Friday, July 8, 2016

பொருளாதார அரசியலில் தத்துவங்களின் தோல்வி!


தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. கிறிஸ்தவக் கல்வி அமைப்பு ஒன்று நடத்திய அந்தக் கூட்டம் ‘இந்துத்துவம்’ பற்றி விவாதித்தது. பல தரப்பினரும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தும் எதிரொலிக்க வேண்டும் என்று கூட்டத்தை நடத்தியவர்கள் நினைத்தார்கள். அவர்களது அழைப்பை ஏற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பில் இருந்த கி.ரவி என்பவர் அதில் கலந்துகொண்டார். இந்துத்துவம் குறித்த விமர்சனங்களுக்குப் பதில் சொன்ன அவர், இந்துத்துவம் என்பது இந்த நாட்டின் மண் சார்ந்தது என்னும் கருத்தை முன்வைத்தார். இன்று நாம் இந்துத்துவம் பற்றிப் பேசுகிறோம், ஆனால், நாம் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை பெரிதாக வளர்ந்துவருகிறது என்றார். டங்கல் திட்டம், காட் ஒப்பந்தம் ஆகியவையே அந்த அபாயங்கள் என்று சொன்னவர், இவை எப்படி இந்தியாவின் பொருளாதாரத்தையும், அதிலுள்ள அனைத்து சாதி, மத, பண்பாட்டு அம்சங்களையும் பாதிக்கும் என்று விளக்கினார்.

நிறைவுரை ஆற்றிய கோவை ஞானி, இந்துத்துவத்தை விட்டுவிட்டு டங்கலைப் பிடித்துக்கொண்டார். டங்கல், காட் ஆகிய திட்டங்களின் பொருளாதார, பண்பாட்டு ரீதியான விளைவுகளை எடுத்துச் சொன்னார். இடதுசாரிகளும் வலதுசாரிகளும் இணையும் புள்ளியாக உலகமயப் பொருளாதாரம் இருந்தது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய செய்தி.
 
மாற்றுப் பொருளாதாரச் சிந்தனைகள்

சங்கப் பரிவார அமைப்பினர் தொண்ணூறுகளில் இரண்டு விஷயங்களை முன்வைத்துப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தார்கள். ஒன்று ராமர் கோயில், இன்னொன்று சுதேசி. ராமர் கோயில் தொடர்பான பேச்சுகள் 1992 மசூதி இடிப்புக்குப் பிறகு நீர்த்துப்போகத் தொடங்கி, வேறு வடிவங்களை எடுத்தன. ஆனால், சுதேசிப் பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. காட் ஒப்பந்தம், டங்கல் திட்டம் ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்பதைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியவை தீவிரமாகக் குரல்கொடுத்தன. நரசிம்ம ராவ் அரசு லைசன்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்டியதைப் பொதுவாக வரவேற்ற பாஜக, தங்கத்தை அடகு வைத்தது, பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளைக் குறைத்தது, காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதலான பல அம்சங்களில் அரசைக் கடுமையாகக் குறை கூறியது.

இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு நேருவின் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கைகளைக் காரணம் காட்டிய பாஜக சித்தாந்திகள், இந்தியாவின் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான பொருளாதாரச் சிந்தனை காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் இல்லாததே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று பேசினார்கள். சுதேசி உணர்வைத் தட்டி எழுப்புவதன் மூலம் நாட்டு மக்களின் ஆற்றல்களைப் பெருக்கி, நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர்களைப் பாடுபடவைக்க முடியும் என்றது. நாட்டின் அடிப்படை வலிமையான விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இந்தியாவை நெருக்கடியிலிருந்து மீட்கலாம். அந்நிய சக்திகளை நம்ப வேண்டாம் என்பது ஆர்.எஸ்.எஸ். வாதம்.

கே.என்.கோவிந்தாசார்யா, எஸ்.குருமூர்த்தி, முரளி மனோகர் ஜோஷி, கே.எஸ்.சுதர்சன் ஆகியோர் இந்த சுதேசிப் பிரச்சாரத்தை மிகுந்த முனைப்போடு முன்னெடுத்தார்கள். பண்டித தீனதயாள் உபாத்யாயா முன்வைத்த பொருளாதாரச் சிந்தனையான ‘ஏகாத்ம மானவவாதம்’ (ஒருங்கிணைந்த மானுடக் கோட்பாடு) அவர்களது பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையாக அமைந்தது. தனது உள்ளார்ந்த இயல்பு, உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு சமூகம் அல்லது தேசம் தனக்கான அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தீனதயாள் உபாத்யாயா விரிவாகப் பேசுகிறார். கோவிந்தாச்சார்யா, குருமூர்த்தி, சுதர்சன் போன்றோர் இதை அடியொற்றி நமக்கான பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கிவந்தார்கள். நேருவின் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கைகள் எந்த விவாதமும் இன்றி அமல்படுத் தப்பட்டது என்று குருமூர்த்தி அடிக்கடி குறைபட்டுக் கொள்வார். அதற்கு மாற்றாக காந்தியப் பொருளாதாரக் கொள்கைகளை குருமூர்த்தி போன்றவர்கள் முன்வைத்தார்கள்.

இடதுசாரிகளும் உலகமயமாதலைக் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியாவை அந்நிய சக்திகளுக்கு விற்பதாகத்தான் அது முடியும் என்றார்கள். சுதேசி முழக்கத்தை அவர்கள் எழுப்பவில்லை என்றாலும் நாட்டின் வளம் அதன் மக்களிடம் இருக்க வேண்டும் என்பதையும் பொருளாதாரக் கொள்கைகள் மக்களை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் எனவும் வாதிட்டார்கள். டங்கல் திட்டம் முதலாளித்துவ அமெரிக்காவின் அடிவருடியாக இந்தியா மாறவே வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டினார்கள். அந்நிய முதலீட்டை நம்புவது, அந்நிய நிறுவனங்களுக்கு இந்தியத் தொழில்துறையைத் திறந்துவிடுவது ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தின் மீதான இந்தியர்களின் பிடியை வலுவிழக்கச் செய்துவிடும் என்றார்கள். தொழிலாளர்கள் நலன் பேணப்படுவதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை எனவும் எச்சரித்தார்கள். 

விடைபெற்றுக்கொண்ட கொள்கைகள்

ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கை, உள்நாட்டுத் தனியார்மயமாவதைப் பெரிதாக எதிர்க்கவில்லை. உலகளாவிய தாராளமயமாக்கலையே தீவிரமாக எதிர்த்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளோ உள்நாட்டுத் தனியார்மயமாக்கலையும் சேர்த்தே எதிர்த்தன. வாதங்களின் அம்சங்களில் இப்படிச் சில மாறுபாடுகள் இருந்தாலும், இடதுசாரிகளும் வலதுசாரிகளும் உலகமயமாதலை எதிர்த்தன. 

ஆனால், பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இடங்களில், இருந்த தருணங்களில் எப்படி நடந்துகொண்டன? மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தையோ சுதேசிப் பொருளாதாரத்தையோ அவை முன்னெடுத்தனவா? நந்திகிராமங்களும் குஜராத் முன்மாதிரிகளும் நமக்குச் சொல்லும் கதை வேறு. காங்கிரஸ் தன் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதைத் தடுக்க இடதுசாரிக் கட்சிகள் போதிய நெருக்கடிகளைக் கொடுக்கவில்லை.
 
கம்யூனிஸ்ட்டுகள் நேரடி அதிகாரத்தில் இருந்த இடங்கள் இரண்டு மாநிலங்களோடு நின்றுவிட்டன. ஆனால், பாஜகவின் நிலை அப்படி அல்ல. ஒரு முறை அரைகுறையாகவும் ஒரு முறை முழுமையாகவும் மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் அக்கட்சி இருந்திருக்கிறது. இப்போது அறுதிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக மத்திய அரசைத் தன் வசம் வைத்திருக்கிறது. 90-கள் தொடங்கி இன்றுவரை எல்லாச் சமயங்களிலும் குறைந்தது 3 மாநிலங்களிலேனும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. சுதேசிப் பொருளாதாரத்தின் மேல் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு கட்சிக்கு இருந்துவருகிறது. எனினும், நரசிம்ம ராவும் மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் போட்டுக்கொடுத்த பாதையில்தான் பாஜகவின் ஆட்சியும் பெருமளவில் பயணிக்கிறது.

அது மட்டுமல்ல, காங்கிரஸ் பாணியிலான பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸைக் காட்டிலும் வேகமாகவும் தீவிரமாகவும் செயல்படுகிறது. பண்பாட்டுப் பிரச்சினைகளையும் தேசிய உணர்வையும் முன்னிறுத்தும் மரபைக் கொண்ட அக்கட்சி, கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘வளர்ச்சி’அஸ்திரத்தைக் கைப்பற்றி அதை வைத்தே போரிட்டது. குஜராத்தில் நரேந்திர மோடி சாதித்துக் காட்டிய ‘வளர்ச்சி’யை முன்னிறுத்தியது. தேசியப் பெருமிதங்கள் பேசப்பட்டன. ஆனால், சுதேசி உணர்வோ நமது பொருளாதாரம் நமது உள்ளார்ந்த ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்னும் பார்வையோ முன்னிறுத்தப்படவில்லை. ‘மேற்கத்திய நுகர்வுக் கலாச்சார’த்தின் தீமைகள் பற்றிப் பல ஆண்டுகளாகப் பேசி வந்த வலதுசாரி சித்தாந்திகளின் ஆட்சியில் நுகர்பொருள் சந்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு அகலமாகத் திறந்துவிடப்பட்டது. தேசப் பாதுகாப்பைத் தாரக மந்திரமாக ஜபிப்பவர்களின் ஆட்சியில் பாதுகாப்பு சார்ந்த உற்பத்தித் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு வழிசெய்யப்பட்டுள்ளது. பாஜக, சுதேசிக் கொள்கையைக் கைவிட்டு விட்டது என்று சங்கப் பரிவார் அமைப்புகளில் ஒன்றான பாரதிய மஸ்தூர் சங்கம் என்னும் தொழிற்சங்க அமைப்பு விமர்சிக்கிறது.

பாஜக அரசுகள் கடைப்பிடித்த பொருளா தாரக் கொள்கைகள் நாட்டுக்கு நன்மை விளை வித்திருக் கின்றனவா இல்லையா என்பது இங்கே விவாதப் பொருள் அல்ல. இதே கொள்கைகளை முன்னிறுத்திய காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்து சுதேசியை முன்னிறுத்திய அவர்கள் கொள்கை என்ன ஆனது என்பதுதான் கேள்வி. மகாராஷ்டிர மாநிலத்தில் என்ரான் என்னும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சங்க அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் (விழிப்புணர்வு இயக்கம்) கடுமையாகப் போராடியது. என்ரானுக்கு எதிரான பிரச்சாரம் சென்னையிலும் நடந்தது. என்ரான் போன்ற நிறுவனங்களை உள்ளே விடுவதன் ஆபத்து பற்றிப் பல மட்டங்களிலும் பிரச்சாரம் நடந்தது. சொற்பொழிவுகள், நூல்கள் என்று திமிலோகப்பட்டது. ஆனால், சிறுபான்மை அரசின் தலைவராகப் பொறுப்பேற்ற  பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கையெழுத்திட்ட கோப்புகளில் ஒன்று என்ரானுக்கு அனுமதி வழங்கும் கோப்பு.

அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரையிலும் சுதேசிப் பொருளாதாரம் பேசிய கட்சி, பதவிக்கு வந்ததும் உலகமயமாதல் கொள்கையைப் பின்பற்றுவது என்றால் அந்தக் கொள்கைதான் செல்லுபடி ஆகும் என்று ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்? சுதேசிக் கொள்கை காலாவதி ஆகிவிட்டது என்று ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்?
 
மாற்றுப் பாதை சாத்தியம்தானா?

ஆர்.எஸ்.எஸ்.ஸோ கம்யூனிஸ்ட்டுகளோ முன்வைத்த பொருளாதாரக் கொள்கைகளுக்கான வெற்றிகரமான முன்னுதாரணங்கள் எங்காவது உள்ளனவா? அரசியல் அதிகாரம் கிடைத்தும் ஏன் அவர்களால் அதை உருவாக்க முடியவில்லை? 

உலகமயமாகிவிட்ட சூழலில் மாற்றுப் பொருளா தாரத்தை முன்னெடுப்பது என்றால், அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். மக்கள் கருத்தையும் ஆற்றலையும் திரட்ட வேண்டும். பொருளாதாரத்தின் பாதையை மிகக் கவனமாகத் திசைதிருப்ப வேண்டும். இதற்கு, கொள்கையில் தீவிரமான பற்றுறுதியும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. சுதேசிப் பொருளாதாரத்துக்காக வரக்கூடிய எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கட்சி தயாராக இல்லை. அதற்கான தியாகங்களுக்கோ உழைப்புக்கோ தயாராக இல்லை. பெருநிறுவனங்களின் துணையோடு அரசியல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவற்றுக்கு ஒத்துவராத பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிப்பது சாத்தியமும் அல்ல.

சுந்தர ராமசாமி எழுதிய ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலில் இப்படி ஒரு வரி வரும்: “இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கார்ல் மார்க்ஸை ஏமாற்றிவிட்டார்கள்”. காங்கிரஸ்காரர்கள் காந்தியை ஏமாற்றினார்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தீனதயாள் உபாத்யாயாவை ஏமாற்றினார்கள். உலகமயமாதலின் வெற்றி இந்தத் தத்துவங்களைப் பேசியவர்களைப் பார்த்துப் பரிகசிக்கிறது. 

தி இந்து 06.07.2016

No comments:

Post a Comment