எல்லைக் கோட்டுக்கு அருகே நின்றுகொண்டிருந்த அந்தப் பையன் கோட்டைத் தாண்டி வந்த பந்துகளை ஆர்வமாகப் பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்தான். அதை விட ஆர்வமாகப் போட்டியைக் கவனித்துக்கொண்டிருந்தான். 1983இல் தனக்குப் பத்து வயதாக இருக்கும்போது இந்திய அணி உலகக் கோப்பையை வாங்குவதை ஆவலுடன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு இப்போதும் அதுபோல நடக்கும் என்ற நம்பிக்கை. அவன் பந்து பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்த மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணியுடன் அரை இறுதிப் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தது. 83இலும் இதே அணிகள் அரை இறுதியில் மோதின. இந்திய அணியின் முகம்மது அசாருத்தீன் (65), கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (31), கபில்தேவ் (30) ஆகியோர் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி ஆடினர். இந்தியா 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. பந்து பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்த அந்தப் பையன் ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கினான்.
இருபத்து மூன்றரை ஆண்டுகள் கழித்து அந்தப் பையன் அதே மைதானத்தில் கோப்பையை ஏந்தியபடி நின்றான். அணியினர் அவனைத் தோளில் தூக்கிச் சுமந்தார்கள். ஆனந்தக் கண்ணீர் வழிய, “என் வாழ்க்கையின் பெருமை மிகுந்த தருணம் இது” என்றான்.
87இல் தன் கண் முன்னால் நிகழ்ந்த அந்தத் தோல்வியைக் கண்டு வேதனைப்பட்ட அந்தப் பையன் - சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் - அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே இந்திய அணியில் இடம்பெற்றுவிட்டான். அதிலிருந்து இந்தியாவின் கிரிக்கெட் கனவுகளின் அடையாளமாகத் திகழ்கிறான். குறிப்பாக உலகக் கோப்பைப் போட்டிகளில். 1992முதல் தற்போதுவரை மொத்தம் ஆறு உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் ஆடியிருக்கிறார். 2007ஆம் ஆண்டு தவிர ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பைப் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறார். இருமுறை தொடர் நாயகன் விருதும் வாங்கியிருக்கிறார். இந்த முறையும் அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்த திலகரத்னே தில்ஷனைவிட (இலங்கை அணி) 18 ஓட்டங்கள் மட்டுமே குறைவாக எடுத்திருக்கிறார் (482). கடந்த 22 ஆண்டுகளில் இந்தியக் கிரிக்கெட்டின் முக்கியமான தருணங்கள் அனைத்தும் சச்சினோடு பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கின்றன. இந்தக் கோப்பை சச்சினுக்காக என்று அணியின் இளம் வீரர்கள் சொன்னதை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். தொடர்ந்து தங்களுக்கு உத்வேகம் அளித்துவரும் நாயகனைச் சுமந்தபடி அணியினர் வெற்றிக் கூத்தாடினார்கள். “20 ஆண்டுகளாக நாட்டின் எதிர்பார்ப்பு என்ற சுமையை அவர் சுமந்துவருகிறார். இப்போது நாங்கள் அவரைச் சுமக்க வேண்டிய நேரம் இது” என்று விராட் கோஹ்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறினார்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியிடம் வந்து சேர்ந்திருக்கும் அந்தக் கோப்பை சச்சின் டெண்டுல்கரின் கனவு மட்டுமல்ல. இந்திய தேசத்தின் கனவு. 83இலிருந்து ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியின்போதும் இந்த முறை கோப்பை இந்தியாவுக்குத்தான் என்ற கனவு புதுப்பிக்கப்படும். தேசம் பரபரப்புக் கொள்ளும். அதற்கேற்ப இந்திய அணி 87, 96, 2003 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதி வரை வந்தது. 2003இல் இறுதிப் போட்டிவரை வந்தது. ஆனால் கோப்பை வசப்படவில்லை. ஏப்ரல் 2ஆம் தேதியன்று வரலாறு திரும்பியது. கோப்பை இந்திய அணியின் கைக்கு வந்தது.
**
இந்தியா உலகின் சிறந்த அணி என்று சொல்லத்தக்க நிலையில் என்றைக்குமே இருந்ததில்லை. கறாராகப் பார்த்தால் இப்போதும் இல்லை. ஆனால் உலகின் சிறந்த அணிகளை வலுவாக எதிர்த்து நிற்கக்கூடிய அணி என்று சொல்லலாம். பந்து வீச்சிலும் தடுப்பு அரண் செயல்பாட்டிலும் இந்தியாவுக்கு இருக்கும் பலவீனங்கள் அந்த அனியைத் தலை சிறந்த அணி என்று சொல்ல விடாமல் தடுக்கின்றன. ஆனால் மட்டையின் வலுவால் இந்த பலவீனங்களைத் தாண்டிவரும் திறனும் தன்னம்பிக்கையும் இந்தியாவுக்கு இருக்கிறது. அந்தத் திறமைதான் இந்தியாவை டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் முதல் இடத்தில் நிறுத்தியிருக்கிறது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இது கண்கூடாகத் தெரிந்தது. பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 370 ஓட்டங்களை எடுத்தது. ஆனால் பங்களாதேஷ் போன்ற ஒப்பீட்டளவில் பலவீனமான அணியை 284 ஓட்டங்கள் எடுக்க அதன் பலவீனமான பந்து வீச்சு அனுமதித்தது. இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் 338 ஓட்டங்கள் எடுத்தது. ஆனால் தடுப்பு அரணில் விழுந்த ஓட்டைகளாலும் பந்து வீச்சின் போதாமைகளாலும் இங்கிலாந்து 338 ஓட்டங்களைத் தொட்டது. யாருக்கும் வெற்றி, தோல்வி இன்றிப் போட்டி முடிந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 296 ஓட்டங்களைக் குவித்தது. மீண்டும் பந்து வீச்சு கைவிட்டது. இந்தியா தோற்றது. ஆக, இந்தியாவின் ஆதாரமான பிரச்சினைகள் - மோசமான தடுப்பு, பலவீனமான பந்து வீச்சு - இன்னமும் தீரவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.
இப்படிச் சில தடுமாற்றங்களைத் தாண்டிக் கால் இறுதிக்கு வந்த இந்தியா வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். இந்தியாவின் பந்து வீச்சு பலவீனமானதுதான். ஆனால் ஜாகீர் கானும் ஹர்பஜன் சிங்கும் நல்ல வீச்சாளர்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் துணையாகப் பந்து வீச யாரும் இல்லாமல் இருந்தது. முதல் சுற்றுப் போட்டிகளின் கடைசி ஆட்டத்தில் அணியில் சேர்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் என்னும் சுழல் பந்து வீச்சாளர், சிங்குக்குத் தேவையான துணையை வழங்கினார். பகுதி நேர வீச்சாளரான யுவராஜ் சிங்கும் நல்ல முறையில் வீசினார். தடுப்பு ஆட்டத்திலும் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோஹ்லி ஆகியோர் புதிய வரையறைகளை உருவாகினர். இந்தியாவின் பலவீனங்கள் மறைய ஆரம்பித்தன. அதன் தன்னம்பிக்கை கூட ஆரம்பித்தது. வலுவான மட்டையாளர்களைக் கொண்ட ஆஸி அணியை 260 ஓட்டங்களுக்குள் முடக்கியது. பிறகு அந்த ஓட்டங்களைப் பதற்றமில்லாமல் எடுத்து முடித்தது.
அடுத்து அரை இறுதி என்னும் சவால். ஆகிவந்த எதிரியான பாகிஸ்தான் புதிய உத்வேகத்துடன் களத்தில் நிற்கிறது. சூறாவளி வேகத்தில் ஆட்டத்தைத் தொடங்கிய வீரேந்திர சேவாக் விரைவில் ஆட்டமிழந்துவிட்டார். ஓட்டங்களை வேகமாக எடுத்தாலும் சச்சின் சரளமாக ஆடவில்லை. ஆனாலும் அணியினரின் ஒட்டுமொத்த முயற்சியும் பாகிஸ்தானின் மோசமான தடுப்பு ஆட்டமும் சேர்ந்து 260 ஓட்டங்களை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தன. மட்டை வீச்சு சோபிக்காத நாட்களில் ஒன்றாகவே இதைக் கருத வேண்டும். ஆனால் பாகிஸ்தானால் இந்த ஓட்டங்களை எடுக்க முடியவில்லை. துல்லியமான பந்து வீச்சு மற்றும் தடுப்புத் திறனின் மூலம் இந்தியா வென்றது. அதன் பலவீனங்கள் மறைய ஆரம்பித்ததன் இன்னொரு அடையாளம் இது. 85 ஓட்டங்கள் எடுத்த டெண்டுல்கர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்னும் வரலாறு மாற்றப்படாமல் நிற்கிறது. டெண்டுல்கர் கொடுத்த பிடிகளை பாகிஸ்தான் கைப்பற்றியிருந்தால் இந்தியா இந்த அளவுக்கு ஓட்டங்களை எடுத்திருக்காது என்று வாதிடலாம். ஆனால் அவருக்குப் பதில் கௌதம் காம்பீரோ யுவராஜ் சிங்கோ மகேந்திர சிங் தோனியோ அந்த ஓட்டங்களை எடுத்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. காரணம், இப்போதெல்லாம் சச்சின் விரைவில் அவுட் ஆகும்போது அணியின் பொறுப்புணர்வு அதிகமாகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இதைப் பார்க்க முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியிலும் சச்சின் அரை சதம் எடுத்து ஆட்டமிழந்தபோது அணி பாதுகாப்பான இடத்தை எட்டியிருக்கவில்லை. காம்பீர், கோஹ்லி, யுவராஜ், ரெய்னா ஆகியோர் மிகவும் பொறுப்புடன் ஆடி வென்றனர்.
இறுதிப் போட்டியிலும் அதுதான் நடந்தது. மிக அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் - அதிலும் அந்த ஸ்ட்ரெய்ட் டிரைவ் இன்னும் கண்ணில் நிற்கிறது - 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆனால் காம்பீர், கோஹ்லி, தோனி ஆகியோர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடி முடித்தார்கள். வரலாறு திரும்பியது. கோப்பை வசமானது. உலகக் கோப்பைப் போட்டிகளில் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளில் இதுவரை துரத்தி எடுத்த ஓட்டங்களில் இதுதான் (275) அதிகபட்ச ஓட்டம் என்னும் புதிய வரலாறு எழுதப்பட்டது. போட்டியை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை என்னும் வரலாறும் திருத்தி எழுதப்பட்டது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை இந்தியாவின் வசமானது. தேசமே இதைக் கொண்டாடியது. எந்த வாங்கடே மைதானத்தில் இந்தியா பெற்ற தோல்வியை எண்ணி சச்சின் சிறு வயதில் வருந்தினாரோ அதே மைதானத்தில் அவர் ஆனந்தக் கூத்தாடினார்.
வென்ற பிறகு ஊடகங்களிடம் பேசிய தோனி, இந்த வெற்றிக்குக் காரணம் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, சௌரவ் கங்கூலி, ராகுல் திராவிட் ஆகிய நால்வர் போட்ட விதைதான் என்று மறக்காமல் குறிப்பிட்டார். அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் பங்கை டெண்டுல்கர் பாராட்டினார். ஒரு ஆண்டுக்கு முன்பே அணி இந்த இறுதிப் போட்டிக்கு மனத்தளவில் தயாராக இருந்ததை அணியின் உளவியல் ஆலோசகர் பாடி உப்டன் குறிப்பிட்டார். இந்த முறை கோப்பையைத் தவறவிடுவதில்லை எனற உறுதி ஒவ்வொருவரிடத்திலும் தெரிந்தது. அணியின் முன்னேற்பாடுகள் நன்றாகவே இருந்தன. பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியையும் நியூஸிலாந்து அணியையும் எளிதாகத் தோற்கடித்தது. ஒரு நாள் போட்டிகளில் துல்லியமான வீச்சின் மூலம் எதிரணியைக் கட்டுப்படுத்தக்கூடிய பிரவீண் குமாருக்குக் காயம் பட்டு அவர் அணியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை பின்னடைவை ஏற்படுத்தினாலும் அணி சோர்ந்துவிடவில்லை. தற்செயலாகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஸ்ரீஷாந்த் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றாலும் முனாஃப் படேல் ஓரள்வு அதை ஈடுகட்டினார். சுழலர் பியுஷ் சாவ்லா ஏமாற்றம் அளித்தாலும் யுவராஜ் ஆறுதல் அளித்தார். மட்டைகளும் உற்சாகமாகச் சுழன்றன.
**
வெற்றி பெருமைக்குரியதுதான். கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால் அது சில குறைபாடுகளை மறைத்துவிடும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை ஆஷிஷ் நெஹ்ராவுக்குக் கொடுத்தது பற்றி விமர்சனங்கள் எழுந்தன. அஸ்வினைச் சேர்க்காதது தவறு என்றும் விமர்சகர்கள் அழுத்தமாகக் கூறினார்கள். முதல் சுற்றின் முடிவில் களம் இறக்கப்பட்ட அஸ்வின் கால் இறுதிப் போட்டியிலும் அணியில் இடம்பெற்றார். சிறப்பாகப் பந்து வீசிய அவரை மொஹாலியில் அரை இறுதியில் களம் இறக்கவில்லை. அவருக்குப் பதில் வேகப் பந்து வீச்சாளர் நெஹ்ரா சேர்க்கப்பட்டார். நெஹ்ரா அந்தப் போட்ட்யில் நன்றாகவே போட்டார் என்றாலும் பாகிஸ்தான் சுழலர்களுக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்தபோது இந்தியா அஸ்வினை விலக்கியது தவறு என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆடுகளத்தைத் தவறாக எடை போட்டுவிட்டோம் என்று தோனி பிறகு ஒப்புக்கொண்டார். ஆனால் அதே தவறை இறுதிப் போட்டியிலும் செய்தார். மீண்டும் அஸ்வின் விலக்கப்பட்டு ஸ்ரீஷாந்த் சேர்க்கப்பட்டார். அவர் தன்னால் முடிந்தவரை மோசமாகப் பந்து வீசினார். அவருக்கான பத்து ஓவர்களை முழுமையாகப் போட தோனி அனுமதிக்கவில்லை. அவ்வளவு மோசமாக வீசினார். தோனி 91 ஓட்டங்கள் எடுத்து வென்றுவிட்டதால் இந்தத் தவறை நியாயப்படுத்திவிட முடியாது. வெற்றிக்கான செயல்பாடு என்பது போட்டிக்கான தயாரிப்புகளிலிருந்தே தொடங்குகிறது. மிக முக்கியமான போட்டியில் தவறான முடிவுகளை எடுத்தது அணி நிர்வாகம் செய்த தவறு. வெற்றி என்னும் ஜிகினாத் தாளை வைத்து இந்தத் தவறுகளை மூடி மறைக்காமல் இருப்பது அணியின் எதிர்காலத்துக்கு நல்லது.
அணி பெருமை கொள்வதற்கான காரணங்களும் இருக்கின்றன. இறுதிப் போட்டியில் 6ஆவது ஓவரிலேயே 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழப்பு என்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் மன உறுதியும் விடா முயற்சியும் பாராட்டத்தக்கவை. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி ஒரே ஒரு முறைதான் தோற்றிருக்கிறது என்பதும் பாராட்டத்தக்கதுதான். தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுப்போன அந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் இடத்திற்கு எளிதாகப் போய்ச் சேர்ந்துவிட்டது. தான் செய்த சில தவறுகளாலேயே அந்த நிலையிலிருந்து சறுக்கியது. வெற்றி தோல்வியின்றி முடிந்த போட்டியிலும் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. ஒரு சில தவறுகளே அதன் நிலையைப் பலவீனமாக்கின. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய வலுவான அணிகள் மோசமான தோல்விகளைத் தழுவின. ஆனால் இந்திய அணியை எந்த அணியும் நிமிர முடியாமல் அடிக்கவில்லை. இலங்கை அணியின் நிலையும் அதுவே.
20-20 போட்டிகள் வரவேற்புப் பெற்றுவரும் இன்றைய சூழலில் ஒரு நாள் போட்டிகளின் வசீகரத்தை மீட்டுத் தந்த போட்டித் தொடர் இது என்று சொல்லலாம். சில பிசிறுகளை விட்டுவிட்டுப் பார்த்தால் இந்தத் தொடர் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆளுமையை அழுத்தமாகவே பறைசாற்றியிருக்கிறது. அரை இறுதியில் ஆடிய நான்கு அணிகளில் மூன்று ஆசிய அணிகள் என்பதை வைத்துப் பார்க்கும்போது கிரிக்கெட்டின் மையம் இடம் மாறுவதை உணரலாம்.
இந்தியா கோப்பையை வென்றது கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு தேசத்தைப் பெருமைப்படுத்தக்கூடிய நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு ஆட்டத்துக்கு இது பெரிய அனுகூலம் என்பதிலும் சந்தேகமில்லை.
*
No comments:
Post a Comment