2007 தொடக்கம் முதல் 2013 இறுதிவரையிலான ஏழாண்டுக் காலத்தில்
எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு இந்த நூல். படைப்புரீதியாக மிகவும் குறைவாக எழுதிவந்த
காலகட்டம் இது. ஆண்டுக்கு ஒரு கதை எழுதினால் பெரிய விஷயம் என்று இருந்த காலம். கதைகளைத்
தொகுப்பாக வெளியிடும் முயற்சி பல காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இப்போதுதான்
கைகூடியிருக்கிறது.
இதற்கு முன்பு வெளியான ‘குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது’
என்னும் தொகுப்புக்கு மதிப்புரைகள், விமர்சனங்கள் அதிகம் வரவில்லை என்றாலும் தனிப்பட்ட
முறையில் பல வாசகர்கள் கதைகளைப் பற்றி ஆழமாகப் பேசினார்கள். குறிப்பாக ‘பொறி’ ‘சலனங்கள்’,
‘குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது’, ‘மழை தீர்ந்த மரம்’ ஆகிய கதைகளுக்குக் கிடைத்த வரவேற்பு மிகுந்த மனநிறைவை
அளித்தது. ‘மழை தீர்ந்த மரம்’ கதையில் வரும் பெண்ணைப் போலவே குழந்தையுடன் தனியாக வாழும்
சில பெண்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் நெகிழவைத்தன. ‘சலனங்கள்’ கதையில் வரும் காதலர்களுடன்
தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட காதலர்கள் பலர் அக்கதையை மிகவும் பாராட்டினார்கள். தலைப்புக்
கதை அதன் வடிவத்திற்காகவும் விரிவான பல விஷயங்கள் மிகச் சிறிய கதையில் கையாளப்பட்டமைக்காகவும்
பாராட்டப்பட்டது. தொடர்ந்து எழுதுவதற்கான உத்வேகத்தை இதுபோன்ற எதிர்வினைகள் அளிக்கின்றன.
இந்தத் தொகுப்பில் அனேகமாக எல்லாமே
பெரிய கதைகள். வடிவம், உள்ளடக்கம் சார்ந்து ஒவ்வொன்றும் ஒவ்விரு விதமானவை. ஓரிரு கதைகள்
உருவாகும்போதே அவற்றின் வடிவம் குறித்த தெளிவு இருந்தது. சில கதைகள் எழுதியபோது தம்மை
வடிவமைத்துக்கொண்டன. சில கதைகள் தம் இலக்கை அடைந்திருக்கலாம். சில அடையாமல் போயிருக்கலாம்.
ஆனால் எழுதும்போது ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் இருந்த தீவிரத்திலும் ஈடுபாட்டிலும்
எந்த வித்தியாசமும் இல்லை. என் மனதுக்கு நெருக்கமான சில தருணங்கள் ஒவ்வொரு கதையிலும்
உள்ளன. இதைப் படிப்பவர்களுக்கும் நெருக்கமான தருணங்கள் இக்கதைகளில் இருக்கும் என நம்புகிறேன்.
நண்பர்கள் ஜே.பி.சாணக்யா, கோகுலக் கண்ணன்
ஆகியோர் கதைகள் பிரசுரமாவதற்கு முன்பு படித்துப் பார்த்துக் கதைகளை மேம்படுத்த ஆலோசனை
சொன்னார்கள். தொகுப்பாக இந்தக் கதைகளைப் படித்துப் பார்த்துக் கதைகளைப் பற்றிய தன்
கறாரான மதிப்பீடுகளை முன்வைத்ததுடன் பிரதியை மேம்படுத்தப் பல யோசனைகள் சொன்னவர் நண்பர்
ஆசைத்தம்பி. தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கும் இமையம் ஒவ்வொரு படைப்பைப் பற்றியும்
விரிவாகப் பேசியிருக்கிறார். இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
கதைகளை வெளியிட்ட காலச்சுவடு, தீராநதி,
உயிர் எழுத்து, ஆனந்த விகடன், தி இந்து (பொங்கல் மலர்) ஆகிய இதழ்களுக்கு என் நன்றி.
சிறுகதைகளில் என்னுடைய ஆதரிசமான படைப்பாளுமைகளில்
ஒருவர் அசோகமித்திரன். அவருக்கு இந்தத் தொகுப்பைக் காணிக்கையாக்குவதில் மிகுந்த மன
நிறைவை அடைகிறேன்.
அரவிந்தன்
செப்டம்பர் 28, 2015.
No comments:
Post a Comment