Saturday, June 11, 2011

தமிழ்த் திரையில் வித்தியாசமான சலனங்கள்

தமிழ்த் திரையுலகில் அகிரோ குரோசவாக்களோ சத்யஜித் ராய்களோ அடூர் கோபாலகிருஷ்ணன்களோ என்றுமே இருந்ததில்லை. அத்தகைய கலைஞர் ஒருவர் இங்கே தோன்றினாலும் அவர் செயல்படுவதற்கான களம் இங்கு இல்லை. அந்த அளவு வணிக விதிகளால் கட்டமைக்கப்பட்ட திரையுலகம் இது. விதிவிலக்காகச் சில முயற்சிகள் (உதாரணம்: ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான்) ஒரு காலத்தில் வந்ததுண்டு. ஆனால் இன்று அதெல்லாம் சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம். வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள விரும்பும் ஒரு கலைஞர் குறைந்தது ஒரு கோடி ரூபாயை இழக்கத் தயாராக இருந்தால்தான் அவரால் அந்த முயற்சியில் இறங்க முடியும். அல்லது அவருக்குப் பதில் புரவலர் யாரேனும் அந்தக் கைங்கர்யத்தைச் செய்ய வேண்டும். அந்தப் படம் தற்செயலாக வெற்றியடைவதுகூடச் சாத்தியம்தான். ஆனால் அந்த முயற்சியில் இறங்கும் துணிச்சல்தான் இங்குச் சாத்தியமாகாமலேயே இருக்கிறது. திரை விமர்சகர்கள் தமிழ் என்று வரும்போது மட்டும் தங்கள் எதிர்பார்ப்புகளைச் சுருக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாவதற்குக் காரணம் இந்தச் சூழல்தான். கலைப் பெறுமானம் கொண்ட படங்கள் வந்தால்தான் அதைப் பற்றி எழுதுவேன் என்று ஒருவர் முடிவு செய்தால் அவரால் வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் படங்களைப் பற்றி எழுத முடியாமலேயே போகலாம். இந்நிலையில் தமிழின் வணிக விதிகளுக்குட்பட்டு மேற்கொள்ளப்படும் சில வித்தியாசமான முயற்சிகள் (அல்லது அப்படியான பாவனைகள்) பற்றித்தான் எழுத வேண்டியிருக்கிறது. இலக்கியம் பற்றி எழுதும்போது கறாரான அளவுகோல்களைப் பிரயோக்கிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் விஷயத்தில் அது இல்லை.

வெகுஜன வணிக சூத்திரத்துக்குள் செயல்படும் படமாக இருந்தாலும் திரைப்படம் என்பது அடிப்படையில் இயக்குநரின் ஊடகம் என்ற பிரக்ஞையுடன் தன் முதல் அடியை எடுத்து வைத்த மிகச் சில இயக்குநர்களில் ஒருவர் வெற்றி மாறன். பாலு மகேந்திராவின் மாணவர்களில் ஒருவரான இவர் தன் முதல் படமான ‘பொல்லாதவ’னை பாவனைகள் அற்ற நேர்த்தியான வணிகப் படமாக உருவாக்கியிருந்தார். நேர்த்தியான வணிகப் படங்களே அருகிவிட்ட சூழலில் இவரது முயற்சி பெரிதும் பாராட்டப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. வட சென்னையில் நிலவும் ரவுடிகளின் வலைப்பின்னல், மோட்டார் சைக்கிள் திருட்டின் சிக்கலான வரைபடம் ஆகியவற்றின் பின்னணியில் அசலான சில பாத்திரங்களைப் படைத்து அவர்களது இணக்கங்களையும் முரண்பாடுகளையும் வைத்து நேர்த்தியான திரைகதையை அமைத்திருந்தார் வெற்றி மாறன். அந்தப் படத்தின் வெற்றி தந்த தெம்பு புதிய களத்தினுள் பிரவேசிக்கும் துணிச்சலை அவருக்குத் தந்திருக்கிறது. வட தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தென் தமிழகத்தில் சில இடங்களில் காணப்படும் ஓர் அம்சத்தை மையமாக வைத்துத் தன் இரண்டாம் படத்தை எடுத்துள்ளார்.

மதுரையில் சேவல் சண்டையில் ஈடுபடும் குழுக்களின் பின்னணியில் அமைந்த படம் ஆடுகளம். சேவல்களைச் சண்டைக்குப் பழக்குவதன் வழிமுறைகளையும் அதில் ஊடாடும் மனித இயல்புகளையும் விரிவாகவும் நுட்பமாகவும் சொல்கிறது படம். எந்தச் சண்டையையும்போலவே இந்தச் சண்டையும் எப்படி மனிதர்களின் சுய படிமம் சார்ந்த அதிகாரப் போட்டியாக உருவெடுக்கிறது என்பதும் நம்பகத்தன்மையுடன் காட்டப்படுகிறது. பேட்டைக்காரன் என்று அழைகப்படும் ஒரு பெரியவரின் குழு சேவல் சண்டையில் எப்போதும் வெல்வதையும் காவல்துறை அதிகாரி ரத்னத்தின் குழு தொடர்ந்து தோற்பதையும் வைத்து பெரும் மோதலுக்கான களத்தை அமைக்கிறார் வெற்றி மாறன். ரத்னத்தின் அம்மா படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். ஆனாலும் அவருக்குத் தான் கண்ணை மூடுவதற்குள் ஒரு முறையாவது தன் குடும்பம் சேவல் சண்டையில் வென்றுவிட வேண்டும் என்ற ஆதங்கம். கை நழுவிப்போகும் அந்த வெற்றியைக் குடும்பத்தின் மானத்தோடும் குடும்பத் தலைவன் ரத்தினத்தின் ஆண்மையோடும் இணைத்து அந்த அம்மா பேசுவது ரத்தினத்தின் மிருக வெறியைத் தூண்டிவிடுகிறது. ஆட்டத்தின் விதிமுறைகளை மீறியேனும் இந்த முறை வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு களம் இறங்குகிறார் ரத்னம்.

விதிமுறைகளுக்குட்பட்ட ஆட்டத்துக்குப் பழக்கப்பட்ட பேட்டைக்காரருக்கு இது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. அவரது குழுவில் இருக்கும் கறுப்பு தன் சேவல் சண்டையில் வெல்லும் என்று கூறி அவரைத் தேற்ற முயல்கிறான். ஆனால் அவனிடம் இருக்கும் சேவல், சண்டைக்கு உதவாது என்று சொல்லிப் பேட்டைக்காரரால் நிராகரிக்கப்பட்ட சேவல். சண்டைக்குப் பயனற்ற சேவலை அறுத்துவிடுவது அந்தக் குழுவின் மரபு. ஆனால் பேட்டைக்காரரின் கட்டளையைச் சேவல் மீதுள்ள கறுப்புவின் பாசம் வெல்கிறது. அந்தச் சேவலைக் களம் இறக்க முனைகிறான். பேட்டைக்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பேச்சை மீறிக் கறுப்பு செயல்படுகிறான். போட்டியில் வென்று தன் குருவின் மானத்தைக் காப்பாற்றுகிறான். கிடைக்கும் பரிசுப் பணத்தைக் கொண்டுவந்து அவர் காலடியில் சமர்ப்பிக்கிறான். ஆனால் தன் பேச்சை மீறிய சிஷ்யனை மன்னிக்க அவர் தயாராக இல்லை.

இந்த முரண்பாடு வளர்ந்து, தன் முனைப்பு, ஆங்காரம், பொறாமை, துரோகம் எனப் பல்வேறு பரிமாணங்களை எடுக்கும் விபரீதமே மீதிக் கதை. தான் என்னும் உணர்வு சார்ந்த கற்பிதங்கள் சீண்டப்பட்ட ஒரு மனிதனின் இயல்பு எதிர்பாராத மாற்றங்களுக்குள்ளாகும் இயற்கையை வெற்றி மாறன் சித்தரிக்கிறார். விசுவாசத்துக்கும் மன்னிப்பை ஏற்கத் தயாராக இல்லாத அவமான உணர்வுக்கும் இடையிலுள்ள முரண்கள் புதிய முரண்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தியபடி செல்வதில் மனித இயல்பின் விபரீதங்கள் அம்பலப்படுகின்றன. நட்பு, அன்பு, பாசம் ஆகிய ஓடுகள் கழன்று தெறிக்கின்றன. தன் முனைப்பின் ஆங்காரமும் பிழைத்திருத்தலுக்கான வேட்கையும் வேட்டையின் ஆவேசமாக மாறி மனித உறவுகளைப் பரிகசிக்கின்றன. சேவலை வளர்த்து அவற்றுக்கு ரத்த வெறி ஊட்டும் மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கும் விலங்குத் தன்மைகள் வெளிப்படுகின்றன. அன்பைப் போலவே வெறுப்பும் யார் மீதும் செலுத்தப்படக்கூடியதுதான் என்ற உண்மை தன் முகதைக் காட்டும்போதே அதற்கு விதிவிலக்கான தூய அன்பின் கீற்றும் வெளிப்படுவதைக் காட்டி ஆடுகளத்தின் கோர ஆட்டத்தை முடிக்கிறார் இயக்குநர்.

சேவல் சண்டையின் விவரணைகளையும் மனித உறவுகளின் ஊடு பாவுகளையும் துல்லியமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்கிறார் வெற்றி மாறன். சேவல்களைத் தயார்ப்படுத்தும் விதம் இதுவரை தமிழ்த் திரையில் காட்டப்படாதது. சேவல்களைச் சண்டைக்காகவே வளர்க்கும் மனிதர்கள் அந்தச் சேவல்களுடன் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாகக் கொள்ளும் உறவைக் காட்சிப்படுத்தும் விதம் சேவல் என்பதை மனிதர்களின் சுயம் சார்ந்த புறப் படிமமாக உணரவைக்கிறது. கதைப் போக்கில் நாடகீயத் தன்மை இருந்தாலும் செயற்கையான திருப்பங்கள் அதிகம் இல்லை.

சேவல் சண்டை என்று வரும்போது அந்தச் சண்டையின் தன்மைகளை ஆவணப்படுத்துவதற்கான மெனக்கெடலைப் பாராட்டலாம். ஆனால் களத்தில் நடக்கும் சேவல் சண்டையின் சித்தரிப்பை வணிகப் படத்துக்கான நாடகமாகவே பார்க்க முடிகிறது. எதிரணியினர் எத்தனையோ தகிடுதத்தங்களைச் செய்தும், தர்க்கப்படி வெல்ல முடியாத கதாநாயகனின் சேவல் திரும்பத் திரும்ப வெல்வது தமிழ்த் திரையின் மிகை நாயக பிம்பத்தின் அஃறிணைப் படிமமாகவே தெரிகிறது. படத்தின் ஆகப் பலவீனமான பகுதியான காதல் அத்தியாயமும் வெகுஜன சூத்திரத்துக்குட்பட்ட செயற்கை நாடகம்தான்.

வணிகப் படம் என்னும் வரையரையை மனத்தில் கொண்டு இத்தகைய சமரசங்களை மன்னிக்கலாம். தமிழ்ல் காமிரா இல்லாமல்கூடப் படம் எடுக்கலாம். காதல் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்பதால் படத்தோடு அதிகம் ஒட்டாத காதல் நாடகத்தையும் பொறுத்துக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்ள முடியாத விஷயம், படத்தை ‘வித்தியாசமான’ படமாகக் காட்ட இயக்குநர் மேற்கொள்ளும் முயற்சிகள். உதாரணமாக, ஐரினைக் கூட்டிக்கொண்டு கறுப்பு இரவில் ஊர் சுற்றும் காட்சிகள். வேல் ராஜின் ஒளிப்பதிவில் ஒரு கவிதைபோலத் திரையில் விரியும் அந்தக் காட்சி தன்னளவில் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் படத்தின் ஒட்டுமொத்த பின்புலத்தில் நம்பகத்தன்மையோ தேவையோ இல்லாமல் துருத்திக்கொண்டிருக்கிறது. படம் முடிந்த பிறகு திரையில் ஓடும் நீண்ட பட்டியலில் ஃபில்மோகிராஃபி என்னும் தலைப்பில் இயக்குநர் பல படங்களைக் குறிப்பிடுகிறார். அந்தப் படங்களிலிருந்து உத்வேகம் பெற்ற காட்சிப் படிமங்களுக்கான நன்றியறிதல் என்னும் வகையில் இயக்குநரின் நேர்மையைப் பாராட்டலாம். ஆனால் காட்சிப் படிமங்களைக் கதைக் களம், கதை மாந்தரின் போக்கு சார்ந்த உத்வேகத்திலிருந்து பெறுவதுதானே பொருத்தமானதாக இருக்க முடியும் என்னும் கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. வெகுஜன தளத்தில் நேர்த்தியான வணிகப் படங்களை எடுப்பதில் பாசாங்கற்று வெளிப்பட்ட ஒரு இயக்குநருக்கு இது தேவையா என்ற கேள்வியும் இதை ஒட்டி எழுகிறது.

பேட்டைக்காரர், அவரது குழுவினர், கறுப்புவின் அம்மா, பேட்டைக்காரரின் மனைவி முதலான பாத்திரங்களைக் கவனமாக வடிவமைத்திருக்கிறார் வெற்றி மாறன். கறுப்புவின் அம்மா சாகும் தருணம், பெரியவரின் மன மாற்றம் ஆகியவையும் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. பெரியவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக் கூடாது என்பதால் கொலைப் பழியைச் சுமந்துகொண்டு கறுப்பு கிளம்பிச் செல்லும் இடம் கனமாக உள்ளது. கறுப்புவும் அவன் அம்மாவும் பேசும் இடங்களில் அவர்களது ஆளுமைகள் சார்ந்த வித்தியாசங்கள் வசனங்களிலும் பாவனைகளிலும் கச்சிதமாகப் பிரதிபலிக்கப்படுகின்றன. துரைக்கும் (கிஷோர்) கறுப்புவுக்கும் இடையில் உள்ள நட்பு இயல்பாகச் சித்தரிக்கப்படுள்ளது. அவர்களுக்கிடையே வரும் சண்டை அவ்வளவு இயல்பாக இல்லை. அதுபோலவே இரண்டாம் பாதியில் கதையின் மீதான இயக்குநரின் பிடி நழுவிப் போவதாகவே தோன்றுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் எல்லாமே எதிர்பார்க்கக்கூடிய தடத்தில் பயணிப்பது ஆயாசமூட்டுகிறது.
வசனங்களில் கூர்மையும் கச்சிதமும் உள்ளது. பல விஷயங்களை வசனத்தின் துணையின்றிச் சொல்வதும் வெற்றி மாறனுக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது. உதாரணமாகக் காவல் நிலையக் காட்சி. தனக்கு உதவிய ரத்னத்தின் தந்திரத்தைத் துரை புரிந்துகொள்ளும் இடத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். முன் பகுதியில் சேவல்களின் சீற்ரத்தைக் காட்டும் இயக்குநர், பின் பகுதியில் சேவல்கலை வளர்க்கும் மனிதர்களின் உக்கிரங்களிலும் பாய்ச்சல்களிலும் சேவல்களின் தன்மைகளைப் பிரதிபலிக்க வைத்திருப்பது நுட்பமான உத்தி. உச்சக் காட்சியில் குருவின் துரோகத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் இடத்தில் தனுஷின் பேச்சும் ஜெயபாலனின் அமைதியும் வலுவாக அமைந்துள்ளன.
இசையும் (ஜி.வி. பிரகாஷ் குமார்) ஒளிப்பதிவும் படத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன. பாடல்களில் மட்டுமின்றிப் பின்னணி இசையிலும் பிரகாஷ் குமார் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் காட்சிகளின் காலப் பின்னணியைக் கச்சிதமாகப் புலப்படுத்தியுள்ளார். இரவுக் காட்சிகளும் மதுரையின் சந்து பொந்துகளைக் காட்சிப்படுத்தியுள்ள விதமும் அருமை.

பேட்டைக்காரனாக நடித்திருக்கும் ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் வியக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்துகிறார். பல களம் கண்ட அனுபவஸ்தரின் அனாயாசம், தன் வித்தையிலும் நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட கம்பீரம், கர்வ பங்கமுற்ற பின் ஏற்படும் பொறாமை, அவமானம், சந்தேகம், வன்மம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் அவரது முகத்தில் துல்லியமாக வெளிப்படுகின்றன.

தனுஷ் மிகவும் உழைத்திருக்கிறார். சென்னைத் தமிழுக்குப் பழகிய நாக்கை மதுரை வழக்குக்கேற்ப மாற்றுவதில் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார். குருவிடம் காட்டும் கண்மூடித்தனமான விசுவாசம், அப்பாவித்தனம், தேவதை போன்ற பெண்ணைப் பார்த்ததும் அவள் அழகில் கரைந்து உருகும் விதம், சண்டைக் களத்தில் வெளிப்படும் எகத்தாளம், சண்டையில் ஆக்ரோஷம் என்று பாத்திரத்துக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். சேவலைத் தூக்கிக்கொண்டு போகும்போது தனுஷின் உடல் மொழியில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்தவை. சேவல் வெல்லும்போதும் அது அடிவாங்கும்போதும் அதை அவரது முக பாவங்களும் உடல் மொழியும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன. அம்மாவின் மரனம், குருவின் துரோகம் ஆகிய தருனங்களில் உணர்ச்சி நடிப்பு வலுவாக வெளிப்பட்டிருக்கிறது. பாடல்களுக்கு அவர் ஆடும் ஆட்டம் பார்வையாலர்களைப் பெரிதும் கவர்கிறது. நடனத் திறனுக்குப் பெயர் போன நாயகர்களின் நடனங்களுக்கு இல்லாத அளவில் இவரது நடனங்களுக்குத் திரையரங்குகளில் வரவேற்பு இருப்பதற்குக் காரணம், இவரது நடனம் திறமையின் பிரகடனமாக அல்லாமல் காட்சிக்கேற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாக இருப்பதுதான் என்று தோன்றுகிறது.
தப்ஸியின் தோற்றத்தையே இயக்குநர் பெரிதும் நம்பியிருப்பது அவரது பாத்திரப் படைப்பிலிருந்து தெரிகிறது. தப்ஸியும் தன் பொலிவான தோற்றத்தால் காட்சிகளுக்கு அழகு சேர்க்கிரார். அதற்கு மேல் அவருக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.

பார்வையாளர்களின் மூளையையும் சொரணையையும் இழிவுபடுத்தாமலேயே பொழுதுபோக்கைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் இயக்குநர்களின் வரிசையில் தன் அடையாளத்தை வெற்றி மாறன் அழுத்தமாகப் பதித்திருக்கிறார். கதைக் களத்துக்கும் கதை சார் வாழ்நிலைக்கும் நேர்மையாகச் செயல்பட்டிருக்கிறார். பின்னாளில் சமரசங்கள் அதிகமற்ற தீவிரமான படத்தை உருவாக்க இவரால் இயலும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் ஏற்படுத்துகிறது.

*

எழுத்து - இயக்கம்: வெற்றி மாறன்
நடிப்பு: தனுஷ், வ.ஐ.ச. ஜெயபாலன், கிஷோர், தப்ஸி
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்

*

1 comment:

  1. நுட்பமான பார்வை. செறிவான விமர்சனம். வளர்க!

    ReplyDelete