Monday, February 13, 2017

சலனங்கள்


நாம எங்க தங்கப்போறோம்என்று கேட்டாள் நந்தினி.

சுதாகர் அவளைக் கூர்மையாகப் பார்த்தான். கண்களிலும் உதடுகளின் இறுக்கத்திலும் மூக்கின் விடைப்பிலும் அவன் கோபம் வெளிப்பட்டது. பிளாட்பாரத்தில்என்றான்.

உற்சாகமாக இருந்த நந்தினியின் முகம் சட்டென்று வாடிவிட்டது. சகஜப்படுத்துவதற்காகக் கேட்ட கேள்வியை சுதாகர் இவ்வளவு மோசமாக எதிர்கொள்வான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. கோபம் அவளையும் தொற்றிக்கொண்டது. பிரகாசமான கண்கள் சற்றே சுருங்கி ஜன்னலுக்கு வெளியே தூரத்துப் புள்ளி ஒன்றில் நிலைபெற்றன. அழுந்தி வாரப்படாத அவளது மயிர்க் கற்றைகள் காற்றின் ஆவேசத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தன. ஓரிரு இழைகள் முகத்தின் மீது படிந்திருந்தன. அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் சுதாகரின் கோபத்தை அதிகரிக்கச் செய்தன. ஒருவனுக்கு நியாயமான கோபம் வரும்போது எதிராளி பதிலுக்குக் கோபப்பட்டால் ஒன்று எதிராளி சுலபத்தில் கோபம் கொள்ளக்கூடியவனாக இருக்க வேண்டும். அல்லது அந்த நியாயத்தைப் புரிந்துகொள்ளாதவனாக இருக்க வேண்டும். நந்தினி முதல் ரகமல்ல என்பது சுதாகருக்குத் தெரியும். அவளுக்குத் தன் கோபத்திலுள்ள நியாயத்தைப் புரியவைக்க வேண்டும் என்று நினைத்தான். புரியவைத்துவிட்டால் அபஸ்வரம் நீங்கி, மீண்டும் சுருதி கூடிவிடும் என்று நினைத்தான். ஆனால் சுருதி பிசகாமல் இருக்க வேண்டும் என்பதற்கோ, பிசகிவிட்டால் சரிசெய்வதற்கோ அவள் எந்த முயற்சியும் எடுக்கமாட்டேன் என்கிறாளே என்ற எரிச்சல் அவனுக்கு ஏற்பட்டது. கஷ்டப்பட்டுக் குரலில் சகஜத்தன்மையை வரவழைத்துக்கொண்டான். எனக்கு ஏன் கோபம் வந்ததுன்னு தெரிஞ்சா நீ கோவப் படமாட்டஎன்று ஆரம்பித்தான். பக்கத்திலிருந்த பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்தான். பல தடவ இதப் பத்திப் பேசியிருக்கோம். .என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை உன்னிப்பாகக் கவனித்தான்.

பக்கவாட்டுக் கோணத்தில் செதுக்கிய சிலை போன்று இருந்த அவளது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. சுதாகர் கழுத்தைச் சாய்த்து அவளது முகத்தை - குறிப்பாகக் கண்களை - முழுசாகப் பார்க்க விரும்பினான். பார்வைகள் கலக்கும்போது வார்த்தைகள் இரண்டாம்பட்சமாகிவிடுகின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டும் அவளது முகத்தை முழுவதுமாகப் பார்க்க முடியவில்லை. பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் இதுதான் பிரச்சினை. கழுத்து வலி இல்லாமல் முகத்தைப் பார்த்துப் பேச முடியாது. அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பலாம். ஏனோ அவனுக்குத் தயக்கமாக இருந்தது. இப்போது அவன் கோபமெல்லாம் பறந்துவிட்டது. அவளைச் சமாதானம் செய்வதே இப்போது முக்கியமாகப்பட்டது.

பல தடவை பேசியிருக்கோம். எங்க போறோம், என்ன பண்ணப்போறோம், எங்க தங்கப்போறோம், எங்கல்லாம் சுத்திப் பாக்கப்போறோம், எப்ப திரும்பி வரோம், உங்க வீட்ல என்ன சொல்றது, எங்க வீட்ல என்ன சொல்றது எல்லாத்தையும் தெளிவாப் பேசியிருக்கோம். அப்படியும் நீ கேக்கற, எங்க தங்கப்போறோம்னு.நந்தினி பதில் பேசவில்லை. ஆனால் வெளிப்புறம் திரும்பியிருந்த அவள் முகம் இப்போது நேரே திரும்பியிருந்தது. அவளது முகத்தின் பெரும்பகுதியை இப்போது அவனால் பார்க்க முடிந்தது. புருவ மத்தியிலிருந்து சீரான கோணத்தில் வளர்ந்து பின் சற்றே வளைந்து உதடுகளின் மேற்புறத்தோடு இயல்பாக இணைந்திருக்கும் அவளது நேர்த்தியான மூக்கு ஒரு முறை அசைந்ததையும் சிக்கனமான உதடுகளின் ஓரங்களில் இருந்த இறுக்கம் தளர்ந்ததையும் சுதாகர் கவனித்துவிட்டான். இந்தச் சலனங்கள் அவனுக்கு நம்பிக்கை ஏற்படுத்தின. அவள் தோளை லேசாகப் பற்றியபடி சொல்லுஎன்றான். நந்தினி வெடுக்கென்று அவன் கையைத் தட்டிவிடவில்லை. சட்டென்று மறுபுறம் திரும்பிக்கொள்ளவில்லை. திரும்பிப் பார்த்து முறைக்கவில்லை. அவன் முகத்தைப் பாராமல், தோள்மீது கை வைத்தது குறித்து எந்தச் சலனமும் கொள்ளாமல் மறுபடியும் ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்க்கத் துவங்கினாள்.

சுதாகருக்குச் சற்றுமுன் ஏற்பட்டிருந்த நம்பிக்கை சிதைந்தது. இவள் அசைய மாட்டாள். நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கமாட்டாள். இவளோடு பேசுவது வீண். இவள் புரிந்துகொள்வாள் என்று எதிர்பார்ப்பது வீண். இவளோடு பயணம் செய்வது வீண். இவளைக் காதலிப்பது கூட வீண்தான். ஓயாமல் என் நெஞ்சைக் காட்டிக் கிழித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் தயக்கம். எல்லாவற்றுக்கும் பயம். இத்தனை வருடங்கள் பழகியும் என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் திராணி இல்லை. தன் உணர்வுகளை வெளிப்படுத்தவும் தைரியம் இல்லை. கொஞ்சம் வித்தியாசமாகப் பேசினாலும் உடனே முகம் வாடிவிடும். மனம் சோர்ந்துவிடும். பழைய நிலைக்கு வரப் பாடுபட வேண்டியிருக்கும். மிக கவனமாகக் கண்ணாடிச் சாமான்களைக் கையாள்வதுபோலக் கையாள வேண்டியிருக்கிறது.

சுதாகர் ஆயாசத்துடன் இருக்கையில் சரிந்து உட்கார்ந்து பின்கம்பியில் தலை சாய்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். தலையைச் சாய்த்தபோது கம்பியில் சற்றுப் பலமாக இடித்தது. அந்தச் சத்தம் கேட்டு நந்தினி திரும்பிப் பார்த்தபோது அவன் கண்கள் மூடியிருந்தன. வலிக்கான அடையாளம் எதுவும் அவன் முகத்தில் தென்படாததைக் கண்டு திருப்தியுற்றவளாய் நந்தினி ஆசுவாசமடைந்தாள். துயரம் தோய்ந்த அவன் முகத்தைப் பார்க்கையில் அவளுக்குப் பாவமாக இருந்தது. மேல்நோக்கியபடி சாய்ந்திருக்கும் அந்த முகத்தின் மீது கவிழ்ந்து முத்தமிட வேண்டும்போல் தோன்றியது. ஆனால் தோன்றியதையெல்லாம் தோன்றிய நேரத்தில் தோன்றிய விதத்தில் செய்துவிட முடிகிறதா? சுதாகர் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறான்? இவன் ஏன் என் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மறுக்கிறான்? என் மீது அதீத அக்கறை அவனுக்கு இருக்கிறது. நான் வருத்தப்பட்டால் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் அவனே என்னை வருத்தப்படுத்துவதுபோல் அடிக்கடி நடந்துகொண்டு விடுகிறான். எத்தனை முறை பேசினால் என்ன? முதல் முறையாக இருவரும் தனியே கிளம்பிச் சென்று வெளியூரில் ஒரு லாட்ஜில் தங்குவது என்றால் சும்மாவா? எத்தனை முறை பேசினால் என்ன? மனம் சமாதானமடைந்து விடுகிறதா? இதையெல்லாம் ஜீரணித்துக் கொண்டுவிடுகிறதா?

உண்மைதான். திருட்டுத்தனமாக வெளியூருக்குப் போவது லாட்ஜில் ரூம் போட்டு உடல் சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல. அப்படி அனுபவிக்க வேண்டுமென்றால் நுங்கம்பாக்கத்திலேயே அதற்கு வேண்டிய வசதி உள்ளது. நாம் அதற்காகப் போகவில்லை என்பது உண்மைதான். ஆனால் இப்படி வெளியூர் போய் லாட்ஜில் தங்கினோம் என்பது வெளியில் தெரிந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? வருங்கால வாழ்க்கையைத் திட்டமிடச் சென்றிருந்தோம் என்று சொன்னால் நம்புவார்களா? திட்டமிடுவதற்கு என்ன கொண்டு போனீர்கள்? கோஹினூரா, மூட்ஸா என்று கேட்கமாட்டார்களா? நாம் எவ்வளவு சாமர்த்தியமாகப் பொய் சொன்னாலும் குட்டு உடைந்துவிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதோ இந்த பஸ்ஸில்கூட நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கலாம். அல்லது கோவிலில் இருக்கலாம். நாம் போய் நிற்கும் லாட்ஜ் மேனேஜரே உன் அப்பாவின் நண்பராக இருக்கலாம். நாம் என்ன மாறுவேஷம் போட்டுக்கொண்டா வந்திருக்கிறோம். லாட்ஜுக்குப் போவதில் உள்ள அபாயம் பற்றிப் பேச்செடுத்தால் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது.?

நந்தினிக்கு சுதாகரைப் பார்க்கையில் தனது வருத்தத்தையும் மீறிப் பாவமாக இருந்தது. எங்கே தங்கப்போகிறோம் என்பதற்குப் பதில் லாட்ஜில் தங்குவதால் பிரச்சினை வராது என்கிறாயா என்று கேட்டிருக்கலாம் என்று நினைத்தாள். ஆனால் எப்படிக் கேட்டால் என்ன? கேள்வியா முக்கியம்? அந்தக் கேள்விக்குப் பின்னால் உள்ள மனசுதானே முக்கியம்? இதை இவன் எத்தனை முறை என்னிடம் சொல்லியிருப்பான்? நான் என்ன சொல்றேன்னு பார்க்காத; என்ன சொல்ல வரேன்னு பாரு. ம் . . . பாக்கறாங்க வா. . . மூஞ்சியைப் பாரு. உனக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?

சுதாகர் கண்களைத் திறந்து பார்த்தபோது நந்தினி தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தான். அவன் கண்கள் தன் கண்களைச் சந்தித்தபோது அவள் தன்னையறியாமல் மிக இயல்பாகப் புன்னகைத்தாள். அவன் கண்களைச் சட்டென்று சந்திக்க நேரும்போதெல்லாம் அவளிடமிருந்து தோன்றும் புன்னகை அது. அந்தப் புன்னகை சுதாகரை சகஜப்படுத்தி ஆசுவாசப்படுத்தியது. ஆனால் சற்று முன்வரை பொங்கிக்கொண்டிருந்த கோபம் அவன் நினைவுக்கு வந்தது. அவ்வளவு நியாயமும் தீவிரமும் கொண்ட கோபத்தை ஒரு புன்னகையில் இழந்துவிட அவன் விரும்பவில்லை. அவள் செய்யும் தவறுகளைப் புன்னகையில் பூசி மெழுக அனுமதிக்கக் கூடாது. சுதாகர் கண்களை மறுபடியும் மூடிக்கொண்டான். முகம் மறுபடியும் இறுகிவிட்டது. மூச்சு வேகமடைந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டதைக் கண்ட நந்தினியின் முகத்தில் மறுபடியும் ஒரு புன்னகை மலர்ந்தது. இந்தமுறை சற்றுப் பெரிதாக. இன்னும் என் கோபம் போகலன்னு சொல்றயாக்கும் என்று மனசுக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். அவன் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்து மூடிக்கொண்டாள். கையை வெடுக்கென்று இழுத்துக்கொண்ட சுதாகர் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவன் முகம் சிவந்திருந்தது.

என்னைப் பத்தி நல்லாத்தான் எடை போட்டு வெச்சிருக்கஎன்றான்.

நந்தினிக்குப் புரியவில்லை.

இவன எவ்ளோ வேண்ணா அலட்சியப்படுத்தலாம். எவ்ளோ வேண்ணா கோபப்படுத்தலாம். அப்புறம் லேசாத் தொட்டாப் போதும். அல்லது ஒரு முத்தம் குடுத்தாப் போதும். இவன் அப்படியே கரஞ்சிடுவான்னுதானே என்னப் பத்தி மதிப்பு போட்டு வச்சிருக்க”?

நந்தினிக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. சுதாகரின் கண்களை நேராகச் சந்தித்த அவள் கண்களில் நெருப்பு எரிந்தது. ஏதேதோ சொல்ல மனம் துடித்தது. ஆனால் வார்த்தைகள் உருப்பெறவில்லை. சில வினாடிகள் அப்படியே உறைந்திருந்த அவள் பிறகு, மிக மெதுவாக, மிக அழுத்தமாக இவ்ளோ கேவலமா நீ யோசிப்பேன்னு நான் எதிர்பாக்கல சுதாஎன்று சொல்லிவிட்டு மறுபடியும் ஜன்னல் பக்கம் திரும்பி உட்கார்ந்துகொண்டாள். கோபமும் அழுகையும் அவளுக்குள் குமுறின.

சுதாகருக்குக் கோபம் மேலும் ஏறியது. அவள் வீட்டிலோ அல்லது அவன் வீட்டிலோ இருவரும் தனியாக இருக்கும்போது இது நடந்திருந்தால் நீ கேவலமா என்னப் பத்தி நினைக்கலாம். ஆனா நான் அதை சொல்லக் கூடாதாஎன்று கத்தியிருப்பான். வண்டிக்குள் யாரும் தங்களை வித்தியாசமாகப் பார்த்துவிடக் கூடாது என்று கவனத்துடன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். நந்தினியின் பக்கம் சாய்ந்து அவள் காதுக்கு மிக அருகில் தன் உதடுகளைக் கொண்டுபோய் மிகவும் மெதுவான, ஆனால் கூர்மையான குரலில் பேச ஆரம்பித்தான்.

என்ன அப்படிக் கேவலமா யோசிக்க வெச்சது நீ. என்னோட நேர்மய, என்னோட மெச்சூரிட்டிய திரும்பத் திரும்ப சந்தேகத்துக்கு உள்ளாக்கறது நீ. நான் என்ன சொல்ல வரேன்னு உன் மனசுக்குப் புரியாம இருக்காது. அப்படி இருந்தும் என்னோட வார்த்தைகளுக்குத் தப்பா அர்த்தம் குடுத்து என் மேல கோவப்படற. நான் கிளம்ப இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு. திரும்ப வர குறைஞ்சது ஒரு வருஷம் ஆகும். எவ்வளவோ விஷயங்களை நாம் முடிவு பண்ண வேண்டியிருக்கு. ப்ளான் பண்ண வேண்டியிருக்கு. இத விட்டா வேற நேரம் கிடைக்காதுன்னு நம்ம ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும். வெளியூருக்குப்போய் லாட்ஜில் ரூம் எடுத்துப் பேசலாம்னு முடிவு பண்ணிப் பல நாள் ஆயாச்சு. லாட்ஜ், ரூம் அப்படின்னதும் பயப்படற. என்னால உன் கற்புக்குப் பங்கம் வராதுன்றத பல முறை நிரூபிச்சாச்சு. இவ்வளவு ஆழமா பழகியும் இன்னும் உடம்ப மறந்துட்டு உன்னால யோசிக்க முடியல. உன் உடம்பு மேல எனக்குக் கண் இல்லன்றத நம்ப மாட்டேங்கற. இங்க பார், கற்புன்றது உடம்பு சம்பந்தப்பட்டதில்ல. என்னைப் பொறுத்தவரை நேர்மை சம்பந்தப்பட்டது. சுய மரியாதை சம்பந்தப்பட்டது. எனக்கும் கற்பு இருக்கு. ஏன்னா எனக்கு சுய மரியாதை இருக்கு. என்னை சந்தேகப்படறதையோ எதையெதையோ நெனச்சு பயப்படறதையோ நிறுத்து. நீ இப்படி இருக்கற வரைக்கும் நாம் எதைப் பத்தி எவ்ளோ நேரம் பேசினாலும் பிரயோஜனம் இல்ல. வண்டி ஸ்ரீபெரும்புதூர்ல நிக்கும்போது இறங்கி எதிர்ப்பக்கம் போய் இன்னொரு வண்டியப் புடிச்சு வீட்டுக்குப் போயிடலாம். என்னால திரும்பத் திரும்ப என் நெஞ்சக் கிழிச்சுக் காமிச்சிட்டு இருக்க முடியாது. இப்பவே. . .

கன்னத்தில் வந்து விழுந்த நீர்த்துளி சுதாகரின் பேச்சை நிறுத்தியது. நந்தினியின் காது மடலையும் அதைச் சுற்றிப்படர்ந்திருந்த மயிர்க் கற்றைகளையும் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தவன் வெளிப்புறம் திரும்பியிருந்த நந்தினியின் முகத்தைக் கவனிக்கவில்லை. நந்தினியின் கன்னங்களில் வழிந்த கண்ணீர் காற்றில் பறந்து அவன் முகத்தில் விழுந்ததைச் சற்று நேரம் கழித்துதான் உணர்ந்தான். அவளது முகவாயில் கை வைத்து முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான். நந்தினி எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவள் கண்கள் சிவந்திருந்தன. கண்களையும் கன்னங்களையும் துப்பட்டாவினால் அழுந்தத் துடைத்துக்கொண்டாள். சுதாகர் வெலவெலத்துப்போனான். யாராவது தங்களைக் கவனிக்கிறார்களா என்ற சுற்றுமுற்றும் பதற்றத்தோடு பார்த்தான். நந்தினி முன் இருக்கையின் கம்பியில் கையை மடித்து வைத்துக் கைமீது முகத்தைக் கவிழ்த்துக்கொண்டாள். அவ்வப்போது மூக்கு உறிஞ்சும் சத்தம் மட்டும் கேட்டது. சுதாகருக்குப் பேச்சு வரவில்லை. அவளைத் தொட்டு எழுப்பப் பரபரத்த கைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளக் கஷ்டப்பட்டான். சிறிது நேரம் ஜன்னல் வழியே வெறித்தபடி அமைதியாக இருந்தான். நான் கோபமாகப் பேசினால் என்னைச் சமாதானப்படுத்த வேண்டும். அல்லது பதிலுக்குக் கோபப்பட வேண்டும். இரண்டுமில்லாமல் அழுகை ஏன் வருகிறது? அழும்படி நான் என்ன சொல்லிவிட்டேன்? என்னுடைய எந்த வார்த்தை அவளுக்குள் துக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

நந்தினி நிமிர்ந்து உட்கார்ந்தாள். முகம் கழுவிவிட்டது போல் இருந்தது. நெடுநேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. சுதாகர் அவ்வப்போது நந்தினியின் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். ஒருமுறை அப்படிப் பார்த்தபோது நந்தினியும் அவனைப் பார்த்தாள். சுதாகருக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. ஐந்து வருடங்களாக நந்தினியை வசியப்படுத்தி வைத்திருக்கும் சிரிப்பு அது. அந்தச் சிரிப்பைக் கண்டதும் நந்தினியின் மனத்தில் தன்னிச்சையாக ஒரு மலர்ச்சி தோன்றியது. அவள் உதடுகளிலும் புன்னகை அரும்பியது. சுதாகரின் சிரிப்பு பெரியதாயிற்று. நந்தினியும் முகத்தில் உற்சாகம் படரச் சிரித்தாள். பிறகு அவன் தோளில் தலை சாய்த்தபடி கண்களை மூடிக்கொண்டாள். மனம் லேசானது போல் இருந்தது. பேருந்து சீரான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. வெயில் இன்னும் கடுமைபெற ஆரம்பிக்கவில்லை. ஜிவ்வென்று பாய்ந்துகொண்டிருந்த காற்று முகத்தில் வந்து மோதியபடி இருந்தது. நந்தினியின் கன்னச் சதை வண்டியின் குலுக்கல் களுக்கு ஏற்ப அவன் தோளில் அழுந்தியும் தளர்வடைந்தும் இருந்தது சுதாகருக்கு ரம்மியமான அனுபவமாக இருந்தது. பேச எவ்வளவோ இருந்தாலும் அந்தத் தருணத்தின் அமைதியில் மனதைப் பறிகொடுத்தவனாய் அமைதியாய் இருந்தான்.

நந்தினியும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் இருந்தாள். சற்று நேரம் அழுதது அவளது மனத்தை இலகுவாக்கிவிட்டிருந்தது. அவளுக்கும் பேசுவதற்கு இருந்தது. ஆனால் அதிகம் இல்லை. சுதாகரைப்போல சொற்பொழிவு ஆற்றும் இயல்பு அவளுக்கு இல்லை. சுதாகர் கோபமாகப் பேசியதில் வருத்தமில்லை. கோபம் வந்தால் காட்டுவதில் தவறில்லை என்று நினைப்பவள் அவள். ஆனால் அவன் பயன்படுத்திய ஒரு வார்த்தை. அதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னை சந்தேகப்படுவதை நிறுத்து என்கிறான். என் கற்பு அவனால் பாதிக்கப்படாது என்கிறான். முட்டாள். வாழ்க்கையையே உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். இதில் கற்பு என்ன பெரிய விஷயம்? சந்தேகமா? உன் மீதா? முட்டாள். வடிகட்டின முட்டாள். உன்னோடு இருக்கும் போதுதான் உடலைப் பற்றிய நினைப்பை மறந்திருக்க முடிகிறது. உன்மீது எனக்கு என்ன சந்தேகம்? என்ன பயம்? இதையெல்லாம் நான் விளக்கிச் சொன்னால்தான் நீ புரிந்துகொள்வாயா? அப்படியானால் நீ முட்டாள்தான். சந்தேகமே இல்லை. தப்பு எதுவும் நடந்துவிடக் கூடாது என்று பயம் எனக்கு இருப்பது உண்மைதான். ஆனால் அது இப்போது வேண்டாமே என்ற தயக்கம்தானே தவிர வேறு ஒன்றமில்லை. இதுவும் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். மற்றபடி உடல் விஷயத்தில் எனக்குத் துளியும் பயமோ தயக்கமோ கிடையாது என்பது உனக்கு ஏன் புரியவில்லை? உண்மையில் உன்னால் உடலை மறக்க முடியவில்லையோ? உடல் தேவையை பலவந்தமாகக் கட்டுப்படுத்திக்கொண்டு எனக்கு அது தெரியாதபடி நடிக்கிறாயோ? இல்லாவிட்டால் நான் ரொம்பக் கவலைப்படுகிறேன், பயப்படுகிறேன் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது?

இந்த யோசனை நந்தினிக்குப் பரபரப்பை எற்படுத்தியது. இந்தக் கோணத்தில் அவள் இதுவரை யோசித்ததில்லை. இது ஒருவேளை உண்மையாக இருந்தால் நான் எடுத்துக்கொள்ளும் முன் ஜாக்கிரதையெல்லாம் மிகவும் அவசியம் என்று ஆகிவிடும். இதை முதலில் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் நேராகக் கேட்க முடியாது. இப்போதே நாம் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று உள்ளூர விரும்புகிறாயா என்று கேட்க முடியாது. என்னைக் கொச்சைப்படுத்தாதே என்று கத்துவான். நாசூக்காகக் கேட்க வேண்டும்.

முகத்தைத் தாக்கும் காற்றின் வீரியம் குறைந்துவிட்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே புதிய ஓசைகள் கேட்க ஆரம்பித்தன. வண்டிக்குள் சலனங்கள் ஏற்பட ஆரம்பித்தன. ஸ்ரீபெரும்புதூரை நெருங்கிவிட்டோம் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள். சுதாகரின் தோளிலிருந்து தலையைத் தூக்கி சுதாகரைப் பார்த்தாள். அவன் இன்னும் கண்களை மூடியபடி இருந்தான். அவன் தலை சரிந்திருந்தது. மடியில் தட்டி அவனை எழுப்பினாள். கண்களைத் திறந்ததும் நந்தினியின் முகத்தைப் பார்த்தான். பிறகு அவன் பார்வை வெளியில் செல்வதற்கு முன் ஒரு கணம்நந்தினியின் மார்புப் பகுதியில் பட்டுச் சென்றது. நந்தினியின் கை தன்னிச்சையாகத் துப்பட்டாவைச் சரிசெய்துகொண்டது.

பேருந்து நின்றது. பயணிகளில் சிலர் இறங்கினார்கள். சிலர் ஏறினார்கள். நந்தினி தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி தெரு ஓரமாகச் சென்று கண்களைக் கழுவிக்கொண்டாள். கண்களைத் துடைத்துக்கொள்ளாமல் சிறிது நேரம் ஈரச் சருமத்தில் படும் காற்று தரும் அனுபவத்தில் லயித்தபடி நின்றாள். சற்று முன் தோன்றிய எண்ணத்தை அவளால் புறக்கணிக்க முடியவில்லை. என்னை மீறி எதுவும் நடந்துவிடாது. அப்படி ஏதாவது நடந்தாலும் அதனால் வானம் இடிந்து தலையில் விழுந்துவிடாது. ஆனால் அவனுடைய நோக்கம் என்னவென்று தெரிய வேண்டும். என்னிடம் பொய் சொல்கிறானா என்பது தெரிய வேண்டும். பேருந்திலிருந்து இறங்கிய சுதாகர் படிக்கருகில் நின்றபடி நிதானமாகச் சோம்பல் முறித்தான். பிறகு நிதானமாக நடந்துவந்து பாட்டிலை வாங்கி முகம் கழுவினான். பஸ் கிளம்பிடும், உள்ள போலாம் வாஎன்றான். சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். நந்தினி அவனைப் பின் தொடர்ந்தாள். ஜன்னல் இருக்கையில் அவள் உட்காரும்வரை காத்திருந்து பிறகு உட்கார்ந்துகொண்டான்.

பேருந்து கிளம்பியது. இப்போது வண்டியில் கூட்டம் அதிகரித்திருந்தது. கசகசவென்று பேச்சு சத்தம் கேட்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் செல்லும் வரை இப்படித்தான் இருக்கும். வெயில் எறிக்கொண்டிருப்பதும் வண்டிக்குள் நிலவும் சத்தமும் பின்னாலிருந்து வரும் லாரியின் ஹாரன் ஒலியும் அவனை எரிச்சல்படுத்தின. நந்தியின் கன்னச் சதையின் அழுத்தம் தந்த சுகானுபவத்தில் கிறங்கியிருந்த சுதாகர் இப்போது பழைய மனநிலையை அடைந்துவிட்டிருந்தான். லாட்ஜில் தங்குவது பற்றித் துவங்கிய பேச்சு முடியவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அவள் ஏன் அழுதாள் என்பதற்குப் பதில் வரவில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் காஞ்சிபுரம் வந்துவிடும். இறங்குவதற்கு முன்பாகவே இந்தப் பயணம் பற்றிய தெளிவான மனநிலையை அடைந்துவிட வேண்டும். இனி நம் வாழ்வு எப்படி அமையப்போகிறது என்பது பற்றிப் பேசுவதற்காகத்தான் இந்தப் பயணம். பயணத்தைப் பற்றிப் பேசுவதற்காக இல்லை. இந்தச் சின்னஞ்சிறு பயணத்தைப் பற்றியே தெளிவுகாண முடியாத நாம் வாழ்க்கைப் பயணம் பற்றி எப்படித் தெளிவுகாணப் போகிறோம். சீ . . . என்ன இது, தமிழ்ப் பட வசனம் போல யோசிக்கிறேன்.

எரிச்சலும் சலிப்பும் மேலிட சுதாகர் நந்தினியைப் பார்த்தான். இடது கை முட்டியை ஜன்னலிலும் முகத்தைக் கை விரல்களிலும் ஊன்றியபடி வெளியில் பார்த்துக்கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு வாரங்களில் நான் இங்கே இருக்க மாட்டேன் என்பது இவளுக்கு உறைக்கவே இல்லையா? ஐந்து வருடம் நெருக்கமாகப் பழகிய காதலனை இரண்டு வாரங்களில் பிரியவிருக்கும் நிலையில் ஒரு பெண் இப்படித்தான் நடந்துகொள்வாளா? வழக்கமாக நான் இரண்டு நாள் வெளியூர் போனாலே துக்கம் கொண்டாடுபவள் இப்போது ஏன் இப்படி இருக்கிறாள்? நந்தினியின் தோள் மீது மெதுவாகத் தட்டினான். வெளிப்புறம் திரும்பியிருந்த முகம் உட்புறம் திரும்பியது. என்ன என்ற பாவனையில் மேலே உயர்ந்த புருவங்கள் நடனமணிகளின் அபிநயத்தை நினைவுபடுத்தின. எரிச்சலை மீறி சுதாகர் அந்தக் கண்களின் அசைவை ரசித்தான்.

என்ன, பேச்சையே காணோம்?”

நந்தினி உதட்டைச் சுழித்தாள். சுதாகர் குழப்பமடைந்தான். இந்த அலட்சியத்திற்கு என்ன அர்த்தம்?

அவன் முகத்தில் திரளும் கோபம் அவளை உஷார்படுத்தியது. கோபம், அழுகை இரண்டும் அவளுக்குப் பிடிக்கவில்லை. இனிமேலும் சும்மா இருந்தால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.

எதைப் பத்தி கேக்கற?” என்றாள்.

ஈராக் மேலே அமெரிக்கா தொடுக்கறதப் பத்தி நீ என்ன நெனைக்கற?”

நந்தினியின் உதடுகள் குழைந்தன. சுதாகரை உற்சாகப்படுத்தும் ஒரு குறுஞ்சிரிப்பு அவள் முகத்தில் மொக்குவிட்டது. அந்தச் சிரிப்பு, அசௌகரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒரு தடையை உடைத்தது.

பப்ளிக்ல வந்து இப்படி சிரிக்காதேன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்என்றான் அவன். கண்களில் குறும்பும் உற்சாகமும் கூடியிருந்தன.

நந்தினியின் முகம் மேலும் குழைந்தது. தனியே இருக்கும்போது இப்படிச் சிரிக்கும் போதெல்லாம் சுதாகர் அந்தச் சிரிப்பைத் தன் உதடுகளால் ஒற்றி எடுத்துக்கொண்டிருக்கிறான். அதை நினைக்கும்போதே உதடுகள் குறுகுறுத்தன. கூடவே இன்றைக்கு இவன் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறானோ என்ற எண்ணமும் எழுந்தது. முகம் மெல்லப் பழைய நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது.

சொல்லு. கோவில் நடை சாத்தற வரைக்கும் பிராகாரத்துலேயே ஒக்காந்து பேசலாம். அதுக்கப்புறம் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம். திரும்பவும் கோவில் வாசலுக்கு வந்து ஒக்காந்துக்கலாம். நடை திறந்ததும் பிராகாரத்துல ஒக்காந்துக்கலாம். சரியா?” என்றான் சுதாகர்.

நந்தினி அலட்சியமாகச் சிரித்தாள்.

என்ன, நக்கலா? வரதராஜ பெருமாளைத் தரிசிக்கறதுக்காகத்தான் இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தோமா?”

உனக்குத்தான் லாட்ஜ் புடிக்கலயே. பயப்படறியே.

நான் ஒண்ணும் பயப்படல. தெரிஞ்சவங்க யாராவது பார்த்துட்டா என்ன பண்றதுன்னுதான் கேட்டேன்.

அதெல்லாம் பாத்துக்கலாம்.

ம் . . . எப்படிப் பாத்துப்ப? நமக்குத் தெரிஞ்சவங்க யாரும் காஞ்சிபுரத்துக்கு வரவேணாம்னு ஆடர் போட்டிருக்கியா? அல்லது யார் கண்ணுக்கும் தென்படாம இருக்கறதுக்கு ஏதாவது பொடி கிடி வச்சிருக்கியா?”

இங்க பார். வேண்டிய அளவுக்கு ப்ரிகாஷன் எடுத்துப்போம். அத மீறி ஏதாவது வந்தா ஃபேஸ் பண்ண வேண்டியது தான். பயந்துண்டே இருந்தா ஒண்ணும் நடக்காது. இப்போ பயம் இருக்குன்னு நீ நேத்தே சொல்லியிருந்தா நாம பேசாம ட்ரைவ் இன்னுக்கே போயிருக்கலாம்.

சரி விடு. அதப் பத்தி இப்பப் பேசிப் பிரயோஜனமில்ல.

நீ அதப் பத்திப் பேசாம இருந்தா போதும்.

சரிடா பேசல. வர்ரது வரட்டும்.

அப்படி சொல்லு.

காஞ்சிபுரத்தில் இறங்கியதும் கேட்டான்: முதல்ல கோவிலுக்குப் போலாமா அல்லது மத்தியானதுக்கு மேல போலாமா?”

தூங்கி எழுந்துட்டு மத்தியானதுக்கு மேல போலாம்.

தூக்கமா? நல்லா தூங்குவியே.

நந்தினி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். கொழுப்புடா ஒனக்கு”. என்றாள்.

நீ என்ன சொல்றன்னே புரியலஎன்ற சுதாகர் ஒரு ஆட்டோவை நிறுத்தினான். லாட்ஜின் பெயரைச் சொல்லி ஏறி உட்கார்ந்துகொண்டான். நந்தினியும் ஏறிக்கொண்டபின் ஆட்டோ கிளம்பியது. இவள் சகஜமாகப் பேசுவதுபோலத் தெரிந்தாலும் உண்மையிலேயே சகஜமாக இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை என்ற எண்ணம் சுதாகருக்கு உறுத்திக்கொண்டே இருந்தது.

எப்படி லாட்ஜ் பேரெல்லாம் கரெக்டாச் சொல்ற? ஏற்கெனவே பழக்கமா?” என்று கேட்டாள் நந்தினி.

சுதாகருக்குச் சர்ரென்று கோபம் வந்தது. ஆமா. பொண்ணுங்கள தள்ளிட்டு வரும்போது இங்கதான் வருவேன்என்றான்.

இவ்வளவு சாதாரணமான பரிகாசம் அவனை உசுப்பி விடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

ஒனக்கு சென்ஸ ஆஃப் ஹ்யூமரே வத்திப் போச்சுஎன்றாள். குரலில் கசப்புத் தட்டியது.

அதை ஏன் தன்னால் தமாஷாக எடுத்துக்கொள்ள முடியவில்லை என்று சுதாகருக்குப் புரியவில்லை. நந்தினி தன்னுடைய சொந்த விஷயத்தில் ஜாக்கிரதை உணர்ச்சியும் பயமும் உள்ளவள்தானே தவிர, பிறரது நடத்தை பற்றிச் சந்தேகப்படக் கூடியவளல்ல என்பது தெரிந்தும் ஏன் தனக்குக் கோபம் வருகிறது என்று குழம்பினான். ஆனால் கோபப்பட்டது தவறு என்று அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. காலையிலிருந்து நடந்துவரும் சம்பவங்கள் தன்னைப் பொறுமையிழக்கச் செய்துவிட்டன என்றும் அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை என்றும் சொல்லிக்கொண்டான். கூடவே இருப்பவள் ஓயாமல் பயம், தயக்கம், சந்தேகம் என்று இருந்தால் எப்படி இயல்பாக இருக்க முடியும் என்று நினைத்துக்கொண்டான்.

நீ இருக்கற முடுபாத்தா ஏண்டா வந்தோம்னு இருக்குஎன்றாள் நந்தினி.

சுதாகரின் ஆத்திரம் கூடியது.

எனக்கும் அதே எண்ணம்தான். அப்படியே திரும்பிப் போயிடலாம்னு தோணுது. அது மட்டுமில்ல. ரெண்டு வாரம் கழிச்சு கிளம்பறதுக்குப் பதிலா ரெண்டு நாள்லயே கிளம்பலாம்னு தோணுதுஎன்றான்.

நந்தினி அடிப்பட்டவளாக சுதாகரைத் திரும்பிப் பார்த்தாள். அவன் வெளியில் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். என்ன ஆயிற்று இவனுக்கு? எல்லோரையும் விட்டு விட்டுப் போகிறோமே என்ற ஆதங்கமா? அதற்கு நான் என்ன செய்ய முடியும். நீ இல்லாமல் நானும் தனியாகத்தான் இருக்கப்போகிறேன். உனக்கு என்ன வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசாமல் நானாகவே புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா? நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிக்கொண்டே இருக்கும் இவனை எப்படிப் புரிந்துகொள்வது? காதல் என்றால் இவ்வளவு வலிக்குமா?

வீடு போய்ச் சேரும் நேரத்திற்காக ஏங்க ஆரம்பித்தது அவள் மனது. வீட்டில் இருக்கும்போது வெளி எவ்வளவு வசீகரமாய்த் தெரிகிறது.

ஆட்டோ நின்றது. சுதாகர் பணத்தைக் கொடுத்துவிட்டு லாட்ஜுக்குள் நுழைந்தான். இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்து வைத்திருக்கிறானா இவன்? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் ஏன் கவலைப்பட்டிருக்கப்போகிறேன். என்னை ஆச்சரியத்தில் ஆழ்ந்த நினைத்திருந்திருப்பானோ? இருக்கலாம். நந்தினிக்கு வேறொரு எண்ணமும் தோன்றிது. இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்தவன் வேறு என்னவெல்லாம் திட்டம் வைத்திருக்கிறானோ என்று தோன்றியது. இத்தனை வருடம் பழகி, இவனை நன்கு அறிந்துகொண்ட பிறகும் இப்படி ஒரு எண்ணம் வருகிறதே என்று வருத்தப்பட்டுக்கொண்டாள். ஆனால் எண்ணம் வந்து தொலைக்கிறதே. அவன் மீதோ என் மீதோ நூறு சதவீத நம்பிக்கை வைக்க முடியவில்லையே.

வாஎன்று சொல்லிவிட்டு முன்னால் சென்றான். சாதாரணமாக யாரும் ஆச்சரியப்படுமளவுக்கு முன்னேற்பாடுகளை இவ்வளவு கச்சிதமாகச் செய்தும் இவள் ஒரு வார்த்தை கூடப் பாராட்டவில்லையே என்ற நினைத்துக்கொண்டான். பயணத்தின் ஆரம்பமே இப்படிச் சிடுக்காகிவிட்டதே என்று வருத்தப்பட்டான். உரையாடலை எப்படித் துவக்குவது என்று யோசிக்க ஆரம்பித்தான். எத்தனை விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறது.

அறையைத் திறந்து, தண்ணீர் எடுத்து வைத்த பையன், “காபி, டீ ஏதாவது வேணுமா சார்என்று கேட்டான். வேணும்போது சொல்கிறேன் என்று அனுப்பிவிட்டுக் கதவை சாத்தினான். மின் விசிறிக்குக் கீழே போய் நின்ற நந்தினி துப்பட்டாவைக் கட்டில் மேல் போட்டுவிட்டு சிறிது நேரம் அப்படியே நின்றாள். சட்டையைக் கழற்றிவிட்டு பனியனுடன் கட்டிலில் சாய்ந்துகொண்டான் சுதாகர். எங்கிருந்து எப்படிப் பேச்சைத் துவக்கினால் கலைந்த சுருதி சேரும் என்ற யோசித்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது நந்தினியைப் பார்த்துக்கொண்டிருந்தான். வியர்வை ஆறிய பிறகு அவள் சுவாதீனமாக அருகில் வந்தால் பாதிப் பிரச்சினை தீர்ந்தது போலத்தான் என்று நினைத்தான். மாறாக, விட்டேத்தியாக விலகி இருந்தால் சிக்கல்தான்.

மின்விசிறியை அண்ணாந்து பார்த்தபடி காற்றை உடலுக்குள் செலுத்திக்கொண்டிருந்த நந்தினி பேச்சில் சுவை குன்றியவளாக மாறியிருந்தாள். பேச்சே சிக்கலாக மாறிவிடுகிறது. பேசித்தான் ஆக வேண்டுமென்ற கட்டாயம் எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் வரும் பதினைந்து நாட்களில் நேரம் கிடைக்காமலா போய்விடும். அவன் ஊரைவிட்டுப் போன பிறகுகூடத் தொடர்பு என்பது பெரிய பிரச்சினை அல்ல. முன்பு போல் கடிதம் போட்டுவிட்டுக் காத்திருக்க வேண்டியதில்லை. ஈமெயில் இருக்கிறது. அது போதும். சுதாகர் விஷயத்தில் தனக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த விட்டேற்றியான மனோபாவம் அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே உனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் ஒரு வினாடி கூட யோசிக்காமல் சுதாகர் என்று சொல்லிவிடலாம். அதில் இந்த நிமிஷம்வரை எந்த மாற்றமும் இல்லை. அப்படி இருந்தும் எப்படி வந்தது இந்தச் சலிப்பு? என்ன ஆயிற்று இன்றைக்கு? மனம் குழம்பியது? இது திடீரென்று வந்திருக்கக் கூடியதுதானா? சுலபத்தில் நீங்கிவிடக் கூடியது தானா?

வியர்வை சற்று ஆறிய பிறகு தண்ணீர் குடித்தாள். பிறகு கட்டிலிலிருந்தது துப்பட்டாவை எடுத்துப் போர்த்திக்கொண்டாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாகருக்குக் கொதிப்பு உச்சி மண்டைக்கு  ஏறியது. இருவரும் தனியாக இருக்கும்போது அவள் துப்பட்டா பற்றிக் கவலைப்படுவதில்லை. இன்று என்ன ஆயிற்று? இவளுடன் படுத்துக்கொள்ளத்தான் லாட்ஜில் ரூம் போட்டேன் என்று நினைக்கிறாளா?

துப்பட்டாவ எதுக்குப் போட்டுண்ட?” என்று உஷ்ணமாகக் கேட்டான்.

நந்தினிக்குச் சுருக்கென்றது. எல்லாவற்றுக்கும் இவனுக்கு விளக்கமளிக்க வேண்டுமா? வாட் நான்ஸென்ஸ்!

உனக்கு ஏன் துப்பட்டா மேலயே கண்ணா இருக்கு? துப்பட்டாவ மட்டும் எடுக்கணுமா அல்லது சுடிதாரையும் எடுக்கணுமா? உம் மனசுல இருக்கறத ப்ளெய்னா சொல்லிடு

சுதாகருக்குள் குமுறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்தது, “சீ நாயே. யாரப் பாத்து என்ன கேள்வி கேக்கற? தூ . . . என்னை என்ன, பொம்பள பொறுக்கின்னு நெனச்சியா?”

நந்தினி ஸ்தம்பத்துப்போனாள். இப்படிப்பட்ட கோபத்திற்கு அவள் இதுவரை இலக்கானதில்லை. இந்தச் சத்தம் . . . இந்த வார்த்தைகள் . . . அவற்றில் தெறித்த வெறுப்பு . . . அவன் கண்களில் தெரிந்த ஆங்காரம் . . .

சுதாகரும் வெலவெலத்துப்போய்விட்டான். படபடப்பு அடங்க நெடுநேரம் ஆகிவிட்டது. வெறுப்பாலும் ஆங்காரத்திலும் தோய்ந்த அவனது குரல் அவன் காதுகளிலேயே திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த ஒலிகளையெல்லாம் எழுப்பியது தான்தான் என்று அவனால் நம்ப முடியவில்லை. அதுவும் நந்தினியைப் பார்த்து. எங்கே ஒளிந்திருந்தது இவ்வளவு வெறுப்பும்? அனிச்சைச் செயல் போன்ற அசைவுகளுடன் நந்தினியின் உடல் கட்டிலில் சரிந்து உட்கார்ந்ததைப் பார்த்தான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவளது கன்னங்களில் வழிந்த கண்ணீரைக் கண்டு அவனுக்கு அழுகை வரும்போல இருந்தது. பதற்றத்துடன் அவளை நெருங்கினான். என்ன செய்வது, என்ன சொல்வது என்று புரியவில்லை. அவன் வாய் குழற ஆரம்பித்தது.

ப்ளீஸ் நந்தினி. அழாத நந்தினி. அழாதடா. எப்படி எனக்கு அவ்வளோ கோபம் வந்ததுன்னு எனக்கே தெரியலடா. இத்தன வருஷத்துல நீ இப்படி ஒரு கேள்வி கேட்டதே இல்லை. திடீர்னு இன்னிக்குக் கேட்டதும் என்ன அறியாம கோவம் வந்துருச்சி நந்து. இங்க பார் நந்து. எனக்குப் புரியுது. ஆரம்பத்துலேந்தே ஏதோ சரியில்ல. எல்லாம் என் தப்புதான். நீ அழாத. என்ன மன்னிச்சிரு. ப்ளீஸ் அழாத. என்னால தாங்க முடியல.சுதாகர் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தான். நந்தினி அவனை நோக்கித் திரும்பினாள். திரும்பத் திரும்ப ப்ளீஸ், ப்ளீஸ் என்று அவன் அரற்றிக்கொண்டிருந்தான். வேறு எல்லா வார்த்தைகளையும் இழந்து விட்டவன் போலத் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தான். நந்தினி அவன் கண்களைப் பார்த்தாள். அதில் மன்னிப்புக் கோரும் செய்தியைத் தவிர வேறு எதுவும் இல்லை. அடிபட்ட மீனைப் போல அவன் கண்கள் துடித்துக் கொண்டிருந்தன. அவன் கைகள் யாசகம் கேட்கும் பாவனையில் அவன் கைகளைப் பிடித்திருந்தன. கண்களில் கண்ணீர் தளும்பி நின்றிருந்தது.

அவளது மன்னிப்பை யாசகமாகக் கோரும் அவன் கண்களைப் பார்த்துக்கொண்டே இருந்தவள் சடாரென்று சரிந்து அவன் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். வெகுநேரம் அவள் உடல் இலேசாகக் குலுங்கிக்கொண்டிருந்தது. அவளது முதுகை அவனது கண்ணீர் நனைக்கும்வரை அவள் அப்படியே படுத்துக்கொண்டிருந்தாள். அவர்கள் கிளம்ப இன்னும் ஏழு மணிநேரம் இருந்தது.


சாரல் இணைய இதழ், 2003