Sunday, February 13, 2011

ஈழத் தமிழர் பிரச்சினை: ராகுலின் பதற்றம்

டிசம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ராகுல் காந்தி தமிழகம் வரப்போவதை எல்லோரையும் போல நானும் செய்தித்தாள் மூலமாகத்தான் அறிந்துகொண்டேன். ஆனால் தோழி ஜோதி (எ) இந்திராவிடமிருந்து வந்த கைபேசி அழைப்பு அதே செய்தியைச் சொன்னபோது ஆச்சரியம் அடைந்தேன். ஜோதி இளைஞர் காங்கிரஸில் இருக்கும் விஷயம் சட்டென்று நினைவுக்கு வந்ததும் ஆச்சரியம் விலகியது. ஆனால் என்னிடம் ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்வி முளைத்தது. “அறிவுஜீவிகளைச் சந்திக்க ராகுல் விரும்புகிறார்” என்று சொன்னதும் ஆச்சரியம் அதிகரித்தது. அப்படியானால் என்னை ஏன் அழைக்க வேண்டும்? ஜோதி விடுவதாக இல்லை. “சரி. ஒரு எழுத்தாளன், இதழியலாளன் என்ற முறையில் நான் அழைக்கப்பட்டதாக நினைத்துக்கொள்கிறேன்” என்று சொன்னேன். ஜோதிக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இளைய பாரதத்தின் பிரதிநிதியாகச் சித்தரிக்கப்படும் இளவரசரைச் சந்திக்க மானசீகமாக ஆயத்தமாகத் தொடங்கினேன்.

இளைஞனாக அரசியலில் நுழைந்த ராஜீவ் காந்தியின் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த என் தந்தையாரின் நினைவு ஒரு கணம் வந்துபோனது. அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் ராகுலைச் சந்திக்க விரும்பியிருப்பார் என்று தோன்றியது. எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை என்பதால் மனத்தில் எந்த எதிர்பார்ப்பும் திரளவில்லை. இத்தகைய சந்திப்புகள், சம்பந்தப்பட்ட பிரபலத்தின் பொது வாழ்வு பிம்பத்தைக் குறிப்பிட்ட விதத்தில் கட்டமைக்கும் முயற்சிகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமையும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. அதிகபட்சம் தமிழக அறிவுவாதிகளின், இதழியலாளர்களின் குரல்களை ராகுல் கேட்கலாம். அவர்களது அக்கறைகள் குறித்த அடையாளங்கள் அவருக்குத் தட்டுப்படலாம். அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் இருந்தால் தமிழக மக்களின் ஆதங்கங்களில் ஒரு சிலவற்றையாவது அவர் காதில் போடலாம். பட்டத்து இளவரசருக்கு இதுபோன்ற அனுபவங்கள் கிடைப்பது அவசியம்தானே.

இதுபோன்ற சாத்தியப்பாடுகள் குறித்த சபலங்கள் ஒரு புறம் இருக்க, நண்பர்களைச் சந்திக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணமும் தாஜ் கன்னிமரா ஓட்டலில் உணவு சிறப்பாக இருக்கும் என்ற அனுபவமும் ராகுல் சந்திப்பு பற்றிய உற்சாகத்தைக் கூட்டின. தாஜ் ஓட்டலில் பலத்த பாதுகாப்புக் கெடுபிடிகளுக்குப் பிறகு உள்ளே நுழைந்தால் கிட்டத்தட்ட எல்லாமே தெரிந்த முகங்களாக இருந்தது ஆச்சரியம் அளித்தது. சொல்லப்போனால் இலக்கியக் கூட்டம் போலவே இருந்தது. தேவிபாரதி, குவளைக்கண்ணன், கடற்கரை, தளவாய் சுந்தரம், ஞாநி, முரளீதரன், அய்யனார், கவிதா, மாலன், ரோஹிணி, நாசர், சங்கீதா ஸ்ரீராம் ஆகியோரைப் பார்த்ததும் ராகுல் பற்றிய நினைவு மறந்துபோனது. 2ஜி அலைக்கற்றையிலிருந்து புத்தகக் கண்காட்சிவரை பல விஷயங்களைப் பற்ரி அரட்டை அடிக்க ஆரம்பித்தோம்.

எல்லா அரசியல்வாதிகளையும் போல ராகுலும் தாமதமாகவே வந்தார். ஒரு மணிநேரம் தாமதம் என்பது சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது. தாமதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகக் கிளம்பிவிடலாமா என்றுகூடப் பேசிக்கொண்டோம். ‘ரொம்பத்தான் பிகு பண்ணாதீர்கள். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று உங்களுக்குத் தெரியாதா?’என்று ஒரு நண்பர் இடித்துவிட்டுப் போனார். அபிராமி ராமநாதன், இயக்குநர் லிங்குசாமி, நடிகை ரேவதி என்று சினிமா உலகைச் சேர்ந்த பலரும் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இருக்கலாம். சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமைப் போராளிகள், அரசு சாராத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்று எலோரும் வந்திருந்தார்கள். அது ஒரு கலந்துரையாடலாக இருக்கும் என்று ஜோதி சொன்னது நினைவுக்கு வந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடல் எப்படிச் சாத்தியம்? அரசியல் தவிர்த்த பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களைச் சந்திக்க ராகுல் விரும்பியிருந்தால் அவர்களைத் தனித்தனிப் பிரிவாகச் சந்தித்திருக்கலாம். எதற்கு இப்படி ஒரு கூட்டாஞ்சோறு? இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தியாவைப் பற்றித் தனக்கிருக்கும் கனவை எங்களிடம் பகிர்ந்துகொள்ளப்போகிறாரோ? கலந்துரையாடல் என்றாரே ஜோதி?

கூட்டம் தொடங்கியது. அரசியலைப் பற்றிக் கேட்க வேண்டாம் என்றார் ராகுல். பாலம் என்னும் (வளர்ச்சி அரசியலுக்கான) இதழின் ஆசிரியர் நாராயணன் முதலில் பேசினார். குடிப் பழக்கத்தால் வரும் சமூகக் கேடுகள், பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்வதில் இன்னமும் மனிதர்களை ஈடுபடுத்திவரும் அவலம் என்று பல முக்கியமான விஷயங்களில் அவர் அவையின் கவனத்தை ஈர்த்தார். தன்னை ஓரினப் புணரீர்ப்பாளர்களின் பிரதிநிதி என்று அற்முகப்படுத்திக்கொண்ட அநிருத்தன் வாசுதேவன், ஓரினப் புணரீப்பாளர்கள், ஈரினப் புணரீர்ப்பாளர்கள், அரவானிகள் ஆகியோரின் பிரச்சினைகளைக் கவனப்படுத்தினார். கல்வித் துறைப் பிரச்சினைகளைப் பற்றி வேறொருவர் பேசினார். ராகுல் அனைத்தையும் கவனமாகக் கேட்டார். எல்லாவற்றிலும் தன் சொந்தக் கருத்தைச் சொன்னார். தீவிரமான கவலைகளை வெளிப்படுத்திய கல்வியாளரைப் பார்த்து, நீங்கள் அரசியலுக்கு வாருங்கள், மாற்றம் காண உங்கள் பங்கைச் செலுத்துங்கள் என்றார். இளைஞர் காங்கிரஸ் ஜனநாயகபூர்வமாக நடக்கும் விதம் பற்றியும் விரிவாகச் சொன்னார். அரசாங்கத்தின் மூலமாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்றார். சினிமா உலகின் பிரதிநிதிகள் சிலர் திருட்டு விசிடி போன்ற பிரச்சினைகள் பற்றி விரிவாகப் பேச ஆரம்பித்தார்கள். நீங்கள் தில்லிக்கு வந்து என்னைப் பாருங்கள் என்று சொல்லி அந்தப் பேச்சை முடித்துவைத்தார்.

அதன் பிறகுதான் நிகழ்ச்சியின் முக்கியமான கேள்வி எழுந்தது. இலங்கைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை நேரடியாகக் கவனித்து செய்திக் கட்டுரைகள் எழுதிவரும் கவிதா முரளீதரன் (த வீக் வார இதழ்) இலங்கைப் பிரச்சினை பற்றிக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக அங்கு தற்போதுள்ள நிவாரண முகாம்களின் அவல நிலையையும் நிவாரணப் பணிகளின் கடுமையான போதாமைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை அலட்டிக்கொள்ளாமல் இருந்த ராகுலிடத்தில் சட்டென்று ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டதை உணர முடிந்தது. இந்திய அரசு தன்னால் முடிந்ததைச் செய்துவருவதாகச் சொன்ன அவர், இந்திய அரசின் முயற்சியால் நடைபெறும் பணிகள் பற்றிய பட்டியலைப் படித்தார். இலங்கைப் பிரச்சினை பற்றிய கேள்விகளை வேறு எதையும் விட அதிகமாகவும் உறுதியாகவும் ராகுல் எதிர்பார்த்தார் என்பது அவர் பட்டியலைத் தயாராக எடுத்துவந்திருந்ததிலிருந்து தெரிந்தது. இன்னொரு நாட்டின் விவகாரத்தில் தலையிடுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் ராகுல் பேசினார். மூத்த பத்திரிகையாளர் டி.என். கோபாலன், இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். வேறு சிலரும் குறுக்கிட்டுப் பேசினார்கள். இந்திய அரசின் சார்பில் பிரணாப் முகர்ஜி அங்கு சென்று வந்ததையும் அரசின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கைகளையும் வரிசையாகக் குறிப்பிட ஆரம்பித்தார் ராகுல். இதுபோன்ற விவாதங்களில் குரல் எழுப்புவதில் எனக்கு அதிக நம்பிக்கையோ ஈடுபாடோ கிடையாது என்றாலும் நாங்கள் அப்படிச் சொன்னோம், இப்படிப் பேசினோம் என்ற ரீதியில் ராகுல் பதில் தந்தது எரிச்சலை ஏற்படுத்தியது. என்ன சொன்னீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன செய்தீர்கள் என்பது முக்கியம் என்று சொன்னேன். என்ன செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள் என்று ராகுல் எதிர்க் கேள்வி எழுப்பினார். பொருளாதாரத் தடை விதித்திருக்கலாமே என்றார் பத்திரிகையாளர் மாலன்.

அதற்குள் பலரும் குறுக்கிட்டுப் பேச ஆரம்பித்தார்கள். காலச்சுவடு பொறுப்பாசிரியர் தேவி பாரதி, காமன் வெல்த் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு ராஜ பக்‌ஷேவை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்டார். நான் அழைக்கவில்லை என்று ராகுல் கும்பிடு போட்டார். ராஜ பக்‌ஷே ஒரு போர்க் குற்றவாளி, அவரை எப்படி உங்கள் அரசு அழைக்கலாம் என்று கேள்வி எழுப்பிய தேவி பாரதி, இலங்கை அரசின் அட்டூழியங்கள் பற்றியும் இந்திய அரசின் செயலின்மை குறித்தும் தன் கருத்துக்களைச் சற்று விரிவாகவே முன்வைத்தார். அவர் தமிழில் பேசியதால் அவர் பேச்சை ஆங்கிலத்தில் சொல்ல ஓரிரு நண்பர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் தொடர்ந்து பலரும் ஏச ஆரம்பித்ததில் குழப்பம் நிலவ, எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கூட்டத்தை முடித்துக்கொண்டார் ராகுல். ஆக, சுமுகமாகத் தொடங்கிய கூட்டம் இலங்கைப் பிரச்சினை குறித்த சலசலப்புடன் முடிந்தது என்று சொல்லலாம்.

கூட்டம் முடிந்த பின் பலரும் ராகுலுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். சிலர் கையோடு எடுத்துவந்திருந்த கோரிக்கைப் பட்டியலைத் தந்தார்கள். எல்லோரும் இருந்து தேநீர் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று அன்பாக ஒரு அறிவிப்பு ஒலித்தது. மணி ஒன்று. மதியம் ஒரு மணிக்குத் தேநீர் வழங்கும் விருந்தோம்பலை எண்ணி வியந்தபடி மீண்டும் அரட்டைக் கச்சேரிகளைத் தொடங்கினோம். வெளியில் காத்திருந்த செய்தித் தொலைக்காட்சிகளின் நிருபர்கள் சினிமா பிரமுகர்களைச் சூழ்ந்துகொண்டு, உள்ளே நடந்தது என்ன என்று ஆவலோடு விசாரித்துக்கொண்டிருந்தார்கள். நாசர், ரோஹிணி, லிங்குசாமி, ரேவதி ஆகியோர் இருந்த இடங்களில் ஒளிப்படக் கருவிகள் பளிச்சிட்டபடி இருந்தன.

ராகுலுடனான விவாதம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் ஏமாற்றம் எதுவுமில்லாமல் தாஜ் ஓட்டலிலிருந்து கிளம்பினேன். இதுபோன்ற கலந்துரையாடல்கள் பற்றிய அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்ததுதான் இந்தக் கூடத்தின் முக்கியமான விளைவு என்று தோன்றியது. ஆனாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ராகுல் பதற்றமடைந்தது முக்கியமான விஷயமாகப் பட்டது. ராகுலின் அவஸ்தை இந்தப் பிரச்சினையில் காங்கிரஸின் செயலின்மை குறித்த ஒப்புதல் வாக்குமூலமாகவே தெரிந்தது.

No comments:

Post a Comment