Sunday, January 26, 2014

சினிமாவும் நானும்

சினிமாவுக்கும் எனக்கும் இடையேயான உறவு இயல்பானதல்ல. இலக்கியமே என்னுடைய மனதுக்கு நெருக்கமான கலை வடிவம். சிறு வயது முதலே சினிமா பார்க்கும் ஆர்வம் இருந்தது என்றாலும் சினிமா என் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக அது இருந்ததில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அது கேளிக்கை அம்சமாக மட்டுமே மனதில் பதிவாகியிருக்கிறது. இலக்கிய ரசனை கூர்மை பெற்ற பிறகு தமிழ் சினிமாவின் மீதான ஒவ்வாமையும் வளர்ந்துவந்தது. ஒரு கட்டத்தில் ஒரு சில படங்களைப் பார்த்த அனுபவம் சில ஆண்டுகள் சினிமாவின் பக்கமே போகாத அளவுக்கும் ஆக்கியிருக்கிறது. கலை வடிவங்கள் மூலம் தீவிரமான அனுபவங்களைப் பெற விழையும் ஒருவருக்குத் தர தமிழ் சினிமாவில் பெரிதாக ஏதும் இல்லை என்பதாலும் என் கவனம் அதிகம் இலக்கியத்தின் பக்கமே இருந்ததாலும் தமிழ் சினிமாவைப் பார்க்காமல் இருந்த்தை நஷ்டமாகக் கருத என் மனம் இடம் கொடுக்கவில்லை. தமிழ் சினிமாவை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்னும் நெகிழ்வு பின்னாளில் ஏற்பட்டதன் விளைவாகத் தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் தமிழ் சினிமாவின் பக்கம் கவனம் திரும்பியது. அப்போதும் முக்கியமானது என்று சொல்லப்படும் படங்களை மட்டும் தேர்ன்தெடுத்துப் பார்ப்பது என்னும் வழக்கமே இருந்துவந்தது. 2007இல் திரைப்படம் தொடர்பான இனைய தளங்களில் பணிபுரியக் கிடைத்த வாய்ப்பே எல்லாப் படங்களையும் பார்த்தாக வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. அந்தத் தேவையின் பக்க விளைவே இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள்.

என்றாலும் சினிமாவைப் பற்றிய கட்டுரைகளை 2001இலேயே எழுத ஆரம்பித்ததுவிட்டேன். சுந்தர ராமசாமியின் வீட்டுக்குச் சென்றிருந்த ஒரு சமயத்தில் தங்கர் பச்சானின் அழகி திரைப்படம் வந்திருந்தது. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டீர்களா என்று கண்ணன் கேட்டார். நான் தலையாட்டினேன். அது பற்றி காலச்சுவடுக்கு ஒரு கட்டுரை எழுதித் தர முடியுமா என்று கேட்டார். ஒப்புக்கொண்டேன். அதுதான் சினிமா பற்றிய என் முதல் கட்டுரை. அது பரவலாகப் பாராட்டுப் பெற்றது சிறிது உற்சாகத்தை அளித்தது. அதன் பிறகு அன்பே சிவம் படம் பற்றிக் கட்டுரை எழுதினேன். அதுவும் பலரால் பாராட்டப்பெற்றது. அதன் பிறகு அவ்வப்போது சினிமா குறித்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். 2007க்கும் பிறகு இது அதிகமாயிற்று.

அன்பே சிவம் பற்றிய கட்டுரையைப் பலரும் பாராட்டிய அதே நேரத்தில் நவீன நாடக ஆளுமையாகவும் இலக்கிய ஆர்வலராகவும் எனக்கு அறிமுகமாகியிருந்த ப்ரஸன்னா ராமஸ்வாமி தெரிவித்த ஒரு கருத்து என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. திரைப்படம் என்பது அடிப்படையில் காட்சி ஊடகம்; அதை ஏன் நீங்கள் கதையாகவே பார்க்கிறீர்கள் என்று அவர் கேட்டார். இதே போன்ற கருத்தைத் திரைப்பட விமர்சகர் தியடோர் பாஸ்கரனும் வேறொரு இடத்தில் குறிப்பிட்டிருந்ததாக நினைவு. தமிழில் எழுதப்படும் பெரும்பாலான திரை விமர்சனங்கள் திரைக்கதை விமர்சனங்கள்தான் என்று எழுத்தாளர் ரவிக்குமாரும் சொல்லியிருந்தார். இலக்கியப் பிரதிகளை மதிப்பிடும் கட்டுரைகளையே அதிகம் எழுதியிருக்கும் நான் அதே பாணியில் திரைப்படங்களையும் அணுகுகிறேன் என்றும் இது அடிப்படையிலேயே பிழையானது என்றும் உணர்ந்தேன். திரைப்படங்களைக் காட்சி ஊடகமாகக் கண்டு மதிப்பிட முடியுமா என்பதை அதன் பிறகு பரிசோதித்துப் பார்க்கத் தொடங்கினேன். இந்தக் கட்டுரைகளில் அதற்கான தடயங்களைக் காணலாம். அதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் அதற்கான தீவிரமான முயற்சியில் இருக்கிறேன் என்று சொல்ல முடியும். காஞ்சீவரம், வழக்கு எண் 13/7 ஆகிய படங்களுக்கு நான் எழுதிய விமர்சனக் கட்டுரைகளை தியடோர் பாஸ்கரனும் ப்ரஸன்னா ராமஸ்வாமியும் பாராட்டினார்கள் என்பதை வைத்து இந்த முயற்சியில் ஓரளவேனும் நான் தேறியிருப்பதாகக் கருதிக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

உலகலாவிய தளத்தில் திரைப்படம் எட்டியிருக்கும் உயரமும் அதன் வீச்சும் மிக அதிகம். தமிழ் சினிமா அதன் பக்கத்தில்கூட இன்னமும் நெருங்கவில்லை. இங்கே திரைப்படம் என்பது வெகுஜனக் கேளிக்கை சாதனமாகவே பார்க்கப்படுகிறது. மாறுபட்ட முயற்சிகளையும் இந்தச் சட்டகத்துக்குட்பட்டே நிகழ்த்த வேண்டியிருக்கிறது. மாபெரும் சாதனைகள் நிகழ்த்திய இத்தாலிய, இரானிய, ஃப்ரெஞ்ச் மொழிப் படங்களோடு ஒப்பிடக்கூடிய அளவில்கூட இங்கு முயற்சிகள் நடப்பதில்லை. சினிமாவைக் கலை வடிவமாகக் காணும் பழக்கம் தமிழ் வெகுஜன தளத்தில் இல்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. சிறிய அளவில்கூட £தற்கான முயற்சிகள் நடப்பதற்கான சூழல் இங்கே இல்லை என்பதுதான் ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தக்கூடிய அம்சம். வெகுஜனத் திரைப்படங்களுக்குள் மிக அரிதாக நிகழும் சிறு சலனமாகவே கலை முயற்சிகள் இங்கே இருக்கின்றன. இந்நிலையில் சினிமாவைக் கலை வடிவமாகப் பார்க்கும் பார்வையாளருக்கோ விமர்சகருக்கோ தமிழ் சினிமாவில் வார்வம் எழ வாய்ப்பில்லை.  

என்றாலும் கலை சாதனங்களில் கலையம்சங்களையும் படைப்புத் திறனையும் நேர்மையையும் செறிவான பார்வையையும் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியது இவற்றில் அக்கறை உள்ளவர்களின் கடமை என்பதால் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. வெகுஜனப் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அதன் மீது தாக்கம் செலுத்துவதாகவும் தமிழ் சினிமா விளங்குவதாலும் அதைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் தீவிர எழுத்தாளர்கள் பலர் தமிழ் சினிமாவை அணுகுகிறார்கள் என்று தோன்றுகிறது. இதே அடிப்படைதான் இந்தக் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுரைகள் காலச்சுவடு, நாழிகை, திரைக்கூத்து, தமிழ் ஆழி, அகநாழிகை, பொங்குதமிழ் ஆகியவற்றில் வெளியானவை. இந்த ஊடகங்கள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.

திரைப்படங்களை நான் அணுகும் முறையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய ப்ரஸன்னா ராமஸ்வாமிக்கு இந்நூலைக் காணிக்கையாக்குவதில் மன நிறைவு அடைகிறேன்.  

அரவிந்தன், ஜூலை 23, 2013

‘கேளிக்கை மனிதர்கள்’ நூலுக்கு எழுதிய முன்னுரை. சினிமா, நிகழ்த்துக்கலை தொடர்பான என் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  வெளியீடு காலச்சுவடு.

மரபின் வேரும் நவீன அறிவின் கிளைகளும் - கரிச்சான் குஞ்சுவின் கதை உலகம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கிவிட்ட தமிழ்ச் சிறுகதைகளின் பயணம் வண்ணமிகு வரலாறாகப் பரந்து விரிந்திருக்கிறது. முப்பதுகளில் வேகம் எடுத்த தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சி அற்புதமான பல சிறுகதைகளைத் தந்திருக்கிறது. மேற்குலகின் கொடையான சிறுகதைக் கலையின் நுட்பங்களை மிக விரைவில் தன்வயப்படுத்திக்கொண்ட தமிழ்ப் படைப்பாளிகள் அற்புதமான சிறுகதைகளைப் படைத்துத் தந்திருக்கிறார்கள். சிறுகதையின் பல்வேறு வகைமைகளையும் கூறல்முறைகளையும் பரிசோதித்துப் பார்த்த அவர்கள் பல்வேறுபட்ட கருப்பொருள்களையும் கையாண்டிருக்கிறார்கள். பரந்துபட்ட தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காதபோதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட அந்த முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி.

பசித்த மானுடம் என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார் என்பது சிலருக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர், நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும் மரபை நவீன அறிவின் கண் கொண்டும் பார்ப்பதன் தடயங்களாக இவரது சிறுகதைகள் இருக்கின்றன. கரிச்சான் குஞ்சு விஷயத்தில் மரபு என்று சொல்லும்போது தமிழ் மரபு மட்டுமின்றி இந்து சமயம் சார்ந்த இந்தியத் தத்துவ மரபையும் சமூக மரபையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். இந்தியத் தத்துவத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட இவர் மார்ஸியக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டாலும் இந்திய மரபு சார்ந்த மார்க்ஸியராகவே தன் படைப்புகளில் வெளிப்படுகிறார்.

சமூக ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள் ஆகியவற்றைத் தீவிரமான விமர்சனப் பார்வையுடன் அணுகும் இவர் மரபுக்குள்ளேயே அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுகிறார். இந்தியக் குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு ஆகியவற்றின் மீது கரிசனம் கொண்டவராகவே வெளிப்படுகிறார். யதார்த்தத்தை அணுகுவதில் கறாரான விமர்சனப் பார்வையைக் கொண்டுள்ளபோதிலும் அடிப்படைகளைத் தகர்ப்பதைக் காட்டிலும் இருக்கும் கட்டுமானத்தைச் செப்பனிட்டு மெருகேற்றுவதிலேயே இவரது கவனம் குவிமையம் கொள்கிறது. பித்தப் பசி, ரத்தச் சுவை முதலான கதைகளில் சுரண்டல்மயமான அமைப்பை விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். குசமேட்டுச் சோதி போன்ற சில கதைகளில் போலி ஆன்மிகத்தையும் பக்தியின் செக்குமாட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்துகிறார். இடம் என்னும் கதையில் குடும்ப உறவுகளில் நிலவும் போலித்தனங்களையும் சுயநலப் போக்கையும் உரித்துக் காட்டுகிறார். உயிராசை, யார் சமத்து, குபேர தரிசனம், தங்கக் கழுகு போன்ற சில கதைகளில் மரபுவழிப்பட்ட பார்வையைத் தத்துவக் கண்ணோட்டத்துடன் வெளிப்படுத்துகிறார்.

இவரைப் பொறுத்தவரை சமூக மறுமலர்ச்சி என்பது தலைகீழ்ப் புரட்சி அல்ல. நவீன அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டு மரபைச் செப்பனிட்டுக் கால்த்துக்கேற்பத் தகவமைத்துக்கொள்வது. மரபின் மீதான விமர்சனம் கூர்மையாக இருக்கும் அதே வேளையில் மரபின் பல கூறுகள் மீதான மரியாதையும் அழுத்தமாக இருக்கிறது. மனித்த்தனம் என்பது குலம் கோத்திரம் சடங்கு சம்பிரதாயங்களைக் குழி தோண்டிப் புதைப்பதல்லஎன்று தெளிவாகவே சொல்கிறார்.

கலை, இலக்கியம், தத்துவம், வாழ்க்கையை அணுகும் விதம் ஆகிய விதங்களில் மரபின் கூறுகள் இவர் கதைகளில் மதிப்புடன் எதிர்கொள்ளப்படுகின்றன. சமூக அமைப்பில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள், போலித்தனம் ஆகியவை விமர்சனத்துக்குள்ளானாலும் மரபின் அடிப்படைகளில் இவற்றுக்கான வேர்களைக் காணும் பார்வை இவருக்கு இருப்பதாக இவரது சிறுகதைகள் காட்டவில்லை. அதே சமயம், போலித்தனத்தைத் தோலுரிக்கும்போது சமயம் சார்ந்த போலித்தனங்களை இவர் கருணையோடு அணுகுவதில்லை.

வாழ்வின் பொருள் குறித்த தத்துவ விசாரணை இவர் கதைகளில் பரவலாக விரவிக் கிடக்கிறது. சமகால வாழ்வின் பின்னணியிலும் அதன் எல்லைகளைக் கடந்த தளத்திலும் இது வெளிப்படுகிறது. இந்தியத் தத்துவங்களில் ஆழ்ந்த புலமையும் மனத்தோய்வும் கொண்ட இவர் சமகால வாழ்வினைத் தத்துவக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதில் ஆச்சரியம் இல்லை. அதற்குச் சான்றாக விளங்கும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. ஆனால் இந்தியத் தத்துவத்தின் முக்கியமான கூறு ஒன்றைச் சமகாலச் சிந்தனையின் கண் கொண்டு விமர்சனபூர்வமாகப் பார்க்கும் மானுடம் வென்றதம்மா என்னும் கதை ஆச்சரியம் அளிக்கிறது. ராஜ ரிஷி என்று போற்றப்படும் ஜனக மகாராஜாவின் தத்துவத்தைப் புலன் சார்ந்த, பொருள் சார்ந்த கண்ணோட்டத்தில் கூர்மையாக எதிர்கொள்ளும் இடத்தில் கரிச்சான் குஞ்சுவுக்குள் இருக்கும் மாற்றுச் சிந்தனையின் தேடல் பளிச்சிடுகிறது. பேதங்களைக் கடந்த வேதாந்த மனநிலையை எய்தியதாகச் சித்தரிக்கப்படும் ஜனகனின் படிமத்தை ஒரு பெண்ணின் மூலம் அசைத்துப் பார்க்கும் கரிச்சான் குஞ்சு இதன் மூலம் காலம், இடம், புலன்கள், மனம் ஆகிய எல்லைகளுக்குட்பட்ட மனித வாழ்வில் பரிபக்குவம் என்னும் சொல்லுக்கு இடம் இருக்க முடியுமா என்னும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறார். ஜனகனின் பீடத்தை அசைக்கும் பெண்ணின் தரப்பில் அவர் பார்வை சாய்வுகொண்டாலும் இறுதித் தீர்ப்பு எதையும் எழுதாமல் விவாதத்தின் சரடைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதன் மூலம் சிறுகதையின் கலை அமைதியையும் காப்பாற்றிவிடுகிறார். கரிச்ச்சான் குஞ்சுவின் முக்கியமான கதைகளில் ஒன்று இது.

சற்றே நாடகீயமான தன்மையைக் கொண்டிருக்கும் குசமேட்டுச் சோதி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு கதை. விசித்திரமான சாமியார்களும் அவர்களுக்கான பிரத்யேக பக்தர்களும் மலிந்திருக்கும் நமது சமூகத்தில் இத்தகைய போக்குகளின் உள்ளடற்ற தன்மையைப் பரிகசிப்போடு சித்தரிக்கும் கதை இது. சராசரி மனிதர்களின் பலவீனத்தையும் அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் சில புத்திசாலிகளையும் சமூகத்தில் செயல்படும் மந்தையாட்டு அணுகுமுறையையும் இந்தக் கதை அம்பலப்படுத்துகிறது.

இடம் என்னும் கதை எதிர்கொள்ள அதிர்ச்சி தரும் யதார்த்தத்தை அலட்டிக்கொள்ளாமல் கையாள்கிறது. பொருள் சார்ந்த நன்மைகளுக்காக ஒழுக்க மதிப்பீடுகளையும் உறவுகளில் நேர்மையையும் சர்வசாதாரணமாகத் துறக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய இந்தக் கதை அம்மாவுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் உறவின் மீது பொதுமனத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள சில பிம்பங்களை அனாயாசமாகக் கட்டுடைக்கிறது. நிலைமை கை மீறிச் செல்லும் நேரத்தில் நிகழும் விழிப்புணர்வின் தருணமும் கலை அமைதி கூடி வெளிப்படுகிறது. ஒரு பெண் தன் அம்மாவை மூர்க்கத்தனமானத் தாக்கும் காட்சியிலிருந்து தொடங்கும் இந்தக் கதை அந்த வன்முறைக்கான காரணங்களைப் பின்னோக்கு உத்தியில் சொல்கிறது. ஒரு தலைமுறை தாண்டி விரியும் பின்னோட்டம், தொடங்கிய புள்ளிக்கு வரும்போது பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் வாசகர்கள் கடந்து வந்திருப்பார்கள். வன்முறை தொடங்கிய புள்ளிக்குத் திரும்பும் கதை அதிலிருந்து மேலும் வன்முறைக்கோ வன்மத்துக்கோ செல்லாமல் அமைதியை நோக்கிச் செல்கிறது. அரிவாள்மணை மகளின் கையிலிருந்து அம்மாவை நோக்கிப் புறப்பட்ட தருணம் அம்மாவுக்கும் பெண்ணுக்குமான விழிப்புணர்வுத் தருணமாக மாறும் அற்புதம் நம்பகத்தன்மையோடு உருப்பெறுகிறது. கரிச்சான் குஞ்சுவின் முக்கியமான கதைகளில் ஒன்று இது.
தத்துவம், சமூகம், கலை ஆகிய பின்புலங்களோடு மனித வாழ்வை ஆராயும் கரிச்சான் குஞ்சு பல விதமான கதைமாந்தர்களையும் வாழ்நிலைகளையும் தன் கதைகளில் கொண்டுவருகிறார். பணக்காரர்களின் போலி பக்தி, கலையின் உள்ளார்ந்த ஆற்றல், குழந்தைகளின் உலகம், ஒரு பொருள் தொலைந்துபோவதால் ஏற்படும் மன அவசம் ஏற்படுத்தும் மாற்றங்கள் முதலான பல அம்சங்கள் இவரது கதைகளின் கருப்பொருள்களாகின்றன.

உளவியல் கூறுகள் இவரது கதைகளின் முக்கியமான அம்சங்களில் ஒன்று. மன ஓட்டத்தைப் பின் தொடர்வதில் துல்லியமும் நுட்பமும் கூடிவந்திருக்கும் இவருக்குச் சிக்கலான உணர்வுகளை மொழிவழிப்படுத்தும் திறனும் வசப்பட்டிருக்கிறது. ஒட்டாத செருப்பு என்னும் கதையில் இதைக் காணலாம். நாத்திகம் பேசும் ஒரு பெரிய மனிதர் கடவுளின் சன்னிதியில் முடியைக் காணிக்கை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தைப் பற்றி அங்கதச் சுவையுடன் பேசும் இளவரசு கதையில் அந்தப் பெரிய மனிதரின் கைத்தடிகளின் மந்தையாட்டு உளவியல் கச்சிதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

குபேர தரிசனம் கதை, இன்றைய வாழ்வு குறித்து கரிச்சான் குஞ்சு தரும் தரிசனம். சித்திரம். மதிப்பீடுகள், சம்பிரதாயம், மனித நடத்தையின் விசித்திரங்கள் ஆகியவற்றைச் சந்தர்ப்ப சூழல்களின் பின்னணியில் வைத்துக் காட்டுவதன் மூலம் சமகால வாழ்வைப் பரிசீலனைக்கு உட்படுத்துகிறார் ஆசிரியர்.  

வரலாற்றின் தடங்களிலும் இயல்பாக நடைபோடுகிறார். உறவு முள் போன்ற சில கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இடம் கதையைப் போலவே இதிலும் சந்தர்ப்ப சூழல்களாலும் ஆசை அபிலாஷைகளாலும் சிதையும் வாழ்க்கையின் மாற்றங்களை வீரியத்துடன் சொல்கிறார்.

மருந்து உண்டா? என்னும் கதை சில மனிதர்கள் வாழ்க்கை தரும் அடிகளிலிருந்து பாடம் கற்பதே இல்லை என்பதைச் சொல்கிறது. பழக்கத்தின் தடத்தில் சரிந்து விழும் அறிவின் தோல்வியை யதார்த்தத்தின் பின்புலத்தில் வைத்துச் சித்தரிக்கிறது.

**

கரிச்சான் குஞ்சுவின் மொழி புலமையால் வலுப்பெற்ற மொழி. அதே சமயம் மக்களிடமிருந்து அன்னியப்படாத நடைமுறை சார்ந்த மொழி. தத்துவ விசாரம், சம்பிரதாய விளக்கம், உளவியல் விவரணை, அழகின் வர்ணனை, நிகழ்வுகளின் பதிவுகள் ஆகியவற்றில் முறைசார் உரைநடையைப் பயன்படுத்தும் கரிச்சான் குஞ்சு உரையாடல்களிலும் பெருமளவில் எழுத்து நடையையே கையாள்கிறார். மிகச் சில இடங்களில் மட்டுமே எட்டிப் பார்க்கும் வட்டார வழக்கு விரைவிலேயே முறைசார் வழக்குக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது. கரிச்சான் குஞ்சுவுக்கு வட்டார வழக்கைப் பயன்படுத்துவதில் விசேஷமான ஈடுபாடு இல்லை என்பதாகவே இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உள்ளர்ந்த தொனிகள் கொண்ட இவரது மொழியில் குசும்புக்கும் கூர்மைக்கும் குறைவில்லை. 

கதை கூறும் மொழியிலோ கதையின் கட்டமைப்பிலோ இவர் சிறப்பான கவனம் செலுத்துவதில்லை. இயல்பாகக் கதை சொல்லிக்கொண்டு போகிறார். கதை போகும் வேகத்துக்கு ஏற்ப நடை மாறுகிறது. உரையாடல்களிலும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலும் துள்ளி ஓடுகிறது. தத்துவ விசாரணைகளில் நிதானமும் தீவிரமும் கொள்கிறது. சுரண்டலைச் சாடும்போது ஆவேசம் கொள்கிறது. வர்ணனைகளில் லயித்து நிற்கிறது. குறிப்பாக இயற்கை வர்ணனை, பெண்களின் அழகு வர்ணனை.

சிறுகதைக்கே உரிய கவித்துவ உச்சத்துடன் கூடிய கச்சிதமான முடிவு பற்றி இவர் அலட்டிக்கொள்வதில்லை என்றாலும் பெரும்பாலான கதைகளில் சிறுகதையின் அமைதி இயல்பாகக் கூடிவந்திருக்கிறது. சில கதைகள் திறந்த முடிவைக் கொண்டதாகவும் உள்ளன. சட்டம், சாத்திரம், சம்பிரதாயம் ஓர் உதாரணம்.

தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளையே பெரும்பாலும் தன் கதைக் களமாகக் கொண்டிருக்கும் கரிச்சான் குஞ்சு, அப்பகுதியில் பிராமணர்களின் வாழ்வையே அதிகம் பிரதிபலிக்கிறார். இவர்களது வாழ்வினூடாகவே மாறிவரும் காலத்தையும் மாறாத அம்சங்களையும் பதிவுசெய்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தப் பகுதிகளில் வாழ்ந்த பிராமணர்களின் வாழ்வின் கோலங்களை அறிவதற்கான தரவுகளில் ஒன்றாக இவர் கதைகளைக் காணலாம்.

பிற சாதியினரும் பிற கதைக் களங்களும் அவர்களுக்கான நியாயங்களோடும் நம்பகத்தன்மையோடும் இவரது கதைகளில் இடம்பெறுகிறார்கள். நெரிசலான ரயில் நிலையம் ஒன்றில் சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களின் துயரங்களைச் சித்தரிக்கும் எது நிற்கும், இடை நிலை சாதிக் குடும்பம் ஒன்றின் கதையைக் கூறும் பெண் சாதி ஆகிய கதைகளில் வேறு விதமான கரிச்சான் குஞ்சுவைக் காணலாம். தனக்கு நேரடி அனுபம் இல்லாத அல்லது குறைவாக உள்ள வாழ்க்கையையும் சூழல்கலையும் சித்தரிக்கும்போது வெளியிலிருந்து அவறை அணுகாமல் உள்ளிருந்து பார்க்கும் கோணத்தில் சித்தரிப்பது கரிச்சான் குஞ்சுவின் கலையின் மீதான மதிப்பைக் கூட்டுகிறது. இந்தக் களங்களில் அவர் மேலும் அதிகமாகப் பயணம் செய்திருந்தால் அவருடைய படைப்புலகில் முற்றிலும் புதியதொரு பரிமாணம் உருப்பெற்றிருக்கும்.    

கரிச்சான் குஞ்சுவின் பரிகாசத்துக்கு யாரும் தப்பவில்லை. குசமேட்டுச் சோதி பக்தர்களின் அபத்தத்தைப் பரிகசிக்கிறது என்றால் இளவரசு போன்ற சில கதைகள் மறுமலர்ச்சிக்காரர்களின் அணுகுமுறையைப் பகடி செய்கின்றன.

**

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கரிச்சான் குஞ்சுவின் கதைகளை வாழ்வின் நிலையையும் பொருளையும் புரிந்துகொள்ள விரும்பிய ஒரு கலைஞனின் தேடலின் தடயங்கள் என்று சொல்லலாம். தத்துவ விசாரம், சமூக விமர்சனம், வாழ்வின் புதிர்கள் குறித்த குழப்பமும் வியப்பும், பழமைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான ஊடாட்டம் எனப் பல்வேறு தளங்களில் வெளிப்படும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களில் ஒன்று. இந்தப் பரிமாணத்தின் பல்வேறு கூறுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவடுகளைத் தொகுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு. 

அக்டோபர் 14, 2013

கரிச்சான் குஞ்சுவின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை. நூல் தலைப்பு: எது நிற்கும், வெளியீடு காலச்சுவடு.