்தன்மைக்கோ பன்முகப் பார்வைக்கோ இடம் தராத இத்தகைய அணுகுமுறைகள் படைப்பில் மட்டுமல்ல, சமூகத்திலும் படைப்பூக்கத்தைச் சிதைத்துவிடும்.

Thursday, June 9, 2016

மட்டையின் கண்கள்
ப்ளேயிங் இட் மை வே: சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை

ச்சின் டெண்டுல்கருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. கை விரலில் சிறிய அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. திடீரென்று அவர் எழுந்துகொள்கிறார். “ஆபரேஷன் செய்யும்போது உள்ளங்கையில் வெட்டிவிடாதீர்கள். பேட்டைப் பிடிக்க க்ரிப் இருக்காது” என்கிறார் பதற்றத்துடன். மருத்துவருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. மயக்க மருந்து வலுவிழக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள்” என்று மீண்டும் தூங்கவைக்கிறார்.

கிரிக்கெட்டின் மீது சச்சினுக்கு இருக்கும் தீராக் காதலை இந்த ஒரு சம்பவமே சொல்லிவிடும். அப்படிப்பட்ட ஒருவர் சுயசரிதை எழுதினால் எப்படி இருக்கும்? சச்சினின் மனைவி அஞ்சலி பற்றிய ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு வரியும் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. கிரிக்கெட் ஆடுதல், கிரிக்கெட்டுக்காகத் தயார்செய்துகொள்ளுதல், ஆட்டத்தை அலசுதல் எனப் பக்கங்கள் விரிகின்றன. கிரிக்கெட்டுக்கு அப்பால் குறிப்பிடப்படும் விஷயங்களும் (அரட்டை, ஷாம்பெய்ன், பயணங்கள், இசை) கிரிக்கெட் தொடர்பாகவே பேசப்படுகின்றன.

30 ஆண்டு காலப் பயணம்

வரலாற்றில் யாரும் செய்யாத, இனி அனேகமாக யாராலும் செய்ய முடியாத பல சாதனைகளைச் செய்தது எப்படி எனபதை ஓரளவேனும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் தன் கிரிக்கெட் பயணத்தைப் பதிவுசெய்துள்ளார் சச்சின். 11 வயதில் தொடங்கிய பயணம் இது. கிட்டத்தட்ட 30 ஆண்டு காலப் பயணம். அதில் உள்ள தீவிரம், அசாத்தியமான முனைப்பு, நம்ப முடியாத அளவிலான முன் தயாரிப்பு, பரவசம், வலி என இந்தப் பயணத்தின் பரிமாணங்கள் சுமார் 450 பக்கங்களில் உருப்பெறுகின்றன.

பயிற்சி என்றால் சாதாரணப் பயிற்சி அல்ல. பதின்ம வயதில் ஒரு நாளுக்கு நான்கு முறை பேருந்தில் பயணம் செய்து பயிற்சிக்குச் செல்வது, அங்கே மணிக் கணக்கில் பயிற்சி, பயிற்சி இல்லாத நாட்களில் நாள் முழுவதும் விளையாட்டு என்று ஆட்டத்தின் மீது வெறித்தனமான ஈடுபாடு சச்சினுக்கு இருந்திருக்கிறது. இந்தியாவுக்காக ஆடத் தொடங்கி அணியில் நிரந்தர இடம் பிடித்த பிறகும் அவரது வெறித்தனமான பயிற்சி குறையவில்லை. கடைசிப் போட்டிவரை அது தொட்ர்ந்திருக்கிறது. அந்தப் பயிற்சிகளை சச்சின் விவரிக்ப்பதைப் படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. போட்டி இல்லாத நாட்களிலும் பயிற்சியின் தீவிரம் குறைவதில்லை. சாப்பாட்டுப் பிரியரான சச்சினுக்குத் தன் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது பெரிய சவாலாக இருந்திருப்பதையும் உணர முடிகிறது. 

போட்டிகள், பயிற்சிகள், வெற்றி, தோல்விகள் என்பவை எந்த ஆட்டக்காரரின் வாழ்க்கையிலும் வருபவைதான். ஆனால் தன்னுடைய சாத்தியங்களின் எல்லைவரை போய்ப் பார்த்துவிட வேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட சச்சினின் விஷயத்தில் இவை ஒவ்வொன்றுமே விறுவிறுப்பான நிகழ்வுகளாகியிருக்கின்றன. ஸ்டெம்பின் மீது ஒற்றை ரூபாய் நாணயத்தை வைத்துவிட்டுப் பந்து வீசச் செய்வார் கோச் ரமாகாந்த் அச்ரேகர். சுற்றிலும் இருபதுக்கும் மேற்பட்ட தடுப்பாளர்கள். எல்லைக் கோடு என்று எதுவும் கிடையாது. எங்கே கேட்ச் பிடித்தாலும் அவுட். இந்த வியூகத்திற்குள் அவுட் ஆகாமல் 15 நிமிடங்கள் ஆடினால் அந்த நாணயம் பரிசு. நாணயம் சில சமயம் கிடைக்கும், சில சமயம் கிடைக்காது. ஆனால், தரையோடு ட்ரைவ் ஆடும் கலையை இதன் மூலம் கற்றுக்கொள்ள முடிந்தது.

குறைந்த தூரத்திலிருந்து வீசப்படும் பவுன்சர்களை ஆடுவது, மழையில் நனைந்தபடி ஆடுவது, ஒவ்வொரு பந்து வீச்சாளரின் பலம் என்னவோ அதற்கேற்றபடி வியூகம் வகுத்து அதைப் பயிற்சி செய்வது என்று பல விதமாக அமைந்த இந்தப் பயிற்சிகள் கடைசித் தொடர்வரையிலும் தொடர்ந்தது. 2013-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு முன்பு மலைப்பாங்கான பகுதியில் சைக்கிளில் ஏறும் பந்தயத்தில் அளவுக்கதிகமான வேகத்தில் ஓட்டி மயங்கி விழும் நிலைக்குப் போயிருக்கிறார். 198 போட்டிகளில் ஆடிய ஒருவர் அப்படியெல்லாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பரம பக்திமானுக்கு வழிபாடு எப்படியோ அப்படித்தன் சச்சினுக்குப் பயிற்சி.

இயல்பின் ஒரு பகுதி

சச்சின் இயல்பிலேயே கிரிக்கெட் ஆடும் ஆற்றல் கொண்டவர். 14 வயதில் உள்ளூர்ப் போட்டி ஒன்றில் இவர் கபில்தேவின் பந்துகளை எதிர்கொள்ளும் விதத்தைப் பார்த்து வியந்த வெங்சர்க்கார் இவரை மாநில அணிக்கு ஆடப் பரிந்துரைக்கிறார். இப்படிப்பட்ட ஆற்றலும் அதற்கேற்ற தன்னம்பிக்கையும் இருந்தாலும் பயிற்சியை ஒருநாளும் சச்சின் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. பயிற்சியை ஒரு தவம்போலச் செய்வதும் தொடர்ந்து தன் மட்டையாட்டத்தில் பரிசோதனைகள் செய்துகொண்டிருந்ததும்தான் எல்லாச் சோதனைகளையும் மீறி இவரை 24 ஆண்டுகள் நீடிக்கவைத்தன என்பதை இந்தச் சுயசரிதை இயல்பாக உணர்த்துகிறது.
  
ஒரு ஆட்ட நாயகன் உருவாகிறான் என்றால் அதற்கு அவன் மட்டுமல்லாமல் அவன் குடும்பமும் விலை கொடுக்க வேண்டும். சச்சினின் பெற்றோரிலிருந்து தொடங்கி அவரது அண்ணன், பின்னாளில் மனைவி, குழந்தைகள் என எல்லோருக்கும் இதில் பெரிய பங்கு இருக்கிறது. இவர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் சச்சின் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார். தன் கோச் ரமாகாந்த் அச்ரேகரைப் பற்றிப் பேசும்போதும் நெகிழ்ந்துபோகிறார். 

சோதனைகள் எல்லாத் துறைகளுக்கும் பொதுவானவைதான். ஆனால் சமகால விளையாட்டுக் களத்தில் சச்சின் அளவுக்குச் சோதனைகளை அனுபவித்திருக்கும் இன்னொருவர் இருப்பாரா என்பது சந்தேகம்தான். கடுமையான பயிற்சிகள், தொடக்கத்திலேயே வலிமையான எதிரணிகளுக்கு எதிராகப் பழக்கமில்லாத ஆடுகளங்களில் ஆட வேண்டிய நிர்ப்பந்தம், சிறிய வயதிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னும் சுமையைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம், கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்குத் துணைக்கு வலுவான மட்டையாளரோ எதிரணியை ஊடுருவக்கூடிய பந்து வீச்சாளர்களோ இல்லாத ஒரு அணியில் இருந்தபடி ஆட வேண்டிய அழுத்தம், கிரிக்கெட் வாழ்வின் பின் பகுதியில் எதிர்கொண்ட கடுமையான காயங்கள், எதிரணியின் முதன்மை இலக்காக இருத்தல் என்று தன் மீதான சுமைகளை மிகையுணர்ச்சி இன்றி விவரிக்கிறார் சச்சின்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதன் வலியையும் காயங்களிலிருந்து மீண்டு வருவதில் இருந்த உடல், மன வலிகளையும் துல்லியமாகச் சொல்கிறார். முதுகு வலி, கால் விரல் எலும்பு விரிசல், டென்னிஸ் எல்போ என்னும் முழங்கை வலி, தோள்பட்டைத் தசை கிழிந்தது, கை விரலில் ஏற்பட்ட முறிவு, தொடையில் ஏற்பட்ட வீக்கம் என்று சச்சினுக்கு ஏற்பட்ட எல்லாக் காயங்களுமே அபாயகரமானவைதாம். இந்தக் காயங்களில் ஏதேனும் ஒன்று போதும் ஒருவரைத் தீவிர ஆட்டத்திலிருந்து விலக்கிவைக்க. ஆனால் சச்சின் விலக மறுத்துப் போராடுகிறார். தன் சாத்தியங்களில் எல்லைகளைக் கடுமையான போராட்டத்தின் மூலம் விரிவுபடுத்துகிறார். ஆட்டத்தின் எல்லைகளையும் கூடவே விரிவுபடுத்துகிறார். சிறிய வயதில் பின் காலில் சென்று ஆடும் கவர் ட்ரைவ், அதிக மட்டை அசைவு இல்லாமல் ஆடும் ஸ்ட்ரைட் ட்ரைவ் போன்ற ஷாட்கள் என்றால் பின்னாளில் அப்பர் கட் போன்ற ஷாட்கள் அவரது முத்திரையாக இருந்தன.
ஆடுகளம் தொடர்ந்து சச்சினுக்குப் பெரும் சவால்களை எழுப்பியபடி இருந்திருக்கிறது. அதற்கு அவர் எல்லா விதங்களிலும் தயாராகவே இருந்திருக்கிறார். அதனால்தான் 35 வயதுக்குப் பிறகு அவரால் ஒரு நாள் போட்டியொன்றில் 200 ரன் எடுக்க முடிந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் சவாலான சூழலில் டெஸ்ட் சதம் எடுக்க முடிந்திருக்கிறது. பார்வையாளராக இந்த மாயங்களைப் பார்த்து வியந்த ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படித்தல் எதுவும் சும்மா வந்துவிடவில்லை என்பது புரியும்.


வலியை வென்ற காதல்

சச்சினின் கதையை ஒரு விதத்தில் வலியின் கதை என்று சொல்லலாம். சொல்லொணாத வலிகளுக்கு மத்தியில் ஒரு மனிதன் விடாமல் போராடிய கதை. சென்னை டெஸ்டில் முதுகு வலியோடு அவர் ஆடியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அதைவிடவும் கடுமையான வலியை அவர் அனுபவித்திருகிறார். முறிந்த விரலோடு ஆடியிருக்கிறார். தோள்பட்டையில் கிழிந்த தசையோடு ஆடியிருக்கிறார். கால் விரலில் சிறு விரிசலால் சிரமப்பட்டு ஆடியிருக்கிறார். டென்னிஸ் எல்போ குணமாகிய பிறகும் பழைய வலிமையைப் பெறுவதற்கு முன்பே ஆடியிருக்கிறார். ஜுரம், வயிற்று வலி ஆகியவற்றின் கணக்கு தனி.

இத்தனை வலிகளையும் சுமந்தபடி அவரை ஆடவைத்த சக்தி எது? வலிகளைப் பொருட்படுத்தாமல் களமிறக்கிய சக்தி எது? கிரிக்கெட்டின் மீது இருக்கும் அடங்காத காதல்தான். அந்தக் காதல்தான் 12 வயதிலிருந்து ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அந்தக் காதலின் ஆழம்தான் 24 ஆண்டுகள் கடந்த பிறகும் ஓய்வுபெறும் எண்ணத்தை வலி மிகுந்த அனுபவமாக மாற்றுகிறது. 

விமர்சனங்கள், சர்ச்சைகள்

சச்சின் சர்ச்சைகளைப் பற்றியும் பேசுகிறார். அணித் தேர்வு விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் குறைகளைப் பற்றி, 1997-ல் தன்னிடம் சொல்லாமல் தலைமைப் பதவியிலிருந்து தன்னை நீக்கியதைப் பற்றி, ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கும் ஹர்பஜன் சிங்குக்கும் இடையே நடந்த சண்டையைப் பற்றி, தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்ட சமயங்களில் அடைந்த ஏமாற்றங்களைப் பற்றி, தான் 194 ரன்னில் இருக்கும்போது திராவிட் டிக்ளேர் செய்தது பற்றி, கிரேக் சாப்பலின் செயல்பாடு பற்றி, இயன் சாப்பலின் விமர்சனங்கள் பற்றி

சில பதிவுகள் தனித்து நிற்கின்றன. ஷார்ஜாவில் ஆடிய அந்த இரண்டு ஆட்டங்கள், 2003 உலகக் கோப்பை ஆட்டங்கள், கொல்கத்தாவில் லட்சுமணனும் திராவிடும் நிகழ்த்திய அதிசயம், கும்ப்ளேயின் போர்க்குணம், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகியோருடன் இருந்த நட்பு போன்றவை சுவாரஸ்யமானவை.

புத்தகத்தில் என்னவெல்லாம் இல்லை என்றும் பல விஷயங்களை அடுக்கலாம். சில விமர்சகர்கள் மேட்ச் ஃபிக்ஸிங் பற்றி மவுனம் சாதிப்பது குறித்துக் கேள்வி எழுப்புகிறார்கள். சிலருக்கு வேறு சில சர்ச்சைகளைப் பற்றிக் கவலை. புதிய தகவல்கள் அதிகம் இல்லை என்பது சிலரது ஆதங்கம். இன்னும் அடுக்கலாம். கங்கூலி, கும்ப்ளே ஆகியோரைப் பற்றி எழுதிய அளவுக்கு திராவிட், லட்சுமணன் பற்றி இல்லை. ரிசர்ட்ஸைப் பற்றி நெகிழ்ந்து பேசும் சச்சின், கவாஸ்கர் முதலான இந்திய வீரர்கள்பற்றி அதிகம் சொல்லவில்லை. பால்ய நண்பன் காம்ப்ளி பற்றிய பதிவு ஏனோதானோவென இருக்கிறது. ஒரு சில மோசமான தோல்விகளைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. பிரயன் லாரா, ரிக்கி பான்டிங் போன்ற சமகாலச் சாதனையாளர்கள் பற்றி அதிகமில்லை.

இவை போதாமைகள்தான். ஆனால், ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது சச்சினின் சுயசரிதை. எதை எழுதுவது, எதை விடுவது என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். தவிர, இந்தியச் சூழலில், எந்த அளவுக்கு விஷயங்களைத் திறந்த மனதுடன் பேச முடியும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. கபில்தேவும் கவாஸ்கரும் எத்தனை சர்ச்சைகளைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்கள் என்பதையும் யோசித்துப் பார்க்கலாம்.

டெண்டுல்கர் மொழித் திறனுக்குப் பேர்போனவர் அல்ல. அவருடன் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதிய போரியா மஜும்தாரும் நடையழகுக்காக மெனக்கெடவில்லை. எளிமையாக, செய்தித்தாள் பாணியில் மொழிநடை இருப்பது சச்சினின் ஆளுமையுடன் பொருந்திப்போகிறது. முதல் முதலாக மட்டை பிடித்த நாளிலிருந்து வாங்கடே அரங்கில் ஓய்வுபெற்ற தினம்வரை சச்சினின் கிரிக்கெட் பயணம் இங்கே பதிவாகியிருக்கிறது.  
கிரிக்கெட்டைத் தன் உயிருக்கு இணையாக நேசித்த ஒரு மனிதனின் உணர்வுகள் இந்தப் புத்தகம் முழுவதும் தகவல்களாகத் தரப்பட்டுள்ளன. ஆகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவரது பார்வையிலிருந்து ஆட்டம் அணுகப்படுவதில் வெளிப்படும் நுட்பம்தான் நூலின் ஆகச் சிறப்பான அம்சம். ஆடுகளத்தை மதிப்பிடுதல், காற்று வீசும் திசையைக் கவனித்தல்,  வானிலையால் ஏற்படும் கள மாற்றங்களின் தன்மைகள், பந்துவீச்சாளரின் மனதை ஊடுருவ முயலும் உளவியல் போராட்டம், எதிரணியின் வியூகங்களைக் கணித்தல், உடல் குறைபாடு ஆட்டத்தைப் பாதிக்காத வண்ணம் செய்துகொள்ள வேண்டிய மாற்றங்கள், களத்தில் சக ஆட்டக்காரர்களுடனான உரையாடல்களின் முக்கியத்துவம் என மட்டை வீச்சுக் கலையின் சூட்சமங்களை அவர் விவரிக்கும் நுட்பம் அபாரம்.

ஒரு இளைஞர், அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதில் போராடித் தன் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான உத்வேகத்தை இந்த நூலிலிருந்து பெற முடியும். தான் தேர்ந்துகொண்ட விஷயத்தின் மீது அசாத்தியமான காதல் இருந்தால் அசாத்தியமான வலிகளைத் தாண்டிச் சாதிக்க முடியும் என்பதையும் அறிய முடியும். இதுதான் இந்த நூலின் ஆகச் சிறந்த பங்களிப்பு.​

Wednesday, June 8, 2016

படைப்பின் சாவி யாரிடம் உள்ளது?பிறர் எழுதியதை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு எதைத் தருகிறது?

இந்தக் கேள்விக்கான விடையைப் படைப்பு எதைத் தருகிறது என்பதிலிருந்து அணுகலாம். படைப்பு என்பது புதிதாக ஒன்றை உருவாக்குதல். போலிசெய்தல் அல்ல. படைப்பூக்கம் கொண்ட ஒரு நபர் தன் அனுபவங்களையும் பார்வையையும் தனக்கே உரிய கோணத்தில் வெளிப்படுத்துவதைப் படைப்பு என்று சொல்லலாம். 

படைப்பூக்கம் கொண்ட எழுத்து வாசிக்கப்படும்போது அது தரும் பொருள் பல்கிப் பெருகுகிறது. கற்பனைக்கும் எட்டாத வகையில் விரிவு கொள்கிறது. ஒரு பிரதி பல பிரதிகளாக மாறுகின்றன. படைப்பில் ஒரு உரையாடல், படைப்பில் வரும் ஒரு நிகழ்வு, ஒரு தருணம், சிந்தனைத் தெறிப்பு ஆகியவை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருளைத் தரக்கூடியவையாக உள்ளன. ஒரே நபருக்கு வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பொருள்களையும் தருகின்றன.

படைப்பு என்பது தட்டையான செயல்பாடு அல்ல என்பதைப் போலவே வாசிப்பும் தட்டையான செயல்பாடு அல்ல. படைப்பைப் போலவே அது பன்முகப் பரிமாணங்கள் கொண்டது. ஒரே வாசகர் ஒரு படைப்பில் உணரும் ஒரு அம்சத்தை, பெறும் தரிசனத்தை இன்னொரு வாசகர் உணரவோ பெறவோ வேண்டிய அவசியம் இல்லை. ஒரே விதமான தரிசனத்தை இருவர் பெறுவதும் சாத்தியம் இல்லை. பல வித வாசிப்புகள், பல விதமான தரிசனங்கள்.

ஒரு கதை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாகப் பொருள் தரும் என்றால் அந்தக் கதையை ஒரு கதை என்று எப்படிச் சொல்ல முடியும்? எழுதப்பட்ட கதை அல்லது கட்டுரை ஒன்றுதான் என்றாலும் வாசிக்கப்படும் கதை ஒன்று அல்ல. ஏனென்றால் அந்தக் கதை உள்வாங்கப்படும் விதம் ஒரே விதமானதல்ல. ஒரு கதை பல கதைகளாகப் பெருகுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு வாசிப்புக்கும் ஒவ்வொரு கதை.

ஆக ஒரு கதை எண்ணற்ற கதைகளாக விரிந்துகொண்டே போகிறது. முடிவற்ற இந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்துவது வாசிப்பு. வாசிப்பு பெருகப் பெருகக் கதைகளும் பிரதிகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

இப்படிப் பார்க்கும்போது வாசிப்பின், வாசகரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். படைப்பு வாசிப்பின் எண்ணிக்கைக்கும் வாசிப்பவரின் ஆளுமைக்கும் ஏற்ப விரிந்துகொண்டே போவதால் படைப்புக்கு உயிர் கொடுப்பதே வாசிப்பு என்று சொல்லிவிடலாம்.

படைப்பு ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியவை. அரிச்சந்திரன் கதை காந்திக்குக் கொடுக்கும் பொருள் அவர் வாழ்க்கைப் பார்வையையே மாற்றியது. ஷேக்ஸ்பியரின் ஆண்டனி ஆற்றும் உரை ஒரு தருணத்தின் மாயத் தன்மையை உணரவைத்து ஒவ்வொருவரது பின்புலத்துக்கும் ஏற்பப் பலவாறாக உருக்கொள்கிறது. நான்கு தம்பிகளில் யார் உயிர்பிழைக்க வேண்டும் என விரும்புகிறாய் என்னும் யட்சனின் கேள்விக்குத் தருமன் சொன்ன பதில் சமநீதியின் நிரந்தரச் செய்தியாக மனித ஆன்மாவில் தங்கியிருக்கிறது. குருதட்சிணையாகக் கட்டை விரலைக் கேட்ட துரோணரின் குரல் சமத்துவ மறுப்பின் சாட்சியாகத் தங்கியிருக்கிறது.

காஃப்காவின் கே எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அவற்றின் பின்புலங்களைத் தாண்டி, உலகம் முழுவதிலும் நுண்ணுணர்வு கொண்ட ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளாகத் தோற்றம் கொள்ளுகின்றன. நீரின்றி இருப்பது நதியின் பிழை அல்ல என ராமன் லட்சுமணனிடம் சொல்வது உலகின் எல்லா நதிகளுக்கும் எல்லா விதிகளுக்கும் பொருந்துகிறது. அரசனைப் பார்த்துக் கண்ணகி கேட்கும் கேள்வி கண்ணகியின் கேள்வி மட்டுமல்ல. அன்றைய கேள்வி மட்டும் அல்ல. “இதுக்குத்தானா” என்று யமுனா பாபுவைப் பார்த்துக் கேட்ட கேள்வியின் எதிரொலி அதை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் வெவ்வேறு அதிர்வுகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். குற்றமும் தண்டனையும் குறித்து ரஸ்கோல் நிகோவுக்கு எழும் மன நெருக்கடி காலம், இடம் தாண்டி அனைவரது மனங்களிலும் எழும். இதுதான் படைப்பின் மாயம்.

இந்த மாயத்தை நிகழ்த்துவது படைப்பாளி மட்டுமல்ல. வாசகரும் சேர்ந்துதான் இதைச் சாத்தியப்படுத்துகிறார். ஒரு படைப்பு பல தரிசனங்களாக, பல பிரதிகளாக பல்வேறு படைப்புகளாக மாறும் மாயத்தை, அதிசயத்தை நிகழ்த்துபவர்கள் வாசகர்கள்.

இரும்புக் கையின் உயிர்

இரும்புக் கை மாயாவி என்னும் காமிக்ஸ் கதாபாத்திரத்தைப் பலர் அறிந்திருப்பார்கள். அந்த இரும்புக் கை பல ஆற்றல்கள் கொண்டது. ஒரு விரல் தோட்டாவைச் சுடும் திறன் கொண்டது. இன்னொரு விரலில் விஷ வாயுவைப் பீய்ச்சும் ஆற்றல் கொண்டது. மின்சாரத்தைப் பாய்ச்சுதல், மரண அடி கொடுத்தல், தன்னைத் தாங்கியவரின் உருவத்தை மறைய வைத்தல் என மேலும் பல விதமான திறமைகள் கொண்டது அந்த இரும்புக் கை. அதைக் கழற்றித் தனியாகவும் இயங்க வைக்க முடியும். ஆனால் அதன் சொந்தக்காரர் நினைவிழந்து, செயலிழந்துவிட்டால் அதன் ஆற்றல்கள் எதுவும் பயன்படாது. இரும்புக் கை வெறும் கையாக இருக்கும். அதற்கு உயிர் கொடுக்கும் சாவி அதன் உரிமையாளரிடம் இருக்கிறது. அவரது பிரக்ஞையில் இருக்கிறது.

படைப்பும் அப்படித்தான். வாசிப்பின் ஸ்பரிசமே அதன் படைப்பின் வல்லமையை விகசிக்கவைக்கிறது. படைப்பைப் படைப்பாக உயிர்பெறச் செய்யும் சாவி வாசகர்களிடம்தான் இருக்கிறது. அவ்வகையில் வாசகர்களும் படைப்பாளர்களே.

ஒவ்வொருவரும் தனக்குள்ள படைப்பாற்றலை இனம்கண்டு வெளிப்படுத்துவதன் மூலம் தனது வாழ்வையும் ஒட்டுமொத்த மனித இனத்தின் வாழ்வையும் மேம்படுத்த முடியும். எழுத்தாளர்கள் செறிவானவற்றைப் படைப்பதன் மூலமாகவும் வாசகர்கள் தங்களது ஆழமான வாசிப்பின் மூலமும் படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள். காத்திரமான வாசிப்பு பெருகப் பெருக ஒரு சூழலின் படைப்பாற்றலும் பெருகுவது சாத்தியமாகிறது.