Wednesday, January 13, 2016

அந்தப் பதினேழு ரன்கள்


“சச்சினின் ஒரு இன்னிங்ஸ்கூட இதில் இல்லையா?” - 50 ஆண்டுகளில் சிறந்த 50 டெஸ்ட் இன்னிங்ஸ் என்னும் பட்டியலை அண்மையில் ‘க்ரிக்இன்ஃபோ’ இணையதளத்தின் ‘கிரிக்கெட் மந்த்லி’ இதழ் வெளியிட்டபோது இதுதான் பலரின் முதல் கேள்வியாக இருந்திருக்கும். 25 ஆண்டுகள் கிரிக்கெட் களத்தின் மைய வசீகரமாக இருந்தவர். மகத்தான மட்டையாளர்களில் ஒருவர் எனப் பல நிபுணர்களாலும் புகழப்பட்டவர். 51 முறை சதத்தைக் கடந்தவர். 19 முறை 80ஐக் கடந்தவர். இவற்றில் ஒன்றுகூடவா இதில் இடம்பெறாது?

நியாயமான கேள்விதான். முதல் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த அரை சதம், 1990-ல் இங்கிலாந்தின் ஓல்ட் ட்ரஃபோர்டில் அடித்த முதல் சதம், 1992-ல் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் அடித்த சதம், 1999-ல் சென்னையில் அடித்த சதம், 2002-ல் கொல்கத்தாவில் மேற்கிந்தியாவுக்கு எதிராக அடித்த சதம், அதே ஆண்டில் லீட்ஸில் அடித்த சதம், 2011-ல் தென்னாப்பிரிக்காவில் அடித்த சதம்...

இவை அனைத்துமே பட்டியலில் இடம்பெறத் தக்கவைதான். ஆனால் ஏன் இடம்பெறவில்லை? பாகிஸ்தானுக்கு எதிராகச் சென்னையில் ஆடிய இன்னிங்ஸை வைத்து இதற்கு விடை காணலாம்.

இந்தியாவுக்கு இலக்கு 271. பாகிஸ்தானில் வாஸிம் அக்ரம், வக்கார் யூனுஸ், சக்லைன் முஷ்டாக் ஆகிய சிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். சென்னையின் நான்காம் நாள் ஆடுகளம் பந்து வீச்சுக்கே அதிகம் ஒத்துழைத்தது. சச்சின் களம் இறங்கும்போது ஸ்கோர் 6-2. அவர் ஆட்டமிழக்கும்போது 254-7. அப்போது பற்றாக்குறை 17. அதன் பிறகு எடுக்கப்பட்ட ஓட்டங்கள் 5. இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

அன்று சச்சினின் ஆட்டத்தைப் பார்த்தவர்களால் வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது. வி.வி.எஸ்.லட்சுமணன், முகம்மது அசாருதீன், ராகுல் திராவிட், சௌரவ் கங்கூலி ஆகிய முன்னணி மட்டையாளர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நயன் மோங்கியா துணை நின்றார். சச்சினுக்கு மாபெரும் சோதனைகளுள் ஒன்றாக அமைந்த முதுகு வலி அன்றுதான் தன் கோர முகத்தைக் காட்டியது. துல்லியமானதும் ஆக்ரோஷமானதுமான பந்து வீச்சை சச்சின் அற்புதமாக எதிர்கொண்டார். எதிர் முனையில் விக்கெட்கள் விழுவதைப் பார்த்துத் தற்காப்பு ஆட்டத்துக்குள் புகுந்துகொள்ளாமல் ஆவேசமாகவே அடினார். தடுப்பாளர்களுக்கு இடையில் பந்தைச் செலுத்திய விதம் அற்புதமாக இருந்தது. பிரமிக்கத்தக்க ஷாட்களை அடித்தார். சதம் அடித்தார். மோங்கியா (52) ஆட்டமிழந்ததும் சச்சின் வேகத்தைக் கூட்டினார். முதுகு வலி கடுமையாயிற்று. கால்களைச் சரளமாக நகர்த்த முடியவில்லை. மட்டையைத் தூக்கி அடிக்க முடியவில்லை. எதிரணியின் பந்து வீச்சு சற்றும் ஆசுவாசத்துக்கு இடம்கொடுக்கவில்லை.

சச்சின் தளரவில்லை. இன்னும் 17 ரன்கள். இப்போது முதுகு வலி உச்சத்தை அடைந்தது. விரைவாக ஆட்டத்தை முடிக்கும் எண்ணத்தில் சக்லைனின் பந்தை கிரீஸிலிருந்து இறங்கி வந்து தூக்கி அடித்தார். அந்தக் கணத்தில் உடல் அவரைக் கைவிட்டது. பந்து மட்டையில் சரியாகப் படவில்லை. எல்லைக் கோட்டுக்குப் போயிருக்க வேண்டிய பந்து மிட் ஆஃப் திசையில் மேலே பறக்க, அக்ரம் அதை சந்தோஷமாக ஏந்திக்கொண்டார். கடும் முதுகு வலியுடனும் அதைவிட அதிகமான மன வேதனையுடனும் சச்சின் பெவிலியன் திரும்பினார் (அவரது ஸ்கோர் 136). வெற்றிக்கு இன்னும் 17 ரன்கள் தேவை. 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களும் வீழ்ந்தன. இந்தியா தோற்றது.

அடுத்த சில மாதங்களில் இன்னொரு அற்புதமான இன்னிங்ஸ் அரங்கேறியது. அதை அடித்தவர் சச்சினோடு எப்போதும் ஒப்பிட்டுப் பேசப்படும் பிரையன் லாரா. எதிரணி ஆஸ்திரேலியா. களம் மேற்கிந்தியத் தீவுகளின் ப்ரிட்ஜ்டவுன். இலக்கு 307. லாரா களம் இறங்கியபோது ஸ்கோர் 78-3. விரைவில் இரண்டு விக்கெட்கள் வீழ்ந்தன. 105-5.

லாரா அசரவில்லை. க்லென் மெக்ரா, ஜாசன் கில்லஸ்பி, ஷேர்ன் வார்ன், மெக்கில் ஆகியோரின் பந்து வீச்சை அனாயாசமாக எதிர்கொண்டார். அன்று ஒப்பீட்டளவில் சுழல் பந்து சற்று பலவீனமாக இருந்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொண்ட அவர் வார்ன், மெக்கில் பந்துகளை நொறுக்கினார். வேகப் பந்துகளுக்குச் சற்று அதிக மரியாதை கொடுத்தாலும் அவற்றையும் விட்டுவிடவில்லை. அவரது துல்லியமும் அலட்டிக்கொள்ளாத லாகவமும் எதிரணியை ஸ்தம்பிக்கவைத்தன. 163 ரன்களை எடுத்து அணியை வெற்றிபெற வைத்தார். இந்த இன்னிங்ஸ் சிறந்த 50 இன்னிங்ஸ்களில் நான்காம் இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. லட்சுமணனின் கொல்கத்தா (281 அவுட் இல்லை) இன்னிங்ஸுக்கு முதலிடம்.

லாரா, சச்சின் இருவரின் இந்த இரண்டு இன்னிங்ஸ்களையும் ஒப்பிட்டால் எது சிறந்த இன்னிங்ஸ் என்று அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. இரண்டிலும் நெருக்கடியான சூழல், வலுவான எதிரணி எனப் பல ஒற்றுமைகள். சச்சின் முதுகு வலியால் வருத்தப்பட்டு பாரம் சுமக்க, லாராவோ சிரித்துக்கொண்டே எதிரிகளை வதைத்தார். இருவருமே எதிரணிக்கும் வெற்றிக்கும் இடையில் நின்றார்கள். கடைசி நேரத்தில் சச்சின் விலக, லாராவோ கடைசிவரை நின்று வெற்றிக்கொடி நாட்டினார். வெற்றி, தோல்வியை விட்டுவிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் கிட்டத்தட்ட சமமான மதிப்பெண்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் லாராவின் இன்னிங்ஸ்தான் பட்டியலில் இடம்பிடித்தது. காரணம் அது வெற்றிக்கு உதவியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இன்னிங்ஸ்களில் ரன்கள் எவ்வளவு என்பது முக்கியமல்ல. ஒரு இன்னிங்ஸ் வெற்றிக்கு உதவியதா? வெற்றிக்கு எந்த அளவு இன்றியமையாததாக அமைந்தது? எப்படிப்பட்ட சூழலில் இந்த இன்னிங்ஸ் ஆடப்பட்டது? - ஆகியவையே முக்கியமான அளவுகோல்கள். உதாரணமாக, லாரா எடுத்த இரட்டைச் சதங்கள், முச்சதம், நாற்சதம் ஆகியவற்றைக் காட்டிலும் மேலே குறிப்பிட்ட 153 முக்கியமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 73, சுனில் கவாஸ்கர் எடுத்த 90 ஆகியவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதிலிருந்தே எவ்வளவு ரன் என்பது முக்கியமல்ல என்பது தெரியும். ஓல்ட் ட்ரஃபோர்ட், பெர்த், சென்னை, கொல்கத்தா, செஞ்சூரியன், சிட்னி, கேப் டவுன் ஆகிய இடங்களில் சச்சின் ஆடிய மகத்தான ஆட்டங்கள் நடந்த போட்டிகள் டிராவில் அல்லது இந்தியாவின் தோல்வியில் முடிந்தன. தோல்வியை உலகம் விரும்புவதில்லை. டிராவைப் பெரிதாக மதிப்பதில்லை. வெற்றி மட்டுமே முக்கியம்.

ஆட்டம் முடியும் தறுவாயில் சச்சின் கொடுத்த கேட்ச் பிடிக்கப்பட்டது. வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்ட நிலையில் லாரா கொடுத்த கேட்ச் நழுவவிடப்பட்டது. அப்போது கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் அணி தோற்றிருக்கும். சச்சினின் கேட்ச் நழுவவிட்டப்பட்டிருந்தால் இந்தியா வென்றிருக்கலாம்.

இவ்விரு இன்னிங்ஸ்களுக்குமிடையில் வித்தியாசம் 17. சச்சின் ஆட்டமிழந்தபோது இந்தியாவுக்க்குத் தேவைப்பட்ட ரன்கள் 17. இதை சச்சினே எடுத்திருந்தாலும் சரி, அடுத்து வந்தவர்கள் எடுத்திருந்தாலும் சரி, இந்தியா வென்றிருக்கும். வென்றிருந்தால் சச்சினின் இன்னிங்ஸ் சிறந்த இன்னிங்ஸாக மதிப்பிடப்பட்டிருக்கும்.

தோல்விதான் எவ்வளவு பயங்கரமானது! 

No comments:

Post a Comment