Saturday, June 11, 2011

டெஸ்ட் கிரிக்கெட்: நிலை கொள்ளும் அழகியல்

ஒரு நாள் ஆட்டங்கள் பிரபலமடையத் தொடங்கியபோது இனி டெஸ்ட் போட்டிகளின் நிலை அவ்வளவுதான் என்று சொன்னார்கள். 20-20 போட்டிகள் வந்தபோதும் அதையேதான் சொன்னார்கள். விரைவு உணவு போல, மூன்று மணி நேர சினிமா போல, கால்பந்து முதலான ஆட்டங்கள் போல, விறுவிறுப்பாக நடக்கும் மூன்று மணிநேரப் பரபரப்புக்கு முன் ஐந்து நாள் ஆட்டம் எடுபடாது என்று சில பண்டிதர்கள் ஆரூடம் சொன்னார்கள். சூறாவளிபோலத் தாக்கிய 20 ஓவர் போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட்டை அடித்துச் சென்றுவிடுமோ என்று மரபார்ந்த கிரிக்கெட்டின் காதலர்கள் பயந்தார்கள். ஆனால் கிரிக்கெட்டின் செவ்வியல் வடிவமான டெஸ்ட் போட்டியின் மதிப்போ வசீகரமோ குறையவில்லை என்பதைக் கடந்த இரு ஆண்டுகளில் நடந்துவரும் போட்டிகள் நிரூபிக்கின்றன. அதுவும் அண்மையில் நடந்து முடிந்த ஆஷஸ் (ஆஸ்திரேலியா - இங்கிலாந்து) டெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்கா - இந்தியா டெஸ்ட் தொடர் ஆகியவை டெஸ்ட் போட்டிகளின் வசீகரம் கூடியிருப்பதை உணர்த்தியிருக்கின்றன.

அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகும் விரைவு உணவுகள் விரைவான வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும் தலை வாழை இலை போட்டிப் பரிமாறப்படும் விஸ்தாரமான உணவு தன் சுவையையும் வசீகரத்தையும் இழந்துவிடவில்லை. உடனடி காப்பி வந்த பிறகும் வடிகட்டியில் பொறுமையாக இறங்கும் ஃபில்டர் காப்பிக்கான மதிப்பும் வசீகரமும் குறைந்துவிடவில்லை. வாழ்வின் எல்லா அம்சங்களையும்போலவே கிரிக்கெட்டும் காலத்திற்கேற்ப மாறிவருகிறது. ஒரு காலத்தில் இரண்டு இன்னிங்ஸ்களும் முடியும்வரை எத்தனை நாளானாலும் ஆடப்பட்டுக்கொண்டிருந்த கிரிக்கெட் பிறகு ஆறு நாட்களுக்குள் ஆட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற வரையறைக்கு உட்பட்டது. ஆறு பிறகு ஐந்தாயிற்று. இடையில் விடப்பட்டுவந்த ஓய்வு நாள் ரத்து செய்யப்பட்டது. எகிறு பந்துகளின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு விதிக்கப்பட்டது. மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் சொல்வதே இறுதி என்ற நிலை இன்றும் தொடர்ந்தாலும் தீர்ப்பு வழங்கும் விஷயத்தில் தொழில்நுட்பத்தின் உதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ரன் அவுட், ஸ்டெம்பிங் முதலான தருணங்களில் தொழில்நுட்ப உதவியுடன் மூன்றாவது நடுவர் தரும் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒரு நாளில் குறைந்தது இத்தனை ஓவர்கள் போடப்பட வேண்டும் என்னும் விதிகளும் விதி மீறல்களுக்கு அபராதமும் வழங்கப்படுகின்றன. இப்படி எத்தனையோ மாற்றங்கள் இருந்தாலும் மரபார்ந்த டெஸ்ட் போட்டியின் அடிப்படைக் குணம் மாறவில்லை. அதன் அழகியல் சிறப்பும் அது தரும் பரவசமும் மாறவில்லை.

ஆஷஸ் போட்டியும் தெ.ஆ. - இந்தியப் போட்டிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகிமையைப் பறைசாற்றுகின்றன. முதல் போட்டியில் டிரா செய்த ஆஸ்திரேலியா அடுத்த போட்டியில் தோற்றாலும் பெர்த் மைதானத்தில் வீறு கொண்டு எழுந்து இங்கிலாந்தை இன்னிங்ஸ் தோல்விக்கு ஆளாக்கியது. இங்கிலாந்தின் சவால் வலுவிழந்துபோகுமோ என்று தோன்றியபோது அடுத்த டெஸ்டில் இங்கிலாந்து வசதியான வெற்றியைப் பெற்று 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்த வெற்றி ஆஷஸ் கோப்பை இந்த முறை ஆஸிக்கு இல்லை என்பதையும் உறுதி செய்தது. ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் தோற்றால்தான் கோப்பை அவர்கள் கையை விட்டுப் போகும். ஆனால் நான்கு டெஸ்டுகள் முடிந்த நிலையில் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்ததால் ஐந்தாவது டெஸ்டில் வென்றாலும் ஆஸியால் தொடரைச் சமன் செய்யத்தான் முடியும் என்ற நிலை. சமன் செய்தால் கோப்பையைத் திரும்பப் பெற முடியாது என்பதால் நான்காவது டெஸ்டிலேயே ஆஸியின் கனவு தகர்ந்தது என்று சொல்லலாம். ஆட்டத்தில் தன் பிடியை இழந்து தவிக்கும் ஆஸி அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்குக்குக் கை விரலில் அடியும் பட்டதால் அவரால் விளையாட முடியாமல் போனது. ஐந்தாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி கண்டு ஆஸி அணி பெரும் சரிவைக் கண்டது. சர்வதேசத் தர வரிசையில் முதல் முறையாக ஐந்தாம் இடத்துக்குச் சறுக்கியது.

டெஸ்ட் ஆட்டங்களின் முதல்வனாக நெடுங்காலம் கம்பீரமாக உலவிவந்த ஆஸ்திரேலிய அணிக்கு என்ன ஆயிற்று? ரிக்கி பாண்டிங்கும் ஆஸியின் பிற கிரிக்கெட் ஜாம்பவான்களும் சொல்வதுபோல, ஸ்டீவ் வா, ஷேன் வார்ன், க்லென் மெக்ரா, மேத்யூ ஹேடன், கில் க்றிஸ்ட், ஜஸ்டின் லேங்கர் ஆகிய மாபெரும் திறமைசாலிகள் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஓய்வு பெற்றதுதான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதுவே முழு உண்மையும் இல்லை. ஷேன் வார்ன் ஆடிக்கொண்டிருந்தபோதே பல போட்டிகளில் ஆஸி அணி மண்ணைக் கவ்வியிருக்கிறது. மெக்ரா தன் உச்சத் திறனோடு ஆடிக்கொண்டிருந்த சமயத்தில்கூட ஆஸி அணி பல போட்டிகளில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. உதாரணமாக, 2003-04 ஆண்டில் இந்திய அணி ஆஸியில் சுற்றுப் பயணம் செய்தபோது இவர்கள் அத்தனை பேரும் அணியில் இருந்தார்கள். ஆனாலும் இந்தியாவால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடிந்தது. பிரிஸ்பேனில் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வந்து டிரா செய்ய இந்திய அணியால் முடிந்தது. சிட்னியிலும் அடிலெய்டிலும் இந்திய அணி அபாரமாக ஆடியது. கடைசி டெஸ்டை டிரா செய்ய அப்போதைய கேப்டன் ஸ்டீவ் வா (அவருக்கும் அது கடைசி டெஸ்ட்) கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அதுபோலவே தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியா, நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் சர்வ வல்லமை பொருந்திய ஆஸிக்குப் பல சமயங்களில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆனால் ஆஸி அணி நெருக்கடியில் சிக்கும்போதெல்லாம் யாராவது ஒருவர் அணியைக் காப்ப்பாற்றிவிடுவார். முன்னிலை மட்டையாளர்கள் ஓட்டங்களைக் குவிக்காதபோது கடை நிலை ஆட்டக்காரர்கள் அந்தப் பணியை ஏற்றுக்கொள்வார்கள். ஒரு முறை (1999-2000 தொடர்) பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 100 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து ஆஸி அணி தத்தளித்தது. ஆனால் ஆடம் கில் கிறிஸ்டும் பந்து வீச்சாளர் ஷேன் வார்னும் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். அந்தப் போட்டியில் ஆஸி வென்றது. அதுபோலவே பங்களாதேஷுக்கு எதிரான ஒரு போட்டியில் (2004) ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி தடுமாறியபோது பந்து வீச்சாளர் கில்லெஸ்பி தன் மட்டை வீச்சின் மூலம் அணியைக் காப்பாற்றினார். முன்னிலைப் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் விழாதபோது மைக்கேல் கிளார்க் போன்ற பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள் முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி அணிக்குக் கைகொடுத்திருக்கிறார்கள். இதுபோலப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.

திறமைசாலிகள் எல்லா அணிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் அணியில் உள்ள ஒவ்வொருவரும் அணியின் வெற்றிக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்படும்போது அவர்களின் தனித் திறன் கணிசமாக உயர்கிறது. இந்த அணுகுமுறைதான் ஆஸியின் கூடுதல் பலம். தவிர, வெற்றியின் மீது அவர்களுக்கு இருக்கும் அசாத்தியமான வெறி, எம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற மிதமிஞ்சிய தன்னம்பிக்கை ஆகியவையும் அவர்கள் ரத்தத்தில் ஊறியிருக்கின்றன. இவையும் ஆஸி அணி பல ஆண்டுகள் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணங்களாக அமைந்தன.

ஆனால் காலப்போக்கில் இந்த அம்சங்கள் மெல்ல மெல்ல மற்ற அணிகளுக்கும் தொற்றிக்கொண்டன. இங்கிலாந்து போன்ற அணிகளில் புதிய திறமைசாலிகள் இடம்பெற்றார்கள். இந்தியா போன்ற அணிகளில் ஆட்டக்காரர்கள் தங்கள் திறமைக்கு நியாயம் செய்யும் வகையில் ஆடிவருகிறார்கள். அதே சமயத்தில் ஆஸி அணியில் திறமையாளர்கள் குறையத் தொடங்கினார்கள். இந்த எல்லாக் காரனங்களும் சேர்ந்து ஆஸியின் ஆதிக்கத்துக்கு வேட்டு வைத்துவிட்டன.

ஆனால் இன்றும்கூட ஆஸி அணியைப் புறக்கணித்துவிட முடியாது. அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருக்கும் இதே அணிதான் பாகிஸ்தான் அணியைச் சென்ற ஆண்டில் மூன்று டெஸ்ட்களிலும் மண்ணைக் கவ்வ வைத்தது. இதே அணிதான் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கிட்டத்தட்ட வெல்லும் நிலையில் இருந்தது. வி.வி.எஸ். லட்சுமணனின் அற்புதமான மட்டை வீச்சும் கொஞ்சம் அதிருஷ்டமும் சேர்ந்துதான் இந்தியாவால் வெல்ல முடிந்தது. ஆஷஸ் தொடரிலும் பெர்த்தில் ஆஸி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல. இன்னிங்ஸ் வெற்றி. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாவிட்டாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்துக்கொண்டது. ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகிய இருவரது ஆட்டங்களும் திறன்மிகு நிலையில் இல்லாதது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. டக் பொலிஞ்சர், மிட்செல் ஜான்சன் போன்ற வேகப் பந்து வீச்சாளர்கள் இந்தத் தொடரில் சோபிக்காதது அல்லது இங்கிலாந்து மட்டையாளர்கள் மிகச் சிறப்பாக ஆடியது ஆஸியின் வெற்ரி வாய்ப்பைப் பறித்துவிட்டது. பாண்டிங், கிளார்க், ஜான்சன், பொலிஞ்சர் ஆகிய நால்வரில் இருவர் தங்கள் ஆட்டத்தின் திறன்மிகு நிலையை எட்டினால்கூட ஆஸி அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்.

அணித் தலைவர் பாண்டிங் மோசமாக ஆடுவதும் பந்து வீச்சின் பலவீனமும் சேர்ந்து ஆஸியைத் தலை குனிய வைத்திருக்கிறது. அண்மைக் காலங்களில் ஆஸி அணித் தலைவர் யாரும் எதிர்கொள்ளாத நெருக்கடியை பாண்டிங் எதிர்கொண்டிருக்கிறார். தலைவன் பலவீனமாக இருப்பதும் அணியின் பலவீனமாகத் தலைவனை எதிரணியினர் அடையாளம் காண்பதும் களத்தில் மிக எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது. ஆஸியின் மிகப் பெரிய பிரச்சினையே இதுதான். ஒன்று பாண்டிங் தேறிவர வேண்டும். அல்லது அவர் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இரண்டில் ஒன்று நடக்காவிட்டால் ஆஸி அணி இந்த நெருக்கடியை இப்போதைக்குக் கடக்காது.

*

மறுபுறம் டெஸ்ட் தர வரிசையில் இந்தியா தன் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியா முதலிடம் பெற்ற பின் அது ஆடிய பெரும்பாலான ஆட்டங்கள் இந்திய மண்ணில் நடந்தவை. எல்லா ஆட்டங்களும் துணைக்கண்டத்து ஆடுகளங்களில் நடந்தவை. எனவே இந்தியாவின் முதன்மை நிலை கடுமையான சோதனைக்கு ஆளாகவில்லை என்றே சொல்லலாம். இதனாலேயே தென்னாப்பிரிக்க மண்ணில் அதன் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. அதற்கேற்றாற்போல முதல் போட்டியின் முதல் நாளில் மட்டை பிடித்த இந்தியா 131 ஓட்டங்களுக்குள் சுருண்டது. டேல் ஸ்டெயின், மோர்னி மார்க்கல் ஆகியோரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய மடையாளர்கள் சரிந்தனர். இந்தியாவின் திறமையின் மீது எப்போதும் ஐயம் கொள்ளும் விமர்சகர்களின் முகங்களில் மந்தகாசப் புன்னகை அரும்பியது.

அன்றைய நாளில் எந்த அணி ஆடியிருந்தாலும் 200 ஓட்டங்களைத் தாண்டியிருக்க முடியாது என்பதே அன்றைய ஆடுகளத்தின் நிலை என்பதை வசதியாக மறந்துவிட்டுப் பலரும் எள்ளி நகையாடத் தொடங்கினார்கள். ஆனால் அடுத்த இன்னிங்ஸிலும் அதற்கடுத்து ஆடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் இந்தியா தெ.ஆ.வின் வேகப் பந்துக் கணைகளைத் திறமையாகவே எதிர்கொண்டு ஆடியது. இரண்டாவது போட்டியை வென்றது. அதில் தெ.ஆ. அணியை ஒரு முறை 150 ஓட்டங்களுக்குள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டியின் பெரும் பகுதியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. தொடரைச் சமன் செய்து முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. மூன்றாம் போட்டியின் நான்காம் நாளில் கூடுதல் தீவிரமும் சிறிது அதிருஷ்டமும் இருந்திருந்தால் இந்தியா அந்தப் போட்டியையும் தொடரையும் வென்று சாதனை படைத்திருக்கும். இந்த மாற்றம் விமர்சகர்களின் முகங்களில் தோன்றிய மந்தகாசப் புன்னகையை மங்கச் செய்தது. இனியும் இந்தியாவைச் சொந்த ஊரில் மட்டும் சூரப் புலிகள் என்று சொல்லிவிட முடியாது என்பதை உலக கிரிக்கெட் விமர்சகர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மாற்றம் சும்மா வந்துவிடவில்லை. யாரோ ஒருவர் அல்லது இருவரின் உழைப்பால் வந்துவிடவில்லை. அணியின் அனைத்து உறுப்பினர்களும் ஏதேனும் ஒரு தருணத்தில் அணியின் வெற்றிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். ஜாகீர் கானும் ஹஜ்பஜன் சிங்கும் தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இஷாந்த் ஷர்மா சில நெருக்கடியான கட்டங்களில் முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி அணிக்குப் பெரும் ஆறுதலைத் தந்தார். உணர்ச்சிவசப்படும் ஸ்ரீஷாந்தும் சில சமயங்களில் பெரும் பங்காற்றியிருக்கிறார். தெ.ஆ.வில் நடந்த இரண்டாவது டெஸ்டில் அவர் எடுத்த விக்கெட்கள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக ஜாக் காலிஸுக்கு அவர் வீசிய எகிறு பந்து ஒரு அற்புதம். வீரேந்திர சேவாக், கௌதம் காம்பீர், ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், லட்சுமணன், மகேந்திர சிங் தோனி ஆகியோர் வெவ்வேறு தருணங்களில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார்கள். இந்தியா இப்போதுதான் ஓர் அணியாக உணரத்தக்க வகையில் ஆடிவருகிறது. அனைவரும் பொறுப்பேற்கிறார்கள். ஆஸியின் கில்லெஸ்பி, ஜான்சன் ஆகியோரைப் போல ஹர்பஜன், ஜாகீர், இஷாந்த் ஆகிய பந்து வீச்சாளர்கள் மட்டையிலும் சில சமயம் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.

இந்தியா முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டது மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கூடுவதற்கும் தன் பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளின் அழகு, நுட்பம், அதில் நிகழும் ஏற்ற இறக்கங்கள், பந்துக்கும் மட்டைக்கும் இடையிலான போராட்டம் ஆகியவற்றை இந்தியா ஆடும் போட்டிகளில் அனுபவிக்க முடிகிறது. குறிப்பாக, தெ.ஆ. அணிக்கெதிரான போட்டிகளில் டெஸ்ட் போட்டியின் தீவிரத்தையும் பரவசத்தையும் அனுபவிக்க முடிந்தது. மூன்றாவது டெஸ்டின் மூன்றாம் நாள் காலையில் டேல் ஸ்டெயின் சச்சினுக்கு வீசிய ஓவர்கள் டெஸ்ட் போட்டியின் பொன்னான தருணங்கள். அவ்வளவு துல்லியமான அளவில் அத்தனை வேகத்தில் அவரால் வீச முடிந்தது ஒரு ஆச்சரியம் என்றால் வீசிய பந்துகளில் பாதிக்கும் மேல் ஸ்விங் ஆனது அதை விடப் பெரிய ஆச்சரியம். சச்சினின் அனுபவம், திறமை, கவனம், கொஞ்சம் அதிருஷ்டம் எல்லாம் சேர்ந்துதான் அவரது விக்கெடைக் காப்பாற்றின. சச்சினும் ஹர்பஜனும் சேர்ந்து காற்றை இந்திய அணியின் பக்கம் திருப்பினார்கள். அதைத் தொடர்ந்து இந்தியப் பந்து வீச்சாளர்கள் 140க்குள் 6 விக்கெட்டை வீழ்த்தி அந்தக் காற்றை மேலும் வலுவாக வீசச் செய்தார்கள். ஆனால் காலிஸ், மார்க் பவுச்சர், டேல் ஸ்டெயின் ஆகியோரின் மட்டை வீச்சு இந்தியாவின் சாதகத்தை மழுங்கச் செய்தது. இந்தியாவின் கைக்கு எட்டிய வெற்றி கை நழுவிப் போனது. டிராவுடன் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. தீவிரமாகப் போரிடப்பட்ட ஒரு அற்புதமான தொடர் சம நிலையில் முடிவுக்கு வந்தது இரு அணிகளின் தகுதிக்கும் நியாயம் செய்வதாக இருந்தது.

ஆஷஸ் தொடரிலும் தெ.ஆ. - இந்தியத் தொடரிலும் ஆடப்பட்ட போட்டிகள் கிரிக்கெட்டின் சாதனைகளின் எல்லைகளை விஸ்தரிப்பதுடன் அதன் அழகையும் மதிப்பையும் கூட்டுவதற்குப் பங்காற்றியிருக்கின்றன. இந்தத் தொடர்கள் டெஸ்ட் கிரிக்கெட்தான் அசல் கிரிக்கெட் என்ற உண்மையை அழுத்தமாகப் பறைசாற்றுகின்றன.

No comments:

Post a Comment