Thursday, December 24, 2015

எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை
வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்கிரமாதித்யன் ஒரு விதத்தில் குறியீட்டுத் தன்மை கொண்டவன். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கதைகளில் இடம்பெற்றுள்ள காவிய நாயகன் இவன். குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். அந்த மன்னனின் வாழ்வும் அவனது புகழின் கதிர்களும் சேர்ந்து எழுதிய கதையாகத்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளின் கதையை நாம் நவீனத்துவப் பொருளில் புரிந்துகொள்ள முடியும்

இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.

எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போதுஇந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். “ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பாஎன்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.

எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடிஎக்ஸ் ரேதன்மை கொண்டது. எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன்ராதா அண்னனுக்குசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்.

இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.

காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது. சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.

திரையில் உருப்பெறும் காட்சிப் படிமங்களும் அதற்கான ஒளி, ஒலி அமைப்புகளின் சேகரமும் இணைந்து பலவாறான தாக்கங்களை எழுப்புகின்றன. பார்ப்பவரைப் பொறுத்து இந்தத் தாக்கங்கள் மாறினாலும் இவற்றில் பொதுமைப்படுத்தக்கூடிய தன்மைகளும் இருக்கின்றன. உதாரணமாக ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமை குறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது.

தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால் அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும். காதல், பாசம், பாலுணர்வு போன்ற அம்சங்களை உணர்த்தவும் காட்சிப் படிமங்களின் தன்மைக்குப் பெரும் பங்கு உள்ளது.
இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலேஎன்னும் பாடலில்இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.

இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து அல்லவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன்…. இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள்.

இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லைஎன ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேறஎன்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோதுஎன்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடுஎன்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாகநாடோடி மன்னன்படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும்எங்க வீட்டுப் பிள்ளைபடத்தின்நான் ஆணையிட்டால்பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.

சிவாஜியுடன் நடிப்பில் போட்டிபோடும் விருப்பம் எம்.ஜி.ஆர். என்னும் நடிகனுக்கு இருந்திருக்கக்கூடும் என்பதை 50, 60களில் வெளியான சில படங்கள் உணர்த்துகின்றன. ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையாபோன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.

இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.

Thursday, December 17, 2015

நவீன பார்வையில் மகாபாரதம்


மகாபாரதத்தை எப்படிப் புரிந்துகொள்ளுவது? வரலாறாகவா, கதையாகவா, கவிதையாகவா, அல்லது தத்துவமாகவா? அது சமய தத்துவ நூலா அல்லது இலக்கியமா அல்லது மதம், தத்துவம், இலக்கியம் எல்லாம் கலந்த ஒரு படைப்பா? மகாபாரதம் என்னும் மாபெரும் கடலில் சற்றேனும் கால் நனைத்தவர்கள்கூட இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஆமாம் என்று பதில் சொல்லத் தக்க ஒரு அம்சமாவது மகாபாரதத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நூலை எப்படி அணுகுவது? 

எப்படி மகாபாரதம் எண்ணற்ற வகையிலான பிரதிகளின் சங்கமமோ அப்படியே மகாபாரத வாசிப்பும் எண்ணற்ற வகையிலானதாகவே இருக்கும். ஒவ்வொரு வாசிப்பும் இந்தக் காவியத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சக்கூடியது. பிரபஞ்சனின் முயற்சி அத்தகைய ஒன்று.

மகாபாரதம் அளவுக்கு வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் உட்பட்ட பிரதி உலகில் வேறு ஏதேனும் இருக்குமா என்பது சந்தேகம்தான். பிரபஞ்சன் மகாபாரதக் கதையை, அதன் பாத்திரங்களை, தருணங்களைத் தன் பார்வையில் தனக்கே உரிய கோணத்தில் அணுகுகிறார். பிரபஞ்சன் பாரதக் கதையைத் திருப்பிச் சொல்லவில்லை. அந்த உலகினுள் திரும்பச் செல்கிறார்.

மகாபாரதத்தைப் பலர் சுருக்கி எழுதியிருக்கிறார்கள். ராஜாஜி, அ.இலெ. நடராஜன், வ.ஜோதி ஆகியோர் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள். முழுக் கதையையோ அல்லது சில பகுதிகளையோ தம் பாணியில் புனைகதையாகச் சொன்னவர்கள் பலர் இருக்கிறார்கள். மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர், கன்னடத்தில் பைரப்பா எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். தமிழ்ப் புனைவுலகில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘உப பாண்டவம்’, ஜெயமோகன் எழுதிவரும் ‘வெண்முரசு’ ஆகிய உதாரணங்கள் உள்ளன.

பிரபஞ்சனின் அலசல்கள், புனைகதைக்குரிய தன்மையுடன் மிளிர்கின்றன. மிகுதியும் கதை வடிவிலேயே அவரது விசாரணைகள், தேடல்கள், வாதப் பிரதிவாதங்கள், கேள்விகள், ஐயங்கள் முடிவுகள் ஆகியவை அமைந்திருக்கின்றன. இந்த நூலைப் படித்தால் மகாபாரதத்தை முதலிலிருந்து கடைசிவரை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதே வரிசையில் அல்ல. அர்ச்சுனனைப் பற்றிச் சொல்லும்போது கிருஷ்ணனைப் பற்றிய சந்தேகம் வரும். கிருஷ்ணனைப் பற்றிய கட்டுரையில் அதற்கான விடை கிடைக்கும்.

பல கட்டுரைகள் சிறுகதையைப் போல ஆரம்பிக்கின்றன. சிறுகதைகளைப் போலவே முன்னகர்ந்து சிறுகதைகளைப் போலவே அமைந்து படைப்பை வாசித்த அனுபவத்தைத் தருகின்றன. சில பகுதிகள் கதைபோலத் தொடங்கிக் கட்டுரையாக வளர்ந்து துல்லியமான அலசலாக முடிகின்றன. குறிப்பிட்ட எந்த முறைமையையும் பிரபஞ்சன் வகுத்துக்கொள்ளவில்லை. பீஷ்மர், திருதராஷ்டிரன், வியாசர், கிருஷ்ணர், பீமன், திரௌபதி ஆகியோரைப் பற்றிப் பல இடங்களிலும் பல விதங்களில் பேசுகிறார். ஒவ்வொன்றும் அவர்களைப் பற்றி மேலும் துலக்கமாக நாம் புரிந்துகொள்ள உதவுகின்றன.

பிரபஞ்சன் மகாபாரதத்தை அணுகுவதில் நவீன மனதின் அணுகுமுறையே மேலோங்கியிருக்கிறது. பெரும்பாலும் பகுத்தறிவு சார்ந்த தர்க்கம் விசாரணைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. மகாபாரதச் சட்டகத்தை மீறாமல் அதைச் செய்கிறார். நம்பிக்கையின் அடிப்படையில் இப்பிரதியை அவர் அணுகவில்லை. முற்றிலும் பகுத்தறிவு சார்ந்த தர்க்கத்தையும் அவர் கைக்கொள்ளவில்லை. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பரிமாணங்களின் மீது முற்றிலுமாகச் சாய்வு கொள்ளாமல், அதே சமயம் அவற்றைப் புறந்தள்ளவும் செய்யாமல் புனைவின் இலக்கணத்துக்குட்பட்டு அணுகுகிறார். சற்றே நெகிழ்ச்சியான நவீனத்துவப் பார்வையில் மகாபாரதத்தை அணுகுகிறார். இதன் மூலம் இன்றைய பார்வைக்கு நெருக்கமாக மகாபாரதத்தைக் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
 
கரிசனமும் விமர்சனமும்

பிரபஞ்சனின் ரசனையும் தர்க்க அறிவும் கறாரான மதிப்பாய்வும் சமநிலை கொண்டவை. அபிமன்யுவின் அநியாயமான மரணத்தை எண்ணிக் கசியும் அவர் பாண்டவர்களின் அத்துமீறல்களைக் கண்டிக்கத் தவறவில்லை. திரௌபதிக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டு குமுறும் அவர் கர்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காகவும் தலைகுனிகிறார். பலராலும் வஞ்சிக்கப்பட கர்ணனை அனுதாபத்துடன் பார்க்கிறார். அதேசமயம், கர்ணனின் இழிவான செயல்களைக் கண்டிக்கத் தவறவில்லை.

குந்தி, காந்தாரி, மாத்ரி, சத்யமாபா எனப் பெண்களின் பாத்திரங்கள் மீது கூடுதலான அக்கறை எடுத்துக்கொள்கிறார். பீஷ்மரின் வாழ்வின் வியர்த்தத்தை வெளிப்படுத்துகிறார். போர் என்பது பொருளற்ற சாகசம் என்பதை மனம் பதைக்கச் சொல்கிறார். கிருஷ்ணன் என்னும் மாபெரும் புதிரை மிக நுணுக்கமாக ஆராய்கிறார். கிருஷ்ணனின் ஆளுமையின் வீச்சையும் ஆழத்தையும் புரியவைக்கிறார். அர்ச்சுனன், சாத்யகி, அசுவத்தாமன், குந்தி, பலராமன் முதலான பல ஆளுமைகள் குறித்து இதுவரை அதிகம் பேசப்படாத கோணங்களில் பேசுகிறார். பாரதக் கதையில் பாம்புகளின் பங்கு, தேவர்கள், அசுரர்களின் பங்கு முதலானவை பற்றி விசேஷக் கவனம் செலுத்துகிறார். வியாசரின் படைப்புத் திறனையும் தத்துவப் பார்வையும் பிரமிப்புடன் பார்க்கிறார்.

மகாபாரதத்தை நுட்பமாகவும் அதன் பாத்திரங்களை விமர்சனபூர்வமாகவும் அணுகும் வகையில் பிரபஞ்சன் மகாபாரதத்தை மறுவார்ப்பு செய்கிறார். மகாபாரதத்தின் புனைவம்சத்தை அழகாக விளக்கி வியக்கவைக்கிறார். பிரபஞ்சன் மகாபாரதத்தின் பல முடிச்சுகளை அவிழ்க்கவும், முடிவு தெரியாத பல கேள்விகளுக்கு முடிவு காணவும் விழைகிறார். தருமனின் சூதாட்ட ஆசை, பாண்டுவின் திக்விஜயம், மாத்ரி உடன்கட்டை ஏறியது, அரவானைப் பலி கொடுத்தது எனப் பல கேள்விகளுக்குப் பிரபஞ்சன் தன்னளவில் முடிவுகளைக் கண்டு சொல்கிறார்.
 
ஒரு பக்கம் கறாரான அளவுகோல்களைப் பிரயோ கிக்கும் இவர் சில சமயம் தீர்ப்புகளை வழங்குமளவுக்குப் போய்விடுகிறார். திருதராஷ்டிரனையும் துரியோதனனையும் பெருமளவில் மோசமான மனிதர்களாகவே சித்தரிக்கிறார். கிட்டத்தட்ட எல்லாப் பாத்திரங்களைப் பற்றியும் பொதுப் புத்தியில் படிந்த பிம்பங்களுக்கு மாற்றான உண்மைகளைப் பேசும் பிரபஞ்சன், அந்த உண்மைகளைப் பேருண்மையின் பகுதிகளாகக் காட்டிப் புதிய தரிசனங்களுக்கான வாசலைத் திறந்து வைக்கவில்லை. நல்லவன், கெட்டவன் என்னும் இருமைகளுக்குள் பலரைச் சிக்கவைத்து இடைப்பட்ட குணங்களைப் புறக்கணித்துவிடுகிறார். பிரபஞ்சனால் பிரமிப்புடன் பார்க்கப்படும் வியாசர் யாரைப் பற்றியும் எந்தத் தீர்ப்பையும் எழுதவில்லை. அவர் எல்லா உண்மைகளையும் பதிவுசெய்கிறார். பாத்திரங்கள்தான் விமர்சனங்களை முன்வைக்கின்றன. பிரபஞ்சன் பாத்திரங்களை மதிப்பிட்டுத் தீர்ப்பு வழங்கத் தலைப்படுகிறார். இதுபோன்ற இடங்களில் மேலும் திறந்த அணுகுமுறையை அவர் மேற்கொண்டிருக்கலாம். ஆழம் நோக்கிய பயணத்தைக் கோரும் பல இடங்களில் பிரபஞ்சன் சுருக்கமாகவே முடித்துக்கொள்கிறார்.

மகாபாரதம் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்க ஒரு ஆயுள் போதாது. பிரபஞ்சன் அந்த முயற்சியைச் செறிவாகத் தொடங்கியிருக்கிறார். இம்முயற்சியை அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்போது மகாபாரதம் மேலும் துலக்கமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்.
பாரதக் கதையை வழக்கமான பார்வைக்கு அப்பாற்பட்டு அணுக உதவுகிறது இந்நூல். இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் மகாபாரதத்திற்குள் தனக்கான தேடலை முன்னெடுத்துச் செல்லலாம்.
 
மகாபாரதம்
பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம்
பழைய எண்.123 ஏ/புதிய எண். 243 ஏ,
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
விலை: ரூ.300,
சென்னை- 05
தொலைபேசி: 044 28482818

நகரத்தைச் சூறையாடியது யார்?


கடும் நெருக்கடியிலிருந்து சென்னை நகரம் மீண்டு கொண்டிருக்கிறது. அரசு இயந்திரத்தைக் காட்டிலும் வேகமாகக் களமிறங்கிய பொதுமக்களின் அர்ப்பணிப்பு மிகுந்த செயலூக்கம் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. உரிய முன்னெச்சரிக்கைகள் கிடைத்தும் அரசு எடுக்கத் தவறிய முன்னேற்பாடுகள் குறித்த கேள்விகள் கூர்மையாக எழுகின்றன. இந்தச் சமயத்தில் தொலைநோக்கில் இந்த நெருக்கடியைப் பற்றி யோசிக்கலாம்.

சென்னையின் விரிவாக்கத்தில் தொடங்குகிறது இந்தப் பிரச்சினை. சென்னையை நோக்கி லட்சக்கணக்கான மக்களை ஈர்த்ததன் காரணம், மற்ற பகுதிகளின்பால் அரசு காட்டிய உதாசீனம் என்பது தனியே விவாதிக்கப்பட வேண்டியது. சென்னையை நோக்கி வந்த மக்கள் பல்வேறு வகைகளில் தங்களைப் பொருத்திக்கொண்டார்கள். பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்கவும் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கட்டுமானங்களுக்காகவும் சென்னை விரிவடைய வேண்டியிருந்தது. அப்போது வறண்டிருந்த ஏரிப் பகுதிகள் முதல் இலக்காயின.

ஏரிகள் வறண்டிருந்தாலும் அவை ஓரிடத்தின் நீர் வள அமைப்பின் முக்கியமான கண்ணிகள். நீர் வளம் குறித்த அடிப்படை அறிவு கொண்டவர்கள் அவற்றின்மீது எக்காரணம் கொண்டும் கைவைக்க மாட்டார்கள். இங்கோ ஏரிகள் மனைகளாவதற்குக் கண்மூடித்தனமாக அனுமதி வழங்கப்பட்டன. ஆட்சியாளர்கள், அதிகாரிகள், வீடு கட்டிக் குடியேறியவர்கள், தொழிலகங்களை, அரசு அலுவலகங்களை, நினைவுச் சின்னங்களை அமைத்தவர்கள் எனப் பலருக்கும் இதில் பங்கிருக்கிறது.

துரைப்பாக்கம் பகுதி பற்றி பத்திரிகையாளர் சங்கர் முகநூலில் தரும் தகவல்கள் ஏரிப் பகுதிகள் கையாளப்பட்ட விதம் பற்றி உணர்த்துகின்றன. பள்ளிக்கரணை ஏரியிலிருந்து குரோம்பேட்டை பாலம் வரை இருந்த 10 ஏரிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்குகள், பல்கலைக்கழகம், டாஸ்மாக் கடைகள், குப்பைக் கிடங்கு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவை முளைத்திருக்கின்றன. பள்ளிக்கரணை ஏரிப்பகுதியிலும் குப்பைக் கிடங்கு, பறக்கும் ரயில்வே, கடல்சார் பல்கலைக்கழகம், மாற்று எரிபொருள் ஆய்வு மையம் ஆகியவை இருப்பதை சங்கர் குறிப்பிடுகிறார். இந்த ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கவில்லை என்றால், மழைப் பொழிவின் பெரும் பகுதியை இவை மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டிருக்கும். நகரம் காப்பாற்றப்பட்டிருக்கும்.

சரி, இந்தக் கட்டிடங்களுக்கான தேவையை எப்படிச் சமாளிப்பது என்று கேட்கலாம். இடம் இல்லை என்பதற்காக மெரீனா கடற்கரையில் வீடு கட்டிக்கொள்ள முடியுமா? தாகம் தணிக்கச் சாக்கடைத் தண்ணீரை அள்ளிக் குடிக்க முடியுமா? சில இடங்களில் வீடு கட்டினால் மழை அதிகரிக்கும்போது வீடு முழுகும் அபாயம் இருக்கிறது என்றால், அங்கு வீடு கட்டக் கூடாது என்பதுதான் ஒரே முடிவாக இருக்க முடியும். இந்த இடங்களில் கட்டத் தடை விதிக்கப்பட்டு, அது அமல்படுத்தப்பட்டிருந்தால் சென்னை விரிவாக்கத்தின் முகமே மாறியிருக்கும்.
‘சென்னைக்கு மிக அருகில்’

ஏன் அனைவரும் சென்னையின் மையமான பகுதிகளில் அல்லது ‘சென்னைக்கு மிக அருகில்’ வசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்? பல அம்சங்களும் ஒரு சில இடங்களில் மட்டும் மையம் கொண்டிருப்பதுதான் காரணம். அரசு, தனியார் அலுவலகங்கள், முக்கியமான சந்தைகள், பெரிய கடைகள், நல்ல திரையரங்கங்கள் என எல்லாமே சில இடங்களில் நெருக்கமாக அமைந்திருக்கின்றன. இந்த இடங்களுக்கு வந்துபோவதில் உள்ள போக்குவரத்து / நேரம் சார்ந்த நெருக்கடிகள்தான் அனைவரையும் சென்னைக்குள் அல்லது அதன் அருகில் வசிப்பதற்கான அவசியத்தை உருவாக்குகின்றன. சந்தைகள், கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை முதலிலிருந்தே திட்டமிட்டு சென்னையின் பல்வேறு இடங்களிலும் பரவச் செய்திருந்தால் இந்தப் பதற்றம் மக்களுக்கு வந்திருக்காது.

மக்கள் அன்றாடம் வந்து செல்ல வேண்டிய இடங்களில் முக்கியமானவை, அலுவலகங்கள். பல சமயம் அலுவலக வேலையைக் காட்டிலும் அதிகச் சிரமத்தைத் தருவது வந்துபோவதற்கான போக்குவரத்து நெருக்கடிதான். எல்லா அலுவலகங்களுமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இயங்குகின்றன. எந்த அலுவலகத்திலும் ஊழியர்களுக்கு நெகிழ்வான வேலை நேரம் இல்லை. அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர் நல்ல ஊழியராகக் கருதப்படுகிறார். தன்னுடைய வேலையை முடித்துவிட்டுச் சீக்கிரம் கிளம்பும் ஊழியரின் ஈடுபாடு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க ஒருவர் காலை ஆறரைக்குக்கூட அலுவலகம் வரலாம். தன் வேலை முடிந்ததும் கவலை இல்லாமல் கிளம்பலாம். வாரம் 40 மணி நேரம் வேலை செய்கிறாரா, கொடுத்த பணியை முடிக்கிறாரா என்பதுதான் முக்கியம். இங்கே 8 மணி நேரம் முடிந்த பிறகும் உட்கார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. வேலை செயற்கையாகத் திணிக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு மேல் கிளம்பி வெகு தூரம் செல்வதில் உள்ள அலுப்பைக் கணக்கில் கொண்டே ‘மிக அருகில்’ வசிப்பதற்கான அவசியம் உருவாகிறது.

இப்படிப் பல விதங்களில் உருவாகும் பதற்றமும் நிர்வாகத்தின் தொலைநோக்கற்ற பார்வையும்தான் கண்ட இடத்திலும் கட்டுமானங்கள் முளைக்கக் காரணமாக அமைந்தன. தொழில், கல்வி நிறுவனங்கள் தொடங்குபவர்களும் பல்வேறு வசதிகளுக்காகச் சென்னைக்கு அருகில் மையம்கொள்ள விழைவதால் கட்டிடங்களுக்கான தேவைகள் அதிகரிக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து ஏரிகளைச் சூறையாடுகின்றன. முடிச்சூர், படப்பை, போரூர் என எல்லா இடங்களிலும் இதே நிலைதான். எல்லா அரசுகளும் பல்வேறு தொழிலதிபர்களும் கல்வித் தந்தைகளும் பொதுமக்களும் இணைந்து செய்த பெருங்குற்றம் இது. அனுமதி தருவது என்னும் மந்திரச் சாவியைக் கையில் வைத்திருக்கும் அரசுக்கு இதில் கூடுதல் பொறுப்பு உள்ளது.
இனி என்ன செய்யலாம்?

நீர்நிலைகளின் ஒரே ஒரு அங்குலத்தைக்கூட இனி எதற்கும் தரக் கூடாது எனச் சபதம் எடுத்து அதைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றலாம். புதிய இடங்களில் ஏரிகள், குளங்களை உருவாக்கலாம். இருக்கும் ஏரி, குளங்களின் கொள்ளளவுகளை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து செயல்படுத்தலாம். பருவ மழை தொடங்கு முன் தூர் வாருதல், வாய்க்கால்களைச் சீரமைத்தல் முதலான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மழை நீர் சேகரிப்பை அறிவியல்பூர்வமாகத் திட்டமிட்டுக் கறாராகப் பின்பற்றலாம். ராஜஸ்தானில் ராஜேந்திர சிங் சாதித்துக் காட்டிய நீர் சேகரிப்புத் திட்டங்களைத் தமிழகம் முழுவதும் நேர்மையாக அமல்படுத்தி, நீருக்காக யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லாத நிலையை உருவாக்கலாம்.

நகரத்தை நோக்கி மக்கள் குவிவதைத் தவிர்க்கத் தீவிரமான நடவடிக்கைகள் வேண்டும். சென்னையின் முக்கியமான மையங்களை உடைத்து, நகரத்தின் வசதிகளைப் பரவலாக்கலாம். வேலை நேரம் சம்பந்தமான பதற்றங்களைத் தணிக்க அலுவலக நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

மக்கள் மீது அக்கறையும் தொலைநோக்கும் உறுதியும் நேர்மையும் கொண்ட நிர்வாகத்தால் மட்டுமே இவை சாத்தியப்படும். அரசுகள் மாறினாலும் திட்டங்கள் தொடரும் எனும் பக்குவமான அணுகுமுறை இருந்தால் மட்டுமே இவை நடக்கும். இன்றைய தமிழக அரசியல் பின்புலத்தில் இதையெல்லாம் யோசிக்கும்போது ஆற்றாமையே மிஞ்சுகிறது. ஆனால், கடும் நெருக்கடியில் மகத்தான ஆற்றலை, அசத்தியமான செயல் துடிப்பை வெளிப்படுத்திவரும் மக்களின் அழுத்தம் கூடினால் நிர்வாகம் மண்டியிடத்தான் வேண்டும். இது ஜனநாயக நாடு. மக்கள் சக்தியே இறுதியில் வெல்லும். இப்போது உருவாகியுள்ள செயலூக்கம் தொலைநோக்குத் திட்டங்களை நோக்கி அரசைச் செலுத்தக்கூடும் என்றால் மாற்றம் வெகு தொலைவில் இருக்காது.

பாரதி படைப்புகள் பொதுவுடைமையான கதை


உலக வரலாற்றில் தமிழகத்தில்தான் ஒரு எழுத்தாளரின் படைப்புகளுக்கான பதிப்பு ரிமை அரசாங்கத்தால் வாங்கப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது. காந்தி, நேரு, தாகூர் உட்பட யாருடைய படைப்புகளுக்கும் கிடைக்காத இந்தத் தனிப் பெருமை சுப்பிரமணிய பாரதிக்கு எப்படிக் கிடைத்தது? இதற்கு வித்திட்ட நிகழ்வுகள், இதற்காக நடந்த முயற்சிகள், ஏற்பட்ட திருப்பங்கள் ஆகிய அனைத்தையும் ஆவண ஆதாரங்களுடனும் வரலாற்றுப் பார்வையுடனும் நம் கண் முன் நிறுத்துகிறார் வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ என்னும் தனது நூலில், பாரதியின் படைப்புகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டுவதற்கான தேவை அல்லது கோரிக்கை எப்படி எழுந்தது என்பதை வேங்கடாசலபதி துடிப்புடன் விவரிக்கிறார். பாரதி காலத்தில் பாரதி பாடல்களுக்கு இருந்த சமூக, அரசியல் மதிப்பு அவருக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்ற காலகட்டத்தில் பல மடங்கு உயர்கிறது. பாரதி பாடல்களைப் பயன்படுத்துவதற்கான தேவை சமூகத்தில் பல தரப்பினருக்கும் பெருகுகிறது. இந்தச் சூழலில்கூட பாரதியின் ஆக்கங்களைப் பொதுவுடமை ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழவில்லை. அது எழுந்ததற்குக் காரணம் ஒரு வழக்கு. திரைப்படம் ஒன்றில் பாரதி பாடலை டி,கே.எஸ். சகோதரர்கள் பயன்படுத்தியதை எதிர்த்து ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தொடுத்த வழக்கு.

பாரதியின் படைப்புகளைப் பொதுவுடைமை யாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய கதையை சலபதி துல்லியமாக விவரிக்கிறார். ஜீவா, நாரண துரைக்கண்ணன், அவினாசிலிங்கம் செட்டியார் போன்றவர்களின் பங்கு, அரசாங்கம் இதை அணுகிய முறை ஆகியவற்றை ஆவண ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். பாரதியாரின் தம்பி விஸ்வநாத ஐயருக்கும் (பாரதியின் தந்தையின் இரண்டாம் மனைவியின் புதல்வர்) பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கும் இதில் என்ன பங்கு இருந்தது என்பதையெல்லாம் விருப்பு வெறுப்பற்ற முறையில் வேங்கடாசலபதி விரிவாகச் சொல்கிறார்.

பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பல கருத்துக்களை இந்த நூலின் ஆதாரங்கள் தகர்க்கின்றன. ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தன்னிடமிருந்த உரிமைகளைப் பெருந்தன்மை யோடு விட்டுத்தந்தார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவரிடம் இருந்தது பாரதி பாடல்களின் ஒலிபரப்பு உரிமை மட்டும்தான். பாரதி படைப்புகளின் பதிப்புரிமை விஸ்வநாத ஐயரிடம் இருந்தது (பதிப்புரிமை செல்லம்மாளிடமிருந்து இவருக்கு எப்படிப் போனது என்பதையும் நூல் சொல்கிறது). பாரதியின் படைப்புகள் நேர்த்தியாகப் பதிப்பிக்கப் படக் காரணமான இருந்த விஸ்வநாத ஐயர் பொதுப் பார்வையில் வில்லனாகக் கட்டமைக்கப்பட்டதையும் அவர் அதை எதிர்கொண்ட விதத்தையும் நூல் பதிவுசெய்கிறது. விஸ்வநாத ஐயரின் தரப்பை விவரிக்கும் இடம் காவியத் தன்மை பெற்று மிளிர்கிறது.

பல்வேறு காரணிகளும் ஒன்று திரண்டு, பல தரப்பினரும் ஆளுமைகளும் ஓரணியில் நின்றதில் நாட்டுடைமைக் கோரிக்கைக்கு வலுக் கூடிய விதம் விறுவிறுப்பான நாவல்போல வெளிப்படுகிறது. கொட்டாவிகளின் உற்பத்திக் கிடங்காக இருந்துவரும் வரலாற்று ஆய்வு நூல் என்னும் வகையை உயிர்ப்பு கொண்டதாக மாற்றுகிறது வேங்கடாசலபதியின் எழுத்து. தகவல்களின் துல்லியத்தன்மையிலும் நுட்பமான விவரங்களிலும் சமரசம் செய்துகொள்ளாமல் இதைச் சாதிக்கிறார்.

பாரதி வரலாறு குறித்த ஆய்வில் பெரும் பங்களிப்பு செலுத்தியிருக்கும் வேங்கடாசலபதி, வரலாற்றை அணுகும் முறைமையில் பெற்றுள்ள தேர்ச்சியும் இந்த நூலின் வலிமைக்குக் காரணமாக அமைந்துள்ளது. நிகழ்வுகளை அடுக்கிச் செல்லுவது தட்டையான வரலாற்றுப் பதிவு. நிகழ்வுகளைப் புறவயமான வரலாற்று, சமூகக் கண்ணோட்டத்தோடு முன்வைப்பது படைப்பூக்கம் கொண்ட செயல்பாடு. இத்தகைய பதிவு நிகழ்வுகளின் மேற்பரப்பில் தெரியாத நுட்பமான பல உண்மைகளை வெளிப்படுத்தக்கூடியது. வேங்கடாசலபதியின் நூல் அத்தகையது.
 
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
பாரதி பாடல்கள் நாட்டுடமையான வரலாறு
ஆ.இரா. வேங்கடாசலபதி
விலை: ரூ. 120
வெளியீடு: காலச்சுவடு, நாகர்கோவில்-629001.
தொலைபேசி: 04652-278525
மின்னஞ்சல்: publications@kalachuvadu.com

பாரதியும் இருபதாம் நூற்றாண்டும்

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இந்தியர்களின் பட்டியலைப் பலரும் போட்டிருக்கிறார்கள். காந்தி, நேரு, அம்பேத்கர், ஹோமி ஜஹாங்கீர் பாபா, ராமானுஜன், ரவீந்திரநாத் தாகூர், எம்.எஸ். சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் என்று கலவையாகப் பலரைக் கொண்ட பட்டியல் அது. காந்தி, நேரு, அம்பேத்கர் போலப் பரவலாகப் பலரது வாழ்வில் தாக்கம் செலுத்திய ஆளுமைகள் இந்தப் பட்டியலில் இயல்பாகவே இடம்பிடித்து விடுகிறார்கள். எம்.எஸ்., சச்சின் போன்றவர்கள் தத்தமது துறைகளில் செலுத்திய பங்களிப்புக்காகவும் பொது வெளியில் ஏற்படுத்திய தாக்கத்துக்காகவும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். இதில் யாரும் பாரதியாரைச் சேர்த்ததில்லை. தனது துறை சார்ந்த பங்களிப்பு என்று பார்த்தால் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற பலரைக் காட்டிலும் அதிகமான பங்களிப்புச் செலுத்தியவர் பாரதியார். 39 ஆண்டுகளே வாழ்ந்த அவர் சென்ற நூற்றாண்டில் தமிழில் நடைபெற்ற பல்வேறு மாற்றங்களுக்குத் தொடக்கப் புள்ளியாகவும் முன்னோடியாகவும் இருந்திருக்கிறார்.

பாமரர்களுக்கான பாடல்கள், தேர்ந்த ரசிகர்களுக்கான நுட்பமான கவிதைகள் ஆகியவற்றில் அவரது சாதனைகள் அளப்பரியவை. யாப்பிலிருந்து விடுபட்டுக் கவிதைகளை உரைநடைத் தன்மையுடன் எழுதும் மரபின் முன்னோடி அவர்தான். பல்வேறு விதங்களில் புனைவுகளை எழுதிப்பார்த்த அவரது முயற்சிகள் நவீனத் தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தன.

இதழியல் துறையில் முன்னோடிகளுக்கே உரிய பல காரியங்களை அவர் செய்திருக்கிறார். கருத்துப் படங்கள், நாட்டு நடப்புகள் குறித்த கூர்மையான பதிவுகள், உலக விவகாரங்கள் குறித்த அலசல்கள், துணிச்சலான விமர்சனங்கள், ஹைக்கூ உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துதல், பிற மொழிகளிலிருந்து முக்கியமான விஷயங்களைத் தமிழுக்குக் கொண்டுவருதல் எனப் பல விதங்களிலும் சீரிய முறையில் இயங்கியவர். ஒத்துழைக்கவோ ஊக்கம் தரவோ யாருமற்ற சூழலில் தனது உள்ளார்ந்த வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் பெருங்கனவுடனும் இவற்றையெல்லாம் செய்தவர். வறுமை பிடுங்கித் தின்னும் சூழலிலும் மகத்தான கனவுகளைச் சுமந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட்டவர்.

தாகூரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதால் அவரது புகழ், எல்லைகளைக் கடந்தது. ஆனால், பல விதங்களிலும் தாகூருக்கு இணையாகச் சொல்லக்கூடிய பாரதியின் ஆக்கங்களை அப்படிக் கொண்டுபோக நாம் மெனக்கெடவில்லை. இதனால், அவரது பெருமைகள் தமிழக எல்லைக்கு வெளியே அதிகம் தெரியவில்லை.

எனினும், மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழுக்கு அவர் செய்த ஈடிணையற்ற பங்களிப்பு நவீன உலகில் தமிழ் மொழியின் திசைவழியைத் தீர்மானித்ததில் பெரும்பங்காற்றியது. தமிழ் போன்றதொரு மொழிக்குச் செய்யும் தொண்டும் அதன் பரந்துபட்ட தாக்கங்களும் கூட்டாட்சித் தத்துவத்தைக் கைக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கும் அதன் பன்முகப் பண்பாட்டுத் தளத்துக்கும் முக்கியமானது என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. எனவே, இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் மகத்தான ஆளுமைகளில் பாரதிக்கான இடத்தை மறுக்கவே முடியாது.

இந்திய அளவிலான அறிவார்த்த உலகமும் பண்பாட்டுப் பொது மனமும் இதை ஏற்க வேண்டுமானால், இனியாவது நாம் பாரதியாரை, அவரது பன்முக ஆளுமையைச் சீரிய முறையில் இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். பாரதி இறந்து நூறாண்டுகள் நிறைவதற்கு இன்னும் ஆறு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் இதைச் செய்ய முடிந்தால் பாரதியின் பண்பாட்டு, மொழி வாரிசுகள் அவருக்குச் செய்யும் சிறந்த கைங்கர்யமாக அது அமையும்.

இதை எப்படிக் கணக்கிடுவீர்கள்?

வெள்ளம் மெல்ல மெல்ல வடிந்துகொண்டிருக்கிறது. பல இடங்களில் மக்களால் வெளியே வர முடிகிறது. ரயில், பேருந்துச் சேவைகள் ஓரளவு கிடைக்கின்றன. இன்னமும் இயல்பு நிலை பல இடங்களில் சாத்தியப்படவில்லை. நிவாரணப் பணிகள் முழு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இழப்பு எவ்வளவு என்பது இப்போது முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை.

இழப்பை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? சேதமான பயிர்கள், சிதிலமான பொதுக் கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பில் ஏற்பட்ட சேதங்கள், பேருந்து முதலான அரசு வாகனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் முதலானவற்றைக் கணக்கிட்டுவிடலாம். இவற்றைச் சீரமைப்பது, புதிதாக வாங்குவது ஆகியவற்றுக்கு நிதியை ஒதுக்கிவிடலாம். அரசு இயந்திரத்துக்கென்றே உள்ள அலாதியான வேகத்துடனும் புறங்கை நக்கல்களுடனும் இந்த நிதி செலவழிக்கப்படும் (தேனெடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா என்னும் பழமொழியைத் தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்குப் பதிலாகச் சொன்னார் என்பதை இங்கு நினைவுகூர்க). 

எல்லாம் சரி, இழப்பைக் கணக்கிட இந்த அளவீடுகள் போதுமா? பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை யார், எப்படிக் கணக்கிடுவது? உயிரிழப்புகளுக்குக்கூட ஏதேனும் இழப்பீடு வழங்கிவிட முடியும். ஆனால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொருள்கள்?
வெள்ளத்தில் மூழ்கி முடங்கியிருக்கும் வாகனங்கள்? அடித்துச் செல்லப்பட்ட சான்றிதழ்கள்? இவற்றையெல்லாம் அளக்க ஏதேனும் வழிமுறை அரசிடம் இருக்கிறதா? எத்தனையோ வீடுகளில் தொலைக்காட்சி, கணிப்பொறி, அரிசி முதலான உணவுப் பொருள்கள், எரிவாயு சிலிண்டர்கள், அடுப்புகள், குளிர்பதனப் பெட்டிகள், துவைக்கும் இயந்திரங்கள், துணி மணிகள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

பல குடிசைகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் இழப்பீடு கிடைக்குமா? மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் பணத்தில் இவர்களுக்கு ஒரு சிறிதளவேனும் இழப்பீடு கிடைக்குமா?
கணிப்பொறி, குளிர்பதனப் பெட்டி போன்ற பொருள்கள் வசதி படைத்தவர்களின் உடமைகள் என்று யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம். குடிசைகளிலும் இன்று சகஜமாகக் காணப்படும் பொருட்கள் இவை. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தரைத் தளத்தில் இருக்கும் வீடுகளில் இந்தப் பொருள்கள் மீட்க முடியாத அளவு நாசமாகியிருக்கின்றன.
வாகனங்களை நிறுத்தும் இடங்களில் ‘பாதுகாப்பாக’ வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரால் கடும் சேதத்துக்குள்ளாகியிருக்கின்றன.
மேற்கு மாம்பலத்தில் தரைத் தளத்தில் வசிக்கும் நண்பர் ஒருவரின் அனுபவம் இது: வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததில் கார், ஸ்கூட்டி, குளிர் பதனப் பெட்டி, எக்கச்சக்கமான புத்தகங்கள், மெத்தைகள் எனப் பலவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

சில பொருள்களை மீட்கவே முடியாத நிலை. நஷ்டம் சுமார் பத்து லட்சம் இருக்கும் என்கிறார். இவர் பிறவிப் பணக்காரர் அல்ல. மாதச் சம்பளக்காரர். சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் வாங்கிய பொருள்கள் இவை. இவற்றை எல்லாம் மறுபடியும் வாங்க வேண்டுமென்றால் அவருக்கு மீண்டும் இளமை திரும்பி மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும்.

இதுபோன்ற நஷ்டங்களுக்கு என்ன பதில்? தரைத் தளத்தில் வசிக்கும் பலரது நிலையும் இதுதான். சென்னையில் இனி யாரும் தரைத் தளத்தில் வீடு கட்டவோ குடி புகவோ கூடாதா? ஏற்கெனவே தரைத் தளங்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் எங்கே போவார்கள்?

கடைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும் மிக முக்கியமானது. பெரும்பாலான கடைகள் தரைத் தளத்தில் இருப்பவை. ஏரிகள் திறக்கப்பட்டு வெள்ளம் நகருக்குள் புகுந்தபோது அதிகம் பாதிக்கப்பட்ட பிரிவுகளில் இந்தக் கடைக்காரர்களும் அடங்குவார்கள்.

பல கடைகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. கடையில் இருந்த பொருள்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. கடைகள் வியாபார மையங்கள்தாம் என்றாலும் மக்களுக்கு அத்தியாவசியமான பொருள்களை விற்கும் சேவையை அவை செய்துகொண்டிருக்கின்றன. கடை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சொல்லத் தரமன்று.

இந்தச் சேதங்கள் வரலாறு காணாத மழையால் உருவானவை அல்ல. நீர்நிலைகளைத் திறந்துவிட்டதால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் உருவானவை. நீர்நிலைகளை முறையாகப் பராமரிப்பது, கடும் மழை குறித்த கணிப்புகளை அனுசரித்து உரிய முன்னேற்பாடுகளைச் செய்வது முதலான எதையுமே உரிய விதத்தில் உரிய முறையில் செய்யாத நிர்வாகத்துக்கு இந்தச் சேதங்களில் பெரும் பங்கு உண்டு. ஹெலிகாப்டர் தரிசனங்களும் உணவுப் பொட்டல வினியோகமும் இவற்றுக்கெல்லாம் இழப்பீடு ஆகிவிட முடியாது.

சாலை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி, ஆகியவற்றுடன் எந்தப் பொருளை வாங்கினாலும் செலுத்தும் மதிப்புக் கூட்டு வரி போன்ற பல விதமான வரிகளையும் வரிகளுக்கு அப்பாற்பட்ட ‘கப்பங்களையும்’ கட்டிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நெருக்கடியின்போது அரசிடம் உதவி எதிர்பார்க்க முழு உரிமை உண்டு.

வெள்ளத்தால் சூறையாடப்பட்ட இடங்களை மறு நிர்மாணம் செய்வது என்பது சாலைகள், பாலங்களுடன் முடிந்துவிடும் விஷயமல்ல. சகல விதங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகளுக்கு ஈடு செய்வதும்தான். இழந்த பொருள்களை மீண்டும் வாங்குவதற்கும் கடும் சேதமுற்ற வாகனங்களைச் சீரமைக்கவுமான செலவுகளை எல்லாராலும் சமாளிக்க முடியுமா?
உயிர்கள், பயிர்கள், வீடுகள் ஆகியவற்றைப் போலவே பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும் இழப்புதான். குப்பைகளாக மாறிய வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள், முடங்கிக் கிடக்கும் வாகனங்கள், சரக்குகளைப் பறிகொடுத்த கடைகள் ஆகியவற்றின் இழப்புகளைக் கணக்கிட்டு இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் அரசு யோசிக்க வேண்டும்.

இழப்பு என்பதன் வழக்கமான வரையறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஈடு செய்ய முடியாத இழப்புகளைச் சந்தித்த மக்களின் நம்பிக்கையைச் சிறிதளவேனும் புதுப்பிக்க இது உதவும்.

Monday, November 2, 2015

லா.ச.ரா. என்னும் அபூர்வ ராகம்

படம்: நன்றி தளவாய் சுந்தரம்
நவீன தமிழ் எழுத்து பெரும்பாலும் வெகுமக்களின் ரசனை எல்லைக்கு வெளியில்தான் இருந்துவருகிறது. கேளிக்கையை முதன்மைப்படுத்தாத எந்த வெளிப்பாடும் சிறிய குழுவுக்குள் மட்டுமே புழங்குவது தவிர்க்க இயலாததுதான் என்பதால் இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நவீன எழுத்தின் சில பகுதிகள் புரிவதில்லை என்பது பெருவாரியான மக்களின் புகார். அத்தகைய புரியாத எழுத்தின் முதன்மையான உதாரணங்களில் ஒன்றாகவே லா..ரா. அடையாளம் காணப்படுகிறார். சொற்கள் புரியவில்லை என்றால் அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொண்டுவிடலாம். வாக்கியங்களே புரியவில்லை என்றால்? “கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள் முழுவே உனக்கு அஞ்சலிஎன்று ஒரு கதை (த்வனி) தொடங்கினால் சாதாரண வாசகருக்கு எப்படி இருக்கும்? “கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறதுஎன்று சொன்னால் அதை அவர் ப்படிப் புரிந்துகொள்வார்? கேளிக்கை சார்ந்த எழுத்தின் இலகுத்தன்மைக்குப் பழகிப்போன வாசிப்புக்கு இதுபோன்ற சொற்பிரயோகங்களும் வாக்கியங்களும் ஆயாசமூட்டத்தான் செய்யும்.

ஆனால் இதுபோன்ற வாக்கியங்களில் இருக்கும் வசீகரமே லா..ரா.வைப் புரியாமலும் பலரைப் படிக்கவைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. அச்சத்தை மீறிப் பாம்பு தன் அழகால் கவர்வதுபோல, கடலைலைகளும் காட்டருவியும் பள்ளத்தாக்குகளும் அச்சத்தை மீறி மலைக்கவைப்பதுபோல லா..ரா.வின் எழுத்தும் அதன் புரியாமையை மீறிப் பலரையும் ஈர்க்கிறது

லா.ச.ரா. மீதான படிமங்கள்

சில படிமங்கள் அழியாமல் ஒட்டிக்கொள்ளும். லா..ரா. சௌந்தர்ய உபாசகர், லா..ரா. புரியாத எழுத்தாளர், லா..ரா., நனைவோடை உத்தியில் கதை சொல்பவர் போன்ற படிமங்களும் அப்படித்தான். இவை அனைத்துமே சரிதான். ஆனால் இவை மட்டுமல்ல லா..ரா. கிட்டத்தட்ட 200 சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு கட்டுரைத் தொடர்கள் என இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் லா..ரா.வின் எழுத்தில் சரி பாதிக்கு மேல் அடிப்படைத் தமிழ் அறிவு கொண்ட எவரும் படித்துப் புரிந்துகொள்ளக்கூடியதுதான். மீதிப் பகுதியில் பெரும்பாலானவை புரியாத நிலையிலும் வசீகரிக்கக்கூடியவை. ரசித்துப் படிக்கக்கூடியவை. “இது இருளின் நரம்பு. எண்ணத்தின் மணிக்கயிறு. வானத்தின் நீளத்தினின்று உரித்த பொற்சரடுஎன்பன போன்ற மயக்கும் படிமங்கள் புரியாதவை என்று சொவதைவிடவும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருள் தரக்கூடியவை என்று சொல்வதே பொருத்தம். புரியாத நிலையிலும் மந்திரம்போல மனதில் ஒட்டிக்கொள்ளும் மாயமே லா..ரா.வின் சிறப்பு. புரிவதும் புரியாததும் தற்காலிக நிலைகள் ஒரு விஷயத்தை இன்று புரிந்துகொள்ளும் விதம் நாளை மாறலாம். ஆனால் லா..ரா.வின் மந்திரச் சொற்கள் தரும் மயக்கம் நீடித்து நிற்கும்.  

கதை தரும் அனுபவங்கள்

மலையுச்சியில் பிறக்கும் நதி பல வடிவங்களையும் பெயர்களையும் எடுத்தபடி கடலை நோக்கிப் பாயும். ஆவேசம் கொண்ட காட்டருவி, தெள்ளிய ஓடை, சலசலக்கும் ஆறு என அது செல்லும் இடத்திற்கேற்ப அதன் தன்மையும் வேகமும் தோற்றமும் மாறும்.  அதன் மொத்த விகாசத்தையும் குறிப்பிட்ட வகைக்குள் அடக்க முடியாது. லா..ரா.வின் எழுத்தும் அத்தகையதுதான். குறிப்பிட்ட எந்த வகைமைக்குள்ளும் அடக்க முடியாது. நனவோடை உத்தி என்று சிலர் சொல்வார்கள். ஆனால் புற உலகில் வேர் கொண்டு சம்பவங்களால் நகர்ந்து செல்லும் யதார்த்தக் கதைகளையும் அவர் எழுதியுள்ளார். மிஸ்டிக் எனப்படும் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைக் கதையாக்குபவர் என்று சொல்லலாம் என்று பார்த்தால் வலுவான தர்க்கம் அவரது பல படைப்புகளில் அடிச் சரடாக ஓடிக்கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. கூட்டுக் குடும்பத்தின் ஆராதகர் என்று சொல்லச் சிலர் முனைந்தால் குடும்பத்திலிருந்து முரண்படும் தனி நபர் உணர்வை முன்னிறுத்தும் கதைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும். பிராமணக் குடும்பங்களைப் பற்றியே மிகுதியும் எழுதினார் என்றாலும் பிற சாதி, மதத்தவரைப் பற்றிய சித்தரிப்பிலும் வலுவாகவே வெளிப்பட்டார்சௌந்தர்ய உபாசகர் என்று சொல்லலாம். ஆனால் வேதனைகளின் கதையையும் இவர் எழுதிவைத்திருக்கிறார். அன்பின் உன்னதம் பேசும் இவர் சுயநலத்தின் தவிர்க்கவியலாத் தன்மையையும் அனாயாசமாகக் காட்டிவிடுகிறார். பெண்களை சக்தியின் வடிவமாகப் பார்க்கிறார். அதேசமயம் பெண்களின் சுயநலத்தையும் வன்மத்தையும் கண்டு பாராமுகமாக இருப்பதில்லை.

லா..ரா.வுக்குக் கதை என்பது அவரது தேடலின் கருவிதான். கதையம்சம் என்பதைவிடவும் கதையின் வாழ்வம்சத்துக்கும் அதனுள் ஒளிரும் சத்தியத்தின் தரிசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவர் பாணி. மனித உணர்வுகள் அவருக்கு மிக மிக முக்கியம். மதிப்பீடுகளின் தராசில் வைத்து உணர்வுகளை அளப்பவர் அல்ல அவர். கூந்தலில் தன் சுயத்தைக் கண்டுணரும் ஒரு பெண்ணின் வீம்பு அந்தக் கூந்தலுக்காகவே உயிர் துறக்கும் அளவுக்குப் போகிறது. குறிப்பிட்ட சில தருணங்களில் வாழ்வின் ரகசியம் தன் தரிசனத்தைக் காட்டும் என்று நம்பும் லா..ரா.வின் பாத்திரங்கள், கருவறை, சுடுகாடு, படுக்கையறை என எல்லா இடங்களிலும் இந்த உண்மையின் தரிசனத்தைக் காண்கிறார்கள். புலன் சார் அனுபவங்களோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்பதைத் தீர்மானமாக நம்பும் ராமாமிர்தம், புலன்களைத் தாண்டிய அனுபங்களையும் அந்த அனுபவங்கள் வெளிப்படும் தருணங்களையும் மிக நெருக்கமாகக் கண்டு நமக்கும் காட்டுகிறார்.

இந்த வேட்கையில் கதையம்சமும் கதையின் கட்டமைப்பும் பின்னுக்குப் போய் தரிசனத்தைக் கண்டுணரும் சத்திய வேட்கையே படைப்பாக மாறுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் வழமையான கதை கூறும் போக்கிலிருந்து இயல்பாகத் தன்னை விடுவித்துக்கொண்டு தன் தேடலின் பாதையில் தீர்க்கமாகப் பயணிக்கிறார். குடும்ப உறவுகள், மனித விழுமியங்கள், தெய்விகம் ஆகியவற்றைப் பற்றி எழுதத் தொடங்கும் இவர் இந்த ஆதார முடிச்சுகளை மீறிக் கதை செல்லும்போது படைப்பின் போக்குக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டு அதைப் பின்தொடர்ந்து செல்கிறார். கச்சிதமான கட்டமைப்பு கொண்ட யதார்த்தமான பச்சைக் கனவு, கஸ்தூரி, சுமங்கல்யன், பாற்கடல் போன்ற கதைகளைப் படைக்கும் திறன் கொண்ட இவர் பல சமயங்களில் படைப்பின் கட்டற்ற போக்கிற்கு வழிவிட்டுக் கதையின் கட்டமைப்பைத் தியாகம் செய்யவும் தயங்குவதில்லை.

தரிசனங்கள்

லா..ரா.வைப் பொறுத்தவரை எழுத்து என்பது தொழில்நுட்பம் அல்ல. அதில் எந்த அமைப்புக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய கடப்பாடு எதையும் இவர் தனக்கு விதித்துக்கொவதில்லை. ஒவ்வொரு படைப்பும் எதைக் கோருகிறதோ அதைத் தருவதே ஒரு படைப்பாளியின் வேலை என்று நம்புபவர். அதனால்தான் அவரது பல கதைகளின் குவிமையம் சிதறுகிறது. சிறுகதைகளின் ஆதார பலமான குவிமையம் சிதறும்போது அதைப் பின்தொடர்ந்து செல்வது வாசகருக்குச் சிரமமாக இருக்கும். ஆனால் கிளை பிரியும் பாதைகளில் வெளிப்படும் தரிசனங்கள் படைப்பின் ஒவ்வொரு வரியையும் மதிப்பு வாய்ந்ததாக ஆக்குவதையும் உணரலாம். வாழ்வின் மகத்தான தருணங்களை அடையாளம் காட்டும். ஒளிக் குவியத்தின் அழகைப் பல படைப்புகளில் தரும் இவர் ஒளிச் சிதறலின் எண்ணற்ற அழகுக் கோலங்களையும் காட்சிப்படுத்துகிறார். இத்தகைய எழுத்தைப் படிக்கும்போது கதையம்சம், புரிந்துகொள்ளுதல், கதை தரும் செய்தி என்னும் எல்லைகளைத் தாண்டி வாசக மனம் பயணிக்கிறது. அந்தப் பயணம் படைப்பாளி மேற்கொள்ளும் பயணத்துக்கு இணையான பயணமாகிப் படைப்பின் தரிசனத்தை விரிவுபடுத்துகிறது.

காமம் என்பதை மனிதத் தேடலின் ஆதார வடிவமாகக் காண்பவர் லா..ரா. ஆன்மிகத் தேடலையும் காம வேட்கையோடு இணைத்துப் பார்க்கும் துணிச்சல் அவருக்கு உண்டு. எத்தகைய கதையிலும் அபூர்வமானதொரு அனுபவத்தைச் சாத்தியப்படுத்துவது லா..ரா.வின் சிறப்புக்களில் ஒன்று. பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய கதைகள் அழகியலும் வாழ்வனுபவமும் தத்துவ தரிசனமும் கூடி முயங்கும் படைப்புத் திறனின் சிறப்பான வெளிப்பாடுகள்.

சொல்லின் அழகும் வலிமையும்

லா..ரா.வின் சொல்லழகையும் சொல்லின் வலிமையையும் பற்றிப் பேசாமல் அவரைப் பற்றிய எந்தப் பேச்சும் நிறைவுபெறாது. “உன் எழுத்துத் திமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால் அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்என்று ஒருமுறை எழுதிய லா..ரா. தன் கதைகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர முடியும். “வாசனாதி திரவியங்களின் மணத்தைத் தமிழாக்கிக் கொண்டுவந்தவர் லா..ரா.” என்று சுந்தர ராமசாமி எழுதியிருப்பது இவரது சொல்லழகு தரும் மயக்கத்தைக் கச்சிதமாக உணர்த்துகிறது.

லா..ரா. கவிதை எழுதியதில்லை. ஆனால் அவரது படைப்ப்புகளில் இருக்கும் கவித்துவப் படிமங்கள் நவீன கவிஞர்கள் எவருடனும் ஒப்பிட்டுப் பேசப்படக்கூடியவை. இவர் வாழ்க்கையையும் அதன் அனுபவங்களையும் எதிர்கொள்ளும் விதத்தில் அழகுணர்ச்சியும் தத்துவப் பார்வையும் கலந்திருப்பதால் இவரது வெளிப்பாடுகளும் அப்படி ஆகிவிடுகின்றன. “கறந்த பால் நிரம்பிய குடம் கவிழ்ந்து சரிந்த ரத்தம். அந்த ரத்தமே உறைந்து திடமாகி வழியின் குறுக்கே தலை தூக்கி இரை தேடி நெளியும் பவழ விரியன்என்னும் வாக்கியங்கள் தரும் படிமங்களில் லா..ரா.வின் சொல்லழகு மட்டுமின்றி அவருக்கே உரித்தான தரிசனமும் இணைந்திருப்பதை உணரலாம்.

சொல்லழகும் மெய்ப்பொருள் தேடலும் தரும் தரிசனங்களின் படைப்பனுபவம் என்று லா..ரா.வின் கதைகளை ஒருவாறாக வரையறுக்கலாம். பாற்கடல், கஸ்தூரி போன்ற யதார்த்த வாழ்க்கைச் சித்திரங்கள்; புரிந்துகொள்ள முடியாத ஆளுமை விசேஷங்களை மையப்படுத்தும் அபூர்வ ராகம், தாட்சாயணி போன்ற சொல்லோவியங்கள்; யோகம், புற்று போன்ற கால, இட எல்லைகளை மீறி வெளிப்படும் தரிசனங்ககள் எனப் பல தளங்களில் பல பாதைகளில் பயணிப்பவை லா..ரா.வின் கதைகள். உறவுகளின் மேன்மையையும், அவற்றின் சிக்கல்களையும், இணைந்து வாழும் விழைவையும், பிரிந்து செல்லும் வேட்கையையும், தனிமையின் சுமையையும் அதன் மகத்துவத்தையும் பேசுபவை இவரது கதைகள். மரபில், மரபின் விழுமியங்களில் அழுந்தக் காலூன்றி நிற்பவை இவரது கதைகள். அவற்றையும் தனக்கே உரிய பார்வையுடன் ஊடுருவிப் புதிய தரிசனங்களையும் அனுபவங்களையும் சாத்தியப்படுத்துகிறார்.  

கதைகளைச் சொல்வதைவிடவும், கதைகளை முன்வைத்து வாழ்க்கையின் மாயத் தருணங்களைக் கண்டுணர்ந்து வியப்பதும் வியக்கவைப்பதும் ராமாமிர்தத்தின் எழுத்தில் அதிக அழுத்தம் பெறுகின்றன. அந்தத் தருணங்களில் தோய்ந்து மாறுபட்ட அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது அவரது எழுத்து. படைப்புகளில் அனுபவிக்கக் கிடைக்கும் மாயத் தருணங்களுக்காகவும் அவை முன்வைக்கப்படும் கவித்துவச் சொல்லழகின் வசீகரத்துக்காகவுமே இவரது கதைகள் என்றென்றும் படிக்கப்படும். சம கால யதார்த்த வாழ்வில் வேரூன்றிய கதைகள் பல சமயம் கால வெள்ளத்தில் நிற்காமல் போய்விடலாம். ஆனால், காலம், இடம் ஆகியவற்றைத் தாண்டிய தருணங்களைப் படைப்பாக்கும் எழுத்து காலம் தாண்டியும் வாழும். லா..ரா.வின் எழுத்து காலம், இடம் ஆகியவற்றை மட்டுமல்லாமல், புலன்களை மீறிய அனுபவங்களையும் சாத்தியப்படுத்துபவை. அதனாலேயே அவர் தரும் மந்திரத் தருணங்கள் நித்தியத்தன்மை பெற்றிருக்கின்றன.

அபூர்வ ராகம் கதையை இப்படித் தொடங்குகிறார்:வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக்கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வர ஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.

லா..ரா.வும் இந்தப் பெண்ணைப் போலத்தான். இலக்கிய உலகில் முன்னும் பின்னும் யாருமற்ற அபூர்வ ராகம்.


(2014ஆம் ஆண்டில் லா.ச.ரா.வின் பிறந்த நாளை ஒட்டி தி இந்து (தமிழ்) நாளிதழில் எழுதப்பட்ட கட்டுரையின் விரிவான வடிவம்.)