Wednesday, September 2, 2015

பொன்னகரம் உருவான கதை



முதல் நாவல் வெளிவந்த சில மாதங்களுக்குள் எப்படி இன்னொரு நாவலை எழுத முடிந்தது என்று பலரும் ஆச்சரியமாகக் கேட்கிறார்கள். இந்த நாவலை அதன் கரட்டு வடிவில் இரண்டாண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்துவிட்டேன். இதைச் செப்பனிட்டு வெளியிடும் வேலையைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த ஆண்டில் இதைச் செப்பனிட்டபோது அது திருப்திகரமாக வரவில்லை. பல அம்சங்களில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றியது. நண்பர்கள் தெரிவித்த கருத்துகளும் அதை உறுதிசெய்தன. இடையில் திடீரென்று இன்னொரு நாவலை எழுதத் தொடங்கியதில் கவனம் முழுவதும் அதில் சென்றது. அப்படித்தான் ‘பயணம்’ நாவல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. அந்த நாவல் வெளியான உற்சாகம் தணிந்த பிறகு இந்த நாவலைச் செப்பனிடும் வேலையை மீண்டும் தொடங்கினேன்.

தற்செயலாக உருவான நாவல் இது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரு. கல்யாணராமன் அவர்களைச் சந்திக்கப் ‘புதுயுகம்’ தொலைக்காட்சி அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். ‘புதுயுகம்’ தொலைக்காட்சி தொடங்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்த சமயம் அது. பல்வேறு புதிய நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல்களும் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன. சென்னை வாழ்க்கையை மையமாக வைத்துத் தொலைக்காட்சிக்காகச் சில ஆவணப் படங்கள், கதைப் படங்கள் எடுக்கலாம் என்னும் திட்டம் எனக்கு இருந்தது. அந்தத் திட்டங்களைக் கல்யாணராமனிடம் விளக்கினேன். அவற்றுக்கான பிரதிகளை என்னால் எழுதித்தர முடியும் என்று அவரிடம் சொன்னேன். அவர் தொலைக்காட்சியின் பொறுப்பில் இருந்த திரு. பால கைலாசத்துடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். கதைப் படமாக எடுக்கும் யோசனை கைலாசத்திற்குப் பிடித்திருந்தது. கதைச் சுருக்கத்தை எழுதி மின்னஞ்சலில் அனுப்பச் சொன்னார். சென்னை குடிசை மாற்று வாரியப் பகுதி ஒன்றின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு கதையை மனதில் உருவகித்துக்கொண்டேன். அதற்கான கதைச் சுருக்கத்தை விரைவில் அனுப்பினேன். கைலாசம் என்னை அழைத்துப் பேசினார். அந்தச் சந்திப்புதான் இந்த நாவலின் தொடக்கப் புள்ளி.

கதைக் களம், கதை மாந்தர்கள், அதில் வெளிப்படக்கூடிய வாழ்வு ஆகியவை அவருக்குப் பிடித்திருந்தன. ஆனால் கதை வெளியிலிருந்து பார்க்கும் பார்வையில் இருந்ததை அவர் ஏற்கவில்லை. இந்த வாழ்க்கை உள்ளிருந்து பார்க்கப்பட்டுப் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று சொன்னார். உள்ளே இருந்து பார்க்கும் கோணமே நான் விரும்புவது. ஆனால் நான் விரும்பும் வகையில் ஒரு கதையைக் கொடுத்து இதெல்லாம் தொலைக்காட்சிக்கு ஒத்துவராது என்று அவர்கள் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்னும் தயக்கத்திலேயே கதைச் சுருக்கத்தை எழுதியிருந்தேன். ஆனால் கைலாசம் வாழ்வின் அசலான பதிவுகளுக்கும் கலை சார்ந்த முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க விரும்பினார். அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்துகொண்டிருந்த இயக்குநர் நாகா, அகிரா குரோசவாவின் ‘டொடொஸ்கா டென்’ என்னும் படத்தைப் பார்க்கும்படி பரிந்துரைத்தார். அற்புதமான அந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தேன். அதன் பிறகு என் மனதில் இருந்த கதையை முற்றிலும் வேறு விதமாக எழுத ஆரம்பித்தேன். அதன் கதைச் சுருக்கம் கைலாசம், நாகா இருவருக்கும் பிடித்திருந்தது. முன்பணம் கொடுத்து, வேலையைத் தொடரும்படி கேட்டுக்கொண்டார்கள்.

கதையை வேகமாக எழுதினாலும் அதைவிட வேகமான மாற்றங்கள் தொலைக்காட்சியில் நடந்தன. அதன் பிறகு கைலாசத்திடம் அதிகம் விவாதிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. கதையைத் தொலைக்காட்சித் தொடராக எடுக்கும் பொறுப்பு இயக்குநர் சமுத்திரக்கனியிடம் வழங்கப்பட்டது. அவர் இயக்குநர் வா. கௌதமனை வைத்து அந்தத் தொடரை எடுக்க முடிவுசெய்தார். கதையைப் பற்றி என்னிடம் விவாதித்த அணியினர் கதாபாத்திரங்களின் சித்திரங்களை விரிவாகத் தரும்படி கேட்டார்கள். மூன்று முக்கியக் கதாபாத்திரங்களின் வாழ்வைத் தனித்தனியே விரிவுபடுத்தி எழுதிக்கொடுத்துவிட்டேன். தொடரை மனதில் கொள்ளாமல் கதைக்கு நியாயம் செய்யும் விதத்திலேயே எழுதினேன். தொடர் உருவாக்கத்தில் நான் தொடர்ந்து பங்கேற்பதாக ஏற்பாடு இருந்தது. பல நடைமுறைக் காரணங்களால் அது முடியாமல்போயிற்று.

நான் சமர்ப்பித்த பிரதியில் சில அம்சங்களை எடுத்துக்கொண்டு கௌதமன் தன்னுடைய அணுகுமுறையில் அவற்றை விரிவுபடுத்தித் தொடரை இயக்கினார். அது நெடுந்தொடராக ஒளிபரப்பாகிவிட்டது. தொடரின் சில பகுதிகளை யூடியூப் தளத்தில்தான் பார்க்கக் கிடைத்தது. என் கதையோடு தொடர்புகொண்ட அம்சங்கள் அதில் மிக மிகக் குறைவாகவே இருந்தன. கதையின் மையமும் போக்கும் பெருமளவில் மாறியிருந்ததையும் உணர முடிந்தது.

அந்தக் கதைதான் இப்போது ‘பொன்னகரம்’ நாவலாக வெளிவருகிறது.

*

மண் வாசனை என்று வரும்போது சென்னையைப் பற்றி அதிகம் யாரும் பேசுவதில்லை. ஆனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் தமக்கே உரிய அடையாளத்தைக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த நகரம், பல்வேறு ஊர்கள், மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. அடிப்படையிலேயே பன்முகத்தன்மை கொண்டது. இங்கே புழங்கும் பண்பாடு, பழக்க வழக்கங்கள், சாதி, மத நிலவரங்கள், மொழி, சமூக, பொருளாதாரச் சூழல்கள், உள்கட்டமைப்பு, பிரச்சினைகள் என எதை எடுத்தாலும் ஒற்றை வரையறையோடு முடித்துக்கொள்ள முடியாது. சென்னைக்குள் பல உலகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைச் சற்றே அணுகிப் பார்க்கும் முயற்சி இது. அந்த உலகின் யதார்த்தை அதன் நுட்பங்களோடு பதிவுசெய்யும் முயற்சி.

ஒரு பகுதியின் நிலவரத்தின் பொதுத்தன்மை அந்தப் பொதுத்தன்மையுடன் தம்மை இனைத்துக்கொள்ளாத தனிநபர்கள் மீதும் அடையாளமாகக் கவியத்தான் செய்யும். பொதுத்தன்மையை மீறித் தனி அடையாளங்களைக் கொள்வதோ அவற்றைப் பேணிக் காப்பதோ அவ்வளவு எளிதல்ல. பொது அடையாளத்தின் சாதக பாதகங்கள் அந்தப் பொதுத்தன்மையின் பிரதிநிதிகளைப் போலவே அதில் சேராத, அல்லது சேர்ந்துகொள்ள விரும்பாதவர்களையும் பற்றிக்கொள்ளவேசெய்யும். பாதிப்புகளின் புற அடையாளங்கள் நமக்குத் தெரியும் அளவிற்கு அவற்றின் மூல காரணங்களும் அவற்றை உருவாக்கும் காரணிகளும் தெரிவதில்லை. அவற்றையெல்லாம் நெருங்கிப் பார்க்கும் முயற்சியே இந்த நாவல்.

*

இந்த நாவல் உருவாக்கத்தில் உதவியவர்கள் பலர். தொலைக்காட்சியில் பணிபுரிந்த கல்யாணராமன், கைலாசம், நாகா, மணிஸ்ரீதர் ஆகியோர் இயல்பாகவே பல உதவிகள் செய்தார்கள். இந்த நாவல் கையாளும் வாழ்க்கையோடு நெருக்க்கமான தொடர்புகொண்ட ஜகதாலன், கிரி ஆகிய இருவரும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தன. கபடி ஆட்டத்தில் சிறந்து விளங்கிய என் நண்பன் ஜகதாலனின் பெயரை இந்த நாவலில் வரும் கபடி ஆட்டக்காரனுக்கு வைத்திருக்கிறேன். பிரதியைச் செம்மைப்படுத்துவதில் நண்பர்கள் தந்த யோசனையின் பங்கு மிக முக்கியமானது. செல்லப்பா, ஷங்கரராமசுப்பிரமணியன், இமையம், சிபிச்செல்வன், சரவணன், பெருமாள்முருகன், கிருஷ்ண பிரபு ஆகியோர் தெரிவித்த கருத்துக்களும் யோசனைகளும் இந்த நாவலைச் செம்மைப்படுத்தப் பெரிதும் உதவியாக இருந்தன. இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

பால கைலாசம் ஊக்கம் தந்திருக்காவிட்டால் இந்த நாவலை நான் எழுதியிருக்கவே மாட்டேன். நாவல் உருவாவதற்கான தொடக்கப் புள்ளியே அவருடன் நிகழ்ந்த சந்திப்புதான். தமிழ்க் காட்சி ஊடகங்களில் பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்த அவர், கலையம்சமும் வாழ்க்கைக்குப் பயன்தரும் தன்மையும் கொண்ட பொழுதுபோக்கு என்னும் வகைமையைத் தமிழில் வெற்றிகரமாக உருவாக்கி நிலைபெறச்செய்ய முடியும் என்னும் கனவைக் கொண்டிருந்தார். மேலான கனவுகளிலிருந்தே பெரும் காரியங்கள் பிறக்கின்றன. அத்தகைய கனவின் மூலம் சூழலில் பல சலனங்களை ஏற்படுத்திய பால கைலாசத்தின் அகால மரணம் தமிழ் ஊடகத் துறைக்குப் பெரும் இழப்பு. அத்தகைய ஆளுமை தந்த ஊக்கத்தில் பிறந்த இந்த நாவலை அவருக்குக் காணிக்கையாக்குவதில் பெரும் மனநிறைவை அடைகிறேன்.

(அண்மையில் வெளியான எனது ‘பொன்னகரம்’ நாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை)

அட்டை வடிவமைப்பு: சந்தோஷ்

No comments:

Post a Comment