Thursday, December 17, 2015

பாரதி படைப்புகள் பொதுவுடைமையான கதை


உலக வரலாற்றில் தமிழகத்தில்தான் ஒரு எழுத்தாளரின் படைப்புகளுக்கான பதிப்பு ரிமை அரசாங்கத்தால் வாங்கப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது. காந்தி, நேரு, தாகூர் உட்பட யாருடைய படைப்புகளுக்கும் கிடைக்காத இந்தத் தனிப் பெருமை சுப்பிரமணிய பாரதிக்கு எப்படிக் கிடைத்தது? இதற்கு வித்திட்ட நிகழ்வுகள், இதற்காக நடந்த முயற்சிகள், ஏற்பட்ட திருப்பங்கள் ஆகிய அனைத்தையும் ஆவண ஆதாரங்களுடனும் வரலாற்றுப் பார்வையுடனும் நம் கண் முன் நிறுத்துகிறார் வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ என்னும் தனது நூலில், பாரதியின் படைப்புகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டுவதற்கான தேவை அல்லது கோரிக்கை எப்படி எழுந்தது என்பதை வேங்கடாசலபதி துடிப்புடன் விவரிக்கிறார். பாரதி காலத்தில் பாரதி பாடல்களுக்கு இருந்த சமூக, அரசியல் மதிப்பு அவருக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்ற காலகட்டத்தில் பல மடங்கு உயர்கிறது. பாரதி பாடல்களைப் பயன்படுத்துவதற்கான தேவை சமூகத்தில் பல தரப்பினருக்கும் பெருகுகிறது. இந்தச் சூழலில்கூட பாரதியின் ஆக்கங்களைப் பொதுவுடமை ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழவில்லை. அது எழுந்ததற்குக் காரணம் ஒரு வழக்கு. திரைப்படம் ஒன்றில் பாரதி பாடலை டி,கே.எஸ். சகோதரர்கள் பயன்படுத்தியதை எதிர்த்து ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தொடுத்த வழக்கு.

பாரதியின் படைப்புகளைப் பொதுவுடைமை யாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய கதையை சலபதி துல்லியமாக விவரிக்கிறார். ஜீவா, நாரண துரைக்கண்ணன், அவினாசிலிங்கம் செட்டியார் போன்றவர்களின் பங்கு, அரசாங்கம் இதை அணுகிய முறை ஆகியவற்றை ஆவண ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். பாரதியாரின் தம்பி விஸ்வநாத ஐயருக்கும் (பாரதியின் தந்தையின் இரண்டாம் மனைவியின் புதல்வர்) பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கும் இதில் என்ன பங்கு இருந்தது என்பதையெல்லாம் விருப்பு வெறுப்பற்ற முறையில் வேங்கடாசலபதி விரிவாகச் சொல்கிறார்.

பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பல கருத்துக்களை இந்த நூலின் ஆதாரங்கள் தகர்க்கின்றன. ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தன்னிடமிருந்த உரிமைகளைப் பெருந்தன்மை யோடு விட்டுத்தந்தார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவரிடம் இருந்தது பாரதி பாடல்களின் ஒலிபரப்பு உரிமை மட்டும்தான். பாரதி படைப்புகளின் பதிப்புரிமை விஸ்வநாத ஐயரிடம் இருந்தது (பதிப்புரிமை செல்லம்மாளிடமிருந்து இவருக்கு எப்படிப் போனது என்பதையும் நூல் சொல்கிறது). பாரதியின் படைப்புகள் நேர்த்தியாகப் பதிப்பிக்கப் படக் காரணமான இருந்த விஸ்வநாத ஐயர் பொதுப் பார்வையில் வில்லனாகக் கட்டமைக்கப்பட்டதையும் அவர் அதை எதிர்கொண்ட விதத்தையும் நூல் பதிவுசெய்கிறது. விஸ்வநாத ஐயரின் தரப்பை விவரிக்கும் இடம் காவியத் தன்மை பெற்று மிளிர்கிறது.

பல்வேறு காரணிகளும் ஒன்று திரண்டு, பல தரப்பினரும் ஆளுமைகளும் ஓரணியில் நின்றதில் நாட்டுடைமைக் கோரிக்கைக்கு வலுக் கூடிய விதம் விறுவிறுப்பான நாவல்போல வெளிப்படுகிறது. கொட்டாவிகளின் உற்பத்திக் கிடங்காக இருந்துவரும் வரலாற்று ஆய்வு நூல் என்னும் வகையை உயிர்ப்பு கொண்டதாக மாற்றுகிறது வேங்கடாசலபதியின் எழுத்து. தகவல்களின் துல்லியத்தன்மையிலும் நுட்பமான விவரங்களிலும் சமரசம் செய்துகொள்ளாமல் இதைச் சாதிக்கிறார்.

பாரதி வரலாறு குறித்த ஆய்வில் பெரும் பங்களிப்பு செலுத்தியிருக்கும் வேங்கடாசலபதி, வரலாற்றை அணுகும் முறைமையில் பெற்றுள்ள தேர்ச்சியும் இந்த நூலின் வலிமைக்குக் காரணமாக அமைந்துள்ளது. நிகழ்வுகளை அடுக்கிச் செல்லுவது தட்டையான வரலாற்றுப் பதிவு. நிகழ்வுகளைப் புறவயமான வரலாற்று, சமூகக் கண்ணோட்டத்தோடு முன்வைப்பது படைப்பூக்கம் கொண்ட செயல்பாடு. இத்தகைய பதிவு நிகழ்வுகளின் மேற்பரப்பில் தெரியாத நுட்பமான பல உண்மைகளை வெளிப்படுத்தக்கூடியது. வேங்கடாசலபதியின் நூல் அத்தகையது.
 
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
பாரதி பாடல்கள் நாட்டுடமையான வரலாறு
ஆ.இரா. வேங்கடாசலபதி
விலை: ரூ. 120
வெளியீடு: காலச்சுவடு, நாகர்கோவில்-629001.
தொலைபேசி: 04652-278525
மின்னஞ்சல்: publications@kalachuvadu.com

No comments:

Post a Comment