உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்தியா வந்து இறங்கிய பாகிஸ்தான்
அணியின் தலைவர் ஷாஹித் அஃப்ரிதி, தங்கள் அணிக்கு இங்கே வழங்கப்பட்ட வரவேற்பைக்
கண்டு நெகிழ்ந்துபோனார். “பாகிஸ்தானில்கூட இத்தனை அன்பு எங்களுக்குக் கிடைத்ததில்லை”
என்று உணர்ச்சிவசப்பட்டார். பாகிஸ்தானை இழிவுபடுத்திவிட்டதாகச் சொல்லி
பாகிஸ்தானின் வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது தேச அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.
இந்தியாவில், “பாரத மாதா வாழ்க” என்று சொல்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு
வெளியேறலாம் என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார். மகாராஷ்டிர
சட்டமன்றத்தில் ‘பாரத் மாதா கீ ஜெய்’ எனச் சொல்ல மறுத்ததற்காக ஆல் இண்டியா
மஜ்லிஸ்-ஏ-இட்டேஹதுல் முஸ்லிமீன் கட்சியைச் செர்ந்த வாரிஸ் பதான் என்னும் சட்டமன்ற
உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
தேச பக்தி அல்லது நாட்டுப் பற்று என்றால் என்ன என்னும் கேள்வியை இந்த இரு
சம்பவங்களும் எழுப்புகின்றன. யார் அதைத் தீர்மானிப்பது என்னும் கேள்வியையும்
எழுப்புகின்றன.
தேசபக்தி என்பது ஒவ்வொருவரின் அந்தரங்க விஷயம். தாய் மீது இருக்கும்
பற்றைப் போலத்தான் தாய் நாட்டுப் பற்றும். ஒவ்வொரு மகனும் மகளும் தனக்கே உரிய
விதத்தில் தன் தாயிடம் அன்பு செலுத்தலாம். தாய் நாட்டின் மீதான அன்பும் பற்றும்கூட
அப்படித்தான். ஒருவர் தன் நாட்டைத் தாயாக நினைக்கலாம், தந்தையாக நினைக்கலாம்,
தெய்வமாக நினைக்கலாம், அல்லது வெறும் நாடாக நினைத்தும் அன்பு செலுத்தலாம். பற்றின்
அடையாளங்களும் வெளிப்பாடுகளும் பல விதங்களில் இருக்கலாம். சில குறியீடுகளுக்குள்
அதை அடக்கி, அந்தக் குறியீடுகளையே நாட்டுப் பற்றைக் குறிப்பதற்கான பொது
அளவுகோல்களாக மாற்றிவிடுவதில் ஆபத்து இருக்கிறது. எல்லோருக்கும் பொருந்தக்கூடிய
குறியீடு என்று எதுவுமே கிடையாது.
தேசபக்தி என்னும் கருத்தாக்கமே நவீன வாழ்வில் வேர் கொண்டது. குறிப்பாக
இந்தியாவில் இன்று நாம் சொல்லும் பொருளில் தேசபக்தி என்பது அதிகபட்சம் ஒன்றரை
நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பது. அதற்கு முன்பு அந்தந்தப் பகுதியின்
அரசுகளே மக்களின் விசுவாசத்திற்கும் பற்றுக்கும் மையமாக இருந்தன. தமிழ்நாட்டை
எடுத்துக்கொண்டால் சேர, சோழ, பாண்டிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களை முறையே சேர,
சோழ, பாண்டிய நாட்டு மக்களாகவே கருதிக்கொண்டார்கள். சுந்தந்திரப் போராட்டக்
காலத்தில்தான் இந்தியா என்னும் கருத்தாக்கமும் தேசபக்தி என்னும் உணர்வும் ஒரு
வடிவம் பெற்றன.
சுதந்திரப் போராட்டக் காலத்திலும் எல்லோரும் ஒரே விதத்தில் தங்கள் நாட்டுப்
பற்றை வெளிப்படுத்திவிடவில்லை. சிலர் ஆங்கிலேயர்களை எதிர்த்து நேரடியாகப்
போராடினார்கள். சிலர் சமூக சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்கள்.
காந்தியின் வருகைக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் வெகுஜன இயக்கமாக மாறிய பிறகும்
போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களைவிடவும் ஈடுபடாத இந்தியர்கள்தான் அதிகமாக
இருந்திருப்பார்கள். சுதந்திரப் போராட்டம் என்னும் ஒற்றை அளவுகோலை வைத்துக்கொண்டு
அவர்கள் அனைவரையும் தேசத்துரோகிகள் என்று சொல்லிவிட முடியுமா? ஆங்கிலேயர்களின் கீழ்
பணிபுரிந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்த இந்தியர்களைக்கூட
யாரும் தேசத்துரோகிகள் என்று சொல்லுவதில்லை. தேசபக்தியை எந்த ஒற்றை அளவுகோலாலும்
அளக்க முடியாது என்பதுதான் காரணம்.
தேச பக்தி என்பது சிக்கலான விஷயம். இந்தியாவில் அரசு செலவிடும் பொதுப்
பணத்தின் உதவியுடன் உயர் கல்வி கற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்
லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் சம்பாதிக்கும் இந்தியர்கள் பலர்
இருக்கிறார்கள். இவர்களில் பலர் தாங்கள் பணிபுரியும் நாடுகளில் குடியுரிமை
பெற்றவர்கள். அதே சமயம், பாதுகாப்புப் படைகளிலும் இஸ்ரோ போன்ற பாதுகாப்பு
முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளிலும் எத்தனையோ பேர் அந்த அளவுக்கு அதிக சம்பளம்
பெறாமல் பணிபுரிந்துவருகிறார்கள். இந்தியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதுடன்
வருமானத்தையும் கணிசமாக உறுதிப்படுத்தும் பல ஆக்கங்களை இஸ்ரோவில் பணிபுரிபவர்கள்
செய்துவருகிறார்கள். இவர்களது பணிகளின் விளைவுகள் இந்தியாவின் பெருமிதங்களாக,
விண்வெளியில் இந்தியாவின் இருப்பைப் பல
விதங்களிலும் வலுப்படுத்துப்வையாக உள்ளன. அதிக வருமானம் ஈட்டக்கூடிய பிற துறைகளையோ
வெளிநாட்டுப் பணிகளையோ நாடாமல் இங்கே பலர் பணிபுரிகிறார்கள். தேசபக்தியே
இவர்களுக்கான உத்வேகமாக இருக்கக்கூடும். ஆனால், இதை அடிப்படையாக வைத்து,
வெளிநாடுகளுக்குச் செல்லும் நிபுணர்களைத் தேசத்துரோகிகள் என்று சொல்லிவிட
முடியுமா?
வந்தே மாதரம் என்றோ பாரத் மாதா கீ ஜெய் என்றோ சொல்வதில் முஸ்லிம்களுக்கு
இருக்கும் ஆட்சேபம் அவர்களுடைய சமய நம்பிக்கைகள் தொடர்பானது. ஒருவரது தனிப்பட்ட,
குடும்ப, சாதி, மொழி, சமயம் சார் நம்பிக்கைகள் அல்லது நலன்கள் தேச நலனுடன்
முரண்படும் சமயங்களில் தேச நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது
சரிதான். ஆனால் பாரத் மாதா கீ ஜெய் போன்ற கோஷங்களை எழுப்புவதை இந்தப் பட்டியலில்
சேர்க்க முடியுமா? இந்தியாவில் தனக்குக்
கிடைத்த அன்பான வரவேற்பைக் கண்டு அஃப்ரிதி உணர்ச்சிவசப்பட்டதை அவருடைய தேச
நலனுக்கு எதிரான செயல் என்று சொல்லிவிட முடியுமா?
இத்தகைய கோஷங்கள் வலிமையானவை. உணர்வுகளை எழுப்பக்கூடியவை, மக்களை
ஒன்றுதிரட்டக்கூடியவை எனப்தில் ஐயமில்லை. குறிப்பிட்ட ஒரு காலச் சூழலில் இவை
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. வருங்காலத்திலும் அப்படி
இருக்கக்கூடும். ஆனால், எல்லாருக்குமான, எல்லாச் சந்தர்ப்பங்களுக்குமான
தேசபக்தியின் அடையாளங்களாக இவற்றைக் கட்டமைக்க முடியுமா?
முடியும் என்றால், இதை யார் தீர்மானிப்பது? வந்தே மாதரம், பாரத் மாதா கீ
ஜெய், ஜெய் ஹிந்த், மேரா பாரத் மஹான், என்பன போன்ற பல கோஷங்கள் தேசப்பற்றைக்
குறிப்பவையாக உள்ளன. இவற்றில் எதை நாம் கட்டாயமாக்க முடியும்? இன்று உள்ள அரசு சில
கோஷங்களை முன்னிலைப்படுத்தும் என்றால், நாளை வரக்கூடிய இன்னொரு அரசு வேறு சில
கோஷங்களை முன்னிலைப்படுத்தும். பிறகு வேறொரு கட்சி வேறு சில கோஷங்களை
முன்னிலைப்படுத்தலாம். இதற்கெல்லாம் எல்லையோ முடிவோ ஏதாவது இருக்கிறதா? தேசபக்தி
என்றல்ல, எந்த ஒரு அம்சம் குறித்தும் கறாராக மேற்கொள்ளப்படும் எந்த வரையறையும்
நாம் – பிறர் என்னும் எதிர்வுகளைக் கட்டமைக்கவே உதவும்.
இன்றைய உலக நடைமுறையின்படி தேசபக்தி என்பது முக்கியமானதுதான். ஆனால், ஒரு
தேசத்தை எல்லோரும் ஒரே மாதிரி பார்ப்பது என்பது எந்தக் காலத்திலும் சாத்தியமற்றது.
அமெரிக்கப் பெருமையைப் பற்றி அமெரிக்கர்கள் மார்தட்டிக்கொண்டால் அதே அமெரிக்கா
கறுப்பின மக்களை நடத்திய விதம் பற்றி நினைவுபடுத்தி அந்தப் பெருமிதத்தைக் கேள்வி
கேட்கும் குரலும் எழவே செய்யும். இந்தியப் பெருமையும் அப்படித்தான். இந்தியாவில்
ஆதிக்கச் சாதியினர் உணரும் அதே விதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்தியாவைப் பற்றி
உணர முடியுமா? கோயிலுக்குள் சிறப்பிடம் பெறுபவர்களும் கோயிலுக்குள் நுழைய அனுமதி
அற்றவர்களும் அந்தக் கோயிலை ஒரே மாதிரி பார்க்க முடியுமா?
இந்த உலகில் எதுவுமே திட்டவட்டமானதல்ல. எந்தப் பார்வையும் எல்லோருக்கும்
பொதுவானதாக இருக்க முடியாது. எனவே தேசபக்தி போன்ற உணர்ச்சி சார்ந்த விஷயங்களை
வரையறுக்காமல் இருப்பதே விவேகமானது.
இடைநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பதான் நிருபர்களைச்
சந்தித்தபோது இவ்வாறு சொன்னார்: “என் நாட்டை நான் நேசிக்கிறேன். நான் இங்குதான்
பிறந்தேன். இங்குதான் சாவேன். இதை இழிவுபடுத்துவது பற்றி என்னால் கனவுகூடக் காண
முடியாது. ஜெய் ஹிந்த். ஜெய் பாரத். ஜெய் மஹாராஷ்ட்ரா.”
கோஷம் அல்ல பிரச்சினை. குறிப்பிட்ட ஒரு கோஷம் போட்டால்தான் நீ தேசபக்தன்
என்று சொல்வதுதான் பிரச்சினை. ஜாவேத் அக்தர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட எத்தனையோ
முஸ்லிம்கள் வந்தே மதரம், பாரத் மாதா கீ ஜெய், ஜெய் ஹிந்த் போன்ற கோஷங்களைச்
சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இடைநீக்கம் செய்யப்பட்ட பதானும் ஜெய் ஹிந்த்
என்கிறார். இதை வைத்து தேசபக்தியை அளக்க முனைந்தால் அது சிக்கலான பிரச்சினைகளுக்கே
வழிவகுக்கும்.
சுந்தர ராமசாமி எழுதிய ‘- ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலில் வரும் ஒரு பகுதியை இங்கே
நினைவுகூரலாம்:
மாணவர்கள் சிலர் கூடி, எதிர்ப்படுபவர்கள் அனைவரையும் நிறுத்தி, வற்புறுத்தி, ‘பாரத மாதாவுக்கு ஜே’, ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று குரல் எழுப்பச் செய்தார்கள். சிறு பையன்களின் தலையில் குட்டியும், செவியைத் திருகியும் இதைச் செய்யச் சொன்னார்கள் . வற்புறுத்தல் இன்றியே பல சிறுவர்கள் ஆர்வமாக உணர்ச்சிவசப்படக் கத்தினார்கள்.
வயதான ஒரு கிழவி கத்த மறுத்துவிட்டாள் . ‘கொன்றாலும் கத்த மாட்டேன்’ என்றாள் . கொள்கை காரணம் என்று நான் நினைக்கவில்லை. வற்புறுத்தலுக்கு இணங்கக் கூடாது என்ற வீம்பு அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த மனோபாவம்தான் சுதந்திரத்தை எப்போதும் காப்பாற்றி வந்திருக்கிறது.
No comments:
Post a Comment