Thursday, December 17, 2015

பாரதியும் இருபதாம் நூற்றாண்டும்

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இந்தியர்களின் பட்டியலைப் பலரும் போட்டிருக்கிறார்கள். காந்தி, நேரு, அம்பேத்கர், ஹோமி ஜஹாங்கீர் பாபா, ராமானுஜன், ரவீந்திரநாத் தாகூர், எம்.எஸ். சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் என்று கலவையாகப் பலரைக் கொண்ட பட்டியல் அது. காந்தி, நேரு, அம்பேத்கர் போலப் பரவலாகப் பலரது வாழ்வில் தாக்கம் செலுத்திய ஆளுமைகள் இந்தப் பட்டியலில் இயல்பாகவே இடம்பிடித்து விடுகிறார்கள். எம்.எஸ்., சச்சின் போன்றவர்கள் தத்தமது துறைகளில் செலுத்திய பங்களிப்புக்காகவும் பொது வெளியில் ஏற்படுத்திய தாக்கத்துக்காகவும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். இதில் யாரும் பாரதியாரைச் சேர்த்ததில்லை. தனது துறை சார்ந்த பங்களிப்பு என்று பார்த்தால் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற பலரைக் காட்டிலும் அதிகமான பங்களிப்புச் செலுத்தியவர் பாரதியார். 39 ஆண்டுகளே வாழ்ந்த அவர் சென்ற நூற்றாண்டில் தமிழில் நடைபெற்ற பல்வேறு மாற்றங்களுக்குத் தொடக்கப் புள்ளியாகவும் முன்னோடியாகவும் இருந்திருக்கிறார்.

பாமரர்களுக்கான பாடல்கள், தேர்ந்த ரசிகர்களுக்கான நுட்பமான கவிதைகள் ஆகியவற்றில் அவரது சாதனைகள் அளப்பரியவை. யாப்பிலிருந்து விடுபட்டுக் கவிதைகளை உரைநடைத் தன்மையுடன் எழுதும் மரபின் முன்னோடி அவர்தான். பல்வேறு விதங்களில் புனைவுகளை எழுதிப்பார்த்த அவரது முயற்சிகள் நவீனத் தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தன.

இதழியல் துறையில் முன்னோடிகளுக்கே உரிய பல காரியங்களை அவர் செய்திருக்கிறார். கருத்துப் படங்கள், நாட்டு நடப்புகள் குறித்த கூர்மையான பதிவுகள், உலக விவகாரங்கள் குறித்த அலசல்கள், துணிச்சலான விமர்சனங்கள், ஹைக்கூ உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துதல், பிற மொழிகளிலிருந்து முக்கியமான விஷயங்களைத் தமிழுக்குக் கொண்டுவருதல் எனப் பல விதங்களிலும் சீரிய முறையில் இயங்கியவர். ஒத்துழைக்கவோ ஊக்கம் தரவோ யாருமற்ற சூழலில் தனது உள்ளார்ந்த வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் பெருங்கனவுடனும் இவற்றையெல்லாம் செய்தவர். வறுமை பிடுங்கித் தின்னும் சூழலிலும் மகத்தான கனவுகளைச் சுமந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட்டவர்.

தாகூரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதால் அவரது புகழ், எல்லைகளைக் கடந்தது. ஆனால், பல விதங்களிலும் தாகூருக்கு இணையாகச் சொல்லக்கூடிய பாரதியின் ஆக்கங்களை அப்படிக் கொண்டுபோக நாம் மெனக்கெடவில்லை. இதனால், அவரது பெருமைகள் தமிழக எல்லைக்கு வெளியே அதிகம் தெரியவில்லை.

எனினும், மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழுக்கு அவர் செய்த ஈடிணையற்ற பங்களிப்பு நவீன உலகில் தமிழ் மொழியின் திசைவழியைத் தீர்மானித்ததில் பெரும்பங்காற்றியது. தமிழ் போன்றதொரு மொழிக்குச் செய்யும் தொண்டும் அதன் பரந்துபட்ட தாக்கங்களும் கூட்டாட்சித் தத்துவத்தைக் கைக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கும் அதன் பன்முகப் பண்பாட்டுத் தளத்துக்கும் முக்கியமானது என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. எனவே, இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் மகத்தான ஆளுமைகளில் பாரதிக்கான இடத்தை மறுக்கவே முடியாது.

இந்திய அளவிலான அறிவார்த்த உலகமும் பண்பாட்டுப் பொது மனமும் இதை ஏற்க வேண்டுமானால், இனியாவது நாம் பாரதியாரை, அவரது பன்முக ஆளுமையைச் சீரிய முறையில் இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். பாரதி இறந்து நூறாண்டுகள் நிறைவதற்கு இன்னும் ஆறு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் இதைச் செய்ய முடிந்தால் பாரதியின் பண்பாட்டு, மொழி வாரிசுகள் அவருக்குச் செய்யும் சிறந்த கைங்கர்யமாக அது அமையும்.

No comments:

Post a Comment