Sunday, January 26, 2014

சினிமாவும் நானும்

சினிமாவுக்கும் எனக்கும் இடையேயான உறவு இயல்பானதல்ல. இலக்கியமே என்னுடைய மனதுக்கு நெருக்கமான கலை வடிவம். சிறு வயது முதலே சினிமா பார்க்கும் ஆர்வம் இருந்தது என்றாலும் சினிமா என் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக அது இருந்ததில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அது கேளிக்கை அம்சமாக மட்டுமே மனதில் பதிவாகியிருக்கிறது. இலக்கிய ரசனை கூர்மை பெற்ற பிறகு தமிழ் சினிமாவின் மீதான ஒவ்வாமையும் வளர்ந்துவந்தது. ஒரு கட்டத்தில் ஒரு சில படங்களைப் பார்த்த அனுபவம் சில ஆண்டுகள் சினிமாவின் பக்கமே போகாத அளவுக்கும் ஆக்கியிருக்கிறது. கலை வடிவங்கள் மூலம் தீவிரமான அனுபவங்களைப் பெற விழையும் ஒருவருக்குத் தர தமிழ் சினிமாவில் பெரிதாக ஏதும் இல்லை என்பதாலும் என் கவனம் அதிகம் இலக்கியத்தின் பக்கமே இருந்ததாலும் தமிழ் சினிமாவைப் பார்க்காமல் இருந்த்தை நஷ்டமாகக் கருத என் மனம் இடம் கொடுக்கவில்லை. தமிழ் சினிமாவை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்னும் நெகிழ்வு பின்னாளில் ஏற்பட்டதன் விளைவாகத் தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் தமிழ் சினிமாவின் பக்கம் கவனம் திரும்பியது. அப்போதும் முக்கியமானது என்று சொல்லப்படும் படங்களை மட்டும் தேர்ன்தெடுத்துப் பார்ப்பது என்னும் வழக்கமே இருந்துவந்தது. 2007இல் திரைப்படம் தொடர்பான இனைய தளங்களில் பணிபுரியக் கிடைத்த வாய்ப்பே எல்லாப் படங்களையும் பார்த்தாக வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. அந்தத் தேவையின் பக்க விளைவே இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள்.

என்றாலும் சினிமாவைப் பற்றிய கட்டுரைகளை 2001இலேயே எழுத ஆரம்பித்ததுவிட்டேன். சுந்தர ராமசாமியின் வீட்டுக்குச் சென்றிருந்த ஒரு சமயத்தில் தங்கர் பச்சானின் அழகி திரைப்படம் வந்திருந்தது. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டீர்களா என்று கண்ணன் கேட்டார். நான் தலையாட்டினேன். அது பற்றி காலச்சுவடுக்கு ஒரு கட்டுரை எழுதித் தர முடியுமா என்று கேட்டார். ஒப்புக்கொண்டேன். அதுதான் சினிமா பற்றிய என் முதல் கட்டுரை. அது பரவலாகப் பாராட்டுப் பெற்றது சிறிது உற்சாகத்தை அளித்தது. அதன் பிறகு அன்பே சிவம் படம் பற்றிக் கட்டுரை எழுதினேன். அதுவும் பலரால் பாராட்டப்பெற்றது. அதன் பிறகு அவ்வப்போது சினிமா குறித்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். 2007க்கும் பிறகு இது அதிகமாயிற்று.

அன்பே சிவம் பற்றிய கட்டுரையைப் பலரும் பாராட்டிய அதே நேரத்தில் நவீன நாடக ஆளுமையாகவும் இலக்கிய ஆர்வலராகவும் எனக்கு அறிமுகமாகியிருந்த ப்ரஸன்னா ராமஸ்வாமி தெரிவித்த ஒரு கருத்து என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. திரைப்படம் என்பது அடிப்படையில் காட்சி ஊடகம்; அதை ஏன் நீங்கள் கதையாகவே பார்க்கிறீர்கள் என்று அவர் கேட்டார். இதே போன்ற கருத்தைத் திரைப்பட விமர்சகர் தியடோர் பாஸ்கரனும் வேறொரு இடத்தில் குறிப்பிட்டிருந்ததாக நினைவு. தமிழில் எழுதப்படும் பெரும்பாலான திரை விமர்சனங்கள் திரைக்கதை விமர்சனங்கள்தான் என்று எழுத்தாளர் ரவிக்குமாரும் சொல்லியிருந்தார். இலக்கியப் பிரதிகளை மதிப்பிடும் கட்டுரைகளையே அதிகம் எழுதியிருக்கும் நான் அதே பாணியில் திரைப்படங்களையும் அணுகுகிறேன் என்றும் இது அடிப்படையிலேயே பிழையானது என்றும் உணர்ந்தேன். திரைப்படங்களைக் காட்சி ஊடகமாகக் கண்டு மதிப்பிட முடியுமா என்பதை அதன் பிறகு பரிசோதித்துப் பார்க்கத் தொடங்கினேன். இந்தக் கட்டுரைகளில் அதற்கான தடயங்களைக் காணலாம். அதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் அதற்கான தீவிரமான முயற்சியில் இருக்கிறேன் என்று சொல்ல முடியும். காஞ்சீவரம், வழக்கு எண் 13/7 ஆகிய படங்களுக்கு நான் எழுதிய விமர்சனக் கட்டுரைகளை தியடோர் பாஸ்கரனும் ப்ரஸன்னா ராமஸ்வாமியும் பாராட்டினார்கள் என்பதை வைத்து இந்த முயற்சியில் ஓரளவேனும் நான் தேறியிருப்பதாகக் கருதிக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

உலகலாவிய தளத்தில் திரைப்படம் எட்டியிருக்கும் உயரமும் அதன் வீச்சும் மிக அதிகம். தமிழ் சினிமா அதன் பக்கத்தில்கூட இன்னமும் நெருங்கவில்லை. இங்கே திரைப்படம் என்பது வெகுஜனக் கேளிக்கை சாதனமாகவே பார்க்கப்படுகிறது. மாறுபட்ட முயற்சிகளையும் இந்தச் சட்டகத்துக்குட்பட்டே நிகழ்த்த வேண்டியிருக்கிறது. மாபெரும் சாதனைகள் நிகழ்த்திய இத்தாலிய, இரானிய, ஃப்ரெஞ்ச் மொழிப் படங்களோடு ஒப்பிடக்கூடிய அளவில்கூட இங்கு முயற்சிகள் நடப்பதில்லை. சினிமாவைக் கலை வடிவமாகக் காணும் பழக்கம் தமிழ் வெகுஜன தளத்தில் இல்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. சிறிய அளவில்கூட £தற்கான முயற்சிகள் நடப்பதற்கான சூழல் இங்கே இல்லை என்பதுதான் ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தக்கூடிய அம்சம். வெகுஜனத் திரைப்படங்களுக்குள் மிக அரிதாக நிகழும் சிறு சலனமாகவே கலை முயற்சிகள் இங்கே இருக்கின்றன. இந்நிலையில் சினிமாவைக் கலை வடிவமாகப் பார்க்கும் பார்வையாளருக்கோ விமர்சகருக்கோ தமிழ் சினிமாவில் வார்வம் எழ வாய்ப்பில்லை.  

என்றாலும் கலை சாதனங்களில் கலையம்சங்களையும் படைப்புத் திறனையும் நேர்மையையும் செறிவான பார்வையையும் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியது இவற்றில் அக்கறை உள்ளவர்களின் கடமை என்பதால் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. வெகுஜனப் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அதன் மீது தாக்கம் செலுத்துவதாகவும் தமிழ் சினிமா விளங்குவதாலும் அதைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் தீவிர எழுத்தாளர்கள் பலர் தமிழ் சினிமாவை அணுகுகிறார்கள் என்று தோன்றுகிறது. இதே அடிப்படைதான் இந்தக் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுரைகள் காலச்சுவடு, நாழிகை, திரைக்கூத்து, தமிழ் ஆழி, அகநாழிகை, பொங்குதமிழ் ஆகியவற்றில் வெளியானவை. இந்த ஊடகங்கள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.

திரைப்படங்களை நான் அணுகும் முறையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய ப்ரஸன்னா ராமஸ்வாமிக்கு இந்நூலைக் காணிக்கையாக்குவதில் மன நிறைவு அடைகிறேன்.  

அரவிந்தன், ஜூலை 23, 2013

‘கேளிக்கை மனிதர்கள்’ நூலுக்கு எழுதிய முன்னுரை. சினிமா, நிகழ்த்துக்கலை தொடர்பான என் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  வெளியீடு காலச்சுவடு.

No comments:

Post a Comment