Wednesday, June 29, 2016

சொல்லக் 'கூடாத' சில வார்த்தைகள்


சமீபத்தில் வெளிவந்த படமொன்றின் இடைவேளை நேரத்தில் ஒரு நண்பருடன் பேச நேர்ந்தது. படத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். பாராட்டிக்கொண்டே வந்தவரின் முகம் சட்டென்று மாறியது. “ஆனால் பாருங்க சார், இந்த ‘இது’வை வெச்சிக் காமெடி பண்றாங்களே… அதுதான் சார் சகிக்கல” என்றார்.

“எதுவை வெச்சி?” என்று கேட்டேன்.

நண்பர் அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டார். பத்து அடி சுற்றளவுக்கு வேறு யாரும் இல்லை என்றாலும் நண்பர் என் காதருகே வந்து, “அதான் சார், குசு விடறத வெச்சிக் காமெடி பண்றாங்களே, அதச் சொல்றேன்” என்றார்.
 
அவர் சொன்ன அந்தக் காட்சி, ரசக் குறைவான காட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த வார்த்தையைச் சொல்ல இவர் ஏன் இவ்வளவு சங்கோஜப்படுகிறார் என்று புரியவில்லை. மலச்சிக்கல் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பிக்கு’ என்னும் இந்திப் படம் நினைவுக்கு வந்தது. நண்பர் அதைப் பார்த்தால் என்ன ஆவார்?

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு அனுபவம். படம் பார்த்துவிட்டு வந்த ஒரு நண்பர் கொதித்துப்போயிருந்தார். “என்ன சார் இது, இவ்ளோ ஆபாசமா படம் எடுக்கறாங்க, கொஞ்சமாவது டீசன்ஸி வேணாமா?” என்று பொங்கினார்.

சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் மனிதர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்ட படம் அது. கதைப்போக்கை ஒட்டி ஓரிரு இடங்களில் பீ, மூத்திரம் போன்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. அவைதாம் நண்பரின் கோபத்துக்குக் காரணம். அந்தச் சொற்கள் ரசக் குறைவாகப் பயன்படுத்தப்படவில்லை. இயல்பாக, மக்களின் அன்றாட வாழ்வின் சொல்லாடல்களின் ஒரு பகுதியாக, படைப்பூக்கத்துடன் இடம்பெற்றிருந்தன.
 
விலக்கப்பட்ட கனிகள்

படைப்பில் எது ஆபாசம், தவிர்க்க வேண்டியவை எவை என்பதெல்லாம் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு, மறுவரையறைக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. வெகுமக்களுக்கான வெளிகளில் புழங்கும் படைப்புகளில் பாலியல் சொற்கள் / செயல்களின் பயன்பாடு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் சில சொற்களையும் பாலியல் சொற்களின் ரகத்தில் சேர்த்துவிடுவது ஆபத்தானது. அதன் மூலம் ‘கெட்ட வார்த்தை’களின் எண்ணிக்கைதான் பெருகும். அத்தகைய சொற்கள் காலப்போக்கில் வசைச் சொற்களாகவும் ஆகிவிடும். ‘விலக்கப்பட்ட கனி’களின் மீது ஆர்வம்கொள்வது இயல்புதானே?

வாயு பிரிதல், சிறுநீர் கழித்தல் போன்ற இயல்பான விஷயங்களுக்கு நேர்ந்த கதி இதுதான். இப்படியேபோனால், இருமல், சளி, தும்மல், புரையேறுதல் போன்றவையும் ‘விலக்கப்பட்ட கனி’களாகிவிடும். இவற்றைப் பற்றிய வசனங்களும் காட்சிகளும் ‘ஆபாச’மாகிவிடும். நமது படைப்புகள் வரவேற்பறையின் அழகியலுக்குள் மட்டுமே புழங்கத் தொடங்கிவிடும். வரவேற்பறை என்பது நாம் மற்றவர்களுக்குக் காட்ட விரும்பும் அம்சங்கள் மட்டுமே உள்ள இடம். சமையலறை, சாப்பாட்டு அறை, படுக்கை அறை, வாசிப்பு அறை, புழக்கடை, கழிவறை எனப் பல அம்சங்களுக்கும் நம் வாழ்வில் இடம் உண்டு. வரவேற்பறையை மட்டுமே பிரதிபலிக்கும் படைப்புகள் தட்டையாகவும் வண்ணங்கள் அற்று செயற்கையாகவும் இருக்கும்.
 
மொழியின் வண்ணங்கள்

இந்தப் போக்கு நமது மரபில் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மத்தியில் புழங்கும் பழமொழிகள், சொலவடைகளில் உடல் உறுப்புகளின் பற்றிய கொச்சை வழக்குகள் சகஜமாகப் புழங்குகின்றன. ‘குளத்து மேல கோவிச்சிக்கிட்டு குண்டி கழுவ மறந்த கதையாக,' என்னும் சொலவடை ஓர் உதாரணம். இதில் வெளிப்படும் கூர்மையான விமர்சனமும் உளவியல் நுட்பமும் அபாரமானவை. இப்படி நூற்றுக்கணக்கானவற்றைச் சுட்டலாம். இத்தகைய சொற்களை அருவருத்து ஒதுக்குவதன் மூலம் நமது சொற்களஞ்சியத்தின் முக்கியமானதொரு பகுதியை ஒதுக்கிவிடுகிறோம். மொழியின் வண்ணங்களைக் குறைத்து அதற்கு வெள்ளையடிக்கிறோம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விக்டோரிய காலத்து மதிப்பீடுகள் நம்மிடையே பரவின. ஆங்கிலேயப் பொதுப் பண்பாடு கறாரான சம்பிரதாய வரையறைகள் கொண்டது. ஒருவரைச் சந்திக்கும்போது எப்படிப் பேச வேண்டும், ஒரு விழாவை அல்லது பொதுச் சந்திப்பை எப்படி நடத்த வேண்டும், எப்படி விருந்து மேசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சிரிக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் கறாராக வரையறுத்து வைத்திருக்கும் சமூகம் அது. நாகரிகம், நாசூக்கு, சம்பிரதாயங்கள், முறைசார் பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றையும் அது வரையறுத்து வைத்திருக்கிறது.
 
செயற்கை நாகரிகம்

ஆட்சியாளர்களை அடியொற்றிய பண்பாடு அடிமைச் சமூகத்தில் உருவாவதில் வியப்பில்லை. ஆங்கிலேயர்களைப் பல விதங்களிலும் நகல் செய்த இந்திய மேட்டுக்குடியினர், அதன் தாக்கத்தில் நமது பொதுவெளியின் பண்பாட்டையும் கறாராக வரையறுக்கத் தொடங்கினார்கள். பெரும்பாலும் மேட்டுக்குடியினரின் பிடியிலேயே இருந்த கலை சாதனங்களும் ஊடகங்களும் இவற்றைப் பிரதிபலித்தன. இயல்பான பல சொற்கள் அருவருக்கத் தக்கவையாக மாறத் தொடங்கின. பொதுவெளியில் புழங்கும் சொற்களின் மீது செயற்கையான நாகரிக முலாம் பூசப்பட்டது. ஒரு சிலரது கண்ணோட்டத்தில் உருவான தூய்மைவாதம் பொதுவான அளவுகோலாக மாறியது. பொதுப் பண்பாட்டின் அலகுகள் மீது மேட்டுக்குடியினர் செலுத்திவந்த ஆதிக்கமே இதைச் சாத்தியமாக்கியது. எல்லாத் தூய்மைவாதங்களும் இன, சாதியக் கண்ணோட்டங்களைப் பிரதிபலிப்பவை என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்வது, நம் சமூகத்தில் இந்தப் போக்கு நிலைபெற்ற விதத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

தொண்ணூறுகளுக்குப் பிந்தைய சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மைய நீரோட்ட மதிப்பீடுகளையும் அழகியலையும் மறுத்த பின்நவீனத்துவப் போக்கு, மக்களிடையே புழங்கிவந்த பல சொற்களை மீட்டெடுத்தது. விளிம்பு நிலை மக்கள், அவர்தம் பண்பாடுகள், சொல்லாடல்கள் ஆகியவை படைப்புலகில் இடமும் மதிப்பும் பெற்றன. பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் படைப்புலகிலும் ஊடகங்களிலும் அதிகமாக இடம்பெறத் தொடங்கியதை அடுத்து, தூய்மைவாத அழகியலும் வரையறைகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. வெகுசனக் கலை வடிவமான திரைப்படத்திலும் அதன் பிரதிபலிப்புகளைப் பார்க்க முடிகிறது. கானா பாடல்கள் இடம்பெறத் தொடங்கின. பல்வேறு வட்டார வழக்குகள் துல்லியமாக ஒலிக்கின்றன. திருநங்கைகள் கேலிக்குள்ளாக்கப்படுவது குறைந்துள்ளது.

பொது வெளிக்கான நடத்தைகளைக் கறாராக வரையறுத்த ஒழுக்கவியலைப் பின்பற்றும் ஆங்கிலேயச் சமூகம், படைப்புகளில் அத்தகைய தூய்மைவாதத்தைக் கடைப்பிடிப்பதில்லை. பொது வெளியில் ஆங்கிலேயச் சமூகம் கடைப்பிடிக்கும் சமத்துவம், நிர்வாகச் சீர்முறைகள், பொதுச் சொத்துக்கள், பொதுச் சேவைகள் குறித்த பொறுப்புணர்வு ஆகியவற்றை இந்தியச் சமூகம் பெரிதாகக் கற்றுக்கொள்ளவேயில்லை. ஆனால், முறைசார் பண்பாட்டின் மேட்டுக்குடித் தூய்மைவாதத்தை இயன்றவரையிலும் எல்லாத் துறைகளிலும் கடைப்பிடிக்கும் முனைப்பு மட்டும் இங்கே காணப்படுகிறது.
 
நமது வாழ்வியல்.. நமது அழகியல்!

சில சொற்களைப் புனிதப்படுத்துதல், சிலவற்றை விலக்கிவைத்தல் ஆகிய இரண்டுமே ஒரே மனநிலையின் இரு பரிமாணங்கள். இரண்டுமே வாழ்வின் இயல்புக்கும் படைப்பூக்கத்துக்கும் எதிரானவை. சமத்துவ உணர்வை மறுப்பவை. புனிதப்படுத்துதலும் அசிங்கப்படுத்துதலும் சில சொற்களின் தன்மைகளையே மாற்றிவிடும். புனித அல்லது அசிங்கப்படுத்தப்பட்ட சொற்களை இயல்பாக யாரேனும் பயன்படுத்தும்போது அது உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும். ஏற்கெனவே பல சொற்கள் இத்தகைய ‘அந்தஸ்’தைப் பெற்றுவிட்ட நிலையில் இவற்றைக் கூட்டாமல் இருப்பது உத்தமம்.

வரவேற்பறை அழகியல் முக்கியமானதுதான். திட்டமிட்ட, பிசிறற்ற முறைசார் நிகழ்வுகளுக்கும் சமூகத்தில் முக்கிய இடம் உண்டு. ஆனால், ஒட்டுமொத்த சமூகமும் வரவேற்பறை அழகியலிலும் முறைசார் நிகழ்வுகளிலும் முடங்கிப்போக முடியாது. நமக்கான அழகியல் நமது வாழ்வியலிலிருந்து உருவாக வேண்டும். வாழ்வின் பன்முக வண்ணங்களை அவற்றின் இயல்பில் சித்தரிக்கும் படைப்புகள் அற்ற ஒரு சமூகம் தன்னைத்தானே செயற்கையாக வரையறுத்துக்கொள்கிறது. தனக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க மறுக்கிறது. பன்முகத்தன்மைக்கோ பன்முகப் பார்வைக்கோ இடம் தராத இத்தகைய அணுகுமுறைகள் படைப்பில் மட்டுமல்ல, சமூகத்திலும் படைப்பூக்கத்தைச் சிதைத்துவிடும்.

No comments:

Post a Comment