Friday, July 8, 2016

பொருளாதார அரசியலில் தத்துவங்களின் தோல்வி!


தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. கிறிஸ்தவக் கல்வி அமைப்பு ஒன்று நடத்திய அந்தக் கூட்டம் ‘இந்துத்துவம்’ பற்றி விவாதித்தது. பல தரப்பினரும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தும் எதிரொலிக்க வேண்டும் என்று கூட்டத்தை நடத்தியவர்கள் நினைத்தார்கள். அவர்களது அழைப்பை ஏற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பில் இருந்த கி.ரவி என்பவர் அதில் கலந்துகொண்டார். இந்துத்துவம் குறித்த விமர்சனங்களுக்குப் பதில் சொன்ன அவர், இந்துத்துவம் என்பது இந்த நாட்டின் மண் சார்ந்தது என்னும் கருத்தை முன்வைத்தார். இன்று நாம் இந்துத்துவம் பற்றிப் பேசுகிறோம், ஆனால், நாம் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை பெரிதாக வளர்ந்துவருகிறது என்றார். டங்கல் திட்டம், காட் ஒப்பந்தம் ஆகியவையே அந்த அபாயங்கள் என்று சொன்னவர், இவை எப்படி இந்தியாவின் பொருளாதாரத்தையும், அதிலுள்ள அனைத்து சாதி, மத, பண்பாட்டு அம்சங்களையும் பாதிக்கும் என்று விளக்கினார்.

நிறைவுரை ஆற்றிய கோவை ஞானி, இந்துத்துவத்தை விட்டுவிட்டு டங்கலைப் பிடித்துக்கொண்டார். டங்கல், காட் ஆகிய திட்டங்களின் பொருளாதார, பண்பாட்டு ரீதியான விளைவுகளை எடுத்துச் சொன்னார். இடதுசாரிகளும் வலதுசாரிகளும் இணையும் புள்ளியாக உலகமயப் பொருளாதாரம் இருந்தது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய செய்தி.
 
மாற்றுப் பொருளாதாரச் சிந்தனைகள்

சங்கப் பரிவார அமைப்பினர் தொண்ணூறுகளில் இரண்டு விஷயங்களை முன்வைத்துப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தார்கள். ஒன்று ராமர் கோயில், இன்னொன்று சுதேசி. ராமர் கோயில் தொடர்பான பேச்சுகள் 1992 மசூதி இடிப்புக்குப் பிறகு நீர்த்துப்போகத் தொடங்கி, வேறு வடிவங்களை எடுத்தன. ஆனால், சுதேசிப் பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. காட் ஒப்பந்தம், டங்கல் திட்டம் ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்பதைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியவை தீவிரமாகக் குரல்கொடுத்தன. நரசிம்ம ராவ் அரசு லைசன்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்டியதைப் பொதுவாக வரவேற்ற பாஜக, தங்கத்தை அடகு வைத்தது, பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளைக் குறைத்தது, காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதலான பல அம்சங்களில் அரசைக் கடுமையாகக் குறை கூறியது.

இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு நேருவின் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கைகளைக் காரணம் காட்டிய பாஜக சித்தாந்திகள், இந்தியாவின் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான பொருளாதாரச் சிந்தனை காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் இல்லாததே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று பேசினார்கள். சுதேசி உணர்வைத் தட்டி எழுப்புவதன் மூலம் நாட்டு மக்களின் ஆற்றல்களைப் பெருக்கி, நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர்களைப் பாடுபடவைக்க முடியும் என்றது. நாட்டின் அடிப்படை வலிமையான விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இந்தியாவை நெருக்கடியிலிருந்து மீட்கலாம். அந்நிய சக்திகளை நம்ப வேண்டாம் என்பது ஆர்.எஸ்.எஸ். வாதம்.

கே.என்.கோவிந்தாசார்யா, எஸ்.குருமூர்த்தி, முரளி மனோகர் ஜோஷி, கே.எஸ்.சுதர்சன் ஆகியோர் இந்த சுதேசிப் பிரச்சாரத்தை மிகுந்த முனைப்போடு முன்னெடுத்தார்கள். பண்டித தீனதயாள் உபாத்யாயா முன்வைத்த பொருளாதாரச் சிந்தனையான ‘ஏகாத்ம மானவவாதம்’ (ஒருங்கிணைந்த மானுடக் கோட்பாடு) அவர்களது பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையாக அமைந்தது. தனது உள்ளார்ந்த இயல்பு, உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு சமூகம் அல்லது தேசம் தனக்கான அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தீனதயாள் உபாத்யாயா விரிவாகப் பேசுகிறார். கோவிந்தாச்சார்யா, குருமூர்த்தி, சுதர்சன் போன்றோர் இதை அடியொற்றி நமக்கான பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கிவந்தார்கள். நேருவின் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கைகள் எந்த விவாதமும் இன்றி அமல்படுத் தப்பட்டது என்று குருமூர்த்தி அடிக்கடி குறைபட்டுக் கொள்வார். அதற்கு மாற்றாக காந்தியப் பொருளாதாரக் கொள்கைகளை குருமூர்த்தி போன்றவர்கள் முன்வைத்தார்கள்.

இடதுசாரிகளும் உலகமயமாதலைக் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியாவை அந்நிய சக்திகளுக்கு விற்பதாகத்தான் அது முடியும் என்றார்கள். சுதேசி முழக்கத்தை அவர்கள் எழுப்பவில்லை என்றாலும் நாட்டின் வளம் அதன் மக்களிடம் இருக்க வேண்டும் என்பதையும் பொருளாதாரக் கொள்கைகள் மக்களை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் எனவும் வாதிட்டார்கள். டங்கல் திட்டம் முதலாளித்துவ அமெரிக்காவின் அடிவருடியாக இந்தியா மாறவே வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டினார்கள். அந்நிய முதலீட்டை நம்புவது, அந்நிய நிறுவனங்களுக்கு இந்தியத் தொழில்துறையைத் திறந்துவிடுவது ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தின் மீதான இந்தியர்களின் பிடியை வலுவிழக்கச் செய்துவிடும் என்றார்கள். தொழிலாளர்கள் நலன் பேணப்படுவதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை எனவும் எச்சரித்தார்கள். 

விடைபெற்றுக்கொண்ட கொள்கைகள்

ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கை, உள்நாட்டுத் தனியார்மயமாவதைப் பெரிதாக எதிர்க்கவில்லை. உலகளாவிய தாராளமயமாக்கலையே தீவிரமாக எதிர்த்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளோ உள்நாட்டுத் தனியார்மயமாக்கலையும் சேர்த்தே எதிர்த்தன. வாதங்களின் அம்சங்களில் இப்படிச் சில மாறுபாடுகள் இருந்தாலும், இடதுசாரிகளும் வலதுசாரிகளும் உலகமயமாதலை எதிர்த்தன. 

ஆனால், பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இடங்களில், இருந்த தருணங்களில் எப்படி நடந்துகொண்டன? மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தையோ சுதேசிப் பொருளாதாரத்தையோ அவை முன்னெடுத்தனவா? நந்திகிராமங்களும் குஜராத் முன்மாதிரிகளும் நமக்குச் சொல்லும் கதை வேறு. காங்கிரஸ் தன் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதைத் தடுக்க இடதுசாரிக் கட்சிகள் போதிய நெருக்கடிகளைக் கொடுக்கவில்லை.
 
கம்யூனிஸ்ட்டுகள் நேரடி அதிகாரத்தில் இருந்த இடங்கள் இரண்டு மாநிலங்களோடு நின்றுவிட்டன. ஆனால், பாஜகவின் நிலை அப்படி அல்ல. ஒரு முறை அரைகுறையாகவும் ஒரு முறை முழுமையாகவும் மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் அக்கட்சி இருந்திருக்கிறது. இப்போது அறுதிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக மத்திய அரசைத் தன் வசம் வைத்திருக்கிறது. 90-கள் தொடங்கி இன்றுவரை எல்லாச் சமயங்களிலும் குறைந்தது 3 மாநிலங்களிலேனும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. சுதேசிப் பொருளாதாரத்தின் மேல் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு கட்சிக்கு இருந்துவருகிறது. எனினும், நரசிம்ம ராவும் மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் போட்டுக்கொடுத்த பாதையில்தான் பாஜகவின் ஆட்சியும் பெருமளவில் பயணிக்கிறது.

அது மட்டுமல்ல, காங்கிரஸ் பாணியிலான பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸைக் காட்டிலும் வேகமாகவும் தீவிரமாகவும் செயல்படுகிறது. பண்பாட்டுப் பிரச்சினைகளையும் தேசிய உணர்வையும் முன்னிறுத்தும் மரபைக் கொண்ட அக்கட்சி, கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘வளர்ச்சி’அஸ்திரத்தைக் கைப்பற்றி அதை வைத்தே போரிட்டது. குஜராத்தில் நரேந்திர மோடி சாதித்துக் காட்டிய ‘வளர்ச்சி’யை முன்னிறுத்தியது. தேசியப் பெருமிதங்கள் பேசப்பட்டன. ஆனால், சுதேசி உணர்வோ நமது பொருளாதாரம் நமது உள்ளார்ந்த ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்னும் பார்வையோ முன்னிறுத்தப்படவில்லை. ‘மேற்கத்திய நுகர்வுக் கலாச்சார’த்தின் தீமைகள் பற்றிப் பல ஆண்டுகளாகப் பேசி வந்த வலதுசாரி சித்தாந்திகளின் ஆட்சியில் நுகர்பொருள் சந்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு அகலமாகத் திறந்துவிடப்பட்டது. தேசப் பாதுகாப்பைத் தாரக மந்திரமாக ஜபிப்பவர்களின் ஆட்சியில் பாதுகாப்பு சார்ந்த உற்பத்தித் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு வழிசெய்யப்பட்டுள்ளது. பாஜக, சுதேசிக் கொள்கையைக் கைவிட்டு விட்டது என்று சங்கப் பரிவார் அமைப்புகளில் ஒன்றான பாரதிய மஸ்தூர் சங்கம் என்னும் தொழிற்சங்க அமைப்பு விமர்சிக்கிறது.

பாஜக அரசுகள் கடைப்பிடித்த பொருளா தாரக் கொள்கைகள் நாட்டுக்கு நன்மை விளை வித்திருக் கின்றனவா இல்லையா என்பது இங்கே விவாதப் பொருள் அல்ல. இதே கொள்கைகளை முன்னிறுத்திய காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்து சுதேசியை முன்னிறுத்திய அவர்கள் கொள்கை என்ன ஆனது என்பதுதான் கேள்வி. மகாராஷ்டிர மாநிலத்தில் என்ரான் என்னும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சங்க அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் (விழிப்புணர்வு இயக்கம்) கடுமையாகப் போராடியது. என்ரானுக்கு எதிரான பிரச்சாரம் சென்னையிலும் நடந்தது. என்ரான் போன்ற நிறுவனங்களை உள்ளே விடுவதன் ஆபத்து பற்றிப் பல மட்டங்களிலும் பிரச்சாரம் நடந்தது. சொற்பொழிவுகள், நூல்கள் என்று திமிலோகப்பட்டது. ஆனால், சிறுபான்மை அரசின் தலைவராகப் பொறுப்பேற்ற  பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கையெழுத்திட்ட கோப்புகளில் ஒன்று என்ரானுக்கு அனுமதி வழங்கும் கோப்பு.

அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரையிலும் சுதேசிப் பொருளாதாரம் பேசிய கட்சி, பதவிக்கு வந்ததும் உலகமயமாதல் கொள்கையைப் பின்பற்றுவது என்றால் அந்தக் கொள்கைதான் செல்லுபடி ஆகும் என்று ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்? சுதேசிக் கொள்கை காலாவதி ஆகிவிட்டது என்று ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்?
 
மாற்றுப் பாதை சாத்தியம்தானா?

ஆர்.எஸ்.எஸ்.ஸோ கம்யூனிஸ்ட்டுகளோ முன்வைத்த பொருளாதாரக் கொள்கைகளுக்கான வெற்றிகரமான முன்னுதாரணங்கள் எங்காவது உள்ளனவா? அரசியல் அதிகாரம் கிடைத்தும் ஏன் அவர்களால் அதை உருவாக்க முடியவில்லை? 

உலகமயமாகிவிட்ட சூழலில் மாற்றுப் பொருளா தாரத்தை முன்னெடுப்பது என்றால், அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். மக்கள் கருத்தையும் ஆற்றலையும் திரட்ட வேண்டும். பொருளாதாரத்தின் பாதையை மிகக் கவனமாகத் திசைதிருப்ப வேண்டும். இதற்கு, கொள்கையில் தீவிரமான பற்றுறுதியும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. சுதேசிப் பொருளாதாரத்துக்காக வரக்கூடிய எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கட்சி தயாராக இல்லை. அதற்கான தியாகங்களுக்கோ உழைப்புக்கோ தயாராக இல்லை. பெருநிறுவனங்களின் துணையோடு அரசியல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவற்றுக்கு ஒத்துவராத பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிப்பது சாத்தியமும் அல்ல.

சுந்தர ராமசாமி எழுதிய ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலில் இப்படி ஒரு வரி வரும்: “இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கார்ல் மார்க்ஸை ஏமாற்றிவிட்டார்கள்”. காங்கிரஸ்காரர்கள் காந்தியை ஏமாற்றினார்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தீனதயாள் உபாத்யாயாவை ஏமாற்றினார்கள். உலகமயமாதலின் வெற்றி இந்தத் தத்துவங்களைப் பேசியவர்களைப் பார்த்துப் பரிகசிக்கிறது. 

தி இந்து 06.07.2016

Wednesday, June 29, 2016

சொல்லக் 'கூடாத' சில வார்த்தைகள்


சமீபத்தில் வெளிவந்த படமொன்றின் இடைவேளை நேரத்தில் ஒரு நண்பருடன் பேச நேர்ந்தது. படத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். பாராட்டிக்கொண்டே வந்தவரின் முகம் சட்டென்று மாறியது. “ஆனால் பாருங்க சார், இந்த ‘இது’வை வெச்சிக் காமெடி பண்றாங்களே… அதுதான் சார் சகிக்கல” என்றார்.

“எதுவை வெச்சி?” என்று கேட்டேன்.

நண்பர் அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டார். பத்து அடி சுற்றளவுக்கு வேறு யாரும் இல்லை என்றாலும் நண்பர் என் காதருகே வந்து, “அதான் சார், குசு விடறத வெச்சிக் காமெடி பண்றாங்களே, அதச் சொல்றேன்” என்றார்.
 
அவர் சொன்ன அந்தக் காட்சி, ரசக் குறைவான காட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த வார்த்தையைச் சொல்ல இவர் ஏன் இவ்வளவு சங்கோஜப்படுகிறார் என்று புரியவில்லை. மலச்சிக்கல் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பிக்கு’ என்னும் இந்திப் படம் நினைவுக்கு வந்தது. நண்பர் அதைப் பார்த்தால் என்ன ஆவார்?

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு அனுபவம். படம் பார்த்துவிட்டு வந்த ஒரு நண்பர் கொதித்துப்போயிருந்தார். “என்ன சார் இது, இவ்ளோ ஆபாசமா படம் எடுக்கறாங்க, கொஞ்சமாவது டீசன்ஸி வேணாமா?” என்று பொங்கினார்.

சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் மனிதர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்ட படம் அது. கதைப்போக்கை ஒட்டி ஓரிரு இடங்களில் பீ, மூத்திரம் போன்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. அவைதாம் நண்பரின் கோபத்துக்குக் காரணம். அந்தச் சொற்கள் ரசக் குறைவாகப் பயன்படுத்தப்படவில்லை. இயல்பாக, மக்களின் அன்றாட வாழ்வின் சொல்லாடல்களின் ஒரு பகுதியாக, படைப்பூக்கத்துடன் இடம்பெற்றிருந்தன.
 
விலக்கப்பட்ட கனிகள்

படைப்பில் எது ஆபாசம், தவிர்க்க வேண்டியவை எவை என்பதெல்லாம் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு, மறுவரையறைக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. வெகுமக்களுக்கான வெளிகளில் புழங்கும் படைப்புகளில் பாலியல் சொற்கள் / செயல்களின் பயன்பாடு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் சில சொற்களையும் பாலியல் சொற்களின் ரகத்தில் சேர்த்துவிடுவது ஆபத்தானது. அதன் மூலம் ‘கெட்ட வார்த்தை’களின் எண்ணிக்கைதான் பெருகும். அத்தகைய சொற்கள் காலப்போக்கில் வசைச் சொற்களாகவும் ஆகிவிடும். ‘விலக்கப்பட்ட கனி’களின் மீது ஆர்வம்கொள்வது இயல்புதானே?

வாயு பிரிதல், சிறுநீர் கழித்தல் போன்ற இயல்பான விஷயங்களுக்கு நேர்ந்த கதி இதுதான். இப்படியேபோனால், இருமல், சளி, தும்மல், புரையேறுதல் போன்றவையும் ‘விலக்கப்பட்ட கனி’களாகிவிடும். இவற்றைப் பற்றிய வசனங்களும் காட்சிகளும் ‘ஆபாச’மாகிவிடும். நமது படைப்புகள் வரவேற்பறையின் அழகியலுக்குள் மட்டுமே புழங்கத் தொடங்கிவிடும். வரவேற்பறை என்பது நாம் மற்றவர்களுக்குக் காட்ட விரும்பும் அம்சங்கள் மட்டுமே உள்ள இடம். சமையலறை, சாப்பாட்டு அறை, படுக்கை அறை, வாசிப்பு அறை, புழக்கடை, கழிவறை எனப் பல அம்சங்களுக்கும் நம் வாழ்வில் இடம் உண்டு. வரவேற்பறையை மட்டுமே பிரதிபலிக்கும் படைப்புகள் தட்டையாகவும் வண்ணங்கள் அற்று செயற்கையாகவும் இருக்கும்.
 
மொழியின் வண்ணங்கள்

இந்தப் போக்கு நமது மரபில் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மத்தியில் புழங்கும் பழமொழிகள், சொலவடைகளில் உடல் உறுப்புகளின் பற்றிய கொச்சை வழக்குகள் சகஜமாகப் புழங்குகின்றன. ‘குளத்து மேல கோவிச்சிக்கிட்டு குண்டி கழுவ மறந்த கதையாக,' என்னும் சொலவடை ஓர் உதாரணம். இதில் வெளிப்படும் கூர்மையான விமர்சனமும் உளவியல் நுட்பமும் அபாரமானவை. இப்படி நூற்றுக்கணக்கானவற்றைச் சுட்டலாம். இத்தகைய சொற்களை அருவருத்து ஒதுக்குவதன் மூலம் நமது சொற்களஞ்சியத்தின் முக்கியமானதொரு பகுதியை ஒதுக்கிவிடுகிறோம். மொழியின் வண்ணங்களைக் குறைத்து அதற்கு வெள்ளையடிக்கிறோம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விக்டோரிய காலத்து மதிப்பீடுகள் நம்மிடையே பரவின. ஆங்கிலேயப் பொதுப் பண்பாடு கறாரான சம்பிரதாய வரையறைகள் கொண்டது. ஒருவரைச் சந்திக்கும்போது எப்படிப் பேச வேண்டும், ஒரு விழாவை அல்லது பொதுச் சந்திப்பை எப்படி நடத்த வேண்டும், எப்படி விருந்து மேசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சிரிக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் கறாராக வரையறுத்து வைத்திருக்கும் சமூகம் அது. நாகரிகம், நாசூக்கு, சம்பிரதாயங்கள், முறைசார் பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றையும் அது வரையறுத்து வைத்திருக்கிறது.
 
செயற்கை நாகரிகம்

ஆட்சியாளர்களை அடியொற்றிய பண்பாடு அடிமைச் சமூகத்தில் உருவாவதில் வியப்பில்லை. ஆங்கிலேயர்களைப் பல விதங்களிலும் நகல் செய்த இந்திய மேட்டுக்குடியினர், அதன் தாக்கத்தில் நமது பொதுவெளியின் பண்பாட்டையும் கறாராக வரையறுக்கத் தொடங்கினார்கள். பெரும்பாலும் மேட்டுக்குடியினரின் பிடியிலேயே இருந்த கலை சாதனங்களும் ஊடகங்களும் இவற்றைப் பிரதிபலித்தன. இயல்பான பல சொற்கள் அருவருக்கத் தக்கவையாக மாறத் தொடங்கின. பொதுவெளியில் புழங்கும் சொற்களின் மீது செயற்கையான நாகரிக முலாம் பூசப்பட்டது. ஒரு சிலரது கண்ணோட்டத்தில் உருவான தூய்மைவாதம் பொதுவான அளவுகோலாக மாறியது. பொதுப் பண்பாட்டின் அலகுகள் மீது மேட்டுக்குடியினர் செலுத்திவந்த ஆதிக்கமே இதைச் சாத்தியமாக்கியது. எல்லாத் தூய்மைவாதங்களும் இன, சாதியக் கண்ணோட்டங்களைப் பிரதிபலிப்பவை என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்வது, நம் சமூகத்தில் இந்தப் போக்கு நிலைபெற்ற விதத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

தொண்ணூறுகளுக்குப் பிந்தைய சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மைய நீரோட்ட மதிப்பீடுகளையும் அழகியலையும் மறுத்த பின்நவீனத்துவப் போக்கு, மக்களிடையே புழங்கிவந்த பல சொற்களை மீட்டெடுத்தது. விளிம்பு நிலை மக்கள், அவர்தம் பண்பாடுகள், சொல்லாடல்கள் ஆகியவை படைப்புலகில் இடமும் மதிப்பும் பெற்றன. பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் படைப்புலகிலும் ஊடகங்களிலும் அதிகமாக இடம்பெறத் தொடங்கியதை அடுத்து, தூய்மைவாத அழகியலும் வரையறைகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. வெகுசனக் கலை வடிவமான திரைப்படத்திலும் அதன் பிரதிபலிப்புகளைப் பார்க்க முடிகிறது. கானா பாடல்கள் இடம்பெறத் தொடங்கின. பல்வேறு வட்டார வழக்குகள் துல்லியமாக ஒலிக்கின்றன. திருநங்கைகள் கேலிக்குள்ளாக்கப்படுவது குறைந்துள்ளது.

பொது வெளிக்கான நடத்தைகளைக் கறாராக வரையறுத்த ஒழுக்கவியலைப் பின்பற்றும் ஆங்கிலேயச் சமூகம், படைப்புகளில் அத்தகைய தூய்மைவாதத்தைக் கடைப்பிடிப்பதில்லை. பொது வெளியில் ஆங்கிலேயச் சமூகம் கடைப்பிடிக்கும் சமத்துவம், நிர்வாகச் சீர்முறைகள், பொதுச் சொத்துக்கள், பொதுச் சேவைகள் குறித்த பொறுப்புணர்வு ஆகியவற்றை இந்தியச் சமூகம் பெரிதாகக் கற்றுக்கொள்ளவேயில்லை. ஆனால், முறைசார் பண்பாட்டின் மேட்டுக்குடித் தூய்மைவாதத்தை இயன்றவரையிலும் எல்லாத் துறைகளிலும் கடைப்பிடிக்கும் முனைப்பு மட்டும் இங்கே காணப்படுகிறது.
 
நமது வாழ்வியல்.. நமது அழகியல்!

சில சொற்களைப் புனிதப்படுத்துதல், சிலவற்றை விலக்கிவைத்தல் ஆகிய இரண்டுமே ஒரே மனநிலையின் இரு பரிமாணங்கள். இரண்டுமே வாழ்வின் இயல்புக்கும் படைப்பூக்கத்துக்கும் எதிரானவை. சமத்துவ உணர்வை மறுப்பவை. புனிதப்படுத்துதலும் அசிங்கப்படுத்துதலும் சில சொற்களின் தன்மைகளையே மாற்றிவிடும். புனித அல்லது அசிங்கப்படுத்தப்பட்ட சொற்களை இயல்பாக யாரேனும் பயன்படுத்தும்போது அது உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும். ஏற்கெனவே பல சொற்கள் இத்தகைய ‘அந்தஸ்’தைப் பெற்றுவிட்ட நிலையில் இவற்றைக் கூட்டாமல் இருப்பது உத்தமம்.

வரவேற்பறை அழகியல் முக்கியமானதுதான். திட்டமிட்ட, பிசிறற்ற முறைசார் நிகழ்வுகளுக்கும் சமூகத்தில் முக்கிய இடம் உண்டு. ஆனால், ஒட்டுமொத்த சமூகமும் வரவேற்பறை அழகியலிலும் முறைசார் நிகழ்வுகளிலும் முடங்கிப்போக முடியாது. நமக்கான அழகியல் நமது வாழ்வியலிலிருந்து உருவாக வேண்டும். வாழ்வின் பன்முக வண்ணங்களை அவற்றின் இயல்பில் சித்தரிக்கும் படைப்புகள் அற்ற ஒரு சமூகம் தன்னைத்தானே செயற்கையாக வரையறுத்துக்கொள்கிறது. தனக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க மறுக்கிறது. பன்முகத்தன்மைக்கோ பன்முகப் பார்வைக்கோ இடம் தராத இத்தகைய அணுகுமுறைகள் படைப்பில் மட்டுமல்ல, சமூகத்திலும் படைப்பூக்கத்தைச் சிதைத்துவிடும்.

Thursday, June 9, 2016

மட்டையின் கண்கள்




ப்ளேயிங் இட் மை வே: சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை

ச்சின் டெண்டுல்கருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. கை விரலில் சிறிய அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. திடீரென்று அவர் எழுந்துகொள்கிறார். “ஆபரேஷன் செய்யும்போது உள்ளங்கையில் வெட்டிவிடாதீர்கள். பேட்டைப் பிடிக்க க்ரிப் இருக்காது” என்கிறார் பதற்றத்துடன். மருத்துவருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. மயக்க மருந்து வலுவிழக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள்” என்று மீண்டும் தூங்கவைக்கிறார்.

கிரிக்கெட்டின் மீது சச்சினுக்கு இருக்கும் தீராக் காதலை இந்த ஒரு சம்பவமே சொல்லிவிடும். அப்படிப்பட்ட ஒருவர் சுயசரிதை எழுதினால் எப்படி இருக்கும்? சச்சினின் மனைவி அஞ்சலி பற்றிய ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு வரியும் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. கிரிக்கெட் ஆடுதல், கிரிக்கெட்டுக்காகத் தயார்செய்துகொள்ளுதல், ஆட்டத்தை அலசுதல் எனப் பக்கங்கள் விரிகின்றன. கிரிக்கெட்டுக்கு அப்பால் குறிப்பிடப்படும் விஷயங்களும் (அரட்டை, ஷாம்பெய்ன், பயணங்கள், இசை) கிரிக்கெட் தொடர்பாகவே பேசப்படுகின்றன.

30 ஆண்டு காலப் பயணம்

வரலாற்றில் யாரும் செய்யாத, இனி அனேகமாக யாராலும் செய்ய முடியாத பல சாதனைகளைச் செய்தது எப்படி எனபதை ஓரளவேனும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் தன் கிரிக்கெட் பயணத்தைப் பதிவுசெய்துள்ளார் சச்சின். 11 வயதில் தொடங்கிய பயணம் இது. கிட்டத்தட்ட 30 ஆண்டு காலப் பயணம். அதில் உள்ள தீவிரம், அசாத்தியமான முனைப்பு, நம்ப முடியாத அளவிலான முன் தயாரிப்பு, பரவசம், வலி என இந்தப் பயணத்தின் பரிமாணங்கள் சுமார் 450 பக்கங்களில் உருப்பெறுகின்றன.

பயிற்சி என்றால் சாதாரணப் பயிற்சி அல்ல. பதின்ம வயதில் ஒரு நாளுக்கு நான்கு முறை பேருந்தில் பயணம் செய்து பயிற்சிக்குச் செல்வது, அங்கே மணிக் கணக்கில் பயிற்சி, பயிற்சி இல்லாத நாட்களில் நாள் முழுவதும் விளையாட்டு என்று ஆட்டத்தின் மீது வெறித்தனமான ஈடுபாடு சச்சினுக்கு இருந்திருக்கிறது. இந்தியாவுக்காக ஆடத் தொடங்கி அணியில் நிரந்தர இடம் பிடித்த பிறகும் அவரது வெறித்தனமான பயிற்சி குறையவில்லை. கடைசிப் போட்டிவரை அது தொட்ர்ந்திருக்கிறது. அந்தப் பயிற்சிகளை சச்சின் விவரிக்ப்பதைப் படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. போட்டி இல்லாத நாட்களிலும் பயிற்சியின் தீவிரம் குறைவதில்லை. சாப்பாட்டுப் பிரியரான சச்சினுக்குத் தன் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது பெரிய சவாலாக இருந்திருப்பதையும் உணர முடிகிறது. 

போட்டிகள், பயிற்சிகள், வெற்றி, தோல்விகள் என்பவை எந்த ஆட்டக்காரரின் வாழ்க்கையிலும் வருபவைதான். ஆனால் தன்னுடைய சாத்தியங்களின் எல்லைவரை போய்ப் பார்த்துவிட வேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட சச்சினின் விஷயத்தில் இவை ஒவ்வொன்றுமே விறுவிறுப்பான நிகழ்வுகளாகியிருக்கின்றன. ஸ்டெம்பின் மீது ஒற்றை ரூபாய் நாணயத்தை வைத்துவிட்டுப் பந்து வீசச் செய்வார் கோச் ரமாகாந்த் அச்ரேகர். சுற்றிலும் இருபதுக்கும் மேற்பட்ட தடுப்பாளர்கள். எல்லைக் கோடு என்று எதுவும் கிடையாது. எங்கே கேட்ச் பிடித்தாலும் அவுட். இந்த வியூகத்திற்குள் அவுட் ஆகாமல் 15 நிமிடங்கள் ஆடினால் அந்த நாணயம் பரிசு. நாணயம் சில சமயம் கிடைக்கும், சில சமயம் கிடைக்காது. ஆனால், தரையோடு ட்ரைவ் ஆடும் கலையை இதன் மூலம் கற்றுக்கொள்ள முடிந்தது.

குறைந்த தூரத்திலிருந்து வீசப்படும் பவுன்சர்களை ஆடுவது, மழையில் நனைந்தபடி ஆடுவது, ஒவ்வொரு பந்து வீச்சாளரின் பலம் என்னவோ அதற்கேற்றபடி வியூகம் வகுத்து அதைப் பயிற்சி செய்வது என்று பல விதமாக அமைந்த இந்தப் பயிற்சிகள் கடைசித் தொடர்வரையிலும் தொடர்ந்தது. 2013-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு முன்பு மலைப்பாங்கான பகுதியில் சைக்கிளில் ஏறும் பந்தயத்தில் அளவுக்கதிகமான வேகத்தில் ஓட்டி மயங்கி விழும் நிலைக்குப் போயிருக்கிறார். 198 போட்டிகளில் ஆடிய ஒருவர் அப்படியெல்லாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பரம பக்திமானுக்கு வழிபாடு எப்படியோ அப்படித்தன் சச்சினுக்குப் பயிற்சி.

இயல்பின் ஒரு பகுதி

சச்சின் இயல்பிலேயே கிரிக்கெட் ஆடும் ஆற்றல் கொண்டவர். 14 வயதில் உள்ளூர்ப் போட்டி ஒன்றில் இவர் கபில்தேவின் பந்துகளை எதிர்கொள்ளும் விதத்தைப் பார்த்து வியந்த வெங்சர்க்கார் இவரை மாநில அணிக்கு ஆடப் பரிந்துரைக்கிறார். இப்படிப்பட்ட ஆற்றலும் அதற்கேற்ற தன்னம்பிக்கையும் இருந்தாலும் பயிற்சியை ஒருநாளும் சச்சின் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. பயிற்சியை ஒரு தவம்போலச் செய்வதும் தொடர்ந்து தன் மட்டையாட்டத்தில் பரிசோதனைகள் செய்துகொண்டிருந்ததும்தான் எல்லாச் சோதனைகளையும் மீறி இவரை 24 ஆண்டுகள் நீடிக்கவைத்தன என்பதை இந்தச் சுயசரிதை இயல்பாக உணர்த்துகிறது.
  
ஒரு ஆட்ட நாயகன் உருவாகிறான் என்றால் அதற்கு அவன் மட்டுமல்லாமல் அவன் குடும்பமும் விலை கொடுக்க வேண்டும். சச்சினின் பெற்றோரிலிருந்து தொடங்கி அவரது அண்ணன், பின்னாளில் மனைவி, குழந்தைகள் என எல்லோருக்கும் இதில் பெரிய பங்கு இருக்கிறது. இவர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் சச்சின் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார். தன் கோச் ரமாகாந்த் அச்ரேகரைப் பற்றிப் பேசும்போதும் நெகிழ்ந்துபோகிறார். 

சோதனைகள் எல்லாத் துறைகளுக்கும் பொதுவானவைதான். ஆனால் சமகால விளையாட்டுக் களத்தில் சச்சின் அளவுக்குச் சோதனைகளை அனுபவித்திருக்கும் இன்னொருவர் இருப்பாரா என்பது சந்தேகம்தான். கடுமையான பயிற்சிகள், தொடக்கத்திலேயே வலிமையான எதிரணிகளுக்கு எதிராகப் பழக்கமில்லாத ஆடுகளங்களில் ஆட வேண்டிய நிர்ப்பந்தம், சிறிய வயதிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னும் சுமையைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம், கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்குத் துணைக்கு வலுவான மட்டையாளரோ எதிரணியை ஊடுருவக்கூடிய பந்து வீச்சாளர்களோ இல்லாத ஒரு அணியில் இருந்தபடி ஆட வேண்டிய அழுத்தம், கிரிக்கெட் வாழ்வின் பின் பகுதியில் எதிர்கொண்ட கடுமையான காயங்கள், எதிரணியின் முதன்மை இலக்காக இருத்தல் என்று தன் மீதான சுமைகளை மிகையுணர்ச்சி இன்றி விவரிக்கிறார் சச்சின்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதன் வலியையும் காயங்களிலிருந்து மீண்டு வருவதில் இருந்த உடல், மன வலிகளையும் துல்லியமாகச் சொல்கிறார். முதுகு வலி, கால் விரல் எலும்பு விரிசல், டென்னிஸ் எல்போ என்னும் முழங்கை வலி, தோள்பட்டைத் தசை கிழிந்தது, கை விரலில் ஏற்பட்ட முறிவு, தொடையில் ஏற்பட்ட வீக்கம் என்று சச்சினுக்கு ஏற்பட்ட எல்லாக் காயங்களுமே அபாயகரமானவைதாம். இந்தக் காயங்களில் ஏதேனும் ஒன்று போதும் ஒருவரைத் தீவிர ஆட்டத்திலிருந்து விலக்கிவைக்க. ஆனால் சச்சின் விலக மறுத்துப் போராடுகிறார். தன் சாத்தியங்களில் எல்லைகளைக் கடுமையான போராட்டத்தின் மூலம் விரிவுபடுத்துகிறார். ஆட்டத்தின் எல்லைகளையும் கூடவே விரிவுபடுத்துகிறார். சிறிய வயதில் பின் காலில் சென்று ஆடும் கவர் ட்ரைவ், அதிக மட்டை அசைவு இல்லாமல் ஆடும் ஸ்ட்ரைட் ட்ரைவ் போன்ற ஷாட்கள் என்றால் பின்னாளில் அப்பர் கட் போன்ற ஷாட்கள் அவரது முத்திரையாக இருந்தன.
ஆடுகளம் தொடர்ந்து சச்சினுக்குப் பெரும் சவால்களை எழுப்பியபடி இருந்திருக்கிறது. அதற்கு அவர் எல்லா விதங்களிலும் தயாராகவே இருந்திருக்கிறார். அதனால்தான் 35 வயதுக்குப் பிறகு அவரால் ஒரு நாள் போட்டியொன்றில் 200 ரன் எடுக்க முடிந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் சவாலான சூழலில் டெஸ்ட் சதம் எடுக்க முடிந்திருக்கிறது. பார்வையாளராக இந்த மாயங்களைப் பார்த்து வியந்த ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படித்தல் எதுவும் சும்மா வந்துவிடவில்லை என்பது புரியும்.


வலியை வென்ற காதல்

சச்சினின் கதையை ஒரு விதத்தில் வலியின் கதை என்று சொல்லலாம். சொல்லொணாத வலிகளுக்கு மத்தியில் ஒரு மனிதன் விடாமல் போராடிய கதை. சென்னை டெஸ்டில் முதுகு வலியோடு அவர் ஆடியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அதைவிடவும் கடுமையான வலியை அவர் அனுபவித்திருகிறார். முறிந்த விரலோடு ஆடியிருக்கிறார். தோள்பட்டையில் கிழிந்த தசையோடு ஆடியிருக்கிறார். கால் விரலில் சிறு விரிசலால் சிரமப்பட்டு ஆடியிருக்கிறார். டென்னிஸ் எல்போ குணமாகிய பிறகும் பழைய வலிமையைப் பெறுவதற்கு முன்பே ஆடியிருக்கிறார். ஜுரம், வயிற்று வலி ஆகியவற்றின் கணக்கு தனி.

இத்தனை வலிகளையும் சுமந்தபடி அவரை ஆடவைத்த சக்தி எது? வலிகளைப் பொருட்படுத்தாமல் களமிறக்கிய சக்தி எது? கிரிக்கெட்டின் மீது இருக்கும் அடங்காத காதல்தான். அந்தக் காதல்தான் 12 வயதிலிருந்து ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அந்தக் காதலின் ஆழம்தான் 24 ஆண்டுகள் கடந்த பிறகும் ஓய்வுபெறும் எண்ணத்தை வலி மிகுந்த அனுபவமாக மாற்றுகிறது. 

விமர்சனங்கள், சர்ச்சைகள்

சச்சின் சர்ச்சைகளைப் பற்றியும் பேசுகிறார். அணித் தேர்வு விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் குறைகளைப் பற்றி, 1997-ல் தன்னிடம் சொல்லாமல் தலைமைப் பதவியிலிருந்து தன்னை நீக்கியதைப் பற்றி, ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கும் ஹர்பஜன் சிங்குக்கும் இடையே நடந்த சண்டையைப் பற்றி, தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்ட சமயங்களில் அடைந்த ஏமாற்றங்களைப் பற்றி, தான் 194 ரன்னில் இருக்கும்போது திராவிட் டிக்ளேர் செய்தது பற்றி, கிரேக் சாப்பலின் செயல்பாடு பற்றி, இயன் சாப்பலின் விமர்சனங்கள் பற்றி

சில பதிவுகள் தனித்து நிற்கின்றன. ஷார்ஜாவில் ஆடிய அந்த இரண்டு ஆட்டங்கள், 2003 உலகக் கோப்பை ஆட்டங்கள், கொல்கத்தாவில் லட்சுமணனும் திராவிடும் நிகழ்த்திய அதிசயம், கும்ப்ளேயின் போர்க்குணம், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகியோருடன் இருந்த நட்பு போன்றவை சுவாரஸ்யமானவை.

புத்தகத்தில் என்னவெல்லாம் இல்லை என்றும் பல விஷயங்களை அடுக்கலாம். சில விமர்சகர்கள் மேட்ச் ஃபிக்ஸிங் பற்றி மவுனம் சாதிப்பது குறித்துக் கேள்வி எழுப்புகிறார்கள். சிலருக்கு வேறு சில சர்ச்சைகளைப் பற்றிக் கவலை. புதிய தகவல்கள் அதிகம் இல்லை என்பது சிலரது ஆதங்கம். இன்னும் அடுக்கலாம். கங்கூலி, கும்ப்ளே ஆகியோரைப் பற்றி எழுதிய அளவுக்கு திராவிட், லட்சுமணன் பற்றி இல்லை. ரிசர்ட்ஸைப் பற்றி நெகிழ்ந்து பேசும் சச்சின், கவாஸ்கர் முதலான இந்திய வீரர்கள்பற்றி அதிகம் சொல்லவில்லை. பால்ய நண்பன் காம்ப்ளி பற்றிய பதிவு ஏனோதானோவென இருக்கிறது. ஒரு சில மோசமான தோல்விகளைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. பிரயன் லாரா, ரிக்கி பான்டிங் போன்ற சமகாலச் சாதனையாளர்கள் பற்றி அதிகமில்லை.

இவை போதாமைகள்தான். ஆனால், ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது சச்சினின் சுயசரிதை. எதை எழுதுவது, எதை விடுவது என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். தவிர, இந்தியச் சூழலில், எந்த அளவுக்கு விஷயங்களைத் திறந்த மனதுடன் பேச முடியும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. கபில்தேவும் கவாஸ்கரும் எத்தனை சர்ச்சைகளைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்கள் என்பதையும் யோசித்துப் பார்க்கலாம்.

டெண்டுல்கர் மொழித் திறனுக்குப் பேர்போனவர் அல்ல. அவருடன் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதிய போரியா மஜும்தாரும் நடையழகுக்காக மெனக்கெடவில்லை. எளிமையாக, செய்தித்தாள் பாணியில் மொழிநடை இருப்பது சச்சினின் ஆளுமையுடன் பொருந்திப்போகிறது. முதல் முதலாக மட்டை பிடித்த நாளிலிருந்து வாங்கடே அரங்கில் ஓய்வுபெற்ற தினம்வரை சச்சினின் கிரிக்கெட் பயணம் இங்கே பதிவாகியிருக்கிறது.  
கிரிக்கெட்டைத் தன் உயிருக்கு இணையாக நேசித்த ஒரு மனிதனின் உணர்வுகள் இந்தப் புத்தகம் முழுவதும் தகவல்களாகத் தரப்பட்டுள்ளன. ஆகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவரது பார்வையிலிருந்து ஆட்டம் அணுகப்படுவதில் வெளிப்படும் நுட்பம்தான் நூலின் ஆகச் சிறப்பான அம்சம். ஆடுகளத்தை மதிப்பிடுதல், காற்று வீசும் திசையைக் கவனித்தல்,  வானிலையால் ஏற்படும் கள மாற்றங்களின் தன்மைகள், பந்துவீச்சாளரின் மனதை ஊடுருவ முயலும் உளவியல் போராட்டம், எதிரணியின் வியூகங்களைக் கணித்தல், உடல் குறைபாடு ஆட்டத்தைப் பாதிக்காத வண்ணம் செய்துகொள்ள வேண்டிய மாற்றங்கள், களத்தில் சக ஆட்டக்காரர்களுடனான உரையாடல்களின் முக்கியத்துவம் என மட்டை வீச்சுக் கலையின் சூட்சமங்களை அவர் விவரிக்கும் நுட்பம் அபாரம்.

ஒரு இளைஞர், அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதில் போராடித் தன் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான உத்வேகத்தை இந்த நூலிலிருந்து பெற முடியும். தான் தேர்ந்துகொண்ட விஷயத்தின் மீது அசாத்தியமான காதல் இருந்தால் அசாத்தியமான வலிகளைத் தாண்டிச் சாதிக்க முடியும் என்பதையும் அறிய முடியும். இதுதான் இந்த நூலின் ஆகச் சிறந்த பங்களிப்பு.​

Wednesday, June 8, 2016

படைப்பின் சாவி யாரிடம் உள்ளது?



பிறர் எழுதியதை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு எதைத் தருகிறது?

இந்தக் கேள்விக்கான விடையைப் படைப்பு எதைத் தருகிறது என்பதிலிருந்து அணுகலாம். படைப்பு என்பது புதிதாக ஒன்றை உருவாக்குதல். போலிசெய்தல் அல்ல. படைப்பூக்கம் கொண்ட ஒரு நபர் தன் அனுபவங்களையும் பார்வையையும் தனக்கே உரிய கோணத்தில் வெளிப்படுத்துவதைப் படைப்பு என்று சொல்லலாம். 

படைப்பூக்கம் கொண்ட எழுத்து வாசிக்கப்படும்போது அது தரும் பொருள் பல்கிப் பெருகுகிறது. கற்பனைக்கும் எட்டாத வகையில் விரிவு கொள்கிறது. ஒரு பிரதி பல பிரதிகளாக மாறுகின்றன. படைப்பில் ஒரு உரையாடல், படைப்பில் வரும் ஒரு நிகழ்வு, ஒரு தருணம், சிந்தனைத் தெறிப்பு ஆகியவை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருளைத் தரக்கூடியவையாக உள்ளன. ஒரே நபருக்கு வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பொருள்களையும் தருகின்றன.

படைப்பு என்பது தட்டையான செயல்பாடு அல்ல என்பதைப் போலவே வாசிப்பும் தட்டையான செயல்பாடு அல்ல. படைப்பைப் போலவே அது பன்முகப் பரிமாணங்கள் கொண்டது. ஒரே வாசகர் ஒரு படைப்பில் உணரும் ஒரு அம்சத்தை, பெறும் தரிசனத்தை இன்னொரு வாசகர் உணரவோ பெறவோ வேண்டிய அவசியம் இல்லை. ஒரே விதமான தரிசனத்தை இருவர் பெறுவதும் சாத்தியம் இல்லை. பல வித வாசிப்புகள், பல விதமான தரிசனங்கள்.

ஒரு கதை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாகப் பொருள் தரும் என்றால் அந்தக் கதையை ஒரு கதை என்று எப்படிச் சொல்ல முடியும்? எழுதப்பட்ட கதை அல்லது கட்டுரை ஒன்றுதான் என்றாலும் வாசிக்கப்படும் கதை ஒன்று அல்ல. ஏனென்றால் அந்தக் கதை உள்வாங்கப்படும் விதம் ஒரே விதமானதல்ல. ஒரு கதை பல கதைகளாகப் பெருகுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு வாசிப்புக்கும் ஒவ்வொரு கதை.

ஆக ஒரு கதை எண்ணற்ற கதைகளாக விரிந்துகொண்டே போகிறது. முடிவற்ற இந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்துவது வாசிப்பு. வாசிப்பு பெருகப் பெருகக் கதைகளும் பிரதிகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

இப்படிப் பார்க்கும்போது வாசிப்பின், வாசகரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். படைப்பு வாசிப்பின் எண்ணிக்கைக்கும் வாசிப்பவரின் ஆளுமைக்கும் ஏற்ப விரிந்துகொண்டே போவதால் படைப்புக்கு உயிர் கொடுப்பதே வாசிப்பு என்று சொல்லிவிடலாம்.

படைப்பு ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியவை. அரிச்சந்திரன் கதை காந்திக்குக் கொடுக்கும் பொருள் அவர் வாழ்க்கைப் பார்வையையே மாற்றியது. ஷேக்ஸ்பியரின் ஆண்டனி ஆற்றும் உரை ஒரு தருணத்தின் மாயத் தன்மையை உணரவைத்து ஒவ்வொருவரது பின்புலத்துக்கும் ஏற்பப் பலவாறாக உருக்கொள்கிறது. நான்கு தம்பிகளில் யார் உயிர்பிழைக்க வேண்டும் என விரும்புகிறாய் என்னும் யட்சனின் கேள்விக்குத் தருமன் சொன்ன பதில் சமநீதியின் நிரந்தரச் செய்தியாக மனித ஆன்மாவில் தங்கியிருக்கிறது. குருதட்சிணையாகக் கட்டை விரலைக் கேட்ட துரோணரின் குரல் சமத்துவ மறுப்பின் சாட்சியாகத் தங்கியிருக்கிறது.

காஃப்காவின் கே எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அவற்றின் பின்புலங்களைத் தாண்டி, உலகம் முழுவதிலும் நுண்ணுணர்வு கொண்ட ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளாகத் தோற்றம் கொள்ளுகின்றன. நீரின்றி இருப்பது நதியின் பிழை அல்ல என ராமன் லட்சுமணனிடம் சொல்வது உலகின் எல்லா நதிகளுக்கும் எல்லா விதிகளுக்கும் பொருந்துகிறது. அரசனைப் பார்த்துக் கண்ணகி கேட்கும் கேள்வி கண்ணகியின் கேள்வி மட்டுமல்ல. அன்றைய கேள்வி மட்டும் அல்ல. “இதுக்குத்தானா” என்று யமுனா பாபுவைப் பார்த்துக் கேட்ட கேள்வியின் எதிரொலி அதை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் வெவ்வேறு அதிர்வுகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். குற்றமும் தண்டனையும் குறித்து ரஸ்கோல் நிகோவுக்கு எழும் மன நெருக்கடி காலம், இடம் தாண்டி அனைவரது மனங்களிலும் எழும். இதுதான் படைப்பின் மாயம்.

இந்த மாயத்தை நிகழ்த்துவது படைப்பாளி மட்டுமல்ல. வாசகரும் சேர்ந்துதான் இதைச் சாத்தியப்படுத்துகிறார். ஒரு படைப்பு பல தரிசனங்களாக, பல பிரதிகளாக பல்வேறு படைப்புகளாக மாறும் மாயத்தை, அதிசயத்தை நிகழ்த்துபவர்கள் வாசகர்கள்.

இரும்புக் கையின் உயிர்

இரும்புக் கை மாயாவி என்னும் காமிக்ஸ் கதாபாத்திரத்தைப் பலர் அறிந்திருப்பார்கள். அந்த இரும்புக் கை பல ஆற்றல்கள் கொண்டது. ஒரு விரல் தோட்டாவைச் சுடும் திறன் கொண்டது. இன்னொரு விரலில் விஷ வாயுவைப் பீய்ச்சும் ஆற்றல் கொண்டது. மின்சாரத்தைப் பாய்ச்சுதல், மரண அடி கொடுத்தல், தன்னைத் தாங்கியவரின் உருவத்தை மறைய வைத்தல் என மேலும் பல விதமான திறமைகள் கொண்டது அந்த இரும்புக் கை. அதைக் கழற்றித் தனியாகவும் இயங்க வைக்க முடியும். ஆனால் அதன் சொந்தக்காரர் நினைவிழந்து, செயலிழந்துவிட்டால் அதன் ஆற்றல்கள் எதுவும் பயன்படாது. இரும்புக் கை வெறும் கையாக இருக்கும். அதற்கு உயிர் கொடுக்கும் சாவி அதன் உரிமையாளரிடம் இருக்கிறது. அவரது பிரக்ஞையில் இருக்கிறது.

படைப்பும் அப்படித்தான். வாசிப்பின் ஸ்பரிசமே அதன் படைப்பின் வல்லமையை விகசிக்கவைக்கிறது. படைப்பைப் படைப்பாக உயிர்பெறச் செய்யும் சாவி வாசகர்களிடம்தான் இருக்கிறது. அவ்வகையில் வாசகர்களும் படைப்பாளர்களே.

ஒவ்வொருவரும் தனக்குள்ள படைப்பாற்றலை இனம்கண்டு வெளிப்படுத்துவதன் மூலம் தனது வாழ்வையும் ஒட்டுமொத்த மனித இனத்தின் வாழ்வையும் மேம்படுத்த முடியும். எழுத்தாளர்கள் செறிவானவற்றைப் படைப்பதன் மூலமாகவும் வாசகர்கள் தங்களது ஆழமான வாசிப்பின் மூலமும் படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள். காத்திரமான வாசிப்பு பெருகப் பெருக ஒரு சூழலின் படைப்பாற்றலும் பெருகுவது சாத்தியமாகிறது.

Tuesday, April 12, 2016

நந்தவனத்தில் பல ஆண்டிகள்!


தேர்தல் குறித்த செய்திகளுக்கு நடுவே திடீரென்று காண நேர்ந்த அந்த ஒரு வரி, சட்டென்று கவனத்தைக் கவர்ந்தது. கூட்டணி பற்றி பாஜக - தமாகா இடையே பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அந்தச் செய்தி கூறியது. பல கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவந்த தமாகா, கடைசியில் மக்கள் நலக் கூட்டணியில் சங்கமமாகிவிட்டது. என்றாலும், பாஜகவுடன் அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது இந்தத் தேர்தலின் விசித்திரங்களில் ஒன்று. தமாகாவுக்கும் அதன் தாய்க் கட்சியான காங்கிரஸுக்கும் கொள்கை ரீதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்நிலையில், தமாகாவுக்கும் பாஜகவுக்கும் இடையே நடந்ததாகச் சொல்லப்படும் பேச்சுவார்த்தையை நாட்டில் எங்கும் இல்லாத அதிசயமாக, காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கான பேச்சுவார்த்தையாகவே கருத வேண்டியிருக்கிறது.
 
கேலிக்கூத்துகளின் அரங்கம்

விசித்திரங்களுக்குக் குறைவில்லாத தேர்தல் இது. மநகூவில் சேரும் கட்சிகள் சேர்வதற்கு முன்பு மேற்கொண்ட பயணங்கள் தேர்தல் கூட்டணி என்பது பண்டிகைக் காலத் தள்ளுபடி வியாபாரமாகவே மாறிவிட்டதைக் காட்டுகின்றன. திமுகவின் பாத்திரத்தில் விழ வேண்டிய பழம் மநகூவின் கிண்ணத்தில் விழுந்ததையும், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுடனும் பேரம்பேசி அது படியாமல் மநகூவிற்கு தமாகா வந்து சேர்ந்ததையும் மட்டும் வைத்து இந்த முடிவுக்கு நாம் வர வேண்டியதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், திமுகவைத் தோற்கடிப்பதையே தன் லட்சியமாக முழங்கிவரும் வைகோவின் மதிமுகவும் திமுக கூட்டணியில் இடம்பெறக்கூடிய நிலை எட்டு மாதங்களுக்கு முன்புவரை இருந்தது. ஆளுமை மோதல்களும் தந்திரமான ஓரங்கட்டல்களும் சேர்ந்துதான் இந்தக் கட்சிகளைக் கரை ஒதுக்கின என்பது பகிரங்க ரகசியம். பல சமயங்களில் அதிமுகவுக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள் அதிமுகவில் தங்களுக்கான இடம் கிடைக்காமல், திமுகவுடனும் சேர இயலாமல் தனிமரமாய் நின்றன.

மநகூவில் இருக்கும் கட்சிகளுக்குத் தற்போது அமைந்துள்ள கூட்டணி என்பது அவற்றின் முதல் தேர்வு அல்ல. நிர்க்கதியானவர்கள் சேர்ந்து அமைத்த கூட்டு இது. மாற்றுச் சக்தி என்று இவர்கள் சொல்லிக்கொள்ளும்போது அது கேலிக்கூத்தாகத் தோற்றமளிப்பது இதனால்தான். இந்தக் கட்சிகள் திமுக, அதிமுகவின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘அப்படியானால் அவர்களோடு கூட்டணி சேர நீங்கள் ஏன் முயன்றீர்கள்?’ என்ற கேள்வி மக்கள் மனதில் எழும் அல்லவா? அந்தக் கேள்விக்கெல்லாம் பொருள் இல்லை என்னும் அளவுக்கு கேலிக்கூத்துகளின் அரங்கமாக மாறியிருக்கிறது இந்தத் தேர்தல் களம்.

கேலிக்கூத்துகள் ஒருபுறம் இருக்க, அரசியலில் பெரிய ஆளுமைகளாக வலம்வந்த பலர் சிறுத்துப்போய் நிற்கிறார்கள். பல ஆண்டுகளாக ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் கட்டுடைகின்றன. திராவிட இயக்கத்தின் போர்வாளாகப் புறப்பட்ட வைகோ, கூட்டணி பேரத்துக்காக லஞ்சம் வாங்கினீர்களா என்னும் நேரடியான கேள்வியை எதிர்கொள்ள அநாகரிக வார்த்தைகளையும் சாதி ஆணவப் பேச்சையும் நாடுகிறார். எந்தப் பதற்றமும் இல்லாமல் தெளிவாக அவர் முன்வைத்த மோசமான வசைகளுக்கு உலகமே கண்டனம் தெரிவித்த பிறகு, வாழ்நாளில் நான் செய்த பெரிய குற்றம் என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார் புரட்சிப் புயல். உலகையே புரட்டிப்போடும் ஆவேசத்துடன் புறப்பட்ட புயலின் ஆவேசம் தேநீர்க் கோப்பைக்குள் சலனத்தை ஏற்படுத்திவிட்டு அடங்கிவிடுமோ என்று தோன்றுகிறது. விஜயகாந்தை முதல்வராக்குவதைத் தனது லட்சியமாக அறிவிக்கும் இந்த திராவிட மறுமலர்ச்சிச் சிங்கம், விஜயகாந்த் எந்த வகையில் மாற்றுச் சக்தியாக இருப்பார் என்பதைத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

வைகோவின் மன்னிப்பால் கருணாநிதியின் மனதில் பட்ட காயம் மறையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மீது இழிவான சொற்களைப் பயன்படுத்தும் காடுவெட்டி குரு போன்றவர்களின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருப்பவர்தான் இவர். வைகோவாவது மன்னிப்புக் கேட்டார். அதைக் கூடச் செய்ய இவரோ இவரது கட்சியினரோ தயாராக இல்லாத நிலையில், காடுவெட்டிகளின் பேச்சால் தலித் மக்களின் மனங்களில் சுட்ட வடுக்கள் எப்படி நீங்கும்?
 
சிதையும் பிம்பங்கள்

எல்லாக் கட்சிகளுமே உடலை விறைத்துக்கொண்டு வீராவேசமாகப் பேசினாலும் அவற்றின் கால்கள் நடுங்குவதை உணர முடிகிறது. இந்தத் தேர்தல் எல்லாத் தலைவர்களின் பிம்பங்களையும் கட்டுடைத்து, அவர்களை அம்பலப்படுத்திவருகிறது. கட்சிகள் தமக்கான குழிகளைத் தாமே வெட்டிக்கொள்கின்றன. பாடுபட்டுப் பெற்றுவந்த பொருளைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைக்கும் ஆண்டியை நினைவுறுத்தும் அபத்தத்தின் திருவுருக்களாக நிற்கிறார்கள் அரசியல்வாதிகள். புறக்கணிக்கப்பட்ட உதிரி அமைப்புகள் மாற்றுச் சக்தியாக வேடமிட்டு உலவுகின்றன. வலுவான கூட்டணியாக உருவாகியிருக்கக்கூடிய வாய்ப்பை திமுக இழந்ததற்கு அக்கட்சியே காரணம். அந்தக் கட்சியை உள்ளூர அரித்துவரும் குடும்ப ஆதிக்க அரசியலே ‘அந்நியர்’களை விரட்டியடித்திருக்கிறது. தமிழகத்தின் மகத்தான ராஜதந்திரி தனது அஸ்திரங்களை இழந்து களத்தில் பலவீனப்பட்டு நிற்கிறார். எட்டாக் கனிகளை எண்ணிக் குமைந்துகொண்டிருக்கிறார். யாருமே சீந்தாமல் புறக்கணித்துவிட்ட ஒரு தேசியக் கட்சி, கோட்டையில் தாமரை மலரும் என்று முழங்கி, சுய பரிகாசத்தின் உச்சத்தைத் தொடுகிறது.

ஒப்பீட்டளவில் உறுதியான தலைவராகத் தோற்றமளிக்கும் ஜெயலலிதாவின் பிம்பமும் கட்டுடைந் திருக்கிறது. வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டுக் கணக்கற்ற முறைகள் அதை மாற்றிக்கொண்டிருப்பது தலைமையின் தடுமாற்றமன்றி வேறென்ன? ஒவ்வொரு மாற்றமும் அதற்கு முந்தைய அறிவிப்பைப் பரிகசிக்கிறது. அப்படியானால், அந்த மாற்றங்களைச் செய்பவர், தன்னைத் தானே பரிகசிப்புக்கு உள்ளாக்கிக்கொள்கிறார் என்றுதான் அர்த்தம். மதுவிலக்கு கோரி மாநிலமே கதறிக்கொண்டிருந்தபோது அமைதியாக இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடுவதும் தன்னைத் தானே பரிகசித்துக்கொள்ளும் செயல்தான்.
ஒவ்வொரு தேர்தலிலும் வலுவான கூட்டணி, தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடிய பிரச்சினை முதலானவை தேர்தலுக்கு முன்பே அடையாளம் காணப்படும். இந்தத் தேர்தலில் அப்படி எதுவும் தெரியவில்லை. சகல அம்சங்களிலும் அடைந்துவரும் ஏமாற்றங்களால் விளைந்த கோபங்களைத் தாண்டி விசுவாச வாக்காளர்கள் பழக்கம் சார்ந்த தெளிவை அடைந்துவிடுவார்கள். ஆனால், புதிய வாக்காளர்களான இளைஞர்களின் கோபம் அப்படியல்ல. எந்த அளவுக்குப் பிம்பங்களை ஆவேசமாகப் பின்பற்றுகிறார்களோ அதே அளவுக்கு விரைவாக அந்தப் பிம்பங்களை உடைத்தெறியும் உத்வேகமும் கொண்ட இளைஞர்கள் எடுக்கும் முடிவு, இந்தத் தேர்தலின் ஆகப் பெரிய வியப்பாக அமையக்கூடும். பழம் பெருமைகளின் பீற்றல்கள், காலாவதியான முழக்கங்கள், பொய்கள், பசப்பல்கள் ஆகியவற்றை நம்பாத தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்கள் உலகத்தில் எந்தப் பிம்பமும் புனிதப் பிம்பம் அல்ல. எல்லாமே பரிகசிப்புக்குரியவை. அரசியல் தலைவர்கள் கட்டி எழுப்பியிருக்கும் பிம்பங்கள் உண்மையில் மாய பிம்பங்கள் என்பதை மெய்நிகர் உலகில் இவர்கள் நிரூபித்துவருகிறார்கள்.

நாள்தோறும் சிதைந்துவரும் பிம்பங்களே இந்தத் தேர்தலின் மகத்தான சாட்சி. தேர்தல் செய்திகளும் முழக்கங்களும் பிம்ப உருவாக்கங்களும் வழிபாடுகளும் நகைச்சுவை விருந்தாகவே பார்க்கப்படும் இந்தத் தேர்தலின் முடிவுகள் வருங்காலத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். குழப்பத்தின் உச்சியில் தெளிவு பிறந்தே ஆக வேண்டும். ஆகப் பெரிய குழப்பமான 2016 சட்டமன்றத் தேர்தல் தெளிவுக்கான முன்னோட்டமாக விளங்கினால் இந்தக் குழப்பங்களையும் ஆளுமைச் சிதைவுகளையும் வரலாற்றின் வரப்பிரசாதமாக நாம் கருதிக்கொள்ளலாம். ஆண்டிகளின் பானைகள் உடையலாம். ஆனால், நந்தவனம் சீரழிந்துவிடக் கூடாது என்பதுதான் வாக்காளர்களின் ஆகப் பெரிய பொறுப்பு.

ஏன் இந்தப் பதற்றம் தோனி?


இந்தியா உலகக் கோப்பை அரை இறுதியில் தோற்று வெளியேறிய போது கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம், ஓய்வு பெறும் திட்டம் இருக்கிறதா என்று ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். தோனி கேள்வி கேட்டவரை மேடைக்கு அழைத்து உரையாடினார். நான் நன்றாக ஓடுகிறேனா, நான் நல்ல உடல் திறனுடன் இருக்கிறேனா என்றெல்லாம் தோனி கேட்க, அவரும் ஆஹா உங்களைப் போல வருமா என்று பதில் சொன்னார்.

அண்மையில் நான் எவ்வளவு ரன் எடுத்தேன், எத்தனை போட்டிகளை வெற்றி கரமாக முடித்துக்கொடுத்தேன் என்றெல் லாம் ஏன் நீங்கள் கேட்கவில்லை தோனி அவர்களே? பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதத்திலோ நெருக்கடியான கட்டத்தில் மட்டை வரிசையில் செய்த மாற்றங்களிலோ எந்தக் குறையாவது கண்டீர்களா என்று ஏன் கேட்கவில்லை? கடந்த ஓராண்டில் நீங்கள் எடுத்த மொத்த ரன்கள் எவ்வளவு? சராசரி எவ்வளவு? அணியின் வெற்றியில் உங்கள் மட்டையின் பங்களிப்பின் விகிதம் என்ன? இந்தக் கேள்விகளைக்கூட நீங்கள் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை.

ஆனால் உலகம் கேட்கிறது. 2004-ல் நீண்ட முடியுடன் களம் புகுந்து கவலை யற்ற மனிதனாக நீங்கள் மட்டையைச் சுழற்றிய அழகைக் கண்டு வியந்த அதே உலகம்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கி றது. 2007-ல் டி 20 உலகக் கோப்பையை வென்றபோது உங்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடிய அதே உலகம்தான் கேட்கிறது.

மூத்த வீரர்கள் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்ள, அடுத்த நிலையில் இருந்தவர்களுக்குப் பொறுப்பளிக்க அணி நிர்வாகம் தயங்க, தலைமைப் பொறுப்பு உங்கள் தோள்களில் வந்து அமர்ந்தது. காற்றில் அழகாகப் பறக்கும் உங்கள் முடி காலப்போக்கில் குறையத் தொடங்கியது. ஆடுகளத்தில் உங்கள் மதிப்போ வளரத் தொடங்கியது.

உங்கள் ஆட்டத்தைவிடவும் உங்கள் முகத்தில் தவழும் புன்னகை, அலட்டிக்கொள்ளாத இயல்பு, நெருக்கடியில் பதறாத நிதானம், மூத்த வீரர்களைக் கையாளும் பக்குவம் ஆகியவை உங்களை நல்லதொரு தலைவனாக அடையாளம் காட்டின. விக்கெட் கீப்பிங்கில் குறை சொல்ல முடியாதபடி செயல்பட்ட நீங்கள், மட்டை வீச்சில் அலாதியான புகழை அடைந்தீர்கள். பந்தை எல்லைக் கோட்டுக்கு வெளியே அடிப்பதையே இலக்காகக் கொண்டிருந்த உங்கள் ஆட்டம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. சந்தர்ப்பத்துக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறனை வளர்த்துக்கொண்டீர்கள். அணியின் நிலையைப் பொறுத்து வெவ்வேறு நிலை களில் களம் இறங்கவும் வெவ்வேறு வேகங் களில் ரன் அடிக்கவுமான திறமையும் வளர்ந்தன. உங்களது இந்தத் திறமையின் உச்சத்தை 2011 உலகக் கோப்பையில் உலகமே பார்த்து வியந்தது.

அதன் பிறகு உங்களால் மட்டை வீச்சின் மூலம் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. உங்கள் மட்டை அவ்வப் போது பிரகாசித்தாலும் ஒப்பீட்டளவில் அது மவுனம் சாதிக்கிறது. குறிப்பாக, இந்திய மண்ணுக்கு வெளியே உங்கள் மட்டைக்கு அதிக வேலை இருப்பதில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் அதற்கு முன்பு நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டிகளிலும் இதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு வங்க தேசத்திலும் இந்த ஆண்டு ஆஸ்திரேலி யாவிலும் நடந்த ஒருநாள் போட்டித் தொடர் களிலும் உங்கள் பழைய வேகத்தையோ போட்டியைத் தீர்மானிக்கும் ஆட்டத்தையோ பார்க்க முடியவில்லை.

இப்போதும் நீங்கள் ரன் எடுக்கும்போது நன்றாகத்தான் ஓடுகிறீர்கள். விக்கெட் கீப்பிங்கிலும் உங்கள் வேகம் குறைய வில்லை. ஆனால், ஆடுகளத்தில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற இவை மட்டும் போதாது. இன்று ஒரு மட்டையாளராக உங்கள் நிலை என்ன? நீங்கள் விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரைப் போல இடைநிலையில் ஆடி இன்னிங்ஸை வலுப்படுத்துவீர்களா? அல்லது மார்லன் சாமுவேல்ஸ், ஃபாக்னர் போலக் கீழ் இடைநிலை மட்டை வரிசையைப் பலப் படுத்துவீர்களா? எது உங்கள் இடம்? அதில் அண்மையில் நீங்கள் செய்த சாதனை என்ன?

ஆடுகளத்தில் வேகமாக ஓடுவது முக்கியம்தான். ஆனால் அதுவே ஒரு மட்டையாளரின் தனிப் பெரும் தகுதியாகி விடும் என்றால் உசைன் போல்ட்டை கிரிக்கெட் ஆடச் சொல்லலாமே? கிரிக்கெட் கண்ட சிறந்த மட்டையாளர்களில் ஒருவர் வி.வி.எஸ். லட்சுமணன். அவர் எந்தக் காலத்திலும் உங்களைப் போல ஓடும் திறமை பெற்றவராக இருந்ததே இல்லை. பாகிஸ்தானின் இன்ஸமாம் உல் ஹக்கும் அப்படியே. அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆட ஓட்டம் மட்டும் போதாது தோனி.
நீங்கள் அணியின் தலைவராகவும் இருப்பதால் உங்கள் ஆட்டத்தை மட்டு மல்ல, அணியில் உள்ள பிறரது ஆட்டத் தையும் சிறப்பான முறையில் வெளிக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு உங்க ளுக்கு இருக்கிறது. தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் மட்டையாளரால் எப்படி மற்றவர்களுக்கு உத்வேகம் தர முடியும்?

உங்கள் தலைமையில் அண்மைக் காலத்தில் இந்தியா ஒரு நாள் போட்டி களில் பல தோல்விகளைச் சந்தித்துள் ளது. டி 20 போட்டிகளில் அண்மையில் இந்தியா பெற்ற வெற்றிகள் குறிப்பிடத்தக் கவைதான். ஆனால், அது உங்கள் தலை மையின் திறமையால் வந்தவைதானா என்ற கேள்வியை நீங்கள் எழுப்பிக்கொள் ளுங்கள். பந்து வீச்சாளர்களின் தேர்வு, அவர்களைப் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றில் உங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. கடைசி ஓவர்களைக் கையாள்வதில் உங்கள் திறன் வற்றிவரு வது கண்கூடு. குறிப்பாக, டி 20 அரையிறு தியில் கடைசி இரண்டு ஓவர்களை நீங்கள் பயன்படுத்திய விதம் இந்தியா தோற்பதற் கான முக்கியக் காரணங்களில் ஒன்று.

ஒரு மட்டையாளராக நீங்கள் கடுமையான பின்னடைவைச் சந்தித்திருக் கிறீர்கள். உங்கள் தலைமை அஸ்திரங் கள் வலிமை இழந்துவருகின்றன. கிரிக் கெட்டின் ஆகப் பெரிய சோதனையான டெஸ்ட் அரங்கிலிருந்து ஏற்கெனவே நீங்கள் வெளியேறிவிட்டீர்கள். தற்போ தைய டெஸ்ட் கேப்டன் கோலியின் அணுகு முறை மாறுபட்டதாக இருக்கிறது. அப்படித் தான் இருக்க வேண்டும். தலைமை விஷயத் தில் கங்குலி, டிராவிட் பாணியிலிருந்து நீங்கள் மாற்றம் கொண்டுவந்தீர்கள். இன்று கோலியின் முறை. புதிய தலைமை, புதிய அணுகுமுறை என்று இந்திய கிரிக்கெட் எல்லா வடிவங்களிலும் அடுத்த கட்டத் துக்கு நகர வேண்டிய தருணம் வந்து விட்டது. பத்தாண்டுகளுக்கு மேல் இந்திய கிரிக்கெட்டுக்குச் சிறப்பான சேவை ஆற்றிவரும் நீங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அதற்கு, பத்திரிகையாளர்களைக் குறுக்கு விசாரணை செய்வது உதவாது. உங்களைச் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Friday, April 1, 2016

கையிலிருந்து நழுவியது கோப்பை


லெண்டில் சிம்மன்ஸ் இந்தியா வுக்கு வந்து இறங்கி இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. பெரிய அளவில் பயிற்சியோ முன்தயாரிப்போ இல்லாமல் அவர் களம் இறங்கினார். அவர் இறங்கிய களம் ஒரு விதத்தில் அவரது ‘சொந்த’ஊர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் அவருக்கு மும்பையின் ஆடுகளம் மிகவும் பரிச்சயமானது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்லும் மார்லன் சாமுவேல்ஸும் விரைவிலேயே ஆட்டமிழந்த பிறகு அணியின் நம்பிக்கையை ஜான்சன் சார்லஸுடன் இணைந்து புதுப்பித்தார் சிம்மன்ஸ். தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே அணியை வெற்றிபெறச்செய்து இறுதி ஆட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

அஜிங்க்ய ரஹானேக்கும் இந்தத் தொடரில் இதுதான் முதல் ஆட்டம். இதே மும்பை ஆடுகளத்தில் பலமுறை களம் கண்ட அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. 35 பந்துகளில் 40 ரன் எடுத்த அவர், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அணியின் ரன் விகிதத்தைக் கூட்ட வேண்டியதன் தேவையை உணர்ந்து ஆடியதாகத் தெரியவில்லை. இன்னொரு மும்பை ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா 31 பந்துகளில் 43 ரன் எடுத்து அணி பெரிய இலக்கை எட்டுவதற்கு ஓரளவு உதவினார். ஆனால் 8-வது ஓவரில் இவர் ஆட்டமிழக்க, பொறுப்பு மீண்டும் விராட் கோலியின் மீது விழுந்தது.

விராட் கோலியும் மகேந்திர சிங் தோனியும் சேர்ந்து 192 ரன்களை இந்தியா எட்டுவதற்கு உதவினார்கள். இது பெரிய ஸ்கோர்தான். ஆனால், மட்டை வீச்சுக்குச் சாதகமான மும்பை ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுவதே சாதகமானது. இரண்டாவதாகப் பந்து வீசும்போது பனிப்பொழிவால் ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதம் பந்து வீச்சாளர்களுக்குப் பந்தின் மீதான இறுக்கமான பிடியைப் பாதிக்கும். எனவே இரவு நேர ஆட்டத்தில் இந்தக் களத்தில் இரண்டாவதாகப் பந்து வீசுவது கடினம். ஆடுகளத்தின் தன்மையைத் துல்லியமாகக் கணித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமி 192-ஐக் கண்டு அஞ்சவில்லை. இந்தியா தேவையை விடப் பத்து ரன்கள் குறைவாகவே எடுத்திருக்கிறது என்று தன் அணியினரிடம் சொன்னார். அவர் சொன்னதை அவரது மட்டையாளர்கள் நிரூபித்தார்கள்.

பெரிய இலக்குகளைக் கேலிக்கூத்தாக மாற்றக்கூடிய வலிமையும் வல்லமையும் படைத்த கெய்ல் ஆட்டமிழந்தபோதும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மட்டையாளர்கள் அஞ்சவில்லை. ஒவ்வொருவரும் தனக்கான பொறுப்பை உணர்ந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்திய அணியினர் செய்த தவறுகளும் அவர்களுக்கு உதவின. ரவிச்சந்திரன் அஸ்வினும் ஹர்திக் பாண்டியாவும் வீசிய நோ பால்களால் தப்பிப் பிழைத்த சிம்மன்ஸ் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்தில் அவர் கொடுத்த கடினமான கேட்சை ரவீந்திர ஜடேஜா தவறவிட்டார். இந்த பந்து பிடிக்கப்பட்டிருந்தாலும் ஆட்டம் திசைமாறியிருக்கலாம்.

நோ பால்களும் எல்லைக் கோட்டுக்கு அருகே நழுவவிடப் பட்ட கேட்சும் ஆட்டம் இந்தியாவை விட்டுக் கைநழுவிப் போன தற்கு முக்கியமான காரணங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்திய அணியில் அதிக ரன் குவித்த கோலியும் இரண்டு முறை ரன் அவுட் ஆகாமல் தப்பிப் பிழைத்தார். இந்தியா இன்னும் பத்து ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். 35 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே தன் ஆட்டத்தில் இன்னும் வேகம் காட்டியிருக்க வேண்டும். இந்தியா இந்தத் தொடர் முழுவதும் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை எடுக்கவில்லை. முதல் முறையாக ரோஹித்தின் மட்டை உரக்கப் பேசியது. ஆனால், பெரிய ஷாட்களை அனாயாசமாக ஆடும் ரோஹித், சுழல் பந்தைக் கணிக்க முடியாமல் ஆட்டமிழந்தது அவரது ஆட்டத்தில் உள்ள போதாமையையே காட்டுகிறது. நன்கு பழக்கமான ஆடுகளத்தில் அவர் மேலும் அதிக நேரம் நின்று பெரிய இலக்கை எட்ட உதவியிருக்க வேண்டும்.

47 பந்துகளில் 89 ரன் அடித்த கோலி, ரன் விகிதத்தைக் கணிசமாக உயர்த்தியிருக்காவிட்டால் அணி யின் நிலை என்ன ஆகியிருக்கும் என்று சொல்ல முடியாது. கோலி ரன் அவுட் ஆகியிருந்தால் மற்றவர்களால் இந்த அளவுக்கு அணியைக் கொண்டுவந்திருக்க முடியாது என்று நினைக்கும் நிலையிலேயே இன்றைய மட்டை வலு இருக்கிறது. மாறாக, மேற்கிந்திய தீவுகள் அணியில் கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் ஆட்டமிழந்தபோதும் பிறர் அசராமல் நின்று ஆடினார்கள்.

இரண்டாவதாக பந்து வீசும் போது மைதானத்தில் இருந்த ஈரப்பதமும் இந்தியா தோற்ற தற்கு ஒரு முக்கியமான காரணம். இந்தக் களத்தில் இரண்டா வதாகப் பந்து வீசுவது சுலபமல்ல. பந்தைக் கையில் இறுக்கமாகப் பிடிக்க முடியாது. நழுவிக்கொண்டே இருக்கும். இப்படித்தான் ஆட்டமும் நழுவியது என்று சொல்லலாம். எனினும் தோனி தன் பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதத்திலும் பிரச்சினை இருந்தது. இருப்பதிலேயே மோசமாக வீசிய ஜடேஜாவுக்கு 19-வது ஓவர் வீசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அஸ்வின் இரண்டே இரண்டு ஓவர்கள்தான் வீசினார்.

கோலியின் முதல் ஓவரில் விக்கெட் விழுந்திருந்தாலும் பந்து வீச்சில் அனுபவமற்ற அவரைக் கடைசி ஓவர் வீசச் சொன்னது நல்ல யோசனை அல்ல. மிகச் சிறப்பாகப் பந்து வீசிய ஆஷிஷ் நெஹ்ராவைக் கடைசி ஓவருக்குப் பயன்படுத்தி யிருந்திருக்கலாம். நெஹ்ரா வீசிய 17-வது ஓவரை அல்லது ஜடேஜா வீசிய 19-வது ஓவரை அஸ்வின் வீசியிருக்கலாம்.

ஓவருக்கு ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்த நெஹ்ராவைத் தவிர வழக்கமான பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்குப் பத்து ரன்களுக்கு மேல் கொடுத்த நிலையில் கேப்டனின் தேர்வுகள் சுருங்கிவிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அனைவரிலும் அதிகமாக ஓவருக்கு 12 ரன்களைக் கொடுத்திருந்த ஜடேஜாவுக்குப் பதில் அஸ்வினைப் பயன்படுத்தியிருக்கலாம். ஜடேஜாவின் பந்துகளை மட்டையாளர்கள் கஷ்டப்பட்டெல் லாம் அடிக்கவில்லை. அடிப்ப தற்குத் தோதான பந்துக ளையே அவர் வீசிக்கொண்டி ருந்தார். இந்நிலையில் அவர் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்தது ஏன்?

கோலி கடைசி ஓவர் வீச வந்தபோது 1993-ல் தென்னாப் பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் வீசிய கடைசி ஓவர் பலரது நினைவுகளிலும் நிழலாடியிருக்கும். அந்தப் போட்டியில் இந்தியா நம்ப முடியாத வகையில் வென்றது. கோலியும் அப்படிப்பட்ட வரலாற்றை நிகழ்த்துவார் என்ற எண்ணம் பலர் மனதிலும் தோன்றியிருக்கலாம். மட்டை வீச்சில் டெண்டுல்கரின் வழித்தோன்றலாகப் பிரகாசிக்கும் கோலி பந்து வீச்சிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதில்லை. சச்சின் மட்டையாளர்தான் என்றாலும் அவர் வழக்கமாகப் பந்து வீசியும் வந்தார். ஆனால் கோலி அப்படி அல்ல. அனைத்துப் பந்து வீச்சாளர்களும் தடுமாறும்போது திடீர் திருப்பமாக கோலியை 14-வது ஓவர் வீச வைத்தது நல்ல உத்தி. அதற்குக் கை மேல் பலனும் கிடைத்தது. 4 ரன்களை மட்டுமே கொடுத்து சார்லஸின் விக்கெட்டை எடுத்தார். ஆனால் அவரையே கடைசி ஓவர் வீச வைத்தது தேவையற்ற சாகசமாகவே படுகிறது.

கெய்லை மட்டும் நம்பி இல்லை என்பதை இந்தத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் காட்டிவிட்டார்கள். கோலியை மட்டும் நம்பியில்லை என்பதை இந்திய மட்டையாளர்கள் எப்போது உணர்த்தப்போகிறார்கள்? ஜடேஜா போன்றவர்களுக்கு அளிக்கப்படும் அளவுக்கதிகமான வாய்ப்புகளுக்கு யார் விளக்க மளிக்கப்போகிறார்கள்? ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆட்டத்தையும் உத்திகளையும் தகவமைத்துக்கொள்ளும் திறனை இந்திய அணியினர் எப்போது வளர்த்துக்கொள்ளப் போகிறார்கள்?

Thursday, March 31, 2016

ஜனநாயகத்திலுமா மன்னராட்சி?


இன்னமும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் பிரச்சாரமும் முறையாகத் தொடங்கப்படவும் இல்லை. அதற்குள்ளாகவே பல அசிங்கங்களைக் கண்டுவிட்டது இந்த ஆண்டின் தேர்தல் களம். கூட்டணிக்கான பேரங்கள் குறித்த தலைவர்களின் அறிக்கைகள் பரஸ்பரம் சேறுவாரிப் பூசுவதோடு, தமிழக அரசியலின் நிஜ முகத்தையும் தோலுரித்துக் காட்டுகின்றன.

இந்தக் கூத்துக்கள் ஒருபுறம் இருக்க, இன்னொரு அபாயம் கேள்விக்கு அப்பாற்பட்ட யதார்த்தமாக நிலைபெற்று நிற்கிறது. பல கட்சிகளில் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் யாரென்று பார்த்தால், நேற்றைய அல்லது இன்றைய தலைவர்களின் நேரடி வாரிசுகள். அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள். அல்லது தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர்கள்.
 
தலையாய தகுதி என்ன?

திமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் இது வெளிப்படையாக நடக்கிறது என்றால், அதிமுகவில் சற்றே மறைமுகமாக! இங்கே நேரடி வாரிசுகள் கட்சியைக் கைப்பற்றவில்லைதான். ஆனால், தலைவருக்கு நெருக்கமானவர்தான் தலைவருக்குப் பின் அவரது வாரிசாக அறியப்படுகிறார். தலைமைக்கு அடுத்தபடியாகக் கட்சியின் அதிகார மையமாக விளங்குவதாக நம்பப்படுபவர்களும் கட்சியில் பணிபுரிந்து அந்த நிலையை அடையவில்லை. தலைமையுடனான நெருக்கமே அந்த அந்தஸ்தைப் பெற்றுத்தருகிறது.
திமுகவில் தலைமையில் மட்டுமல்லாது, அநேகமாக ஒவ்வொரு ஊரிலும் வாரிசுகளே பொறுப்பேற்றிருக்கிறார்கள் அல்லது பொறுப்பேற்கத் தயாராக இருக்கிறார்கள். வாரிசு அரசியலை முன்னெடுக்க மாட்டோம் என்று அறிவித்த பாமக நிறுவனரும் வாரிசையே முன்னிறுத்துகிறார். விஜயகாந்துக்கு இப்படிப்பட்ட கோட்பாட்டுச் சிக்கல் எதுவும் இல்லாததால், சகஜமாகத் தன் குடும்பத்துக்குக் கட்சியைத் தாரைவார்த்துவிட்டார்.

பொறுப்பில் இருப்பதற்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதா என்பதுதான் முக்கியம் எனச் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமைகள் தொடர்ந்து கூறிவருகின்றன. ஆனால், தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் வாரிசுகளின் தலையாய தகுதி என்பது வெளிப்படை. அவர்களுக்குக் கிடைக்கும் அமைப்புரீதியான வாய்ப்புகள், அங்கீகாரங்கள், ஆதரவு ஆகிய அனைத்தும் மன்னராட்சிக் காலத்தில் இளவரசர்களுக்குக் கிடைத்துவந்த இயல்பான சாதகங்கள்.
 
தமிழகம் மட்டுமா?

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். பட்நாயக்குகளும் யாதவ்களும் ராப்ரி தேவிகளும் மெஹபூபாக்களும் நேரு முதல் ராகுல் வரை தொடரும் வாரிசுரிமையும் இதற்கான சான்றுகள். இதைப் பற்றிய விவாதம்கூட நடப்பதில்லை என்பது அவலம்.

அரசியலில் மட்டுமின்றி, இந்தியத் திரைத் துறையிலும் இதே நிலைதான். குறிப்பாக தமிழ்த் திரையுலகில், தற்போது உள்ள முக்கியமானவர்களில் முக்கால்வாசிப் பேர் இதற்கு முன்பு ஆதிக்கம் செலுத்தியவர்களின் குடும்ப வாரிசுகள்தாம். இதையெல்லாம் பார்க்கும்போது, இந்திய ஆழ்மனம் மன்னராட்சியின் பழக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லையோ எனத் தோன்றுகிறது. இத்தகைய போக்குக்குப் பின்னால் இருக்கும் பெரும் முதலீடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் குடும்ப வாரிசுரிமை பற்றி மேலும் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

அதிகாரம் கைமாறும் விதத்தில் மட்டுமல்ல, அதிகாரம் கையாளப்படும் விதத்திலும் மன்னராட்சியின் எச்சங்களைப் பார்க்க முடிகிறது. நமது அமைச்சர்கள் அனுபவிக்கும் வசதி, அதிகாரம் ஆகியவை மன்னர்களும் சிற்றரசர்களும் அனுபவித்த சுகபோகங்களுக்கு இணையானவை. அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கும் அவர்களது வாழ்க்கை வசதிகளுக்கும் இடையே இருக்கும் பெரும் இடைவெளி விவாதப் பொருளாக ஆவதே இல்லை. அரச குடும்பத்தினரின் வசதியான வாழ்க்கை விவாதப் பொருளாக ஆனதில்லை என்பதோடு இணைத்து, இதற்குப் பின்னாலுள்ள மனநிலையைப் புரிந்துகொள்ளலாம். ‘சாதனைகள்’ புரிந்தவர்களுக்கு வீர வாள், செங்கோல் ஆகியவற்றைப் பரிசளிப்பதும் பட்டங்கள் சூட்டப்படுவதும், ஒவ்வொருவரும் பட்டங்களாலேயே அடையாளம் காணப்படுவதும் மன்னராட்சிக் கால எச்சங்களே. நீதிபதிகளுக்குத் தரப்படும் அதிகாரபூர்வமான மரியாதையின் குறியீடுகளும் மன்னராட்சிக் காலத்தின் அடையாளங்கள்தாம். இவையெல்லாம் நமக்கு விசித்திரமாகவே தெரிவதில்லை என்பது நாம் இன்னமும் ஜனநாயகத்துக்குத் தயாராகவில்லையோ என்னும் கேள்வியை எழுப்புகிறது.

குடும்ப வாரிசுரிமை என்பதைப் பிறப்பின் அல்லது குடும்ப உறவுகளின் அடிப்படையில் உரிமை கைமாறுவதை உறுதிசெய்யும் போக்கு எனச் சொல்லலாம். பிறப்பின் அடிப்படையில் வாய்ப்பு என்றால் அதற்கு என்ன பொருள்? மன்னரின் மகன் மன்னன், புரோகிதரின் மகன் புரோகிதர், வணிகரின் மகன் வணிகர். சலவைத் தொழிலாளியின் மகன் சலவைத் தொழிலாளி. இதற்கு என்ன பெயர்? வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையிலான சமூக அமைப்பு என்றுதானே? அப்படியானால், தலைவரின் மகன் அல்லது மகள் தலைவராவதற்கு என்ன பெயர்?
 
நவீனத்துவப் பார்வை எங்கே?

ஜனநாயகம் என்பது நவீனத்துவத்தின் கனிகளில் ஒன்று. நவீனத்துவம் அறிவியல் பார்வையையும் சமத்துவத்தையும் சம வாய்ப்பையும் முக்கியக் கூறுகளாகக் கொண்டது. நவீனத்துவத்தின் எழுச்சியும் பரவலாக்கமும்தான் உலகம் முழுவதும் நிலவிவந்த பல்வேறு அநீதிகளைக் களைந்தன. சாதி, மதம், பாலினம், பிறப்பிடம் முதலான அடிப்படைகளில் நிலவிவந்த பாரபட்சங்களுக்குக் குறிப்பிடத் தக்க அளவில் முடிவுகட்டியது. காலங்காலமாக இழைக்கப்பட்டுவந்த அநீதிகள் பெருமளவில் களையப்பட்டன. பிணம் எரிப்பவரின் மகன் பிணம் எரிப்பவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்பதை இதுதான் நிலைநிறுத்தியது. மன்னரின் மகன்தான் மன்னராக முடியும் என்பதையும் இது மாற்றியது. இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் எனினும் நவீனத்துவம் போட்டுக்கொடுத்த பாதையே சமத்துவத்துக்கும் அறிவியல் கண்ணோட்டத்துக்குமான பாதையை அகலமாகத் திறந்துவைத்தது. அந்தப் பாதையில் நமது பயணம் எப்படி இருக்கிறது?

மன்னராட்சிக் காலத்தில் நடந்தவை எல்லாமே தவறானவை அல்ல. ஆனால், அப்போது நடந்த நல்ல விஷயங்கள் தனிநபர்களின் தார்மிக உணர்வுகளின் அடிப்படையில் நடந்தவை. அதிகாரத்தில் இருப்பவர்களின் இயல்புதான் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானித்தது. அனைவருக்கும் பொதுவான சட்டமோ சாசனமோ ஜனநாயகபூர்வமான விவாதங்களோ அல்ல.
இன்று பொதுவான சட்டங்கள் உள்ளன. சட்டங்களைப் போடுவதும் மாற்றுவதும் இன்று ஓரளவுக்குத் தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கின்றன. எனினும், இதே சட்டம் கொடுக்கும் அதிகாரம், சமத்துவச் சமன்பாடுகளை அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாக மாற்றி எழுதுவதைப் பார்க்கிறோம். அதாவது, ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே ஒரு சிலரது சர்வாதிகாரம் நடக்க முடியும் என்பதைப் பார்த்துவருகிறோம். இதை மாற்று வதற்கான அம்சமும் ஜனநாயகத்திலேயே இருப்பதால் இதை ஓரளவேனும் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது என்றும் நம்பலாம்.

ஆனால், குடும்ப வாரிசுரிமை இந்தச் சூழலை மேலும் சீர்குலைக்கிறது. அதிகாரத்தைப் பிறப்பு அல்லது குடும்ப எல்லைகளுக்குள் முடக்குகிறது. இந்திய வரலாற்றின் மிகப் பெரும் களங்கங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் வர்ண அடிப்படையிலான நீதிக்கு இது வேறு வகையில் புத்துயிர் கொடுக்கிறது. வர்ண அடிப்படையிலான பேதத்தை ‘குண கர்ம விபாகஷஹ’ என்கிறது கீதை. அதாவது, மனித இயல்புகள் (குணம்), பணிகளின் (கர்மம்) அடிப்படையிலான பிரிவினைதான் (விபாகஷஹ) வர்ணாசிரம தர்மம் என்று சனாதனிகள் விளக்கம் அளிக்கலாம். நடைமுறையிலோ இது பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. பல நூற்றாண்டு கால யதார்த்தம் இது. இதை மறுக்க அவர்கள் முன்னிறுத்தும் வால்மீகிகளும் பாணாழ்வார்களும் விதிவிலக்குகளாகவே இருக்கிறார்கள். இதே கண்ணோட்டம்தானே தலைவரின் மகன் / மகள் தலைவர், முதல்வரின் மகன்/ மகள் அடுத்த முதல்வர் என்னும் நடைமுறையில் பிரதிபலிக் கிறது? மனு தர்மத்துக்கும் வர்ணாசிரம தர்மத்துக்கும் எதிரானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் இதே போக்கில் செயல்படுவதை எப்படிப் புரிந்துகொள்வது?

அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் காணப்படும் இந்தப் போக்கு ஜனநாயக இயக்கத்தைப் பின்னோக்கித் தள்ளுகிறது. ‘ஜனநாயகபூர்வ’மாகவே இதைச் செய்ய முடிகிறது என்பதுதான் காலத்தின் முரண்நகை.

Monday, March 28, 2016

யார் யாரைப் புறக்கணிக்கிறார்கள்?


நவீன தமிழ் இலக்கியவாதிகள் திராவிட இலக்கியவாதிகளைப் புறக்கணிப்பதாக வைரமுத்து தன் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழ்ந்ததா என்பதைப் பார்க்கும் முன், வேறொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக இங்கே திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.

அரசு அதிகாரம், மாபெரும் கட்சி அமைப்பு, பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்களின் மீதான செல்வாக்கு ஆகிய அனைத்தும் அமையப் பெற்றவர்கள் திராவிடக் கட்சிகளின் பிரதிநிதிகள். மாறாக, நவீன இலக்கியவாதிகள் என அறியப்படும் எழுத்தாளர்களோ அண்மைக் காலம்வரை ஆயிரத்துச் சொச்சம் வாசகர்களைத் தாண்டாதவர்கள். இந்நிலையில் யார் யாரைப் புறக்கணிக்க முடியும்?
கடந்த 50 ஆண்டுகளில் அரசு தரும் கலை இலக்கிய விருதுகளில் எத்தனை நவீன தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தாலே, யார் யாரைப் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
‘அறியப்படாத’ ஆய்வாளர்கள்

தீவிர எழுத்தாளர்களை விடுங்கள், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், திராவிட இயக்கச் சிந்தனை யிலிருந்து உத்வேகம் பெற்ற எழுத்தாளர்கள், வரலாற்றாய் வாளர்கள், சிந்தனையாளர்களை இவர்கள் அங்கீகரித் திருக்கிறார்களா? திராவிட இயக்கக் கருத்தியல்களையும் வரலாற்றில் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதி இந்திய, உலக அளவில் அவற்றுக்குக் கவனம் கிடைக்கச் செய்த எம்.எஸ்.எஸ். பாண்டியனை இவர்கள் அங்கீகரித்திருக்கிறார்களா?

திராவிட இயக்க வரலாறு, திராவிட இயக்கத்தின் முக்கியமான ஆளுமைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து எழுதிவரும் வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதியை அங்கீகரித்திருக்கிறார்களா? பெரியாரைப் பற்றிய மிக முக்கியமான நூலை எழுதிய வ. கீதா, எஸ்வி. ராஜதுரை ஆகியோரைப் பாராட்டியிருக்கிறார்களா? ‘பெரியாரின் நண்பர்’ என்னும் முக்கியமான நூலை எழுதிய பழ அதியமான், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு வித்திட்ட சேரன்மாதேவி குருகுலம் பற்றிய ஆய்வின் அடிப்படையில் செறிவான ஒரு நூலையும் எழுதியிருக்கிறார்.

அவரை இவர்களுக்குத் தெரியும் என்பதற்கேனும் ஏதாவது சான்று இருக்கிறதா? சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ம.இலெ. தங்கப்பாவுக்குப் பாராட்டோ அங்கீகாரமோ இவர்களிடமிருந்து கிடைத்திருக்கிறதா?

மறுபக்கம், தீவிர எழுத்தாளர்களும் அவர்கள் அதிகமாக எழுதிவந்த சிற்றிதழ்களும் திராவிட இலக்கியம் குறித்துப் பாராமுகமாக இருந்ததில்லை. திராவிட இலக்கியத்தைப் பொருட்படுத்தி விமர்சித்திருக்கிறார்கள். திராவிட இலக்கியம் பற்றி நேரடியாகப் பேசாதவர்கள் தங்கள் இலக்கியக் கோட்பாடுகளை முன்வைத்துள்ளதைப் பார்க்கும்போது, அவர்கள் ஏன் திராவிட இலக்கியத்தைப் பற்றிப் பேசவில்லை எனப் புரிந்துவிடும்.
புதுமைப்பித்தன், க.நா. சுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், அசோகமித்திரன், தமிழவன், கோவை ஞானி, பிரேம்-ரமேஷ், சாரு நிவேதிதா, ஜெயமோகன், பிரபஞ்சன் எனச் சிலர் இலக்கியம் குறித்த செறிவான பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். இந்த விமர்சனங்களைப் படிக்கும்போது, திராவிட இலக்கிய ஆக்கங்களை இவர்கள் ஏன் மேலான இலக்கியமாக மதிப்பிடுவதில்லை என்பது வெளிப்படுகிறது. இவர்கள் முன்வைக்கும் அளவுகோல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதைத் தெளிவுபடுத்திவிடுகின்றன.
தெளிவற்ற புரிதல்

ஆனால், திராவிட இலக்கியப் படைப்பாளிகளும் விமர்சகர்களும் தீவிர இலக்கியப் பரப்பைச் சேர்ந்தவர்களைப் பற்றிப் பொருட்படுத்தத் தக்கதாக எதுவும் கூறியதில்லை. புதுமைப்பித்தன், மெளனி, லா.ச. ராமாமிர்தம், அசோகமித்திரன், வண்ணநிலவன் முதலான எழுத்தாளர்களைப் பற்றி மவுனம் சாதிக்கிறார்கள். திராவிட முகாமினர் இவர்களைப் படிக்கிறார்களா என்பதை அறியவும் எந்தத் தரவுகளும் இல்லை. ஒரு உதாரணம் பாருங்கள்: 1990-களின் முற்பகுதியில் ‘சுபமங்களா’இதழுக்கு அளித்த பேட்டியில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. கருணாநிதி, நவீன இலக்கியம் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்:

“ஸ்ட்ரீட் கார்னர்லே சீதாவைப் பார்த்தவுடனே ராமுவுக்கு பாடி முழுவதும் ‘ஜிவ்’ என்று ஒரு ஃபீலிங்! ஹலோ ராமூ! என்று ஹேண்ட் பேக்கைச் சுழற்றியபடி சீதா ஒரு ரன்னிங் ரேஸ்! அவளது புளூ கலர் கண்கள், அதுக்கு மேட்ச்சா நைலான் சாரி, அதுக்கு மேட்ச்சா ஜாக்கெட் - அப்படியே ராமு அவளை ஒரு ஸ்டண்ட் ஹீரோ மாதிரி தூக்கி காரின் பேக் சீட்டிலே போட்டான்.’ அய்யா! இதுதான் நவீன இலக்கியமென்றால், அதனுடன் எனக்குத் தொடர்பு கிடையாது என்பது உண்மைதான்.”

முழுக்க முழுக்கக் கேளிக்கையை இலக்காகக் கொண்ட எழுத்தையே ‘நவீன எழுத்து’ என்று கருணாநிதி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை இந்தப் பதில் தெளிவுபடுத்துகிறது. புதுமைப்பித்தனையோ, மெளனியையோ, சு.ரா.வையோ, ஜி.நாகராஜனையோ அவரால் மேற்கோள் காட்ட இயலவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். திராவிட இலக்கியமும் நவீன இலக்கியம்தான் என்றும் அவர் சொல்லவில்லை.

தீவிர எழுத்தாளர்கள் திராவிட இலக்கியத்தைப் புறக்கணிப்பதாகப் புகார் சொல்லப்படுகிறது. உண்மை யில் நிலவரம் இதற்கு நேர் எதிரானது. தமிழுக்குத் திராவிட இயக்கம் ஆற்றிய ஆக்கபூர்வமான பங்களிப்பை பிரமிள் போன்ற சிலர் பதிவுசெய்திருக்கிறார்கள். அண்ணாவின் நூற்றாண்டின்போது அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை பெருமாள்முருகன் தொகுத்திருந்தார் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு).

திராவிட இயக்கச் சிந்தனைகள், ஆளுமைகள், வரலாறுகள் முதலான பல்வேறு நூல்களை இதே நவீன இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. ஆனால், புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா., ஜானகிராமன், அம்பை, சா.கந்தசாமி பற்றியெல்லாம் திராவிட இயக்கத்தினர் முக்கியத்துவம் அளித்துப் பேசியதே இல்லை. வைரமுத்து இப்போதுதான் புதுமைப்பித்தன் முதலானவர்களைப் பாராட்டுகிறார். தொண்ணூறுகளில் தலித்துகளும் பெண்களும் பெரிய எண்ணிக்கையில் எழுதத் தொடங்கினார்கள். இவர்களுக்குக் களமாக அமைந்தவை சிற்றிதழ்களும் அவை சார்ந்த பதிப்பகங்களும்தான். ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியப் பதிவுகளைப் பொருட்படுத்தி, திராவிட இயக்கத்தினர் பெரிதாகப் பேசியதில்லை.
மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம்

உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவதிலும் எழுத்தாளர்கள் மிகத் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். லியோ டால்ஸ்டாய், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி,காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், பாப்லோ நெரூடா, ஃப்ரன்ஸ் கஃப்கா, ஆல்பர் காம்யூ, ஓரான் பாமுக், இடாலோ கால்வினோ முதலான படைப்பாளிகளின் ஆக்கங்கள் நூற்றுக்கணக்கில் தமிழுக்கு வந்திருப்பதற்குக் காரணம், இவர்களுடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்புதான். எட்டுத் திக்கிலுமிருந்து கலைச் செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்த்துவரும் இவர்களின் தொண்டினைத் தமிழின் பெருமை பேசும் திராவிட இயக்க அறிஞர்களோ எழுத்தாளர்களோ பாராட்டியிருக்கிறார்களா?

மேலான இலக்கியம் எது என்பதற்கான திட்டவட்ட மான வரையறை எதுவும் இல்லை. எனினும் நோபல், புக்கர், ஞானபீடம் முதலான அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற ஆக்கங்களை வைத்து, மேலான இலக்கியத்துக் கான சில வரையறைகளையேனும் நாம் தொகுத்துக் கொள்ளலாம். அத்தகைய வரையறைகளின் அடிப்படை யில் இந்திய அளவிலோ உலக அளவிலோ முன்னிறுத்தக் கூடிய எழுத்துக்களை புதுமைப்பித்தன், அசோகமித்திரன், வண்ண நிலவன் முதலானவர்கள் படைத்திருக்கிறார்கள். தமிழின் பெருமையைப் பேசுவதற்கான வாய்ப்பைத் தவற விடாத திராவிட இயக்கச் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் உலகத் தரம் வாய்ந்த நவீன தீவிர இலக்கியப் படைப்பாளிகளை இனியேனும் அக்கறையுடன் படித்து அவர்களை தேசிய அளவிலும் உலக அளவிலும் முன்னிறுத்தலாம். அவர்களுடைய அரசியல் பார்வைக்கு அது பொருத்தமானதாகவே இருக்கும்.

Friday, March 25, 2016

தப்பிப் பிழைத்த இந்திய அணி

பந்தைக் கையில் எடுத்துக்கொண்டு மகேந்திர சிங் தோனி ஓடும்போது அரங்கிற்குள்ளும் வெளியிலும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களும் மானசீ கமாக அவருடன் ஓடியிருப்பார்கள். தோனி ஸ்டெம்பைச் சாய்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். இதயம் பலவீனமான பலர் மாத்தி ரையோ சிகிச்சையோ எடுத்துக்கொண்டி ருக்கவும் கூடும். புதிதாகச் சிலருக்கு ரத்தக் கொதிப்பு வந்திருக்கலாம். இப்படி ஒரு முடிவைப் பார்த்து எத்தனை நாளாயிற்று என்று கிரிக்கெட்டின் காதலர்கள் பலர் நினைத்திருப்பார்கள்.

மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை என்று சொல்வார்கள். அதுதான் புதன்கிழமை பெங்களூருவில் நடந்தது. எளிதாகக் கைப்பற்றியிருக்க வேண்டிய வெற்றியை இந்தியா கிட்டத்தட்டப் பறிகொடுத்துவிட்டுக் கடைசிக் கணத்தில் மீட்டெடுத்தது. எளிய சவாலை இமாலய முயற்சி எடுத்துச் சாதித்தது. அதுவும் எதிரணியின் அபத்தமான தவறினால். கடைசி ஓவரைப் போட்ட ஹர்திக் பாண்டியா தேவையான 11 ரன்களில் 9 ரன்களை முதல் 3 பந்துகளிலேயே கொடுத்து எதிரணியை ஆசுவாசப்படுத்தினார். இந்திய அணியினரும் இந்திய ஆதரவாளர்களும் பதற்றத்தின் உச்சிக்குச் சென்றார்கள்.
 
வங்கதேசம் செய்த தவறு

இன்னும் 3 பந்துகளில் 2 ரன். ஏற்கெனவே அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்த முஷ்பிகுர் ரஹீம் இன்னும் 2 ரன்களைப் பதற்றமில்லாமல் எடுத்திருக்கலாம். இதே 2007 உலகக் கோப்பையில் மார்ச் 23-ம் தேதியன்று வங்கதேசம் இந்தியாவை வெளியேற்றியது. அதேபோல் இந்த மார்ச் 23-லிலும் செய்திருக்கலாம். பாண்டி யாவின் அடுத்த பந்தை எல்லைக் கோட்டுக்கு அனுப்ப நினைத்தார் முஷ்ஃபிகுர் ரஹீம். அளவு குறைவாகவும் சற்றே மெதுவாகவும் வந்த அந்தப் பந்தை அவரால் எல்லைக் கோட்டுக்கு அனுப்ப முடியவில்லை. அது கேட்சாக மாறியது. ஜஸ்ப்ரித் பும்ராவும் ரவிச்சந்திரன் அஸ்வினும் எளிய கேட்சுகளைக் கோட்டைவிட்டது போல ஷிகர் தவண் விடவில்லை.

அடுத்த பந்தை எதிர்கொண்ட மொஹமதுல்லா, முஷ்ஃபிகுர் செய்த தவறையே தானும் செய்தார். அவருக்கும் ஆறு அல்லது நான்கு அடித்து ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை போலும். பந்தைத் தூக்கி அடித்தார். இந்த முறை ஜடேஜா பந்தை ஏந்திக்கொண்டார். இப்போது ஒரு பந்தில் இரண்டு ரன்கள். பாண்டியா அருமையாக வீசினார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே எகிறி வந்த பந்து. ஷுவாகதா ஹோம் மட்டையைக் காற்றில் வீச, பந்து தோனியின் கைகளில் தஞ்சம் அடைந்தது. ஷுவாகதா ரன் எடுக்க ஓட, தோனி பந்தை வீசி எறியாமல் அசுர வேகத்தில் ஓடி வந்து ஸ்டெம்பைச் சாய்த்தார். வங்க தேசத்தவரின் மனங்களும் சாய்ந்தன. ஒருவழியாக இந்தியா வென்றது. அரை இறுதி செல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டது.

இவ்வளவு கஷ்டப்பட்டு வென்றிருக்க வேண்டிய போட்டியே அல்ல இது. ஐ.சி.சி. தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு அணி 10-ம் இடத்தில் இருக்கும் அணியிடம் இவ்வளவு போராடி வெல்வது அதன் வலிமைக்குப் பெருமை சேர்ப்பதாகாது. இந்திய அணி தன் திறனில் பாதியைக்கூட வெளிப்படுத்தவில்லை என்பதே யதார்த்தம். 

இப்படிச் சொல்வது வங்கதேசத்தைக் குறைத்துச் சொல்வதாக ஆகாது. கச்சிதமான பந்து வீச்சு, கூர்மையான தடுப்பரண், அச்சமற்ற மட்டை வீச்சு ஆகியவற்றுடன் வங்கதேசம் அற்புதமாகப் போராடியது. கடைசி மூன்று பந்துகளில் கொஞ்சம் பக்குவமாக ஆடியிருந்தால் அணி வென்றிருக்கும். அதன் கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பொருத்தமான பரிசாக அது இருந்திருக்கும். இந்தியா போட்டியை வென்றது. வங்கதேசம் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றது.
 
சொதப்பிய மட்டைகள்

இந்தியாவின் நிகர ரன் விகிதம் குறைவாக இருப்பதால் வங்கதேசத்துட னான ஆட்டத்தில் ரன் விகிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சொன்ன தோனி, அணியின் அதிரடி மட்டையாளர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று போட்டிக்கு முன் வெளிப்படையாகவே கூறினார். அணியில் சிலர் தடுமாறிவந்தாலும் எந்த மாற்றமுமின்றி அதே அணியைக் களமிறக்கியது இந்தியா. ரோஹித் சர்மாவும் ஷிகர் தவணும் முதல் 6 ஓவர்களில் ஓவருக்கு 7 ரன் என்னும் விகிதத்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். ஆறாவது ஓவரின் கடைசிப் பந்தில் சர்மா ஆட்டமிழந்தார். ஏழாவது ஓவரின் முடிவில் தவண் நடையைக் கட்டினார்.

அதன் பிறகு இன்னிங்ஸின் வேகம் குறைய ஆரம்பித்தது. 23 பந்துகளில் சுரேஷ் ரெய்னா அடித்த 30 ரன்களைத் தவிர வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. தோனி, யுவராஜ் சிங், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் களத்தில் இருந்தும் கடைசி 5 ஓவர்களில் 34 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. தோனி சொன்ன அந்த அதிரடி மட்டையாளர்கள் எங்கே என்று தேட வேண்டியிருந்தது.

இந்தியா அதிக ரன் எடுக்க முடியாததற்கு அதன் மட்டையாளர்களின் தயக்கமும் தவறுகளும் மட்டும் காரணமல்ல. வங்கதேசப் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசினார்கள். குறிப்பாக ஷாகிப் அல் ஹஸன் 4 ஓவர்களில் 24 ரன் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தடுப்பு அரண் வலுவாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் கள வியூகமும் தடுப்பாளர்களின் முனைப்பும் சிறப்பாக இருந்தன. இன்னும் குறைந்தது 20 ரன் எடுத்திருக்கக்கூடிய வாய்ப்பை மட்டையாளர்களின் தவறும் எதிரணியின் கூர்மையும் சேர்ந்து குலைத்தன.
 
நழுவ விடப்பட்ட வாய்ப்புகள்

146 ரன்களைக் காப்பாற்றும் முயற்சி யில் இந்தியா தொடக்கத்திலிருந்தே சொதப்ப ஆரம்பித்தது. ஆஷிஷ் நெஹ்ரா எடுத்த எடுப்பில் கால் திசையில் பந்து வீச, தமிம் இக்பால் அதை ஃபைன் லெக் திசைக்கு அடித்தார். கைக்கு வந்த பந்தை நழுவவிட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா, பவுண்டரியைப் பரிசளித்தார். அதன் பிறகும் தடுப்பாளர்கள் நிறைய சொதப்பினார்கள். நெஹ்ரா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் ஆளுக்கு ஒரு கேட்சை நழுவ விட்டார்கள். துடிப்புடன் ஆடிய வங்கதேசம் இந்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றியை நோக்கிச் சென்றது. இந்தியா ஆடும்போது மட்டைக்கு வராமல் சண்டித்தனம் செய்த பந்து வங்கதேச மட்டையாளர்கள் ஆடும்போது சமர்த்தாக நடந்துகொண்டது. ஷாகிப், சபிர் ரஹ்மான் ஆகியோர் அனாயாசமாக அடித்த ஷாட்டுகள் இதற்குச் சான்று.

அவ்வப்போது விக்கெட்களும் விழுந்துகொண்டிருந்ததால் இந்தியாவின் நம்பிக்கையும் உயிர்ப்போடு இருந்தது. அஸ்வினின் அருமையான பந்து வீச்சு (4 ஓவர்களில் 20 ரன் கொடுத்து 2 விக்கெட்) இந்தியாவின் நம்பிக்கையைத் தக்கவைத்தது என்றும் சொல்லலாம். பும்ரா 19-வது ஓவரை நன்றாக வீசினார். 2 ஓவர்களில் 17 ரன்கள் என்னும் நிலையில் 6 ரன்கள் மட்டும் கொடுத்தார்.

கடைசி ஓவரை வீசிய பாண்டியாவுக்கு தோனி, கோலி, நெஹ்ரா உள்ளிட்டோர் அறிவுரைகளை வாரி வழங்கினார்கள். என்றாலும் நெருக்கடி பாண்டியாவைப் பாதித்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இலக்கில்லாமல் பந்து வீசினார். முதல் 3 பந்துகளில் 9 ரன்கள். நான்காவது பந்து அளவு குறைவான, சற்றே மெதுவாக வந்த பந்து. அதை புல் ஷாட் அடித்த முஷ்பிகுர் ரஹீம் பிடி கொடுத்து ஆட்ட மிழந்தார். அடுத்து ஃபுல் டாஸ் பந்தைத் தூக்கி அடிக்க முயன்ற மொஹமதுல்லாவும் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் முஸ்தாஃபிஸுர் ரன் அவுட் ஆக, ஒரு ரன்னில் இந்தியா வென்றது.
நான்காவது அல்லது ஐந்தாவது பந்தை மட்டையாளர் தூக்கி அடிக்காமல் இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்கும். தேவைப்படும் ரன் 2 என்னும்போது சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்கும் முனைப்பே வங்கதேசத்தைக் காவு வாங்கியது. பல தவறுகளும் செய்த இந்தியா தப்பிப் பிழைத்தது. ரன் விகிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுடனான போட்டியைக் காலிறுதிப் போட்டிபோல எதிர்கொள்ளவிருக்கிறது இந்திய அணி.

வெற்றியிலும் தோல்வியிலும் கிடைக் கும் பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கும் இந்திய அணி தன் நெருக்கடி யைத் தானே உருவாக்கிக்கொண்டி ருக்கிறது. அணியிலோ ஆடும் முறை யிலோ மாற்றம் எதுவும் இல்லையென்றால் பெங்களூருவில் கிடைத்த அதிருஷ்டம் இந்தியாவுக்குப் பலனில்லாமல் போகலாம்.