Monday, March 28, 2016

யார் யாரைப் புறக்கணிக்கிறார்கள்?


நவீன தமிழ் இலக்கியவாதிகள் திராவிட இலக்கியவாதிகளைப் புறக்கணிப்பதாக வைரமுத்து தன் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழ்ந்ததா என்பதைப் பார்க்கும் முன், வேறொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக இங்கே திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.

அரசு அதிகாரம், மாபெரும் கட்சி அமைப்பு, பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்களின் மீதான செல்வாக்கு ஆகிய அனைத்தும் அமையப் பெற்றவர்கள் திராவிடக் கட்சிகளின் பிரதிநிதிகள். மாறாக, நவீன இலக்கியவாதிகள் என அறியப்படும் எழுத்தாளர்களோ அண்மைக் காலம்வரை ஆயிரத்துச் சொச்சம் வாசகர்களைத் தாண்டாதவர்கள். இந்நிலையில் யார் யாரைப் புறக்கணிக்க முடியும்?
கடந்த 50 ஆண்டுகளில் அரசு தரும் கலை இலக்கிய விருதுகளில் எத்தனை நவீன தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தாலே, யார் யாரைப் புறக்கணிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
‘அறியப்படாத’ ஆய்வாளர்கள்

தீவிர எழுத்தாளர்களை விடுங்கள், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், திராவிட இயக்கச் சிந்தனை யிலிருந்து உத்வேகம் பெற்ற எழுத்தாளர்கள், வரலாற்றாய் வாளர்கள், சிந்தனையாளர்களை இவர்கள் அங்கீகரித் திருக்கிறார்களா? திராவிட இயக்கக் கருத்தியல்களையும் வரலாற்றில் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதி இந்திய, உலக அளவில் அவற்றுக்குக் கவனம் கிடைக்கச் செய்த எம்.எஸ்.எஸ். பாண்டியனை இவர்கள் அங்கீகரித்திருக்கிறார்களா?

திராவிட இயக்க வரலாறு, திராவிட இயக்கத்தின் முக்கியமான ஆளுமைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து எழுதிவரும் வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதியை அங்கீகரித்திருக்கிறார்களா? பெரியாரைப் பற்றிய மிக முக்கியமான நூலை எழுதிய வ. கீதா, எஸ்வி. ராஜதுரை ஆகியோரைப் பாராட்டியிருக்கிறார்களா? ‘பெரியாரின் நண்பர்’ என்னும் முக்கியமான நூலை எழுதிய பழ அதியமான், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு வித்திட்ட சேரன்மாதேவி குருகுலம் பற்றிய ஆய்வின் அடிப்படையில் செறிவான ஒரு நூலையும் எழுதியிருக்கிறார்.

அவரை இவர்களுக்குத் தெரியும் என்பதற்கேனும் ஏதாவது சான்று இருக்கிறதா? சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ம.இலெ. தங்கப்பாவுக்குப் பாராட்டோ அங்கீகாரமோ இவர்களிடமிருந்து கிடைத்திருக்கிறதா?

மறுபக்கம், தீவிர எழுத்தாளர்களும் அவர்கள் அதிகமாக எழுதிவந்த சிற்றிதழ்களும் திராவிட இலக்கியம் குறித்துப் பாராமுகமாக இருந்ததில்லை. திராவிட இலக்கியத்தைப் பொருட்படுத்தி விமர்சித்திருக்கிறார்கள். திராவிட இலக்கியம் பற்றி நேரடியாகப் பேசாதவர்கள் தங்கள் இலக்கியக் கோட்பாடுகளை முன்வைத்துள்ளதைப் பார்க்கும்போது, அவர்கள் ஏன் திராவிட இலக்கியத்தைப் பற்றிப் பேசவில்லை எனப் புரிந்துவிடும்.
புதுமைப்பித்தன், க.நா. சுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், அசோகமித்திரன், தமிழவன், கோவை ஞானி, பிரேம்-ரமேஷ், சாரு நிவேதிதா, ஜெயமோகன், பிரபஞ்சன் எனச் சிலர் இலக்கியம் குறித்த செறிவான பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். இந்த விமர்சனங்களைப் படிக்கும்போது, திராவிட இலக்கிய ஆக்கங்களை இவர்கள் ஏன் மேலான இலக்கியமாக மதிப்பிடுவதில்லை என்பது வெளிப்படுகிறது. இவர்கள் முன்வைக்கும் அளவுகோல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதைத் தெளிவுபடுத்திவிடுகின்றன.
தெளிவற்ற புரிதல்

ஆனால், திராவிட இலக்கியப் படைப்பாளிகளும் விமர்சகர்களும் தீவிர இலக்கியப் பரப்பைச் சேர்ந்தவர்களைப் பற்றிப் பொருட்படுத்தத் தக்கதாக எதுவும் கூறியதில்லை. புதுமைப்பித்தன், மெளனி, லா.ச. ராமாமிர்தம், அசோகமித்திரன், வண்ணநிலவன் முதலான எழுத்தாளர்களைப் பற்றி மவுனம் சாதிக்கிறார்கள். திராவிட முகாமினர் இவர்களைப் படிக்கிறார்களா என்பதை அறியவும் எந்தத் தரவுகளும் இல்லை. ஒரு உதாரணம் பாருங்கள்: 1990-களின் முற்பகுதியில் ‘சுபமங்களா’இதழுக்கு அளித்த பேட்டியில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. கருணாநிதி, நவீன இலக்கியம் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்:

“ஸ்ட்ரீட் கார்னர்லே சீதாவைப் பார்த்தவுடனே ராமுவுக்கு பாடி முழுவதும் ‘ஜிவ்’ என்று ஒரு ஃபீலிங்! ஹலோ ராமூ! என்று ஹேண்ட் பேக்கைச் சுழற்றியபடி சீதா ஒரு ரன்னிங் ரேஸ்! அவளது புளூ கலர் கண்கள், அதுக்கு மேட்ச்சா நைலான் சாரி, அதுக்கு மேட்ச்சா ஜாக்கெட் - அப்படியே ராமு அவளை ஒரு ஸ்டண்ட் ஹீரோ மாதிரி தூக்கி காரின் பேக் சீட்டிலே போட்டான்.’ அய்யா! இதுதான் நவீன இலக்கியமென்றால், அதனுடன் எனக்குத் தொடர்பு கிடையாது என்பது உண்மைதான்.”

முழுக்க முழுக்கக் கேளிக்கையை இலக்காகக் கொண்ட எழுத்தையே ‘நவீன எழுத்து’ என்று கருணாநிதி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை இந்தப் பதில் தெளிவுபடுத்துகிறது. புதுமைப்பித்தனையோ, மெளனியையோ, சு.ரா.வையோ, ஜி.நாகராஜனையோ அவரால் மேற்கோள் காட்ட இயலவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். திராவிட இலக்கியமும் நவீன இலக்கியம்தான் என்றும் அவர் சொல்லவில்லை.

தீவிர எழுத்தாளர்கள் திராவிட இலக்கியத்தைப் புறக்கணிப்பதாகப் புகார் சொல்லப்படுகிறது. உண்மை யில் நிலவரம் இதற்கு நேர் எதிரானது. தமிழுக்குத் திராவிட இயக்கம் ஆற்றிய ஆக்கபூர்வமான பங்களிப்பை பிரமிள் போன்ற சிலர் பதிவுசெய்திருக்கிறார்கள். அண்ணாவின் நூற்றாண்டின்போது அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை பெருமாள்முருகன் தொகுத்திருந்தார் (காலச்சுவடு பதிப்பக வெளியீடு).

திராவிட இயக்கச் சிந்தனைகள், ஆளுமைகள், வரலாறுகள் முதலான பல்வேறு நூல்களை இதே நவீன இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. ஆனால், புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா., ஜானகிராமன், அம்பை, சா.கந்தசாமி பற்றியெல்லாம் திராவிட இயக்கத்தினர் முக்கியத்துவம் அளித்துப் பேசியதே இல்லை. வைரமுத்து இப்போதுதான் புதுமைப்பித்தன் முதலானவர்களைப் பாராட்டுகிறார். தொண்ணூறுகளில் தலித்துகளும் பெண்களும் பெரிய எண்ணிக்கையில் எழுதத் தொடங்கினார்கள். இவர்களுக்குக் களமாக அமைந்தவை சிற்றிதழ்களும் அவை சார்ந்த பதிப்பகங்களும்தான். ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியப் பதிவுகளைப் பொருட்படுத்தி, திராவிட இயக்கத்தினர் பெரிதாகப் பேசியதில்லை.
மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம்

உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவதிலும் எழுத்தாளர்கள் மிகத் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். லியோ டால்ஸ்டாய், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி,காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், பாப்லோ நெரூடா, ஃப்ரன்ஸ் கஃப்கா, ஆல்பர் காம்யூ, ஓரான் பாமுக், இடாலோ கால்வினோ முதலான படைப்பாளிகளின் ஆக்கங்கள் நூற்றுக்கணக்கில் தமிழுக்கு வந்திருப்பதற்குக் காரணம், இவர்களுடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்புதான். எட்டுத் திக்கிலுமிருந்து கலைச் செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்த்துவரும் இவர்களின் தொண்டினைத் தமிழின் பெருமை பேசும் திராவிட இயக்க அறிஞர்களோ எழுத்தாளர்களோ பாராட்டியிருக்கிறார்களா?

மேலான இலக்கியம் எது என்பதற்கான திட்டவட்ட மான வரையறை எதுவும் இல்லை. எனினும் நோபல், புக்கர், ஞானபீடம் முதலான அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற ஆக்கங்களை வைத்து, மேலான இலக்கியத்துக் கான சில வரையறைகளையேனும் நாம் தொகுத்துக் கொள்ளலாம். அத்தகைய வரையறைகளின் அடிப்படை யில் இந்திய அளவிலோ உலக அளவிலோ முன்னிறுத்தக் கூடிய எழுத்துக்களை புதுமைப்பித்தன், அசோகமித்திரன், வண்ண நிலவன் முதலானவர்கள் படைத்திருக்கிறார்கள். தமிழின் பெருமையைப் பேசுவதற்கான வாய்ப்பைத் தவற விடாத திராவிட இயக்கச் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் உலகத் தரம் வாய்ந்த நவீன தீவிர இலக்கியப் படைப்பாளிகளை இனியேனும் அக்கறையுடன் படித்து அவர்களை தேசிய அளவிலும் உலக அளவிலும் முன்னிறுத்தலாம். அவர்களுடைய அரசியல் பார்வைக்கு அது பொருத்தமானதாகவே இருக்கும்.

No comments:

Post a Comment