ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆட்டக்காரரும் கிரிக்கெட் எழுத்தாளருமான இயான் சாப்பல் 2007இல் இப்படி எழுதினார்:
சச்சின் டெண்டுல்கர் கண்ணாடி முன் நின்று, “கண்ணாடியே, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்” என்று கேட்க வேண்டும். “நீ ஓய்வு பெற வேண்டும்” என்று அவரது பிம்பம் சொல்லும்.
கிரிக்கெட் உலகமே டெண்டுல்கர் புகழ்பாடிவரும் இன்றைய சூழலில் இயான் சாப்பலின் கருத்தைக் கேட்கையில் வினோதமாக இருக்கும். இப்படி அவர் எழுதியதன் பின்னணியை முதலில் பார்ப்போம். 2007இல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா முதல் சுற்றிலேயே தோற்றுத் திரும்பியிருந்த தருணம் அது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபமாக இருந்தார்கள் அப்போது அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சாப்பல் அணியின் மூத்த ஆட்டக்காரர்களைக் குறைகூறிய செய்திகள் கசிந்த நேரம் அது. டெண்டுல்கர், சௌரவ் காங்குலி, ராகுல் திராவிட் போன்ற மூத்த வீரர்கள் விலகி இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்த சமயம். டெண்டுல்கரின் தனிப்பட்ட ஆட்டமும் அவ்வளவு சிறப்பாக இல்லாமலிருந்த காலகட்டம்.
இந்த மூன்று ஆண்டுகளில் பல விஷயங்கள் நடந்துவிட்டன. இங்கிலாந்துக்குச் சென்று ஒரு நாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி நன்றாக விளையாடியது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவிலும் இந்தியா சிறப்பாகவே விளையாடியது. வேகப் பந்து வீச்சுக்குத் தோதான பெர்த் ஆடுகளத்தில் நான்கே நாட்களில் ஆஸி அணியை வென்றது. இந்த ஆட்டங்களில் டெண்டுல்கரின் பங்கு கணிசமாக இருந்தது (இங்கிலாந்திலும் பெர்த்திலும் அவர் சதங்கள் அடித்தார்). ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியதிலும் டெண்டுல்கரின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. 2008இல் இங்லிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 387 ரன்களைத் துரத்தி எடுத்த சாதனையில் சதம் அடித்த சச்சினுக்கு மிக முக்கியமான பங்கு இருந்தது. போன ஆண்டு ஆஸி அணிக்கெதிரான ஒருநாள் ஆட்டத்தில் 175 ரன் எடுத்து எதிரணி கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் அபரிமிதமான பாராட்டைப் பெற்றார் சச்சின்.
சச்சின் டெண்டுல்கர் இன்று கிரிக்கெட்டின் காவிய நாயகன் என்னும் அந்தஸ்தைப் பெற்றுவிட்டார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் அதிக ரன்களைக் குவித்தவர் அவர். இரு ரகங்களிலும் அதிக பட்ச சதங்களைக் குவித்தவர். உலகிலேயே அதிக அனுபவம் உள்ள ஆட்டக்காரர். எல்லாவற்றுக்க்கும் மேலாக, ஒரு நாள் போட்டிகளில் 200 ரன் எடுத்த ஒரே மட்டையாளர் என்னும் பெருமையைச் சமீபத்தில் பெற்றிருக்கிறார். நாடாளுமன்றம் அவரைப் பாராட்டுகிறது. சினிமா உலகம் அவர் மீது புகழுரைகளைக் குவிக்கிறது. மக்கள் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்கள். இவர் டான் பிராட்மேனைவிடவும் சிறந்த வீரர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகிறார்.
டெண்டுல்கர் போன்ற ஒரு ஆட்டக்காரர் சிறப்பாக ஆடினார் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் ஆட ஆரம்பித்துப் பதினெட்டு ஆண்டுகள் கழிந்த பிறகு ஆட்டத்தில் சரளமும் துல்லியமும் குறைந்துவிட்டது, இப்போதே ஓய்வு பெறுவது நல்லது என்றும் விமர்சனங்கள் எழுந்த பிறகு ஒரு மட்டையாளர் புத்துயிர் பெறுவது, அதுவும் பிரமிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்துவது நம்ப முடியாத நிகழ்வு. அதை நிகழ்த்தியிருப்பதுதான் சச்சினின் மாபெரும் சாதனை.
ஆட்டத்தின் மீதான அபரிமிதமான காதல் (கிட்டத்தட்ட பக்தி என்றும் சொல்லலாம்), விடாமல் போராடும் குணம், எந்த வயதிலும் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் அணுகுமுறை, விமர்சனங்களைக் கண்டு உணர்ச்சிவசப்படாத பக்குவம், வெற்றியின் சுமை தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ளும் நிதானம், காலத்தின் ஓட்டத்தை மறுதலிக்கும் எதிர் நீச்சல் ஆகிய பண்புகள்தான் சச்சினின் நீடித்த வெற்றிக்கும் எப்போதும் வளர் முகமாக இருக்கும் அவரது திறமைக்கும் காரணம்.
இயான் சாப்பல் சச்சினை ஓய்வு பெறச் சொன்னபோது அவரது ஆட்டத்தை விமர்சித்தவர்கள்கூட அந்த ‘அறிவுரை’யை மிகையான கூற்றாகவே கருதினார்கள். டெண்டுல்கர் போன்ற மேதைமை கொண்ட ஒரு ஆட்டக்காரரைச் சில தோல்விகளை வைத்து எடை போடக் கூடாது என்றும் எப்போது ஓய்வுபெறுவது என்பது அவருக்கே தெரியும் என்றும் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான விவியன் ரிச்சர்ட்ஸ், ஜெஃப் பாய்காட், சுனில் கவாஸ்கர் போன்றோர் கூறினார்கள். இன்றைக்கு ஓய்வுபெற்றாலும்கூட அவர் கிரிக்கெட்டின் காவிய நாயகன்தான் (லெஜெண்ட்) என்று சொல்லுமளவுக்கு சச்சின் ஏற்கனவே சாதித்துவிட்டார் என்றார் ரிச்சர்ட்ஸ். பீட்டர் ரூபோக் போன்ற கிரிக்கெட் விமர்சகர்களும் இதையே கூறினார்கள். இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவும் சக ஆட்டக்காரர்களும் அவர்மீது முழு நம்பிக்கை வைத்தார்கள். சச்சின் மீண்டுவந்தார். தன் ஆட்டத்தை மறுகண்டுபிடிப்புச் செய்தார். புத்திளமையோடு ஆட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறார்.
மட்டை வீச்சில் வரப்பிரசாதம் பெற்றவர் என்று சொல்லத்தக்க திறமை படைத்தவர்தான் என்றாலும் தாக்குப்பிடிக்கவும் தொடர்ந்து ஆடவும் அவர் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. முதுகு வலி, கால் விரலில் எலும்பு முறிவு, முழங்கை வலி, தோள்பட்டைச் சதை கிழிசல் என்று உடல் முழுவதும் விழுப்புண்கள் தாங்கிய சச்சின் தொடர்ந்து ஆடுவதற்கே சிரமப்பட்ட காலம் உண்டு. குறிப்பாக 2005இல் டென்னிஸ் எல்போ என்று சொல்லப்படும் முழங்கை வலி அவரது ஆட்டத்தையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடுமோ என்ற அளவுக்கு அச்சுறுத்தியது. “கையில் தேநீர்க் கோப்பையைத் தூக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டேன்” என்று டெண்டுல்கரே சொல்லியிருக்கிறார்.
உடல் காயம் இப்படி இருக்க, மனதளவிலும் நிறைய காயங்கள். கடும் நிர்ப்பந்தம், அசாத்தியமான எதிர்பார்பு அகியவற்றைச் சுமந்து ஆட வேண்டியிருப்பது ஒரு புறம் இருக்க, 1999இல் அவர் உலகக் கோப்பை ஆடிக்கொண்டிருந்தபோது அவர் அப்பா இறந்துபோனார். 2006-07 ஆண்டுகளில் அவர் விரைவில் அவுட் ஆகிக்கொண்டிருந்த சில சமயங்களில் ஆளுக்கு ஆள் அவருக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள். எப்படிக் காலை நகர்த்த வேண்டும் என்றெல்லாம் அந்த மேதைக்குப் பாடம் எடுத்தார்கள் சில விமர்சகர்கள். அவரது சொந்த ஊரான மும்பையில் ஒரு டெஸ்டில் இந்தியாவை வெற்றிபெற வைக்க அவரால் முடியாமல்போனபோது ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள். மனதிலும் உடலிலும் பட்ட இத்தனை காயங்களையும் தாண்டி வந்ததுதான் அவரது கிரிக்கெட் வாழ்வின் பயணம்.
இன்று டெண்டுல்கர் தன் இளமைக் காலத்தில் ஆடியதுபோலச் சரளமாக ஆடுவதாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். அவர் தன் திறமையின் உச்சத்தில் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். கடந்த 12 மாதங்களில் சர்வதேசப் போட்டிகளில் 10 சதங்கள் அடித்திருக்கிறார். அதில் நான்கு டெஸ்ட் சதங்கள் தொடர்ந்து நான்கு டெஸ்ட்களில் அடித்தவை. ஒரு நாள் போட்டிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை 150 ஓட்டங்களைக் கடந்திருக்கிறார்.
எடுக்கும் ஓட்டங்களை விட அவற்றை எடுக்கும் விதம் முக்கியமானது. டெண்டுல்கர் எல்லா விதமான ஆடுகளங்களிலும் எல்லா விதமான பந்து வீச்சாளர்களையும் எதிர்கொண்டு சிறப்பாக ஆடிவருகிறார். எகிறும் பந்துகளைத் தைரியமாக ஹூக் செய்வது அல்லது சற்றே பின்னால் வளைந்து அப்பர் கட் அடிப்பது, கால் திசையில் வீசப்படும் இடப் புறச் சுழல் பந்தை ஏறி வந்து இன்சைட் அவுட் ஷாட் அடிப்பது, வலப் புறத்தில் அதிகத் தடுப்பாளர்கள் இருக்கும்போது வலப்புறப் பந்துகளை வேகமாக நகர்ந்து இடப்புறம் திருப்புவது என்று பல விதங்களில் அவரது ஆட்டம் மூச்சை நிறுத்தும் அளவுக்கு அபாரமான உத்திகளுடனும் செய் நேர்த்தியுடனும் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் 50 சதங்கள் என்பது இப்போது அவருக்குக் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டது (இப்போது 47). இன்னும் ஒரு இன்னிங்ஸில் பிரையன் லாரா அடித்த 400 ஓட்டங்களைத் தாண்ட வேண்டிய சாதனை மிச்சமிருக்கிறது என்று கவாஸ்கர் போன்றவர்கள் கூறிவருகிறார்கள்.
இன்னும் எவ்வளவு சாதனைகள் படைக்கிறார் என்பது முக்கியமல்ல. அவ்வளவுதான் நீ காலி என்று சொல்லப்பட்ட ஒருவர் புத்துயிர் பெற்று ஆட்டத்தின் சிகரத்தைத் தொடுவதும் புதிய சிகரங்களை உருவாக்குவதும் அசாத்தியமானவை. இந்த அசாத்தியத்தைத் தனக்கே உரிய உறுதியுடனும் நளினத்துடனும் தன்னடக்கத்துடனும் சாத்தியமாக்கிவருவதே டெண்டுல்கரின் தனிப் பெருமை.
இன்று கற்பனை செய்ய முடியாத உயரத்தில் இருக்கும் சச்சினைப் பார்த்து இயான் சாப்பல் என்ன சொல்வார்? ஒருவேளை அவர் கண்னாடி முன்னால் நின்றால் அந்தக் கண்ணாடியின் பிம்பம் என்ன சொல்லும்?
“நீ எழுதுவதை நிறுத்திக்கொள்” என்று சொல்லக்கூடும்.
*
Dear sir,
ReplyDeleteGreat work .... Sachin is Sachin ... always ahead!
N.Ramkumar