Saturday, June 11, 2011

தமிழ்த் திரையில் வித்தியாசமான சலனங்கள்

தமிழ்த் திரையுலகில் அகிரோ குரோசவாக்களோ சத்யஜித் ராய்களோ அடூர் கோபாலகிருஷ்ணன்களோ என்றுமே இருந்ததில்லை. அத்தகைய கலைஞர் ஒருவர் இங்கே தோன்றினாலும் அவர் செயல்படுவதற்கான களம் இங்கு இல்லை. அந்த அளவு வணிக விதிகளால் கட்டமைக்கப்பட்ட திரையுலகம் இது. விதிவிலக்காகச் சில முயற்சிகள் (உதாரணம்: ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான்) ஒரு காலத்தில் வந்ததுண்டு. ஆனால் இன்று அதெல்லாம் சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம். வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள விரும்பும் ஒரு கலைஞர் குறைந்தது ஒரு கோடி ரூபாயை இழக்கத் தயாராக இருந்தால்தான் அவரால் அந்த முயற்சியில் இறங்க முடியும். அல்லது அவருக்குப் பதில் புரவலர் யாரேனும் அந்தக் கைங்கர்யத்தைச் செய்ய வேண்டும். அந்தப் படம் தற்செயலாக வெற்றியடைவதுகூடச் சாத்தியம்தான். ஆனால் அந்த முயற்சியில் இறங்கும் துணிச்சல்தான் இங்குச் சாத்தியமாகாமலேயே இருக்கிறது. திரை விமர்சகர்கள் தமிழ் என்று வரும்போது மட்டும் தங்கள் எதிர்பார்ப்புகளைச் சுருக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாவதற்குக் காரணம் இந்தச் சூழல்தான். கலைப் பெறுமானம் கொண்ட படங்கள் வந்தால்தான் அதைப் பற்றி எழுதுவேன் என்று ஒருவர் முடிவு செய்தால் அவரால் வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் படங்களைப் பற்றி எழுத முடியாமலேயே போகலாம். இந்நிலையில் தமிழின் வணிக விதிகளுக்குட்பட்டு மேற்கொள்ளப்படும் சில வித்தியாசமான முயற்சிகள் (அல்லது அப்படியான பாவனைகள்) பற்றித்தான் எழுத வேண்டியிருக்கிறது. இலக்கியம் பற்றி எழுதும்போது கறாரான அளவுகோல்களைப் பிரயோக்கிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் விஷயத்தில் அது இல்லை.

வெகுஜன வணிக சூத்திரத்துக்குள் செயல்படும் படமாக இருந்தாலும் திரைப்படம் என்பது அடிப்படையில் இயக்குநரின் ஊடகம் என்ற பிரக்ஞையுடன் தன் முதல் அடியை எடுத்து வைத்த மிகச் சில இயக்குநர்களில் ஒருவர் வெற்றி மாறன். பாலு மகேந்திராவின் மாணவர்களில் ஒருவரான இவர் தன் முதல் படமான ‘பொல்லாதவ’னை பாவனைகள் அற்ற நேர்த்தியான வணிகப் படமாக உருவாக்கியிருந்தார். நேர்த்தியான வணிகப் படங்களே அருகிவிட்ட சூழலில் இவரது முயற்சி பெரிதும் பாராட்டப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. வட சென்னையில் நிலவும் ரவுடிகளின் வலைப்பின்னல், மோட்டார் சைக்கிள் திருட்டின் சிக்கலான வரைபடம் ஆகியவற்றின் பின்னணியில் அசலான சில பாத்திரங்களைப் படைத்து அவர்களது இணக்கங்களையும் முரண்பாடுகளையும் வைத்து நேர்த்தியான திரைகதையை அமைத்திருந்தார் வெற்றி மாறன். அந்தப் படத்தின் வெற்றி தந்த தெம்பு புதிய களத்தினுள் பிரவேசிக்கும் துணிச்சலை அவருக்குத் தந்திருக்கிறது. வட தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தென் தமிழகத்தில் சில இடங்களில் காணப்படும் ஓர் அம்சத்தை மையமாக வைத்துத் தன் இரண்டாம் படத்தை எடுத்துள்ளார்.

மதுரையில் சேவல் சண்டையில் ஈடுபடும் குழுக்களின் பின்னணியில் அமைந்த படம் ஆடுகளம். சேவல்களைச் சண்டைக்குப் பழக்குவதன் வழிமுறைகளையும் அதில் ஊடாடும் மனித இயல்புகளையும் விரிவாகவும் நுட்பமாகவும் சொல்கிறது படம். எந்தச் சண்டையையும்போலவே இந்தச் சண்டையும் எப்படி மனிதர்களின் சுய படிமம் சார்ந்த அதிகாரப் போட்டியாக உருவெடுக்கிறது என்பதும் நம்பகத்தன்மையுடன் காட்டப்படுகிறது. பேட்டைக்காரன் என்று அழைகப்படும் ஒரு பெரியவரின் குழு சேவல் சண்டையில் எப்போதும் வெல்வதையும் காவல்துறை அதிகாரி ரத்னத்தின் குழு தொடர்ந்து தோற்பதையும் வைத்து பெரும் மோதலுக்கான களத்தை அமைக்கிறார் வெற்றி மாறன். ரத்னத்தின் அம்மா படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். ஆனாலும் அவருக்குத் தான் கண்ணை மூடுவதற்குள் ஒரு முறையாவது தன் குடும்பம் சேவல் சண்டையில் வென்றுவிட வேண்டும் என்ற ஆதங்கம். கை நழுவிப்போகும் அந்த வெற்றியைக் குடும்பத்தின் மானத்தோடும் குடும்பத் தலைவன் ரத்தினத்தின் ஆண்மையோடும் இணைத்து அந்த அம்மா பேசுவது ரத்தினத்தின் மிருக வெறியைத் தூண்டிவிடுகிறது. ஆட்டத்தின் விதிமுறைகளை மீறியேனும் இந்த முறை வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு களம் இறங்குகிறார் ரத்னம்.

விதிமுறைகளுக்குட்பட்ட ஆட்டத்துக்குப் பழக்கப்பட்ட பேட்டைக்காரருக்கு இது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. அவரது குழுவில் இருக்கும் கறுப்பு தன் சேவல் சண்டையில் வெல்லும் என்று கூறி அவரைத் தேற்ற முயல்கிறான். ஆனால் அவனிடம் இருக்கும் சேவல், சண்டைக்கு உதவாது என்று சொல்லிப் பேட்டைக்காரரால் நிராகரிக்கப்பட்ட சேவல். சண்டைக்குப் பயனற்ற சேவலை அறுத்துவிடுவது அந்தக் குழுவின் மரபு. ஆனால் பேட்டைக்காரரின் கட்டளையைச் சேவல் மீதுள்ள கறுப்புவின் பாசம் வெல்கிறது. அந்தச் சேவலைக் களம் இறக்க முனைகிறான். பேட்டைக்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பேச்சை மீறிக் கறுப்பு செயல்படுகிறான். போட்டியில் வென்று தன் குருவின் மானத்தைக் காப்பாற்றுகிறான். கிடைக்கும் பரிசுப் பணத்தைக் கொண்டுவந்து அவர் காலடியில் சமர்ப்பிக்கிறான். ஆனால் தன் பேச்சை மீறிய சிஷ்யனை மன்னிக்க அவர் தயாராக இல்லை.

இந்த முரண்பாடு வளர்ந்து, தன் முனைப்பு, ஆங்காரம், பொறாமை, துரோகம் எனப் பல்வேறு பரிமாணங்களை எடுக்கும் விபரீதமே மீதிக் கதை. தான் என்னும் உணர்வு சார்ந்த கற்பிதங்கள் சீண்டப்பட்ட ஒரு மனிதனின் இயல்பு எதிர்பாராத மாற்றங்களுக்குள்ளாகும் இயற்கையை வெற்றி மாறன் சித்தரிக்கிறார். விசுவாசத்துக்கும் மன்னிப்பை ஏற்கத் தயாராக இல்லாத அவமான உணர்வுக்கும் இடையிலுள்ள முரண்கள் புதிய முரண்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தியபடி செல்வதில் மனித இயல்பின் விபரீதங்கள் அம்பலப்படுகின்றன. நட்பு, அன்பு, பாசம் ஆகிய ஓடுகள் கழன்று தெறிக்கின்றன. தன் முனைப்பின் ஆங்காரமும் பிழைத்திருத்தலுக்கான வேட்கையும் வேட்டையின் ஆவேசமாக மாறி மனித உறவுகளைப் பரிகசிக்கின்றன. சேவலை வளர்த்து அவற்றுக்கு ரத்த வெறி ஊட்டும் மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கும் விலங்குத் தன்மைகள் வெளிப்படுகின்றன. அன்பைப் போலவே வெறுப்பும் யார் மீதும் செலுத்தப்படக்கூடியதுதான் என்ற உண்மை தன் முகதைக் காட்டும்போதே அதற்கு விதிவிலக்கான தூய அன்பின் கீற்றும் வெளிப்படுவதைக் காட்டி ஆடுகளத்தின் கோர ஆட்டத்தை முடிக்கிறார் இயக்குநர்.

சேவல் சண்டையின் விவரணைகளையும் மனித உறவுகளின் ஊடு பாவுகளையும் துல்லியமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்கிறார் வெற்றி மாறன். சேவல்களைத் தயார்ப்படுத்தும் விதம் இதுவரை தமிழ்த் திரையில் காட்டப்படாதது. சேவல்களைச் சண்டைக்காகவே வளர்க்கும் மனிதர்கள் அந்தச் சேவல்களுடன் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாகக் கொள்ளும் உறவைக் காட்சிப்படுத்தும் விதம் சேவல் என்பதை மனிதர்களின் சுயம் சார்ந்த புறப் படிமமாக உணரவைக்கிறது. கதைப் போக்கில் நாடகீயத் தன்மை இருந்தாலும் செயற்கையான திருப்பங்கள் அதிகம் இல்லை.

சேவல் சண்டை என்று வரும்போது அந்தச் சண்டையின் தன்மைகளை ஆவணப்படுத்துவதற்கான மெனக்கெடலைப் பாராட்டலாம். ஆனால் களத்தில் நடக்கும் சேவல் சண்டையின் சித்தரிப்பை வணிகப் படத்துக்கான நாடகமாகவே பார்க்க முடிகிறது. எதிரணியினர் எத்தனையோ தகிடுதத்தங்களைச் செய்தும், தர்க்கப்படி வெல்ல முடியாத கதாநாயகனின் சேவல் திரும்பத் திரும்ப வெல்வது தமிழ்த் திரையின் மிகை நாயக பிம்பத்தின் அஃறிணைப் படிமமாகவே தெரிகிறது. படத்தின் ஆகப் பலவீனமான பகுதியான காதல் அத்தியாயமும் வெகுஜன சூத்திரத்துக்குட்பட்ட செயற்கை நாடகம்தான்.

வணிகப் படம் என்னும் வரையரையை மனத்தில் கொண்டு இத்தகைய சமரசங்களை மன்னிக்கலாம். தமிழ்ல் காமிரா இல்லாமல்கூடப் படம் எடுக்கலாம். காதல் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்பதால் படத்தோடு அதிகம் ஒட்டாத காதல் நாடகத்தையும் பொறுத்துக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்ள முடியாத விஷயம், படத்தை ‘வித்தியாசமான’ படமாகக் காட்ட இயக்குநர் மேற்கொள்ளும் முயற்சிகள். உதாரணமாக, ஐரினைக் கூட்டிக்கொண்டு கறுப்பு இரவில் ஊர் சுற்றும் காட்சிகள். வேல் ராஜின் ஒளிப்பதிவில் ஒரு கவிதைபோலத் திரையில் விரியும் அந்தக் காட்சி தன்னளவில் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் படத்தின் ஒட்டுமொத்த பின்புலத்தில் நம்பகத்தன்மையோ தேவையோ இல்லாமல் துருத்திக்கொண்டிருக்கிறது. படம் முடிந்த பிறகு திரையில் ஓடும் நீண்ட பட்டியலில் ஃபில்மோகிராஃபி என்னும் தலைப்பில் இயக்குநர் பல படங்களைக் குறிப்பிடுகிறார். அந்தப் படங்களிலிருந்து உத்வேகம் பெற்ற காட்சிப் படிமங்களுக்கான நன்றியறிதல் என்னும் வகையில் இயக்குநரின் நேர்மையைப் பாராட்டலாம். ஆனால் காட்சிப் படிமங்களைக் கதைக் களம், கதை மாந்தரின் போக்கு சார்ந்த உத்வேகத்திலிருந்து பெறுவதுதானே பொருத்தமானதாக இருக்க முடியும் என்னும் கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. வெகுஜன தளத்தில் நேர்த்தியான வணிகப் படங்களை எடுப்பதில் பாசாங்கற்று வெளிப்பட்ட ஒரு இயக்குநருக்கு இது தேவையா என்ற கேள்வியும் இதை ஒட்டி எழுகிறது.

பேட்டைக்காரர், அவரது குழுவினர், கறுப்புவின் அம்மா, பேட்டைக்காரரின் மனைவி முதலான பாத்திரங்களைக் கவனமாக வடிவமைத்திருக்கிறார் வெற்றி மாறன். கறுப்புவின் அம்மா சாகும் தருணம், பெரியவரின் மன மாற்றம் ஆகியவையும் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. பெரியவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக் கூடாது என்பதால் கொலைப் பழியைச் சுமந்துகொண்டு கறுப்பு கிளம்பிச் செல்லும் இடம் கனமாக உள்ளது. கறுப்புவும் அவன் அம்மாவும் பேசும் இடங்களில் அவர்களது ஆளுமைகள் சார்ந்த வித்தியாசங்கள் வசனங்களிலும் பாவனைகளிலும் கச்சிதமாகப் பிரதிபலிக்கப்படுகின்றன. துரைக்கும் (கிஷோர்) கறுப்புவுக்கும் இடையில் உள்ள நட்பு இயல்பாகச் சித்தரிக்கப்படுள்ளது. அவர்களுக்கிடையே வரும் சண்டை அவ்வளவு இயல்பாக இல்லை. அதுபோலவே இரண்டாம் பாதியில் கதையின் மீதான இயக்குநரின் பிடி நழுவிப் போவதாகவே தோன்றுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் எல்லாமே எதிர்பார்க்கக்கூடிய தடத்தில் பயணிப்பது ஆயாசமூட்டுகிறது.
வசனங்களில் கூர்மையும் கச்சிதமும் உள்ளது. பல விஷயங்களை வசனத்தின் துணையின்றிச் சொல்வதும் வெற்றி மாறனுக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது. உதாரணமாகக் காவல் நிலையக் காட்சி. தனக்கு உதவிய ரத்னத்தின் தந்திரத்தைத் துரை புரிந்துகொள்ளும் இடத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். முன் பகுதியில் சேவல்களின் சீற்ரத்தைக் காட்டும் இயக்குநர், பின் பகுதியில் சேவல்கலை வளர்க்கும் மனிதர்களின் உக்கிரங்களிலும் பாய்ச்சல்களிலும் சேவல்களின் தன்மைகளைப் பிரதிபலிக்க வைத்திருப்பது நுட்பமான உத்தி. உச்சக் காட்சியில் குருவின் துரோகத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் இடத்தில் தனுஷின் பேச்சும் ஜெயபாலனின் அமைதியும் வலுவாக அமைந்துள்ளன.
இசையும் (ஜி.வி. பிரகாஷ் குமார்) ஒளிப்பதிவும் படத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன. பாடல்களில் மட்டுமின்றிப் பின்னணி இசையிலும் பிரகாஷ் குமார் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் காட்சிகளின் காலப் பின்னணியைக் கச்சிதமாகப் புலப்படுத்தியுள்ளார். இரவுக் காட்சிகளும் மதுரையின் சந்து பொந்துகளைக் காட்சிப்படுத்தியுள்ள விதமும் அருமை.

பேட்டைக்காரனாக நடித்திருக்கும் ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் வியக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்துகிறார். பல களம் கண்ட அனுபவஸ்தரின் அனாயாசம், தன் வித்தையிலும் நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட கம்பீரம், கர்வ பங்கமுற்ற பின் ஏற்படும் பொறாமை, அவமானம், சந்தேகம், வன்மம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் அவரது முகத்தில் துல்லியமாக வெளிப்படுகின்றன.

தனுஷ் மிகவும் உழைத்திருக்கிறார். சென்னைத் தமிழுக்குப் பழகிய நாக்கை மதுரை வழக்குக்கேற்ப மாற்றுவதில் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார். குருவிடம் காட்டும் கண்மூடித்தனமான விசுவாசம், அப்பாவித்தனம், தேவதை போன்ற பெண்ணைப் பார்த்ததும் அவள் அழகில் கரைந்து உருகும் விதம், சண்டைக் களத்தில் வெளிப்படும் எகத்தாளம், சண்டையில் ஆக்ரோஷம் என்று பாத்திரத்துக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். சேவலைத் தூக்கிக்கொண்டு போகும்போது தனுஷின் உடல் மொழியில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்தவை. சேவல் வெல்லும்போதும் அது அடிவாங்கும்போதும் அதை அவரது முக பாவங்களும் உடல் மொழியும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன. அம்மாவின் மரனம், குருவின் துரோகம் ஆகிய தருனங்களில் உணர்ச்சி நடிப்பு வலுவாக வெளிப்பட்டிருக்கிறது. பாடல்களுக்கு அவர் ஆடும் ஆட்டம் பார்வையாலர்களைப் பெரிதும் கவர்கிறது. நடனத் திறனுக்குப் பெயர் போன நாயகர்களின் நடனங்களுக்கு இல்லாத அளவில் இவரது நடனங்களுக்குத் திரையரங்குகளில் வரவேற்பு இருப்பதற்குக் காரணம், இவரது நடனம் திறமையின் பிரகடனமாக அல்லாமல் காட்சிக்கேற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாக இருப்பதுதான் என்று தோன்றுகிறது.
தப்ஸியின் தோற்றத்தையே இயக்குநர் பெரிதும் நம்பியிருப்பது அவரது பாத்திரப் படைப்பிலிருந்து தெரிகிறது. தப்ஸியும் தன் பொலிவான தோற்றத்தால் காட்சிகளுக்கு அழகு சேர்க்கிரார். அதற்கு மேல் அவருக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.

பார்வையாளர்களின் மூளையையும் சொரணையையும் இழிவுபடுத்தாமலேயே பொழுதுபோக்கைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் இயக்குநர்களின் வரிசையில் தன் அடையாளத்தை வெற்றி மாறன் அழுத்தமாகப் பதித்திருக்கிறார். கதைக் களத்துக்கும் கதை சார் வாழ்நிலைக்கும் நேர்மையாகச் செயல்பட்டிருக்கிறார். பின்னாளில் சமரசங்கள் அதிகமற்ற தீவிரமான படத்தை உருவாக்க இவரால் இயலும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் ஏற்படுத்துகிறது.

*

எழுத்து - இயக்கம்: வெற்றி மாறன்
நடிப்பு: தனுஷ், வ.ஐ.ச. ஜெயபாலன், கிஷோர், தப்ஸி
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்

*

புத்துயிர் பெறும் ஒருநாள் போட்டிகள்

எல்லைக் கோட்டுக்கு அருகே நின்றுகொண்டிருந்த அந்தப் பையன் கோட்டைத் தாண்டி வந்த பந்துகளை ஆர்வமாகப் பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்தான். அதை விட ஆர்வமாகப் போட்டியைக் கவனித்துக்கொண்டிருந்தான். 1983இல் தனக்குப் பத்து வயதாக இருக்கும்போது இந்திய அணி உலகக் கோப்பையை வாங்குவதை ஆவலுடன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு இப்போதும் அதுபோல நடக்கும் என்ற நம்பிக்கை. அவன் பந்து பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்த மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணியுடன் அரை இறுதிப் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தது. 83இலும் இதே அணிகள் அரை இறுதியில் மோதின. இந்திய அணியின் முகம்மது அசாருத்தீன் (65), கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (31), கபில்தேவ் (30) ஆகியோர் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி ஆடினர். இந்தியா 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. பந்து பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்த அந்தப் பையன் ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கினான்.

இருபத்து மூன்றரை ஆண்டுகள் கழித்து அந்தப் பையன் அதே மைதானத்தில் கோப்பையை ஏந்தியபடி நின்றான். அணியினர் அவனைத் தோளில் தூக்கிச் சுமந்தார்கள். ஆனந்தக் கண்ணீர் வழிய, “என் வாழ்க்கையின் பெருமை மிகுந்த தருணம் இது” என்றான்.

87இல் தன் கண் முன்னால் நிகழ்ந்த அந்தத் தோல்வியைக் கண்டு வேதனைப்பட்ட அந்தப் பையன் - சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் - அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே இந்திய அணியில் இடம்பெற்றுவிட்டான். அதிலிருந்து இந்தியாவின் கிரிக்கெட் கனவுகளின் அடையாளமாகத் திகழ்கிறான். குறிப்பாக உலகக் கோப்பைப் போட்டிகளில். 1992முதல் தற்போதுவரை மொத்தம் ஆறு உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் ஆடியிருக்கிறார். 2007ஆம் ஆண்டு தவிர ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பைப் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறார். இருமுறை தொடர் நாயகன் விருதும் வாங்கியிருக்கிறார். இந்த முறையும் அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்த திலகரத்னே தில்ஷனைவிட (இலங்கை அணி) 18 ஓட்டங்கள் மட்டுமே குறைவாக எடுத்திருக்கிறார் (482). கடந்த 22 ஆண்டுகளில் இந்தியக் கிரிக்கெட்டின் முக்கியமான தருணங்கள் அனைத்தும் சச்சினோடு பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கின்றன. இந்தக் கோப்பை சச்சினுக்காக என்று அணியின் இளம் வீரர்கள் சொன்னதை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். தொடர்ந்து தங்களுக்கு உத்வேகம் அளித்துவரும் நாயகனைச் சுமந்தபடி அணியினர் வெற்றிக் கூத்தாடினார்கள். “20 ஆண்டுகளாக நாட்டின் எதிர்பார்ப்பு என்ற சுமையை அவர் சுமந்துவருகிறார். இப்போது நாங்கள் அவரைச் சுமக்க வேண்டிய நேரம் இது” என்று விராட் கோஹ்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறினார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியிடம் வந்து சேர்ந்திருக்கும் அந்தக் கோப்பை சச்சின் டெண்டுல்கரின் கனவு மட்டுமல்ல. இந்திய தேசத்தின் கனவு. 83இலிருந்து ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியின்போதும் இந்த முறை கோப்பை இந்தியாவுக்குத்தான் என்ற கனவு புதுப்பிக்கப்படும். தேசம் பரபரப்புக் கொள்ளும். அதற்கேற்ப இந்திய அணி 87, 96, 2003 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதி வரை வந்தது. 2003இல் இறுதிப் போட்டிவரை வந்தது. ஆனால் கோப்பை வசப்படவில்லை. ஏப்ரல் 2ஆம் தேதியன்று வரலாறு திரும்பியது. கோப்பை இந்திய அணியின் கைக்கு வந்தது.

**

இந்தியா உலகின் சிறந்த அணி என்று சொல்லத்தக்க நிலையில் என்றைக்குமே இருந்ததில்லை. கறாராகப் பார்த்தால் இப்போதும் இல்லை. ஆனால் உலகின் சிறந்த அணிகளை வலுவாக எதிர்த்து நிற்கக்கூடிய அணி என்று சொல்லலாம். பந்து வீச்சிலும் தடுப்பு அரண் செயல்பாட்டிலும் இந்தியாவுக்கு இருக்கும் பலவீனங்கள் அந்த அனியைத் தலை சிறந்த அணி என்று சொல்ல விடாமல் தடுக்கின்றன. ஆனால் மட்டையின் வலுவால் இந்த பலவீனங்களைத் தாண்டிவரும் திறனும் தன்னம்பிக்கையும் இந்தியாவுக்கு இருக்கிறது. அந்தத் திறமைதான் இந்தியாவை டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் முதல் இடத்தில் நிறுத்தியிருக்கிறது.

இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இது கண்கூடாகத் தெரிந்தது. பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 370 ஓட்டங்களை எடுத்தது. ஆனால் பங்களாதேஷ் போன்ற ஒப்பீட்டளவில் பலவீனமான அணியை 284 ஓட்டங்கள் எடுக்க அதன் பலவீனமான பந்து வீச்சு அனுமதித்தது. இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் 338 ஓட்டங்கள் எடுத்தது. ஆனால் தடுப்பு அரணில் விழுந்த ஓட்டைகளாலும் பந்து வீச்சின் போதாமைகளாலும் இங்கிலாந்து 338 ஓட்டங்களைத் தொட்டது. யாருக்கும் வெற்றி, தோல்வி இன்றிப் போட்டி முடிந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 296 ஓட்டங்களைக் குவித்தது. மீண்டும் பந்து வீச்சு கைவிட்டது. இந்தியா தோற்றது. ஆக, இந்தியாவின் ஆதாரமான பிரச்சினைகள் - மோசமான தடுப்பு, பலவீனமான பந்து வீச்சு - இன்னமும் தீரவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

இப்படிச் சில தடுமாற்றங்களைத் தாண்டிக் கால் இறுதிக்கு வந்த இந்தியா வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். இந்தியாவின் பந்து வீச்சு பலவீனமானதுதான். ஆனால் ஜாகீர் கானும் ஹர்பஜன் சிங்கும் நல்ல வீச்சாளர்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் துணையாகப் பந்து வீச யாரும் இல்லாமல் இருந்தது. முதல் சுற்றுப் போட்டிகளின் கடைசி ஆட்டத்தில் அணியில் சேர்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் என்னும் சுழல் பந்து வீச்சாளர், சிங்குக்குத் தேவையான துணையை வழங்கினார். பகுதி நேர வீச்சாளரான யுவராஜ் சிங்கும் நல்ல முறையில் வீசினார். தடுப்பு ஆட்டத்திலும் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோஹ்லி ஆகியோர் புதிய வரையறைகளை உருவாகினர். இந்தியாவின் பலவீனங்கள் மறைய ஆரம்பித்தன. அதன் தன்னம்பிக்கை கூட ஆரம்பித்தது. வலுவான மட்டையாளர்களைக் கொண்ட ஆஸி அணியை 260 ஓட்டங்களுக்குள் முடக்கியது. பிறகு அந்த ஓட்டங்களைப் பதற்றமில்லாமல் எடுத்து முடித்தது.

அடுத்து அரை இறுதி என்னும் சவால். ஆகிவந்த எதிரியான பாகிஸ்தான் புதிய உத்வேகத்துடன் களத்தில் நிற்கிறது. சூறாவளி வேகத்தில் ஆட்டத்தைத் தொடங்கிய வீரேந்திர சேவாக் விரைவில் ஆட்டமிழந்துவிட்டார். ஓட்டங்களை வேகமாக எடுத்தாலும் சச்சின் சரளமாக ஆடவில்லை. ஆனாலும் அணியினரின் ஒட்டுமொத்த முயற்சியும் பாகிஸ்தானின் மோசமான தடுப்பு ஆட்டமும் சேர்ந்து 260 ஓட்டங்களை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தன. மட்டை வீச்சு சோபிக்காத நாட்களில் ஒன்றாகவே இதைக் கருத வேண்டும். ஆனால் பாகிஸ்தானால் இந்த ஓட்டங்களை எடுக்க முடியவில்லை. துல்லியமான பந்து வீச்சு மற்றும் தடுப்புத் திறனின் மூலம் இந்தியா வென்றது. அதன் பலவீனங்கள் மறைய ஆரம்பித்ததன் இன்னொரு அடையாளம் இது. 85 ஓட்டங்கள் எடுத்த டெண்டுல்கர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்னும் வரலாறு மாற்றப்படாமல் நிற்கிறது. டெண்டுல்கர் கொடுத்த பிடிகளை பாகிஸ்தான் கைப்பற்றியிருந்தால் இந்தியா இந்த அளவுக்கு ஓட்டங்களை எடுத்திருக்காது என்று வாதிடலாம். ஆனால் அவருக்குப் பதில் கௌதம் காம்பீரோ யுவராஜ் சிங்கோ மகேந்திர சிங் தோனியோ அந்த ஓட்டங்களை எடுத்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. காரணம், இப்போதெல்லாம் சச்சின் விரைவில் அவுட் ஆகும்போது அணியின் பொறுப்புணர்வு அதிகமாகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இதைப் பார்க்க முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியிலும் சச்சின் அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தபோது அணி பாதுகாப்பான இடத்தை எட்டியிருக்கவில்லை. காம்பீர், கோஹ்லி, யுவராஜ், ரெய்னா ஆகியோர் மிகவும் பொறுப்புடன் ஆடி வென்றனர்.

இறுதிப் போட்டியிலும் அதுதான் நடந்தது. மிக அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் - அதிலும் அந்த ஸ்ட்ரெய்ட் டிரைவ் இன்னும் கண்ணில் நிற்கிறது - 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆனால் காம்பீர், கோஹ்லி, தோனி ஆகியோர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடி முடித்தார்கள். வரலாறு திரும்பியது. கோப்பை வசமானது. உலகக் கோப்பைப் போட்டிகளில் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளில் இதுவரை துரத்தி எடுத்த ஓட்டங்களில் இதுதான் (275) அதிகபட்ச ஓட்டம் என்னும் புதிய வரலாறு எழுதப்பட்டது. போட்டியை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை என்னும் வரலாறும் திருத்தி எழுதப்பட்டது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை இந்தியாவின் வசமானது. தேசமே இதைக் கொண்டாடியது. எந்த வாங்கடே மைதானத்தில் இந்தியா பெற்ற தோல்வியை எண்ணி சச்சின் சிறு வயதில் வருந்தினாரோ அதே மைதானத்தில் அவர் ஆனந்தக் கூத்தாடினார்.

வென்ற பிறகு ஊடகங்களிடம் பேசிய தோனி, இந்த வெற்றிக்குக் காரணம் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, சௌரவ் கங்கூலி, ராகுல் திராவிட் ஆகிய நால்வர் போட்ட விதைதான் என்று மறக்காமல் குறிப்பிட்டார். அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் பங்கை டெண்டுல்கர் பாராட்டினார். ஒரு ஆண்டுக்கு முன்பே அணி இந்த இறுதிப் போட்டிக்கு மனத்தளவில் தயாராக இருந்ததை அணியின் உளவியல் ஆலோசகர் பாடி உப்டன் குறிப்பிட்டார். இந்த முறை கோப்பையைத் தவறவிடுவதில்லை எனற உறுதி ஒவ்வொருவரிடத்திலும் தெரிந்தது. அணியின் முன்னேற்பாடுகள் நன்றாகவே இருந்தன. பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியையும் நியூஸிலாந்து அணியையும் எளிதாகத் தோற்கடித்தது. ஒரு நாள் போட்டிகளில் துல்லியமான வீச்சின் மூலம் எதிரணியைக் கட்டுப்படுத்தக்கூடிய பிரவீண் குமாருக்குக் காயம் பட்டு அவர் அணியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை பின்னடைவை ஏற்படுத்தினாலும் அணி சோர்ந்துவிடவில்லை. தற்செயலாகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஸ்ரீஷாந்த் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றாலும் முனாஃப் படேல் ஓரள்வு அதை ஈடுகட்டினார். சுழலர் பியுஷ் சாவ்லா ஏமாற்றம் அளித்தாலும் யுவராஜ் ஆறுதல் அளித்தார். மட்டைகளும் உற்சாகமாகச் சுழன்றன.

**

வெற்றி பெருமைக்குரியதுதான். கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால் அது சில குறைபாடுகளை மறைத்துவிடும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை ஆஷிஷ் நெஹ்ராவுக்குக் கொடுத்தது பற்றி விமர்சனங்கள் எழுந்தன. அஸ்வினைச் சேர்க்காதது தவறு என்றும் விமர்சகர்கள் அழுத்தமாகக் கூறினார்கள். முதல் சுற்றின் முடிவில் களம் இறக்கப்பட்ட அஸ்வின் கால் இறுதிப் போட்டியிலும் அணியில் இடம்பெற்றார். சிறப்பாகப் பந்து வீசிய அவரை மொஹாலியில் அரை இறுதியில் களம் இறக்கவில்லை. அவருக்குப் பதில் வேகப் பந்து வீச்சாளர் நெஹ்ரா சேர்க்கப்பட்டார். நெஹ்ரா அந்தப் போட்ட்யில் நன்றாகவே போட்டார் என்றாலும் பாகிஸ்தான் சுழலர்களுக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்தபோது இந்தியா அஸ்வினை விலக்கியது தவறு என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆடுகளத்தைத் தவறாக எடை போட்டுவிட்டோம் என்று தோனி பிறகு ஒப்புக்கொண்டார். ஆனால் அதே தவறை இறுதிப் போட்டியிலும் செய்தார். மீண்டும் அஸ்வின் விலக்கப்பட்டு ஸ்ரீஷாந்த் சேர்க்கப்பட்டார். அவர் தன்னால் முடிந்தவரை மோசமாகப் பந்து வீசினார். அவருக்கான பத்து ஓவர்களை முழுமையாகப் போட தோனி அனுமதிக்கவில்லை. அவ்வளவு மோசமாக வீசினார். தோனி 91 ஓட்டங்கள் எடுத்து வென்றுவிட்டதால் இந்தத் தவறை நியாயப்படுத்திவிட முடியாது. வெற்றிக்கான செயல்பாடு என்பது போட்டிக்கான தயாரிப்புகளிலிருந்தே தொடங்குகிறது. மிக முக்கியமான போட்டியில் தவறான முடிவுகளை எடுத்தது அணி நிர்வாகம் செய்த தவறு. வெற்றி என்னும் ஜிகினாத் தாளை வைத்து இந்தத் தவறுகளை மூடி மறைக்காமல் இருப்பது அணியின் எதிர்காலத்துக்கு நல்லது.

அணி பெருமை கொள்வதற்கான காரணங்களும் இருக்கின்றன. இறுதிப் போட்டியில் 6ஆவது ஓவரிலேயே 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழப்பு என்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் மன உறுதியும் விடா முயற்சியும் பாராட்டத்தக்கவை. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி ஒரே ஒரு முறைதான் தோற்றிருக்கிறது என்பதும் பாராட்டத்தக்கதுதான். தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுப்போன அந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் இடத்திற்கு எளிதாகப் போய்ச் சேர்ந்துவிட்டது. தான் செய்த சில தவறுகளாலேயே அந்த நிலையிலிருந்து சறுக்கியது. வெற்றி தோல்வியின்றி முடிந்த போட்டியிலும் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. ஒரு சில தவறுகளே அதன் நிலையைப் பலவீனமாக்கின. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய வலுவான அணிகள் மோசமான தோல்விகளைத் தழுவின. ஆனால் இந்திய அணியை எந்த அணியும் நிமிர முடியாமல் அடிக்கவில்லை. இலங்கை அணியின் நிலையும் அதுவே.

20-20 போட்டிகள் வரவேற்புப் பெற்றுவரும் இன்றைய சூழலில் ஒரு நாள் போட்டிகளின் வசீகரத்தை மீட்டுத் தந்த போட்டித் தொடர் இது என்று சொல்லலாம். சில பிசிறுகளை விட்டுவிட்டுப் பார்த்தால் இந்தத் தொடர் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆளுமையை அழுத்தமாகவே பறைசாற்றியிருக்கிறது. அரை இறுதியில் ஆடிய நான்கு அணிகளில் மூன்று ஆசிய அணிகள் என்பதை வைத்துப் பார்க்கும்போது கிரிக்கெட்டின் மையம் இடம் மாறுவதை உணரலாம்.

இந்தியா கோப்பையை வென்றது கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு தேசத்தைப் பெருமைப்படுத்தக்கூடிய நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு ஆட்டத்துக்கு இது பெரிய அனுகூலம் என்பதிலும் சந்தேகமில்லை.

*

டெஸ்ட் கிரிக்கெட்: நிலை கொள்ளும் அழகியல்

ஒரு நாள் ஆட்டங்கள் பிரபலமடையத் தொடங்கியபோது இனி டெஸ்ட் போட்டிகளின் நிலை அவ்வளவுதான் என்று சொன்னார்கள். 20-20 போட்டிகள் வந்தபோதும் அதையேதான் சொன்னார்கள். விரைவு உணவு போல, மூன்று மணி நேர சினிமா போல, கால்பந்து முதலான ஆட்டங்கள் போல, விறுவிறுப்பாக நடக்கும் மூன்று மணிநேரப் பரபரப்புக்கு முன் ஐந்து நாள் ஆட்டம் எடுபடாது என்று சில பண்டிதர்கள் ஆரூடம் சொன்னார்கள். சூறாவளிபோலத் தாக்கிய 20 ஓவர் போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட்டை அடித்துச் சென்றுவிடுமோ என்று மரபார்ந்த கிரிக்கெட்டின் காதலர்கள் பயந்தார்கள். ஆனால் கிரிக்கெட்டின் செவ்வியல் வடிவமான டெஸ்ட் போட்டியின் மதிப்போ வசீகரமோ குறையவில்லை என்பதைக் கடந்த இரு ஆண்டுகளில் நடந்துவரும் போட்டிகள் நிரூபிக்கின்றன. அதுவும் அண்மையில் நடந்து முடிந்த ஆஷஸ் (ஆஸ்திரேலியா - இங்கிலாந்து) டெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்கா - இந்தியா டெஸ்ட் தொடர் ஆகியவை டெஸ்ட் போட்டிகளின் வசீகரம் கூடியிருப்பதை உணர்த்தியிருக்கின்றன.

அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகும் விரைவு உணவுகள் விரைவான வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும் தலை வாழை இலை போட்டிப் பரிமாறப்படும் விஸ்தாரமான உணவு தன் சுவையையும் வசீகரத்தையும் இழந்துவிடவில்லை. உடனடி காப்பி வந்த பிறகும் வடிகட்டியில் பொறுமையாக இறங்கும் ஃபில்டர் காப்பிக்கான மதிப்பும் வசீகரமும் குறைந்துவிடவில்லை. வாழ்வின் எல்லா அம்சங்களையும்போலவே கிரிக்கெட்டும் காலத்திற்கேற்ப மாறிவருகிறது. ஒரு காலத்தில் இரண்டு இன்னிங்ஸ்களும் முடியும்வரை எத்தனை நாளானாலும் ஆடப்பட்டுக்கொண்டிருந்த கிரிக்கெட் பிறகு ஆறு நாட்களுக்குள் ஆட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற வரையறைக்கு உட்பட்டது. ஆறு பிறகு ஐந்தாயிற்று. இடையில் விடப்பட்டுவந்த ஓய்வு நாள் ரத்து செய்யப்பட்டது. எகிறு பந்துகளின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு விதிக்கப்பட்டது. மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் சொல்வதே இறுதி என்ற நிலை இன்றும் தொடர்ந்தாலும் தீர்ப்பு வழங்கும் விஷயத்தில் தொழில்நுட்பத்தின் உதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ரன் அவுட், ஸ்டெம்பிங் முதலான தருணங்களில் தொழில்நுட்ப உதவியுடன் மூன்றாவது நடுவர் தரும் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒரு நாளில் குறைந்தது இத்தனை ஓவர்கள் போடப்பட வேண்டும் என்னும் விதிகளும் விதி மீறல்களுக்கு அபராதமும் வழங்கப்படுகின்றன. இப்படி எத்தனையோ மாற்றங்கள் இருந்தாலும் மரபார்ந்த டெஸ்ட் போட்டியின் அடிப்படைக் குணம் மாறவில்லை. அதன் அழகியல் சிறப்பும் அது தரும் பரவசமும் மாறவில்லை.

ஆஷஸ் போட்டியும் தெ.ஆ. - இந்தியப் போட்டிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகிமையைப் பறைசாற்றுகின்றன. முதல் போட்டியில் டிரா செய்த ஆஸ்திரேலியா அடுத்த போட்டியில் தோற்றாலும் பெர்த் மைதானத்தில் வீறு கொண்டு எழுந்து இங்கிலாந்தை இன்னிங்ஸ் தோல்விக்கு ஆளாக்கியது. இங்கிலாந்தின் சவால் வலுவிழந்துபோகுமோ என்று தோன்றியபோது அடுத்த டெஸ்டில் இங்கிலாந்து வசதியான வெற்றியைப் பெற்று 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்த வெற்றி ஆஷஸ் கோப்பை இந்த முறை ஆஸிக்கு இல்லை என்பதையும் உறுதி செய்தது. ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் தோற்றால்தான் கோப்பை அவர்கள் கையை விட்டுப் போகும். ஆனால் நான்கு டெஸ்டுகள் முடிந்த நிலையில் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்ததால் ஐந்தாவது டெஸ்டில் வென்றாலும் ஆஸியால் தொடரைச் சமன் செய்யத்தான் முடியும் என்ற நிலை. சமன் செய்தால் கோப்பையைத் திரும்பப் பெற முடியாது என்பதால் நான்காவது டெஸ்டிலேயே ஆஸியின் கனவு தகர்ந்தது என்று சொல்லலாம். ஆட்டத்தில் தன் பிடியை இழந்து தவிக்கும் ஆஸி அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்குக்குக் கை விரலில் அடியும் பட்டதால் அவரால் விளையாட முடியாமல் போனது. ஐந்தாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி கண்டு ஆஸி அணி பெரும் சரிவைக் கண்டது. சர்வதேசத் தர வரிசையில் முதல் முறையாக ஐந்தாம் இடத்துக்குச் சறுக்கியது.

டெஸ்ட் ஆட்டங்களின் முதல்வனாக நெடுங்காலம் கம்பீரமாக உலவிவந்த ஆஸ்திரேலிய அணிக்கு என்ன ஆயிற்று? ரிக்கி பாண்டிங்கும் ஆஸியின் பிற கிரிக்கெட் ஜாம்பவான்களும் சொல்வதுபோல, ஸ்டீவ் வா, ஷேன் வார்ன், க்லென் மெக்ரா, மேத்யூ ஹேடன், கில் க்றிஸ்ட், ஜஸ்டின் லேங்கர் ஆகிய மாபெரும் திறமைசாலிகள் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஓய்வு பெற்றதுதான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதுவே முழு உண்மையும் இல்லை. ஷேன் வார்ன் ஆடிக்கொண்டிருந்தபோதே பல போட்டிகளில் ஆஸி அணி மண்ணைக் கவ்வியிருக்கிறது. மெக்ரா தன் உச்சத் திறனோடு ஆடிக்கொண்டிருந்த சமயத்தில்கூட ஆஸி அணி பல போட்டிகளில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. உதாரணமாக, 2003-04 ஆண்டில் இந்திய அணி ஆஸியில் சுற்றுப் பயணம் செய்தபோது இவர்கள் அத்தனை பேரும் அணியில் இருந்தார்கள். ஆனாலும் இந்தியாவால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடிந்தது. பிரிஸ்பேனில் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வந்து டிரா செய்ய இந்திய அணியால் முடிந்தது. சிட்னியிலும் அடிலெய்டிலும் இந்திய அணி அபாரமாக ஆடியது. கடைசி டெஸ்டை டிரா செய்ய அப்போதைய கேப்டன் ஸ்டீவ் வா (அவருக்கும் அது கடைசி டெஸ்ட்) கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அதுபோலவே தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியா, நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் சர்வ வல்லமை பொருந்திய ஆஸிக்குப் பல சமயங்களில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனால் ஆஸி அணி நெருக்கடியில் சிக்கும்போதெல்லாம் யாராவது ஒருவர் அணியைக் காப்ப்பாற்றிவிடுவார். முன்னிலை மட்டையாளர்கள் ஓட்டங்களைக் குவிக்காதபோது கடை நிலை ஆட்டக்காரர்கள் அந்தப் பணியை ஏற்றுக்கொள்வார்கள். ஒரு முறை (1999-2000 தொடர்) பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 100 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து ஆஸி அணி தத்தளித்தது. ஆனால் ஆடம் கில் கிறிஸ்டும் பந்து வீச்சாளர் ஷேன் வார்னும் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். அந்தப் போட்டியில் ஆஸி வென்றது. அதுபோலவே பங்களாதேஷுக்கு எதிரான ஒரு போட்டியில் (2004) ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி தடுமாறியபோது பந்து வீச்சாளர் கில்லெஸ்பி தன் மட்டை வீச்சின் மூலம் அணியைக் காப்பாற்றினார். முன்னிலைப் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் விழாதபோது மைக்கேல் கிளார்க் போன்ற பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள் முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி அணிக்குக் கைகொடுத்திருக்கிறார்கள். இதுபோலப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.

திறமைசாலிகள் எல்லா அணிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் அணியில் உள்ள ஒவ்வொருவரும் அணியின் வெற்றிக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்படும்போது அவர்களின் தனித் திறன் கணிசமாக உயர்கிறது. இந்த அணுகுமுறைதான் ஆஸியின் கூடுதல் பலம். தவிர, வெற்றியின் மீது அவர்களுக்கு இருக்கும் அசாத்தியமான வெறி, எம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற மிதமிஞ்சிய தன்னம்பிக்கை ஆகியவையும் அவர்கள் ரத்தத்தில் ஊறியிருக்கின்றன. இவையும் ஆஸி அணி பல ஆண்டுகள் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணங்களாக அமைந்தன.

ஆனால் காலப்போக்கில் இந்த அம்சங்கள் மெல்ல மெல்ல மற்ற அணிகளுக்கும் தொற்றிக்கொண்டன. இங்கிலாந்து போன்ற அணிகளில் புதிய திறமைசாலிகள் இடம்பெற்றார்கள். இந்தியா போன்ற அணிகளில் ஆட்டக்காரர்கள் தங்கள் திறமைக்கு நியாயம் செய்யும் வகையில் ஆடிவருகிறார்கள். அதே சமயத்தில் ஆஸி அணியில் திறமையாளர்கள் குறையத் தொடங்கினார்கள். இந்த எல்லாக் காரனங்களும் சேர்ந்து ஆஸியின் ஆதிக்கத்துக்கு வேட்டு வைத்துவிட்டன.

ஆனால் இன்றும்கூட ஆஸி அணியைப் புறக்கணித்துவிட முடியாது. அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருக்கும் இதே அணிதான் பாகிஸ்தான் அணியைச் சென்ற ஆண்டில் மூன்று டெஸ்ட்களிலும் மண்ணைக் கவ்வ வைத்தது. இதே அணிதான் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கிட்டத்தட்ட வெல்லும் நிலையில் இருந்தது. வி.வி.எஸ். லட்சுமணனின் அற்புதமான மட்டை வீச்சும் கொஞ்சம் அதிருஷ்டமும் சேர்ந்துதான் இந்தியாவால் வெல்ல முடிந்தது. ஆஷஸ் தொடரிலும் பெர்த்தில் ஆஸி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல. இன்னிங்ஸ் வெற்றி. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாவிட்டாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்துக்கொண்டது. ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகிய இருவரது ஆட்டங்களும் திறன்மிகு நிலையில் இல்லாதது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. டக் பொலிஞ்சர், மிட்செல் ஜான்சன் போன்ற வேகப் பந்து வீச்சாளர்கள் இந்தத் தொடரில் சோபிக்காதது அல்லது இங்கிலாந்து மட்டையாளர்கள் மிகச் சிறப்பாக ஆடியது ஆஸியின் வெற்ரி வாய்ப்பைப் பறித்துவிட்டது. பாண்டிங், கிளார்க், ஜான்சன், பொலிஞ்சர் ஆகிய நால்வரில் இருவர் தங்கள் ஆட்டத்தின் திறன்மிகு நிலையை எட்டினால்கூட ஆஸி அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்.

அணித் தலைவர் பாண்டிங் மோசமாக ஆடுவதும் பந்து வீச்சின் பலவீனமும் சேர்ந்து ஆஸியைத் தலை குனிய வைத்திருக்கிறது. அண்மைக் காலங்களில் ஆஸி அணித் தலைவர் யாரும் எதிர்கொள்ளாத நெருக்கடியை பாண்டிங் எதிர்கொண்டிருக்கிறார். தலைவன் பலவீனமாக இருப்பதும் அணியின் பலவீனமாகத் தலைவனை எதிரணியினர் அடையாளம் காண்பதும் களத்தில் மிக எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது. ஆஸியின் மிகப் பெரிய பிரச்சினையே இதுதான். ஒன்று பாண்டிங் தேறிவர வேண்டும். அல்லது அவர் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இரண்டில் ஒன்று நடக்காவிட்டால் ஆஸி அணி இந்த நெருக்கடியை இப்போதைக்குக் கடக்காது.

*

மறுபுறம் டெஸ்ட் தர வரிசையில் இந்தியா தன் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியா முதலிடம் பெற்ற பின் அது ஆடிய பெரும்பாலான ஆட்டங்கள் இந்திய மண்ணில் நடந்தவை. எல்லா ஆட்டங்களும் துணைக்கண்டத்து ஆடுகளங்களில் நடந்தவை. எனவே இந்தியாவின் முதன்மை நிலை கடுமையான சோதனைக்கு ஆளாகவில்லை என்றே சொல்லலாம். இதனாலேயே தென்னாப்பிரிக்க மண்ணில் அதன் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. அதற்கேற்றாற்போல முதல் போட்டியின் முதல் நாளில் மட்டை பிடித்த இந்தியா 131 ஓட்டங்களுக்குள் சுருண்டது. டேல் ஸ்டெயின், மோர்னி மார்க்கல் ஆகியோரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய மடையாளர்கள் சரிந்தனர். இந்தியாவின் திறமையின் மீது எப்போதும் ஐயம் கொள்ளும் விமர்சகர்களின் முகங்களில் மந்தகாசப் புன்னகை அரும்பியது.

அன்றைய நாளில் எந்த அணி ஆடியிருந்தாலும் 200 ஓட்டங்களைத் தாண்டியிருக்க முடியாது என்பதே அன்றைய ஆடுகளத்தின் நிலை என்பதை வசதியாக மறந்துவிட்டுப் பலரும் எள்ளி நகையாடத் தொடங்கினார்கள். ஆனால் அடுத்த இன்னிங்ஸிலும் அதற்கடுத்து ஆடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் இந்தியா தெ.ஆ.வின் வேகப் பந்துக் கணைகளைத் திறமையாகவே எதிர்கொண்டு ஆடியது. இரண்டாவது போட்டியை வென்றது. அதில் தெ.ஆ. அணியை ஒரு முறை 150 ஓட்டங்களுக்குள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டியின் பெரும் பகுதியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. தொடரைச் சமன் செய்து முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. மூன்றாம் போட்டியின் நான்காம் நாளில் கூடுதல் தீவிரமும் சிறிது அதிருஷ்டமும் இருந்திருந்தால் இந்தியா அந்தப் போட்டியையும் தொடரையும் வென்று சாதனை படைத்திருக்கும். இந்த மாற்றம் விமர்சகர்களின் முகங்களில் தோன்றிய மந்தகாசப் புன்னகையை மங்கச் செய்தது. இனியும் இந்தியாவைச் சொந்த ஊரில் மட்டும் சூரப் புலிகள் என்று சொல்லிவிட முடியாது என்பதை உலக கிரிக்கெட் விமர்சகர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மாற்றம் சும்மா வந்துவிடவில்லை. யாரோ ஒருவர் அல்லது இருவரின் உழைப்பால் வந்துவிடவில்லை. அணியின் அனைத்து உறுப்பினர்களும் ஏதேனும் ஒரு தருணத்தில் அணியின் வெற்றிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். ஜாகீர் கானும் ஹஜ்பஜன் சிங்கும் தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இஷாந்த் ஷர்மா சில நெருக்கடியான கட்டங்களில் முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி அணிக்குப் பெரும் ஆறுதலைத் தந்தார். உணர்ச்சிவசப்படும் ஸ்ரீஷாந்தும் சில சமயங்களில் பெரும் பங்காற்றியிருக்கிறார். தெ.ஆ.வில் நடந்த இரண்டாவது டெஸ்டில் அவர் எடுத்த விக்கெட்கள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக ஜாக் காலிஸுக்கு அவர் வீசிய எகிறு பந்து ஒரு அற்புதம். வீரேந்திர சேவாக், கௌதம் காம்பீர், ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், லட்சுமணன், மகேந்திர சிங் தோனி ஆகியோர் வெவ்வேறு தருணங்களில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார்கள். இந்தியா இப்போதுதான் ஓர் அணியாக உணரத்தக்க வகையில் ஆடிவருகிறது. அனைவரும் பொறுப்பேற்கிறார்கள். ஆஸியின் கில்லெஸ்பி, ஜான்சன் ஆகியோரைப் போல ஹர்பஜன், ஜாகீர், இஷாந்த் ஆகிய பந்து வீச்சாளர்கள் மட்டையிலும் சில சமயம் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.

இந்தியா முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டது மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கூடுவதற்கும் தன் பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளின் அழகு, நுட்பம், அதில் நிகழும் ஏற்ற இறக்கங்கள், பந்துக்கும் மட்டைக்கும் இடையிலான போராட்டம் ஆகியவற்றை இந்தியா ஆடும் போட்டிகளில் அனுபவிக்க முடிகிறது. குறிப்பாக, தெ.ஆ. அணிக்கெதிரான போட்டிகளில் டெஸ்ட் போட்டியின் தீவிரத்தையும் பரவசத்தையும் அனுபவிக்க முடிந்தது. மூன்றாவது டெஸ்டின் மூன்றாம் நாள் காலையில் டேல் ஸ்டெயின் சச்சினுக்கு வீசிய ஓவர்கள் டெஸ்ட் போட்டியின் பொன்னான தருணங்கள். அவ்வளவு துல்லியமான அளவில் அத்தனை வேகத்தில் அவரால் வீச முடிந்தது ஒரு ஆச்சரியம் என்றால் வீசிய பந்துகளில் பாதிக்கும் மேல் ஸ்விங் ஆனது அதை விடப் பெரிய ஆச்சரியம். சச்சினின் அனுபவம், திறமை, கவனம், கொஞ்சம் அதிருஷ்டம் எல்லாம் சேர்ந்துதான் அவரது விக்கெடைக் காப்பாற்றின. சச்சினும் ஹர்பஜனும் சேர்ந்து காற்றை இந்திய அணியின் பக்கம் திருப்பினார்கள். அதைத் தொடர்ந்து இந்தியப் பந்து வீச்சாளர்கள் 140க்குள் 6 விக்கெட்டை வீழ்த்தி அந்தக் காற்றை மேலும் வலுவாக வீசச் செய்தார்கள். ஆனால் காலிஸ், மார்க் பவுச்சர், டேல் ஸ்டெயின் ஆகியோரின் மட்டை வீச்சு இந்தியாவின் சாதகத்தை மழுங்கச் செய்தது. இந்தியாவின் கைக்கு எட்டிய வெற்றி கை நழுவிப் போனது. டிராவுடன் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. தீவிரமாகப் போரிடப்பட்ட ஒரு அற்புதமான தொடர் சம நிலையில் முடிவுக்கு வந்தது இரு அணிகளின் தகுதிக்கும் நியாயம் செய்வதாக இருந்தது.

ஆஷஸ் தொடரிலும் தெ.ஆ. - இந்தியத் தொடரிலும் ஆடப்பட்ட போட்டிகள் கிரிக்கெட்டின் சாதனைகளின் எல்லைகளை விஸ்தரிப்பதுடன் அதன் அழகையும் மதிப்பையும் கூட்டுவதற்குப் பங்காற்றியிருக்கின்றன. இந்தத் தொடர்கள் டெஸ்ட் கிரிக்கெட்தான் அசல் கிரிக்கெட் என்ற உண்மையை அழுத்தமாகப் பறைசாற்றுகின்றன.

Sunday, February 13, 2011

ஈழத் தமிழர் பிரச்சினை: ராகுலின் பதற்றம்

டிசம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ராகுல் காந்தி தமிழகம் வரப்போவதை எல்லோரையும் போல நானும் செய்தித்தாள் மூலமாகத்தான் அறிந்துகொண்டேன். ஆனால் தோழி ஜோதி (எ) இந்திராவிடமிருந்து வந்த கைபேசி அழைப்பு அதே செய்தியைச் சொன்னபோது ஆச்சரியம் அடைந்தேன். ஜோதி இளைஞர் காங்கிரஸில் இருக்கும் விஷயம் சட்டென்று நினைவுக்கு வந்ததும் ஆச்சரியம் விலகியது. ஆனால் என்னிடம் ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்வி முளைத்தது. “அறிவுஜீவிகளைச் சந்திக்க ராகுல் விரும்புகிறார்” என்று சொன்னதும் ஆச்சரியம் அதிகரித்தது. அப்படியானால் என்னை ஏன் அழைக்க வேண்டும்? ஜோதி விடுவதாக இல்லை. “சரி. ஒரு எழுத்தாளன், இதழியலாளன் என்ற முறையில் நான் அழைக்கப்பட்டதாக நினைத்துக்கொள்கிறேன்” என்று சொன்னேன். ஜோதிக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இளைய பாரதத்தின் பிரதிநிதியாகச் சித்தரிக்கப்படும் இளவரசரைச் சந்திக்க மானசீகமாக ஆயத்தமாகத் தொடங்கினேன்.

இளைஞனாக அரசியலில் நுழைந்த ராஜீவ் காந்தியின் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த என் தந்தையாரின் நினைவு ஒரு கணம் வந்துபோனது. அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் ராகுலைச் சந்திக்க விரும்பியிருப்பார் என்று தோன்றியது. எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை என்பதால் மனத்தில் எந்த எதிர்பார்ப்பும் திரளவில்லை. இத்தகைய சந்திப்புகள், சம்பந்தப்பட்ட பிரபலத்தின் பொது வாழ்வு பிம்பத்தைக் குறிப்பிட்ட விதத்தில் கட்டமைக்கும் முயற்சிகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமையும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. அதிகபட்சம் தமிழக அறிவுவாதிகளின், இதழியலாளர்களின் குரல்களை ராகுல் கேட்கலாம். அவர்களது அக்கறைகள் குறித்த அடையாளங்கள் அவருக்குத் தட்டுப்படலாம். அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் இருந்தால் தமிழக மக்களின் ஆதங்கங்களில் ஒரு சிலவற்றையாவது அவர் காதில் போடலாம். பட்டத்து இளவரசருக்கு இதுபோன்ற அனுபவங்கள் கிடைப்பது அவசியம்தானே.

இதுபோன்ற சாத்தியப்பாடுகள் குறித்த சபலங்கள் ஒரு புறம் இருக்க, நண்பர்களைச் சந்திக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணமும் தாஜ் கன்னிமரா ஓட்டலில் உணவு சிறப்பாக இருக்கும் என்ற அனுபவமும் ராகுல் சந்திப்பு பற்றிய உற்சாகத்தைக் கூட்டின. தாஜ் ஓட்டலில் பலத்த பாதுகாப்புக் கெடுபிடிகளுக்குப் பிறகு உள்ளே நுழைந்தால் கிட்டத்தட்ட எல்லாமே தெரிந்த முகங்களாக இருந்தது ஆச்சரியம் அளித்தது. சொல்லப்போனால் இலக்கியக் கூட்டம் போலவே இருந்தது. தேவிபாரதி, குவளைக்கண்ணன், கடற்கரை, தளவாய் சுந்தரம், ஞாநி, முரளீதரன், அய்யனார், கவிதா, மாலன், ரோஹிணி, நாசர், சங்கீதா ஸ்ரீராம் ஆகியோரைப் பார்த்ததும் ராகுல் பற்றிய நினைவு மறந்துபோனது. 2ஜி அலைக்கற்றையிலிருந்து புத்தகக் கண்காட்சிவரை பல விஷயங்களைப் பற்ரி அரட்டை அடிக்க ஆரம்பித்தோம்.

எல்லா அரசியல்வாதிகளையும் போல ராகுலும் தாமதமாகவே வந்தார். ஒரு மணிநேரம் தாமதம் என்பது சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது. தாமதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகக் கிளம்பிவிடலாமா என்றுகூடப் பேசிக்கொண்டோம். ‘ரொம்பத்தான் பிகு பண்ணாதீர்கள். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று உங்களுக்குத் தெரியாதா?’என்று ஒரு நண்பர் இடித்துவிட்டுப் போனார். அபிராமி ராமநாதன், இயக்குநர் லிங்குசாமி, நடிகை ரேவதி என்று சினிமா உலகைச் சேர்ந்த பலரும் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இருக்கலாம். சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள், அரசு சாராத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்று எலோரும் வந்திருந்தார்கள். அது ஒரு கலந்துரையாடலாக இருக்கும் என்று ஜோதி சொன்னது நினைவுக்கு வந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடல் எப்படிச் சாத்தியம்? அரசியல் தவிர்த்த பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களைச் சந்திக்க ராகுல் விரும்பியிருந்தால் அவர்களைத் தனித்தனிப் பிரிவாகச் சந்தித்திருக்கலாம். எதற்கு இப்படி ஒரு கூட்டாஞ்சோறு? இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தியாவைப் பற்றித் தனக்கிருக்கும் கனவை எங்களிடம் பகிர்ந்துகொள்ளப்போகிறாரோ? கலந்துரையாடல் என்றாரே ஜோதி?

கூட்டம் தொடங்கியது. அரசியலைப் பற்றிக் கேட்க வேண்டாம் என்றார் ராகுல். பாலம் என்னும் (வளர்ச்சி அரசியலுக்கான) இதழின் ஆசிரியர் நாராயணன் முதலில் பேசினார். குடிப் பழக்கத்தால் வரும் சமூகக் கேடுகள், பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்வதில் இன்னமும் மனிதர்களை ஈடுபடுத்திவரும் அவலம் என்று பல முக்கியமான விஷயங்களில் அவர் அவையின் கவனத்தை ஈர்த்தார். தன்னை ஓரினப் புணரீர்ப்பாளர்களின் பிரதிநிதி என்று அற்முகப்படுத்திக்கொண்ட அநிருத்தன் வாசுதேவன், ஓரினப் புணரீப்பாளர்கள், ஈரினப் புணரீர்ப்பாளர்கள், அரவானிகள் ஆகியோரின் பிரச்சினைகளைக் கவனப்படுத்தினார். கல்வித் துறைப் பிரச்சினைகளைப் பற்றி வேறொருவர் பேசினார். ராகுல் அனைத்தையும் கவனமாகக் கேட்டார். எல்லாவற்றிலும் தன் சொந்தக் கருத்தைச் சொன்னார். தீவிரமான கவலைகளை வெளிப்படுத்திய கல்வியாளரைப் பார்த்து, நீங்கள் அரசியலுக்கு வாருங்கள், மாற்றம் காண உங்கள் பங்கைச் செலுத்துங்கள் என்றார். இளைஞர் காங்கிரஸ் ஜனநாயகபூர்வமாக நடக்கும் விதம் பற்றியும் விரிவாகச் சொன்னார். அரசாங்கத்தின் மூலமாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்றார். சினிமா உலகின் பிரதிநிதிகள் சிலர் திருட்டு விசிடி போன்ற பிரச்சினைகள் பற்றி விரிவாகப் பேச ஆரம்பித்தார்கள். நீங்கள் தில்லிக்கு வந்து என்னைப் பாருங்கள் என்று சொல்லி அந்தப் பேச்சை முடித்துவைத்தார்.

அதன் பிறகுதான் நிகழ்ச்சியின் முக்கியமான கேள்வி எழுந்தது. இலங்கைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை நேரடியாகக் கவனித்து செய்திக் கட்டுரைகள் எழுதிவரும் கவிதா முரளீதரன் (த வீக் வார இதழ்) இலங்கைப் பிரச்சினை பற்றிக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக அங்கு தற்போதுள்ள நிவாரண முகாம்களின் அவல நிலையையும் நிவாரணப் பணிகளின் கடுமையான போதாமைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை அலட்டிக்கொள்ளாமல் இருந்த ராகுலிடத்தில் சட்டென்று ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டதை உணர முடிந்தது. இந்திய அரசு தன்னால் முடிந்ததைச் செய்துவருவதாகச் சொன்ன அவர், இந்திய அரசின் முயற்சியால் நடைபெறும் பணிகள் பற்றிய பட்டியலைப் படித்தார். இலங்கைப் பிரச்சினை பற்றிய கேள்விகளை வேறு எதையும் விட அதிகமாகவும் உறுதியாகவும் ராகுல் எதிர்பார்த்தார் என்பது அவர் பட்டியலைத் தயாராக எடுத்துவந்திருந்ததிலிருந்து தெரிந்தது. இன்னொரு நாட்டின் விவகாரத்தில் தலையிடுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் ராகுல் பேசினார். மூத்த பத்திரிகையாளர் டி.என். கோபாலன், இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். வேறு சிலரும் குறுக்கிட்டுப் பேசினார்கள். இந்திய அரசின் சார்பில் பிரணாப் முகர்ஜி அங்கு சென்று வந்ததையும் அரசின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கைகளையும் வரிசையாகக் குறிப்பிட ஆரம்பித்தார் ராகுல். இதுபோன்ற விவாதங்களில் குரல் எழுப்புவதில் எனக்கு அதிக நம்பிக்கையோ ஈடுபாடோ கிடையாது என்றாலும் நாங்கள் அப்படிச் சொன்னோம், இப்படிப் பேசினோம் என்ற ரீதியில் ராகுல் பதில் தந்தது எரிச்சலை ஏற்படுத்தியது. என்ன சொன்னீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன செய்தீர்கள் என்பது முக்கியம் என்று சொன்னேன். என்ன செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள் என்று ராகுல் எதிர்க் கேள்வி எழுப்பினார். பொருளாதாரத் தடை விதித்திருக்கலாமே என்றார் பத்திரிகையாளர் மாலன்.

அதற்குள் பலரும் குறுக்கிட்டுப் பேச ஆரம்பித்தார்கள். காலச்சுவடு பொறுப்பாசிரியர் தேவி பாரதி, காமன் வெல்த் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு ராஜ பக்‌ஷேவை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்டார். நான் அழைக்கவில்லை என்று ராகுல் கும்பிடு போட்டார். ராஜ பக்‌ஷே ஒரு போர்க் குற்றவாளி, அவரை எப்படி உங்கள் அரசு அழைக்கலாம் என்று கேள்வி எழுப்பிய தேவி பாரதி, இலங்கை அரசின் அட்டூழியங்கள் பற்றியும் இந்திய அரசின் செயலின்மை குறித்தும் தன் கருத்துக்களைச் சற்று விரிவாகவே முன்வைத்தார். அவர் தமிழில் பேசியதால் அவர் பேச்சை ஆங்கிலத்தில் சொல்ல ஓரிரு நண்பர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் தொடர்ந்து பலரும் ஏச ஆரம்பித்ததில் குழப்பம் நிலவ, எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கூட்டத்தை முடித்துக்கொண்டார் ராகுல். ஆக, சுமுகமாகத் தொடங்கிய கூட்டம் இலங்கைப் பிரச்சினை குறித்த சலசலப்புடன் முடிந்தது என்று சொல்லலாம்.

கூட்டம் முடிந்த பின் பலரும் ராகுலுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். சிலர் கையோடு எடுத்துவந்திருந்த கோரிக்கைப் பட்டியலைத் தந்தார்கள். எல்லோரும் இருந்து தேநீர் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று அன்பாக ஒரு அறிவிப்பு ஒலித்தது. மணி ஒன்று. மதியம் ஒரு மணிக்குத் தேநீர் வழங்கும் விருந்தோம்பலை எண்ணி வியந்தபடி மீண்டும் அரட்டைக் கச்சேரிகளைத் தொடங்கினோம். வெளியில் காத்திருந்த செய்தித் தொலைக்காட்சிகளின் நிருபர்கள் சினிமா பிரமுகர்களைச் சூழ்ந்துகொண்டு, உள்ளே நடந்தது என்ன என்று ஆவலோடு விசாரித்துக்கொண்டிருந்தார்கள். நாசர், ரோஹிணி, லிங்குசாமி, ரேவதி ஆகியோர் இருந்த இடங்களில் ஒளிப்படக் கருவிகள் பளிச்சிட்டபடி இருந்தன.

ராகுலுடனான விவாதம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் ஏமாற்றம் எதுவுமில்லாமல் தாஜ் ஓட்டலிலிருந்து கிளம்பினேன். இதுபோன்ற கலந்துரையாடல்கள் பற்றிய அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்ததுதான் இந்தக் கூடத்தின் முக்கியமான விளைவு என்று தோன்றியது. ஆனாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ராகுல் பதற்றமடைந்தது முக்கியமான விஷயமாகப் பட்டது. ராகுலின் அவஸ்தை இந்தப் பிரச்சினையில் காங்கிரஸின் செயலின்மை குறித்த ஒப்புதல் வாக்குமூலமாகவே தெரிந்தது.

Sunday, February 28, 2010

கண்ணாடியும் காவிய நாயகனும்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆட்டக்காரரும் கிரிக்கெட் எழுத்தாளருமான இயான் சாப்பல் 2007இல் இப்படி எழுதினார்:


சச்சின் டெண்டுல்கர் கண்ணாடி முன் நின்று, “கண்ணாடியே, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்” என்று கேட்க வேண்டும். “நீ ஓய்வு பெற வேண்டும்” என்று அவரது பிம்பம் சொல்லும்.


கிரிக்கெட் உலகமே டெண்டுல்கர் புகழ்பாடிவரும் இன்றைய சூழலில் இயான் சாப்பலின் கருத்தைக் கேட்கையில் வினோதமாக இருக்கும். இப்படி அவர் எழுதியதன் பின்னணியை முதலில் பார்ப்போம். 2007இல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா முதல் சுற்றிலேயே தோற்றுத் திரும்பியிருந்த தருணம் அது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபமாக இருந்தார்கள் அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சாப்பல் அணியின் மூத்த ஆட்டக்காரர்களைக் குறைகூறிய செய்திகள் கசிந்த நேரம் அது. டெண்டுல்கர், சௌரவ் காங்குலி, ராகுல் திராவிட் போன்ற மூத்த வீரர்கள் விலகி இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்த சமயம். டெண்டுல்கரின் தனிப்பட்ட ஆட்டமும் அவ்வளவு சிறப்பாக இல்லாமலிருந்த காலகட்டம்.


இந்த மூன்று ஆண்டுகளில் பல விஷயங்கள் நடந்துவிட்டன. இங்கிலாந்துக்குச் சென்று ஒரு நாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி நன்றாக விளையாடியது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவிலும் இந்தியா சிறப்பாகவே விளையாடியது. வேகப் பந்து வீச்சுக்குத் தோதான பெர்த் ஆடுகளத்தில் நான்கே நாட்களில் ஆஸி அணியை வென்றது. இந்த ஆட்டங்களில் டெண்டுல்கரின் பங்கு கணிசமாக இருந்தது (இங்கிலாந்திலும் பெர்த்திலும் அவர் சதங்கள் அடித்தார்). ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியதிலும் டெண்டுல்கரின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. 2008இல் இங்லிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 387 ரன்களைத் துரத்தி எடுத்த சாதனையில் சதம் அடித்த சச்சினுக்கு மிக முக்கியமான பங்கு இருந்தது. போன ஆண்டு ஆஸி அணிக்கெதிரான ஒருநாள் ஆட்டத்தில் 175 ரன் எடுத்து எதிரணி கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் அபரிமிதமான பாராட்டைப் பெற்றார் சச்சின்.


சச்சின் டெண்டுல்கர் இன்று கிரிக்கெட்டின் காவிய நாயகன் என்னும் அந்தஸ்தைப் பெற்றுவிட்டார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் அதிக ரன்களைக் குவித்தவர் அவர். இரு ரகங்களிலும் அதிக பட்ச சதங்களைக் குவித்தவர். உலகிலேயே அதிக அனுபவம் உள்ள ஆட்டக்காரர். எல்லாவற்றுக்க்கும் மேலாக, ஒரு நாள் போட்டிகளில் 200 ரன் எடுத்த ஒரே மட்டையாளர் என்னும் பெருமையைச் சமீபத்தில் பெற்றிருக்கிறார். நாடாளுமன்றம் அவரைப் பாராட்டுகிறது. சினிமா உலகம் அவர் மீது புகழுரைகளைக் குவிக்கிறது. மக்கள் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்கள். இவர் டான் பிராட்மேனைவிடவும் சிறந்த வீரர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகிறார்.


டெண்டுல்கர் போன்ற ஒரு ஆட்டக்காரர் சிறப்பாக ஆடினார் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் ஆட ஆரம்பித்துப் பதினெட்டு ஆண்டுகள் கழிந்த பிறகு ஆட்டத்தில் சரளமும் துல்லியமும் குறைந்துவிட்டது, இப்போதே ஓய்வு பெறுவது நல்லது என்றும் விமர்சனங்கள் எழுந்த பிறகு ஒரு மட்டையாளர் புத்துயிர் பெறுவது, அதுவும் பிரமிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்துவது நம்ப முடியாத நிகழ்வு. அதை நிகழ்த்தியிருப்பதுதான் சச்சினின் மாபெரும் சாதனை.


ஆட்டத்தின் மீதான அபரிமிதமான காதல் (கிட்டத்தட்ட பக்தி என்றும் சொல்லலாம்), விடாமல் போராடும் குணம், எந்த வயதிலும் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் அணுகுமுறை, விமர்சனங்களைக் கண்டு உணர்ச்சிவசப்படாத பக்குவம், வெற்றியின் சுமை தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ளும் நிதானம், காலத்தின் ஓட்டத்தை மறுதலிக்கும் எதிர் நீச்சல் ஆகிய பண்புகள்தான் சச்சினின் நீடித்த வெற்றிக்கும் எப்போதும் வளர் முகமாக இருக்கும் அவரது திறமைக்கும் காரணம்.


இயான் சாப்பல் சச்சினை ஓய்வு பெறச் சொன்னபோது அவரது ஆட்டத்தை விமர்சித்தவர்கள்கூட அந்த ‘அறிவுரை’யை மிகையான கூற்றாகவே கருதினார்கள். டெண்டுல்கர் போன்ற மேதைமை கொண்ட ஒரு ஆட்டக்காரரைச் சில தோல்விகளை வைத்து எடை போடக் கூடாது என்றும் எப்போது ஓய்வுபெறுவது என்பது அவருக்கே தெரியும் என்றும் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான விவியன் ரிச்சர்ட்ஸ், ஜெஃப் பாய்காட், சுனில் கவாஸ்கர் போன்றோர் கூறினார்கள். இன்றைக்கு ஓய்வுபெற்றாலும்கூட அவர் கிரிக்கெட்டின் காவிய நாயகன்தான் (லெஜெண்ட்) என்று சொல்லுமளவுக்கு சச்சின் ஏற்கனவே சாதித்துவிட்டார் என்றார் ரிச்சர்ட்ஸ். பீட்டர் ரூபோக் போன்ற கிரிக்கெட் விமர்சகர்களும் இதையே கூறினார்கள். இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவும் சக ஆட்டக்காரர்களும் அவர்மீது முழு நம்பிக்கை வைத்தார்கள். சச்சின் மீண்டுவந்தார். தன் ஆட்டத்தை மறுகண்டுபிடிப்புச் செய்தார். புத்திளமையோடு ஆட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறார்.


மட்டை வீச்சில் வரப்பிரசாதம் பெற்றவர் என்று சொல்லத்தக்க திறமை படைத்தவர்தான் என்றாலும் தாக்குப்பிடிக்கவும் தொடர்ந்து ஆடவும் அவர் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. முதுகு வலி, கால் விரலில் எலும்பு முறிவு, முழங்கை வலி, தோள்பட்டைச் சதை கிழிசல் என்று உடல் முழுவதும் விழுப்புண்கள் தாங்கிய சச்சின் தொடர்ந்து ஆடுவதற்கே சிரமப்பட்ட காலம் உண்டு. குறிப்பாக 2005இல் டென்னிஸ் எல்போ என்று சொல்லப்படும் முழங்கை வலி அவரது ஆட்டத்தையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடுமோ என்ற அளவுக்கு அச்சுறுத்தியது. “கையில் தேநீர்க் கோப்பையைத் தூக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டேன்” என்று டெண்டுல்கரே சொல்லியிருக்கிறார்.


உடல் காயம் இப்படி இருக்க, மனதளவிலும் நிறைய காயங்கள். கடும் நிர்ப்பந்தம், அசாத்தியமான எதிர்பார்பு அகியவற்றைச் சுமந்து ஆட வேண்டியிருப்பது ஒரு புறம் இருக்க, 1999இல் அவர் உலகக் கோப்பை ஆடிக்கொண்டிருந்தபோது அவர் அப்பா இறந்துபோனார். 2006-07 ஆண்டுகளில் அவர் விரைவில் அவுட் ஆகிக்கொண்டிருந்த சில சமயங்களில் ஆளுக்கு ஆள் அவருக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள். எப்படிக் காலை நகர்த்த வேண்டும் என்றெல்லாம் அந்த மேதைக்குப் பாடம் எடுத்தார்கள் சில விமர்சகர்கள். அவரது சொந்த ஊரான மும்பையில் ஒரு டெஸ்டில் இந்தியாவை வெற்றிபெற வைக்க அவரால் முடியாமல்போனபோது ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள். மனதிலும் உடலிலும் பட்ட இத்தனை காயங்களையும் தாண்டி வந்ததுதான் அவரது கிரிக்கெட் வாழ்வின் பயணம்.


இன்று டெண்டுல்கர் தன் இளமைக் காலத்தில் ஆடியதுபோலச் சரளமாக ஆடுவதாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். அவர் தன் திறமையின் உச்சத்தில் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். கடந்த 12 மாதங்களில் சர்வதேசப் போட்டிகளில் 10 சதங்கள் அடித்திருக்கிறார். அதில் நான்கு டெஸ்ட் சதங்கள் தொடர்ந்து நான்கு டெஸ்ட்களில் அடித்தவை. ஒரு நாள் போட்டிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை 150 ஓட்டங்களைக் கடந்திருக்கிறார்.


எடுக்கும் ஓட்டங்களை விட அவற்றை எடுக்கும் விதம் முக்கியமானது. டெண்டுல்கர் எல்லா விதமான ஆடுகளங்களிலும் எல்லா விதமான பந்து வீச்சாளர்களையும் எதிர்கொண்டு சிறப்பாக ஆடிவருகிறார். எகிறும் பந்துகளைத் தைரியமாக ஹூக் செய்வது அல்லது சற்றே பின்னால் வளைந்து அப்பர் கட் அடிப்பது, கால் திசையில் வீசப்படும் இடப் புறச் சுழல் பந்தை ஏறி வந்து இன்சைட் அவுட் ஷாட் அடிப்பது, வலப் புறத்தில் அதிகத் தடுப்பாளர்கள் இருக்கும்போது வலப்புறப் பந்துகளை வேகமாக நகர்ந்து இடப்புறம் திருப்புவது என்று பல விதங்களில் அவரது ஆட்டம் மூச்சை நிறுத்தும் அளவுக்கு அபாரமான உத்திகளுடனும் செய் நேர்த்தியுடனும் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் 50 சதங்கள் என்பது இப்போது அவருக்குக் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டது (இப்போது 47). இன்னும் ஒரு இன்னிங்ஸில் பிரையன் லாரா அடித்த 400 ஓட்டங்களைத் தாண்ட வேண்டிய சாதனை மிச்சமிருக்கிறது என்று கவாஸ்கர் போன்றவர்கள் கூறிவருகிறார்கள்.


இன்னும் எவ்வளவு சாதனைகள் படைக்கிறார் என்பது முக்கியமல்ல. அவ்வளவுதான் நீ காலி என்று சொல்லப்பட்ட ஒருவர் புத்துயிர் பெற்று ஆட்டத்தின் சிகரத்தைத் தொடுவதும் புதிய சிகரங்களை உருவாக்குவதும் அசாத்தியமானவை. இந்த அசாத்தியத்தைத் தனக்கே உரிய உறுதியுடனும் நளினத்துடனும் தன்னடக்கத்துடனும் சாத்தியமாக்கிவருவதே டெண்டுல்கரின் தனிப் பெருமை.


இன்று கற்பனை செய்ய முடியாத உயரத்தில் இருக்கும் சச்சினைப் பார்த்து இயான் சாப்பல் என்ன சொல்வார்? ஒருவேளை அவர் கண்னாடி முன்னால் நின்றால் அந்தக் கண்ணாடியின் பிம்பம் என்ன சொல்லும்?


“நீ எழுதுவதை நிறுத்திக்கொள்” என்று சொல்லக்கூடும்.

*

Wednesday, January 13, 2010

சச்சின் 20 ஒரு தலைமுறையின் கனவு

கிரிக்கெட் வாழ்வில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கரிடம் அப்படி என்ன சிறப்பு? அவர் ஏன் கிரிக்கெட்டின் கடவுளாக ஆராதிக்கப்படுகிறார்? ஆட்ட நுணுக்கங்கள் அதிகம் தெரியாத சாமானிய மக்கள் மட்டுமல்ல, ஆழமான கிரிக்கெட் அறிவு கொண்ட பீட்டர் ரூபோக் போன்ற விமர்சகர்கள், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள், அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட், ஸ்டீவ் வா, வாசிம் அக்ரம் போன்ற சம காலத்துத் திறமையாளர்கள் ஆகியோரும் அவரை ஆராதிக்கிறார்கள். டெண்டுல்கரைப் போல இன்னொருவர் பிறப்பது அரிது என்கிறார் உலகிலேயே அதிக விக்கெட்களை வீழ்த்திய முத்தையா முரளீதரன்.

அப்படி என்ன சிறப்பு அவரிடம்? அவர் அடித்த சதங்களா? குவித்த ரன்களா? பெற்றுத் தந்த வெற்றிகளா? வென்ற ஆட்ட நாயகன் விருதுகளா? இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவதா? எத்தனையோ விழுப்புண்களைத் தாண்டித் தன் உடல் திறனைப் பேணிவருவதா? காலத்துக்கும் காயங்களுக்கும் மதிப்புக் கொடுத்துத் தன் பேட்டிங் முறையில் நுட்பமான மாற்றங்களைச் செய்துவருவதா? இன்றைக்கும் பந்து வீச்சாளர்களின் பிரதான சவாலாக இருப்பதா? இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதா? கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்புக்கும் ஆராதனைக்கும் உரியவராக இருப்பதா? வீரேந்திர சேவக், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி போன்ற புதிய நட்சத்திரங்கள் மத்தியில் துருவ நட்சத்திரமாக ஜொலிப்பதா? ராகுல் திராவிட், விவிஎஸ் லட்சுமணன் போன்ற மூத்த வீரர்களும் மதிக்கும் அளவில் ஆடிவருவதா? இவ்வளவு திறமை இருந்தும் தன்னடக்கத்தின் வடிவமாகத் திகழுவதா?

இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம். சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 16 வயதில் வாயில் அடிபட்டுப் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டிய பிறகும் வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற பந்து வீச்சாளர்களை உறுதியுடன் எதிர்கொண்டு இந்திய அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியவர் சச்சின். அதற்குச் சில மாதங்கள் கழித்து இங்கிலாந்தில் சொற்ப ரன்னுக்கு மூன்று விக்கெட்கள் விழுந்த நிலையில் களம் இறங்கிய இங்கிலாந்தின் வலுவான பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடிச் சதம் அடித்து இந்தியாவைத் தோல்வியிலிருந்து மீட்டவர்.

இன்னும் பல சம்பவங்களைச் சொல்லலாம். ஷார்ஜாவில் மணல் புயலுக்கு நடுவில் பிரகாசித்த சம்பவத்தை நினைவுகூரலாம். இந்தப் பையன் ஆடுவதைப் பார்க்கும்போது நானே ஆடுவதுபோல இருக்கிறது என்று கிரிக்கெட்டின் பிதாமகர் டான் பிராட்மேன் கூறியதைச் சுட்டிக்காட்டலாம். உலகின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னைத் துவம்சம் செய்ததைக் காவியமாகப் பாடலாம்.

சிறந்த ஆட்டக்காரர்கள் எல்லோரது வாழ்விலும் இதுபோன்ற கதைகள் இருக்கும். சச்சினின் சிறப்பு என்னவென்றால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை நெடுகிலும் இத்தகைய கதைகள் நிரம்பியிருப்பதுதான். தன் ஆட்ட வாழ்வின் பெரும் பகுதியில் அவ்வளவு வலுவில்லாத ஒரு அணியின் உறுப்பினராக இருந்து ஆடும் நிலை சச்சினுக்கு வாய்த்ததுபோல வேறு யாருக்கும் வாய்த்ததில்லை. மார்க் வா, இன்சமாம் உல் ஹக், ரிக்கி பாண்டிங், ஆகியோர் சிறந்த பந்து வீச்சு என்னும் பக்க பலத்தோடு களம் இறங்கினார்கள். பிரயன் லாராவின் கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவரது அணியின் பந்து வீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லைதான். ஆனால் முதல் பத்து ஆண்டுகளில் வால்ஷ், அம்புரோஸ், போன்ற சிறந்த வீச்சாளர்கள் இருந்தார்கள். அந்த வாய்ப்பு சச்சினுக்குப் பெரும்பாலும் கிடைக்கவில்லை. அது அவர் சுமையை இன்னமும் கூட்டியது.

பந்து வீச்சில் மட்டுமின்றி, மட்டையிலும் இந்தியாவின் வலிமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 2000ஆவது ஆண்டுக்குப் பிறகுதான் லட்சுமணன், திராவிட், சேவாக் போன்றோர் அவரது சுமையைக் குறைத்தார்கள். அதுவரை இந்தியாவை சச்சின் என்னும் ஒரு நபர் கொண்ட படை என்று சற்றே மிகைப்படுத்திச் சொல்லிவிடலாம். “சச்சினை அவுட் ஆக்கிவிட்டால் மேட்சை வென்றுவிடலாம் என்பதே எங்கள் கணக்கு” என்று வாசிம் அக்ரம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இன்றும்கூட எல்லாப் பந்து வீச்சாளர்களும் பிரதானமாகக் குறிவைப்பது சச்சினின் விக்கெட்டுக்குத்தான்.

நெருக்கடி, எதிர்பார்ப்பு, திறமையான எதிரணி ஆகியவற்றுக்கு மத்தியில் ஆடிப் பழகிய சச்சினுக்கு சவால்கள் அதோடு முடிந்துவிடவில்லை. காலில், முதுகில், முழங்கையில், தோள் பட்டையில் என்று அடுக்கடுக்காய்க் காயங்கள். பெரும் பொறுப்பைச் சுமந்து போராடியதன் அடையாளங்களாகப் பல விழுப்புண்கள். வேறொருவராக இருந்திருந்தால் எப்போதோ காணாமல் போயிருக்கக்கூடிய நெருக்கடிகள் இவை. ஆனால் சச்சின் இவற்றையும் தாண்டிவந்தார். ஒவ்வொரு காயத்துக்குப் பிறகும் புதிய உத்வேகத்துடன் மீண்டு வந்தார். ஆட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்துகொண்டு தொடர்ந்து சீராக ஆடிக்கொண்டிருக்கிறார்.

அவரைப் பற்றிய விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. இன்னும் அவர் டெஸ்ட் போட்டிகளில் போதிய அளவு சதிக்கவில்லை. பாண்டிங், லாரா, இன்சமாம் அளவுக்கு அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தேடித் தரவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில், குறிப்பாக, சேஸிங் செய்யும்போது, அவரது மட்டை அவ்வளவாகப் பிரகாசிப்பதில்லை என்றெல்லாம் குற்றம் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன நெருக்கடிகளின் பின்னணியில் பார்க்கும்போது இந்தக் குறைகள் மங்கிவிடுகின்றன. தவிர, சச்சின் முதல் இன்னிங்ஸில் ஆடிய ஆட்டமே பல சமயங்களில் ஆட்டத்தின் முடிவை இந்தியாவுக்குச் சாதகமாகத் திருப்பியிருக்கிறது. மேலும் அவர் சிறப்பாக ஆடியும் பிறர் செய்த தவறுகளால் போட்டி கைவிட்டுப் போகும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. தவிர, சச்சின் களத்தில் இருக்கும்வரை நெருக்கடி எதுவும் இருக்காது. அவர் அவுட் ஆன பிறகுதான் நெருக்கடி உருவாகும். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியில் சச்சின் ஆடிவருகிறார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இவையெல்லாம் அற்புதமான அம்சங்கள்தான். ஆனால் டெண்டுல்கரின் பங்களிப்பு இவற்றைக் கடந்தது. எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் இந்தியக் கிரிக்கெட் அணியின் போராட்ட முகத்தின் அடையாளங்களாக முறையே கவாஸ்கர், கபில்தேவ் போன்றவர்கள் இருந்தார்கள். கபில்தேவின் வேகம் ஒரு புதிய கலாச்சாரத்தை இந்தியக் கிரிக்கெட்டில் தொடங்கிவைத்தது. இவர்களது பங்களிப்பு முக்கியமாந்துதான். ஆனால் உலகிற்குச் சவால் விடுமளவுக்கு இவர்களது திறமை விகசிக்கவில்லை. 1983 உலகக் கோப்பைப் போட்டியைத் தவிர வேறு எந்தச் சமயத்திலும் இந்திய அணியோ இந்திய ஆட்டக்காரரோ எந்த அணிக்கும் சிம்ம சொப்பனமாக இல்லை. அப்படிப்பட்ட நிலை வராதா என்று எணபதுகளின் இறுதியில் ரசிகர்கள் ஏங்கினார்கள்.

அப்போதுதான் சச்சின் என்னும் அதிசயப் பிறவி களத்தில் பிரவேசித்தது. கவாஸ்கரின் உறுதி, கபில்தேவின் போர்க்குணம் ஆகியவற்ரை ஒன்று திரட்டிய உருவமக அந்தப் பிரவேசம் நிகழ்ந்தது. உத்வேகத்துடனும் பன்முகத் திறமையுடனும் இந்திய அணியின் வேகத்தை வளர்த்தெடுத்து இந்திய அணியின் அடையாளமாகவே மாற்றியது இந்தப் பிரவேசம். இந்தியாவின் சராசரிக் குடிமக்களின் அபிலாஷைகளின் வெளிப்பாடாக சச்சினின் ஆட்டம் விளங்கியது. பெரிய பேட்ஸ்மேன்களே கவனமாக ஆடும் அப்துல் காதிரின் பந்துகளை மைதானத்துக்கு வெளியே அடித்து விரட்டிய 16 வயதுப் பையன் ஒரு தலைமுறையின் கனவுக்கு உயிர் கொடுத்தான். பல மட்டையாளர்களும் சந்திக்க அஞ்சிய ஷேன் வார்னின் பந்துகளை அடித்துத் துவைத்தபோது தேசம் ஆனந்தக் கூத்தாடியது. நெடுங்காலமாக அவர்கள் காண விரும்பிய காட்சி அது. புயல் வேக ஷோயிப் அக்தர்களோ பிரட் லீகளோ அவரை அசைக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் கட்டுக்கோப்பான ஆவேசத்துக்குத் தக்க பதிலடி கொடுத்ததும் மக்களின் விருப்பத்துக்கு வடிவம் கொடுத்த செயலாக அமைந்தது. போன மாதம் ஹைதராபாதில் அதிரடியாக எடுத்த 175 ரன்கள் மீண்டும் அந்தக் கனவைப் புதுப்பித்தன. சச்சின் மக்கள் நாயகனாக இருப்பதற்குக் காரணம், மக்கள் எதைப் பார்க்க ஏங்குகிறார்களோ அதை அவர் நிகழ்த்திக் காட்டுவதுதான்.

இந்த வயதிலும், இத்தனை காயங்களுக்குப் பிறகும் வேகப் பந்து வீச்சைத் துணிச்சலாக எதிர்கொண்டு ஆட அவரால் முடிகிறது. வேகப் பந்தை எதிர்த்து ஆடி லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க முடிகிறது. பவுன்சர் பந்துகளை ஹூக் செய்யும் துணிச்சலும் அப்பர் கட் அடிக்கும் துல்லியமும் அவருக்கு இப்போதும் வசப்படுகின்றன. லெக் ஸ்பின்னரின் பந்துகளில் இன்சைட் அவுட் ஷாட்டை அவர் அளவுக்குக் கச்சிதமாக யாரும் ஆடுவதில்லை. அவருக்கு முன்னால் நான் ஓய்வு பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கேப்டன் மகேந்திர சிங் தோனி சொல்லுமளவுக்கு சச்சினின் ஆட்டத் திறன் இப்போதும் மிளிர்கிறது. வாராது வந்த இந்த மாமணி இன்னும் எவ்வளவு நாள் பிரகாசிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் சச்சின் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் புதிய வரலாற்றின் வரிகளாக அமையும். அவர் எடுக்கும் ஒவ்வொரு சதமும் ஒவ்வொரு அரை சதமும் இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்குப் போடப்படும் உரமாக அமையும். நவீன கிரிக்கெட் வரலாற்ற்றின் நாயகனான சச்சின் டெண்டுல்கர் வரலாற்றின் பக்கங்களை மேலும் மேலும் அலங்கரிக்கட்டும்.

*

மகாத்மா காந்தி ஏன் உப்பை எடுத்தார்?

உப்பு. அறுசுவைகளில் ஒன்று. உணவில் இன்றியமையாதது. என்றாலும் மிகக் குறைவாகச் சேர்க்கப்படுவது. இதை வைத்துக்கொண்டு ஒரு தேசத்தையே எழுச்சி பெறச் செய்ய முடியுமா? ஒரு சாம்ராஜ்யத்தையே அசைத்துப் பார்க்க முடியுமா?

நேராகக் கடலுக்குச் செல்லுங்கள். உப்பளத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுங்கள். அந்த உப்புக்கு வரி கொடுக்காமல் எடுத்து வாருங்கள். இதைச் செய்தால் அரசு ஆட்டம் காணும். இப்படி ஒரு கருத்தை யாராவது சொல்லியிருந்தால் அனைவரும் வாய் விட்டுச் சிரித்திருப்பார்கள். ஆனால் இந்த வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் இந்திய வரலாற்றில் அலாதியானதொரு நிகழ்வாக நிலைபெற்றுள்ளது.

1930 மார்ச் 12ஆம் தேதி மாதம் மகாத்மா காந்தியடிகள் தனது சபர்மதி ஆசிரமத்தில் உப்புச் சத்தியாக்கிரக யாத்திரையைத் தொடங்கினார். மிகச் சிலர்தான் அவருடன் கிளம்பினார்கள். காந்தியடிகள் நடைப் பயணமாகத் தண்டி என்னும் இடத்தை நோக்கிச் சென்றார். அவரது பயணம் ஏப்ரல் 6 அன்று தண்டி கடற்கரையில் முடிந்தது. இந்த 25 நாள் பயணத்தின்போது வழி நெடுகிலும் மக்கள் அவரது பயணத்தில் இணைந்துகொண்டார்கள். ஆங்கிலேய அரசின் சட்டத்தை மீறி தண்டி கடற்கரையில் காந்தியடிகள் உப்பு எடுத்தது நாடெங்கிலும் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் பெரும் திரளாகச் சென்று கடற்கரையில் சட்டத்தை மீறி உப்பு எடுத்தார்கள். ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். இத்தனை பேர் இந்த இயக்கத்தில் இவ்வளவு தீவிரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஆங்கிலேய அரசு எதிர்பார்க்கவில்லை.

உப்புச் சத்தியாக்கிரகம் நடந்ததற்குச் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தான் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் வன்முறைப் பரிமாணங்களைக் கைக்கொண்ட பிறகு காந்தியே அதை முடிவுக்குக் கொண்டுவந்தார். அதன் பிறகு வேறு எந்தப் போராட்டமும் பெரும் அளவில் வெகுஜனப் போராட்டமாக உருப்பெறவில்லை. உப்புச் சத்தியாக்கிரகம்தான் அதைச் சாதித்தது. அதன் பிறகும் வேறு எந்தப் போராட்டமும் அந்த அளவு வெற்றி பெறவில்லை என்பதோடு, வெகுமக்கள் தன்மையையும் பெறவில்லை என்பதையும் இங்கு நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஆங்கிலேய அரசு தன் உப்பு வரிச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை. 1946இல் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் அமைந்த இடைக்கால அரசுதான் அந்தச் சட்டத்தை நீக்கியது. ஆனால் உப்புச் சத்தியாக்கிரகத்தின் வெற்றி ஆங்கில அரசை உலுக்கியது. வரலாறு காணாத இந்த வெகுமக்கள் போராட்டம் உலகம் முழுவதும் பெரும் செய்தியாகப் பரவியது. இதற்குக் கிடைத்த அபரிமிதமான ஆதரவைக் கண்டு அயர்ந்த ஆங்கிலேய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டுக்கு வருமாறு காந்தியை அழைத்தது. தண்டி யாத்திரை, விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாக மாறியது.

***

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை சுதேசி உணர்வினின்றும் தனித்த ஒன்றாகக் காந்தியடிகள் பார்க்கவில்லை. அவரது போராட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் அடக்கு முறை எதிர்ப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தை மறுத்துப் பன்முகத்தமையுடன் ஆழமான மாற்றங்களை விழைந்தது. அவரது போர் முறை, சுதேசி, தன்னிறைவு, சுய மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகவும் இலக்காகவும் கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பை மேற்கொண்டது. சுதேசி உணர்வையும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் இயல்பாக ஒருங்கிணைத்த காந்தியடிகளுக்கு உப்பு வரியை எதிர்த்து உப்பின் மீதான உரிமையை நிலைநாட்டுவது என்பது மிகவும் பொருத்தமானதொரு போராட்டமாக அமைந்தது. உப்பு ஒரே சமயத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஆயுதமாகவும் சுதேசி உணர்வின் வெளிப்பாடாகவும் மக்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டமாகவும் விளங்கியது காந்திக்கு மிகவும் வசதியாக அமைந்துவிட்டது.

ஆங்கில அரசு, திடீரென்று உப்புக்கு வரி விதித்துக் காந்தியின் போராட்டத்துக்கு வசதியான ஒரு ஆயுதத்தை வழங்கிவிடவில்லை. சொல்லப்போனால் காந்தியடிகள் அந்தப் போராட்டத்தைத் தொடங்கும்போது உப்பு வரிச் சட்டத்துக்குக் கிட்டத்தட்ட 100 வயது. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனி 1835இல் இந்தியாவில் தயாராகும் உப்புக்குச் சிறப்பு வரி விதித்தது. இது இங்கிலாந்தில் உற்பத்தியான உப்பை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான ஒரு நடவடிக்கை. இதனால் உப்பை இங்கே எடுத்து வந்து விற்ற கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அபரிமிதமான லாபம் கிடைத்தது.

சிப்பாய்க் கலகம் என்றும் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்றும் சொல்லப்படும் ராணுவப் போராட்டம் 1857இல் நடந்தது. அந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்ட பிறகு 1858இல் இந்தியாவை ஆளும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசே ஏற்றுக்கொண்டது. அதன் பிறகும் உப்பு வரிச் சட்டம் திரும்பப் பெறப்படவில்லை. இந்தியர்கள் தாங்கள் தயாரிக்கும் உப்புக்கு அதிக வரி கட்டிவந்தார்கள். பலர் அன்னிய உப்பை மலிவு விலைக்கு வாங்கிவந்தார்கள். எனவே திடீரென்று இந்தப் பிரச்சினை உருவாகிவிடவில்லை என்பது வெளிப்படை.

கருத்துச் சுதந்திரத்தைப் பறித்தல், சுதந்திரமாக வணிகம் செய்வதைத் தடுத்தல் என்று பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களும் பல முனைகளில் சுரண்டல்களும் நடைமுறையாக இருந்த பிரிட்டிஷ் இந்தியாவில் உப்பைப் போராட்டக் கருவியாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் காந்திக்கு எப்படித் தோன்றியது? அந்தக் கருவி வெற்றிகரமாகத் தன் இலக்கை அடையும் என்ற உறுதி அவருக்கு எப்படி ஏற்பட்டது?

போராட்டம் என்று வரும்போது நேரடியான ஆயுதப் போராட்டம் என்பது மிகவும் எளிமையானது. பலத்தைத் திரட்டு, பலத்தைப் பெருக்கு. எதிரியுடன் மோது. வெல் அல்லது வீர மரணம் அடை. இதுதான் நேரடி மோதலின் எளிமையான இலக்கணம். ஆனால் வன்முறை அல்லது உடல் சார்ந்த மோதல் தவிர்த்த போராட்டம் என்பது அத்தனை எளிமையானதல்ல. அகிம்சை என்பதை வெறும் போராட்ட வழிமுறையாக மட்டுமல்லாமல் ஒரு வாழ்க்கை முறையாகவே கண்ட காந்தியடிகள் வன்முறை தவிர்த்த போராட்டங்களின் மூலம்தான் இந்தியா விடுதலை பெற முடியும் என்று ஆழமாக நம்பினார். வன்முறை என்பது இரு புறமும் கூரான கத்தி என்பதில் அவருக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. அது மனிதத் தன்மைக்கே எதிரான ஒரு அம்சம் என்பதிலும் அவருக்கு ஆழ்ந்த தெளிவு இருந்தது. அகிம்சை முறை என்பது அவரைப் பொறுத்தவரை வெறும் போராட்ட உத்தி அல்ல. மோதினால் ஆங்கிலேயனை வெல்ல முடியாது என்னும் கணிப்பிலிருந்து பிறந்த மாற்று வழியும் அல்ல. மாறாக, எதிரியையும் நேசிக்கும் ஆன்மீக அணுகுமுறை. விடுதலை என்பதை இரத்தக் கறை படியாத, வெறுப்பின் நிழல் அண்டாத மானுட விடுதலையாகக் காந்தி உருவகித்தார். எதிரியின் மனசாட்சியைத் தொடுவதாகவும் போராடுபவர்களின் உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும் தன் போராட்ட வழிமுறைகள் அமைய வேண்டும் என்று விரும்பியதுதான் காந்தியின் தனித்தன்மை. இப்படிப்பட்ட அணுகுமுறையுடன் ஒரு போராட்டக் கருவியைக் கண்டுபிடிப்பது எளிமையான செயலல்ல. ஆனால் அதில் அசாத்தியமான எளிமையைப் பின்பற்றியது காந்தியின் மேதைமை என்று சொல்லலாம்.

கத்தி, கம்பு, துப்பாக்கி, அடிதடி போன்ற வெளிப்படையான போராட்டக் கருவிகளை விலக்கிய காந்தி, மக்களின் உணர்வில் கலந்த பண்பாட்டுக் கூறுகளின் புற அடையாடங்களைப் போர்க் கருவிகளாக மாற்றினார். நாட்டில் நிலவிய நடைமுறைப் பிரச்சினைகளை இந்தக் கருவிகளின் துணையுடன் எதிர்கொண்டார். தவிர, விடுதலை என்பது அதன் சாரத்தில் சுய தன்மையைக் காப்பது, எல்லா விதங்களிலும் சுய சார்பை எய்துவது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். இந்த அம்சங்களையெல்லாம் அவர் மிக இயல்பாகவும் மிகத் திறமையாகவும் ஒருங்கிணைத்தார். இதை மக்களிடையே கொண்டுசெல்லப் பல்வேறு குறியீடுகளை அவர் உருவாக்கி, தன் இடையறாத முயற்சிகளின் மூலம் மக்களிடையே அவற்றைப் பிரபலப்படுத்தினார். இந்த ஒருங்கிணைவிலும் குறியீடுகளின் தேர்விலும் இருந்த எளிமையும் கலாபூர்வமான அழகும் ஈடு இணையற்றவை.

ராட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அன்னியத் துணிப் புறக்கணிப்பு என்பது ஒரு அணுகுமுறை. உனக்கு வேண்டிய உடையை ஏன் நீயே நெய்துகொள்ளக் கூடாது என்பது இன்னொரு அணுகுமுறை. காந்தி முன்வைத்த இந்த அணுகுமுறை மக்களை அதிகம் கவர்ந்ததற்குக் காரணம் அது மிக எளிமையானதும் நேரடியானதுமான குறியீடாக இருந்தது என்பதுதான். இந்தக் குறியீட்டை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்த அவரால் முடிந்தது. அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு. பிறரிடம் கையேந்தாத நிலை. நமக்கு வேண்டியதை நாமே செய்துகொள்வது. அதாவது சுய வழிமுறைகள், சுய மரியாதை. இதன் சாரம் சுதந்திரம்.

உணவு, மருந்து என்று வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இந்த எளிய சூத்திரத்தைப் பொருத்திக் காட்ட ராட்டை என்ற குறியீடு காந்திக்கு உதவியது. ராட்டை என்பது மலிவாக ஆடைகளைத் தயாரித்துக்கொள்ளும் உத்தி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அதே சமயம் தன்னிறைவின், விடுதலையின் குறியீடு. ஹரிஜன ஆலயப் பிரவேசம், விதவையர் மறுமணம், கிராமத் தன்னிறைவு ஆகியவையும் அப்படிப்பட்டவைதாம்.

இதே போன்றதொரு குறியீடுதான் உப்பு. முன்பே குறிப்பிட்டதுபோல், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே உப்புக்கு வரி விதிக்கப்பட்டிருந்தது. உப்பு மட்டுமல்ல. கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இதர ஆங்கிலேய வர்த்தகர்களுக்கும் பலன் தரும் வண்ணம் இந்தியச் சட்டங்களில் பல அம்சங்கள் ஆங்கிலேயரால் புகுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் கையில் எடுக்காமல் காந்தி உப்பைத் தன் போராட்டக் கருவியாக மாற்றினார். விடுதலைப் போரின் குறியீடுகளில் ஒன்றாக மாற்றினார். மிக வெற்றிகரமான குறியீடுகளில் ஒன்றாகக் காலம் அதை மாற்றிக் காட்டியது என்றால் அதற்குக் காரணம், காந்தியின் தேர்வில் இருந்த எளிமையும் மக்களின் ஆன்மாவோடு உறவாடும் தன்மையும்தான்.

வெள்ளையனை அடித்து விரட்ட வேண்டும் என்ற வேகத்தோடு ரத்தக் கொதிப்பு ஏறியிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் பலரை அகிம்சாவாதிகளாக மாற்றிய காந்திய ரசவாதம் இங்கும் வெற்றிகரமாக இயங்கியது. காரணம், உப்பு என்னும் குறீயீட்டின் எளிமையும் வலிமையும். உப்பு என்பது உணவின் இன்றியமையாத அம்சம். அறுசுவைகளில் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டாலும் மிக முக்கியமானதாகக் கருதப்படும் சுவை இது. எனவே இது உணவுக்கே அடையாளமாகக் கருதப்படுவதில் வியப்பில்லை. தின்ற சோற்றுக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்னும் கருத்தைத் தின்ற உப்புக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்பதாக வெளிப்படுத்தும் இந்தியச் சமூகத்தை உப்பின் குறியீட்டுத் தன்மை கவர்ந்ததில் வியப்பில்லை. இந்தியாவின் பெஉம்பாலான மொழிகளில் உப்பு என்பது உணவு, நம்றியறிதல், விசுவாசம், சுரணை ஆகியவற்றின் குறீயீடாக விளங்குவதைப் பார்க்க முடிகிறது (இந்தியில் துரோகி என்பதை நமக்ஹராம் என்பார்கள்; நமக் என்றால் உப்பு என்று பொருள்).

உப்பைச் சுரணையின் குறியீடாகக் கண்டு பழகிய இந்திய மக்களுக்கு அதைத் தங்கள் சுய மரியாதையின் குறியீடாகப் பார்ப்பது மிக எளிதாக இருந்தது. எனவேதான் அந்நிய அரசுக்கு வரி கொடாமல் உப்பை எடுத்து இந்த நாட்டில் என் உரிமையை நிலைநாட்டப்போகிறேன் என்று ஒரு முதியவர் சொன்னதும் நாங்களும் வருகிறோம் என்று லட்சக்கணக்கான மக்கள் கூடவே சென்றார்கள். நாங்களும் உப்புப் போட்டுத்தானே சாப்பிடுகிறோம், எங்களுக்கு மட்டும் சுரணை கிடையாதா என்பதே இந்த எழுச்சிக்கு ஆதாரமான உணர்வு நிலை. இந்த உணர்வு மக்களின் மன ஆழங்களில் வலுவாக வேரூன்றிய உணர்வு. இதைத் தட்டி எழுப்பியதுதான் அந்தக் கிழவரின் மேதைமை.

மேதைமை என்பதுகூடச் சரியில்லை. இந்தியாவை, அதன் மரபை, பண்பாட்டின் ஆழத்தைப் புரிந்துகொளவதில் அவருக்கு இருந்த ஆழம் என்று சொல்வதே பொருத்தமானது. எந்த நரம்பை எப்படிச் சுண்டினால் எந்த ஸ்வரம் எப்படி எழும் என்பதைத் துல்லியமாக உணர்ந்த இசைக் கலைஞனின் தேர்ச்சியை ஒத்த திறம் இது. இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்து ஆழமாகப் புரிந்துகொண்ட ஒரு மனிதருக்குத்தான் இது சாத்தியப்படும். காந்தியடிகளுக்கு இது சாத்தியப்பட்டதில் வியப்பு என்ன இருக்கிறது.

***

நீ விரும்பும் மாறுதலாக முதலில் நீ மாறு என்பது காந்தியடிகளின் மிகப் பிரபலமான கூற்றுக்களில் ஒன்று. சபர்மதி ஆசிரமத்தில் நடைப் பயணத்தைத் தொடங்கிய காந்திக்குத் துணையாக இருந்தது தன் போராட்டக் கருவியின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான். மக்கள் உப்பை எடுக்கட்டும் என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்று அவர் காத்திருக்கவில்லை. விளைவுகளைப் பார்த்துக்கொண்டு வியூகங்களை மெருகேற்றும் தந்திரங்களை அவர் கையாளவில்லை. வரி கொடாமல் உப்பை எடுப்பது சுய மரியாதையின் அடையாளம், விடுதலை உணர்வின் வெளிப்படு என்று நீ கருதுகிறாயா? முதலில் நீ அதைச் செய் என்று காந்தியின் அந்தராத்மா அவருக்குக் கட்டளையிட்டது. அவர் கிளம்பினார். தேசம் அவர் பின்னால் சென்றது. வரலாறு உருவாயிற்று.
***