ப்ளேயிங் இட் மை வே: சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை
சச்சின் டெண்டுல்கருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. கை விரலில் சிறிய அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. திடீரென்று அவர் எழுந்துகொள்கிறார். “ஆபரேஷன் செய்யும்போது உள்ளங்கையில் வெட்டிவிடாதீர்கள். பேட்டைப் பிடிக்க க்ரிப் இருக்காது” என்கிறார் பதற்றத்துடன். மருத்துவருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. மயக்க மருந்து வலுவிழக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள்” என்று மீண்டும் தூங்கவைக்கிறார்.
கிரிக்கெட்டின் மீது சச்சினுக்கு இருக்கும் தீராக் காதலை இந்த ஒரு சம்பவமே
சொல்லிவிடும். அப்படிப்பட்ட ஒருவர் சுயசரிதை எழுதினால் எப்படி இருக்கும்? சச்சினின்
மனைவி அஞ்சலி பற்றிய ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு
வரியும் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. கிரிக்கெட் ஆடுதல்,
கிரிக்கெட்டுக்காகத் தயார்செய்துகொள்ளுதல், ஆட்டத்தை அலசுதல் எனப் பக்கங்கள்
விரிகின்றன. கிரிக்கெட்டுக்கு அப்பால் குறிப்பிடப்படும் விஷயங்களும் (அரட்டை,
ஷாம்பெய்ன், பயணங்கள், இசை) கிரிக்கெட் தொடர்பாகவே பேசப்படுகின்றன.
30 ஆண்டு காலப் பயணம்
வரலாற்றில் யாரும் செய்யாத, இனி அனேகமாக யாராலும் செய்ய முடியாத பல
சாதனைகளைச் செய்தது எப்படி எனபதை ஓரளவேனும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் தன்
கிரிக்கெட் பயணத்தைப் பதிவுசெய்துள்ளார் சச்சின். 11 வயதில் தொடங்கிய பயணம் இது.
கிட்டத்தட்ட 30 ஆண்டு காலப் பயணம். அதில் உள்ள தீவிரம், அசாத்தியமான முனைப்பு,
நம்ப முடியாத அளவிலான முன் தயாரிப்பு, பரவசம், வலி என இந்தப் பயணத்தின்
பரிமாணங்கள் சுமார் 450 பக்கங்களில் உருப்பெறுகின்றன.
பயிற்சி என்றால் சாதாரணப் பயிற்சி அல்ல. பதின்ம வயதில் ஒரு நாளுக்கு நான்கு
முறை பேருந்தில் பயணம் செய்து பயிற்சிக்குச் செல்வது, அங்கே மணிக் கணக்கில்
பயிற்சி, பயிற்சி இல்லாத நாட்களில் நாள் முழுவதும் விளையாட்டு என்று ஆட்டத்தின்
மீது வெறித்தனமான ஈடுபாடு சச்சினுக்கு இருந்திருக்கிறது. இந்தியாவுக்காக ஆடத்
தொடங்கி அணியில் நிரந்தர இடம் பிடித்த பிறகும் அவரது வெறித்தனமான பயிற்சி
குறையவில்லை. கடைசிப் போட்டிவரை அது தொட்ர்ந்திருக்கிறது. அந்தப் பயிற்சிகளை
சச்சின் விவரிக்ப்பதைப் படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. போட்டி இல்லாத
நாட்களிலும் பயிற்சியின் தீவிரம் குறைவதில்லை. சாப்பாட்டுப் பிரியரான
சச்சினுக்குத் தன் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது பெரிய சவாலாக
இருந்திருப்பதையும் உணர முடிகிறது.
போட்டிகள், பயிற்சிகள், வெற்றி, தோல்விகள் என்பவை எந்த ஆட்டக்காரரின்
வாழ்க்கையிலும் வருபவைதான். ஆனால் தன்னுடைய சாத்தியங்களின் எல்லைவரை போய்ப்
பார்த்துவிட வேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட சச்சினின் விஷயத்தில் இவை
ஒவ்வொன்றுமே விறுவிறுப்பான நிகழ்வுகளாகியிருக்கின்றன. ஸ்டெம்பின் மீது ஒற்றை
ரூபாய் நாணயத்தை வைத்துவிட்டுப் பந்து வீசச் செய்வார் கோச் ரமாகாந்த் அச்ரேகர்.
சுற்றிலும் இருபதுக்கும் மேற்பட்ட தடுப்பாளர்கள். எல்லைக் கோடு என்று எதுவும்
கிடையாது. எங்கே கேட்ச் பிடித்தாலும் அவுட். இந்த வியூகத்திற்குள் அவுட் ஆகாமல் 15
நிமிடங்கள் ஆடினால் அந்த நாணயம் பரிசு. நாணயம் சில சமயம் கிடைக்கும், சில சமயம்
கிடைக்காது. ஆனால், தரையோடு ட்ரைவ் ஆடும் கலையை இதன் மூலம் கற்றுக்கொள்ள
முடிந்தது.
குறைந்த தூரத்திலிருந்து வீசப்படும் பவுன்சர்களை ஆடுவது, மழையில் நனைந்தபடி
ஆடுவது, ஒவ்வொரு பந்து வீச்சாளரின் பலம் என்னவோ அதற்கேற்றபடி வியூகம் வகுத்து
அதைப் பயிற்சி செய்வது என்று பல விதமாக அமைந்த இந்தப் பயிற்சிகள் கடைசித்
தொடர்வரையிலும் தொடர்ந்தது. 2013-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு
முன்பு மலைப்பாங்கான பகுதியில் சைக்கிளில் ஏறும் பந்தயத்தில் அளவுக்கதிகமான
வேகத்தில் ஓட்டி மயங்கி விழும் நிலைக்குப் போயிருக்கிறார். 198 போட்டிகளில் ஆடிய
ஒருவர் அப்படியெல்லாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று நீங்கள்
நினைக்கலாம். ஆனால் பரம பக்திமானுக்கு வழிபாடு எப்படியோ அப்படித்தன் சச்சினுக்குப்
பயிற்சி.
இயல்பின் ஒரு பகுதி
சச்சின் இயல்பிலேயே கிரிக்கெட் ஆடும் ஆற்றல் கொண்டவர். 14 வயதில் உள்ளூர்ப்
போட்டி ஒன்றில் இவர் கபில்தேவின் பந்துகளை எதிர்கொள்ளும் விதத்தைப் பார்த்து
வியந்த வெங்சர்க்கார் இவரை மாநில அணிக்கு ஆடப் பரிந்துரைக்கிறார். இப்படிப்பட்ட
ஆற்றலும் அதற்கேற்ற தன்னம்பிக்கையும் இருந்தாலும் பயிற்சியை ஒருநாளும் சச்சின்
சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. பயிற்சியை ஒரு தவம்போலச் செய்வதும் தொடர்ந்து தன்
மட்டையாட்டத்தில் பரிசோதனைகள் செய்துகொண்டிருந்ததும்தான் எல்லாச் சோதனைகளையும்
மீறி இவரை 24 ஆண்டுகள் நீடிக்கவைத்தன என்பதை இந்தச் சுயசரிதை இயல்பாக
உணர்த்துகிறது.
ஒரு ஆட்ட நாயகன் உருவாகிறான் என்றால் அதற்கு அவன் மட்டுமல்லாமல் அவன் குடும்பமும்
விலை கொடுக்க வேண்டும். சச்சினின் பெற்றோரிலிருந்து தொடங்கி அவரது அண்ணன்,
பின்னாளில் மனைவி, குழந்தைகள் என எல்லோருக்கும் இதில் பெரிய பங்கு இருக்கிறது.
இவர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் சச்சின் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார். தன்
கோச் ரமாகாந்த் அச்ரேகரைப் பற்றிப் பேசும்போதும் நெகிழ்ந்துபோகிறார்.
சோதனைகள் எல்லாத் துறைகளுக்கும் பொதுவானவைதான். ஆனால் சமகால விளையாட்டுக்
களத்தில் சச்சின் அளவுக்குச் சோதனைகளை அனுபவித்திருக்கும் இன்னொருவர் இருப்பாரா
என்பது சந்தேகம்தான். கடுமையான பயிற்சிகள், தொடக்கத்திலேயே வலிமையான எதிரணிகளுக்கு
எதிராகப் பழக்கமில்லாத ஆடுகளங்களில் ஆட வேண்டிய நிர்ப்பந்தம், சிறிய வயதிலிருந்தே ரசிகர்களின்
எதிர்பார்ப்பு என்னும் சுமையைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம், கிட்டத்தட்டப்
பத்தாண்டுகளுக்குத் துணைக்கு வலுவான மட்டையாளரோ எதிரணியை ஊடுருவக்கூடிய பந்து
வீச்சாளர்களோ இல்லாத ஒரு அணியில் இருந்தபடி ஆட வேண்டிய அழுத்தம், கிரிக்கெட்
வாழ்வின் பின் பகுதியில் எதிர்கொண்ட கடுமையான காயங்கள், எதிரணியின் முதன்மை
இலக்காக இருத்தல் என்று தன் மீதான சுமைகளை மிகையுணர்ச்சி இன்றி விவரிக்கிறார்
சச்சின்.
குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதன் வலியையும் காயங்களிலிருந்து மீண்டு
வருவதில் இருந்த உடல், மன வலிகளையும் துல்லியமாகச் சொல்கிறார். முதுகு வலி, கால்
விரல் எலும்பு விரிசல், டென்னிஸ் எல்போ என்னும் முழங்கை வலி, தோள்பட்டைத் தசை
கிழிந்தது, கை விரலில் ஏற்பட்ட முறிவு, தொடையில் ஏற்பட்ட வீக்கம் என்று
சச்சினுக்கு ஏற்பட்ட எல்லாக் காயங்களுமே அபாயகரமானவைதாம். இந்தக் காயங்களில்
ஏதேனும் ஒன்று போதும் ஒருவரைத் தீவிர ஆட்டத்திலிருந்து விலக்கிவைக்க. ஆனால்
சச்சின் விலக மறுத்துப் போராடுகிறார். தன் சாத்தியங்களில் எல்லைகளைக் கடுமையான
போராட்டத்தின் மூலம் விரிவுபடுத்துகிறார். ஆட்டத்தின் எல்லைகளையும் கூடவே
விரிவுபடுத்துகிறார். சிறிய வயதில் பின் காலில் சென்று ஆடும் கவர் ட்ரைவ், அதிக
மட்டை அசைவு இல்லாமல் ஆடும் ஸ்ட்ரைட் ட்ரைவ் போன்ற ஷாட்கள் என்றால் பின்னாளில்
அப்பர் கட் போன்ற ஷாட்கள் அவரது முத்திரையாக இருந்தன.
ஆடுகளம் தொடர்ந்து சச்சினுக்குப் பெரும் சவால்களை எழுப்பியபடி
இருந்திருக்கிறது. அதற்கு அவர் எல்லா விதங்களிலும் தயாராகவே இருந்திருக்கிறார்.
அதனால்தான் 35 வயதுக்குப் பிறகு அவரால் ஒரு நாள் போட்டியொன்றில் 200 ரன் எடுக்க
முடிந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் சவாலான சூழலில் டெஸ்ட் சதம் எடுக்க
முடிந்திருக்கிறது. பார்வையாளராக இந்த மாயங்களைப் பார்த்து வியந்த ஒருவர் இந்தப்
புத்தகத்தைப் படித்தல் எதுவும் சும்மா வந்துவிடவில்லை என்பது புரியும்.
வலியை வென்ற காதல்
சச்சினின் கதையை ஒரு விதத்தில் வலியின் கதை என்று சொல்லலாம். சொல்லொணாத
வலிகளுக்கு மத்தியில் ஒரு மனிதன் விடாமல் போராடிய கதை. சென்னை டெஸ்டில் முதுகு
வலியோடு அவர் ஆடியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில்
அதைவிடவும் கடுமையான வலியை அவர் அனுபவித்திருகிறார். முறிந்த விரலோடு
ஆடியிருக்கிறார். தோள்பட்டையில் கிழிந்த தசையோடு ஆடியிருக்கிறார். கால் விரலில்
சிறு விரிசலால் சிரமப்பட்டு ஆடியிருக்கிறார். டென்னிஸ் எல்போ குணமாகிய பிறகும்
பழைய வலிமையைப் பெறுவதற்கு முன்பே ஆடியிருக்கிறார். ஜுரம், வயிற்று வலி
ஆகியவற்றின் கணக்கு தனி.
இத்தனை வலிகளையும் சுமந்தபடி அவரை ஆடவைத்த சக்தி எது? வலிகளைப்
பொருட்படுத்தாமல் களமிறக்கிய சக்தி எது? கிரிக்கெட்டின் மீது இருக்கும் அடங்காத
காதல்தான். அந்தக் காதல்தான் 12 வயதிலிருந்து ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
அந்தக் காதலின் ஆழம்தான் 24 ஆண்டுகள் கடந்த பிறகும் ஓய்வுபெறும் எண்ணத்தை வலி
மிகுந்த அனுபவமாக மாற்றுகிறது.
சச்சின் சர்ச்சைகளைப் பற்றியும் பேசுகிறார். அணித் தேர்வு விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் குறைகளைப் பற்றி, 1997-ல் தன்னிடம் சொல்லாமல் தலைமைப் பதவியிலிருந்து தன்னை நீக்கியதைப் பற்றி, ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கும் ஹர்பஜன் சிங்குக்கும் இடையே நடந்த சண்டையைப் பற்றி, தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்ட சமயங்களில் அடைந்த ஏமாற்றங்களைப் பற்றி, தான் 194 ரன்னில் இருக்கும்போது திராவிட் டிக்ளேர் செய்தது பற்றி, கிரேக் சாப்பலின் செயல்பாடு பற்றி, இயன் சாப்பலின் விமர்சனங்கள் பற்றி…
சில பதிவுகள் தனித்து நிற்கின்றன. ஷார்ஜாவில் ஆடிய அந்த இரண்டு ஆட்டங்கள், 2003 உலகக் கோப்பை ஆட்டங்கள், கொல்கத்தாவில் லட்சுமணனும் திராவிடும் நிகழ்த்திய அதிசயம், கும்ப்ளேயின் போர்க்குணம், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகியோருடன் இருந்த நட்பு போன்றவை சுவாரஸ்யமானவை.
புத்தகத்தில் என்னவெல்லாம் இல்லை என்றும் பல விஷயங்களை அடுக்கலாம். சில விமர்சகர்கள் மேட்ச் ஃபிக்ஸிங் பற்றி மவுனம் சாதிப்பது குறித்துக் கேள்வி எழுப்புகிறார்கள். சிலருக்கு வேறு சில சர்ச்சைகளைப் பற்றிக் கவலை. புதிய தகவல்கள் அதிகம் இல்லை என்பது சிலரது ஆதங்கம். இன்னும் அடுக்கலாம். கங்கூலி, கும்ப்ளே ஆகியோரைப் பற்றி எழுதிய அளவுக்கு திராவிட், லட்சுமணன் பற்றி இல்லை. ரிசர்ட்ஸைப் பற்றி நெகிழ்ந்து பேசும் சச்சின், கவாஸ்கர் முதலான இந்திய வீரர்கள்பற்றி அதிகம் சொல்லவில்லை. பால்ய நண்பன் காம்ப்ளி பற்றிய பதிவு ஏனோதானோவென இருக்கிறது. ஒரு சில மோசமான தோல்விகளைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. பிரயன் லாரா, ரிக்கி பான்டிங் போன்ற சமகாலச் சாதனையாளர்கள் பற்றி அதிகமில்லை.
இவை போதாமைகள்தான். ஆனால், ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது சச்சினின் சுயசரிதை. எதை எழுதுவது, எதை விடுவது என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். தவிர, இந்தியச் சூழலில், எந்த அளவுக்கு விஷயங்களைத் திறந்த மனதுடன் பேச முடியும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. கபில்தேவும் கவாஸ்கரும் எத்தனை சர்ச்சைகளைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்கள் என்பதையும் யோசித்துப் பார்க்கலாம்.
டெண்டுல்கர் மொழித் திறனுக்குப் பேர்போனவர் அல்ல. அவருடன் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதிய போரியா மஜும்தாரும் நடையழகுக்காக மெனக்கெடவில்லை. எளிமையாக, செய்தித்தாள் பாணியில் மொழிநடை இருப்பது சச்சினின் ஆளுமையுடன் பொருந்திப்போகிறது. முதல் முதலாக மட்டை பிடித்த நாளிலிருந்து வாங்கடே அரங்கில் ஓய்வுபெற்ற தினம்வரை சச்சினின் கிரிக்கெட் பயணம் இங்கே பதிவாகியிருக்கிறது.
கிரிக்கெட்டைத் தன் உயிருக்கு இணையாக நேசித்த ஒரு மனிதனின் உணர்வுகள் இந்தப் புத்தகம் முழுவதும் தகவல்களாகத் தரப்பட்டுள்ளன. ஆகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவரது பார்வையிலிருந்து ஆட்டம் அணுகப்படுவதில் வெளிப்படும் நுட்பம்தான் நூலின் ஆகச் சிறப்பான அம்சம். ஆடுகளத்தை மதிப்பிடுதல், காற்று வீசும் திசையைக் கவனித்தல், வானிலையால் ஏற்படும் கள மாற்றங்களின் தன்மைகள், பந்துவீச்சாளரின் மனதை ஊடுருவ முயலும் உளவியல் போராட்டம், எதிரணியின் வியூகங்களைக் கணித்தல், உடல் குறைபாடு ஆட்டத்தைப் பாதிக்காத வண்ணம் செய்துகொள்ள வேண்டிய மாற்றங்கள், களத்தில் சக ஆட்டக்காரர்களுடனான உரையாடல்களின் முக்கியத்துவம் என மட்டை வீச்சுக் கலையின் சூட்சமங்களை அவர் விவரிக்கும் நுட்பம் அபாரம்.
ஒரு இளைஞர், அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதில் போராடித் தன் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான உத்வேகத்தை இந்த நூலிலிருந்து பெற முடியும். தான் தேர்ந்துகொண்ட விஷயத்தின் மீது அசாத்தியமான காதல் இருந்தால் அசாத்தியமான வலிகளைத் தாண்டிச் சாதிக்க முடியும் என்பதையும் அறிய முடியும். இதுதான் இந்த நூலின் ஆகச் சிறந்த பங்களிப்பு.
No comments:
Post a Comment