இமையத்தின் நன்மாறன் கோட்டைக்
கதை குறித்த பார்வை
சிந்தனைகளிலிருந்தோ, கொள்கை,
கோட்பாடுகளிலிருந்தோ உருவாகுபவை அல்ல இமையத்தின் கதைகள். வாழ்விலிருந்து மட்டுமே உருவாகுபவை.
அதனாலேயே நிஜத்தின் அசாத்தியமான வலுவைக் கொண்டிருப்பவை.
‘நன்மாறன் கோட்டைக் கதை’
என்னும் தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளும் ஒன்பது தனிக் கட்டுரைகளைக் கோருபவை. அந்த
அளவுக்கு அடர்த்தியும் நுட்பமும் ஆழமும் கொண்டவை. யதார்த்தத்தின் வலு இக்கதைகளின் விவரணைகளிலும்
வார்ப்புகளிலும் தேர்ந்த உரையாடல்களிலும் தன் இருப்பை வெளிப்படுத்திக்கொள்கிறது. இமையத்தின்
கலையுணர்வு இந்த யதார்த்தங்களை மறக்க முடியாத படைப்புகளாக மாற்றுகிறது.
இமையம் காட்டும் யதார்த்தம்
பன்முகம் கொண்டது. சாதி உணர்வு, பெண்களின் நிலை, அரசியல் கட்சிகளின் இன்றைய போக்குகள்,
வாழ்க்கை மாற்றங்கள், பல்வேறு வாழ்நிலைகள், உணர்ச்சிச் சுழிப்புகள், உணர்வுச் சிக்கல்கள்,
உறவின் தத்தளிப்புகள், வெவ்வேறு தருணங்களுக்கு மனித மனங்கள் ஆற்றும் எதிர்வினைகள்,
மாறுபட்ட எதிர்வினைகளுக்கான காரணங்கள் எனப் பல்வேறு தளங்களைத் தன்னுள் கொண்டது இமையத்தின்
புனைவுலகம். ஒவ்வொரு கதையும் நம் பிரக்ஞையின் தளத்தில் புதிய வாசலைத் திறக்கக்கூடியது.
புதிய நிதரிசனங்கள், புதிய கோணங்கள், துல்லியமான சித்தரிப்புகள், சொல்லாமல் உணர்த்தப்படும்
உண்மைகள் ஆகியவை மூலம் இந்தத் திறப்புகள் சாத்தியமாகின்றன.
இமையம் காட்டும் மனிதர்களில்
சிலரை நாம் பார்த்திருப்போம். சிலரைப் பார்த்திருக்க மாட்டோம். இவர்களைப் பற்றி இமையம்
எதுவுமே சொல்வதில்லை. அவர்களுடைய செயல்பாடுகளையும் பேச்சுக்களையும் நம் முன் வைக்கிறார்.
அவர்கள் நமக்கு மிகவும் தெரிந்தவர்களாக மாறிவிடுகிறார்கள்.
இமையத்தின் படைப்பாற்றலுக்கு ஒரு சான்று இது.
யாரைப் பற்றியும் எந்த
முடிவையும் இமையம் முன்வைப்பதில்லை. கீழ்ச்சாதிப் பிணத்தைத் தூக்கிச் செல்ல நேர்ந்ததை
ஆகப் பெரிய அவமானமாகக் கருதும் காவலர், எத்தனையோ கசப்புகளை மீறிக் கட்சியின் மீது அசைக்க
முடியாத விசுவாசம் கொண்ட பெரியவர், தன் கணவனைப் பழிவாங்குவதற்காகத் தன் மீதே களங்கத்தின்
சுமையை ஏற்றிக்கொள்ளும் பெண், பருவம் கடந்த வயதிலும் காதலுக்காகத் தன்னை ஒப்புக்கொடுக்கும்
பெண், சாதி வெறிக்குத் தன் கனவனைப் பலி கொடுத்த பெண், கட்சி எல்லைகளைத் தாண்டிய சாதி
விசுவாசம் கொண்ட கட்சிக்காரர்கள் ஆகியோரை நாம் இக்கதைகளில் நேரடியாகச் சந்திக்கலாம்.
இவர்களை நமக்கு நெருக்கமாக ஆக்கிவிட்டு இமையம் ஒதுங்கிக்கொள்கிறார். முன்முடிவுகள்,
தீர்ப்புகள் ஆகியவற்றின் சுமைகள் அற்ற இந்த மனிதர்களைப் பாத்திரங்கள் என்று சொல்வதற்குக்கூடத்
தயக்கமாக இருக்கிறது.
வாழ்நிலைகளை, வாழ்வின்
சலனங்களைச் சித்தரிக்கும் பிராது மனு, ஆலடி பஸ் ஆகிய கதைகளிலும் இதே தன்மையைக் காண
முடியும். ஆசிரியக் குறுக்கீடுகளோ அடையாளங்களோ அற்ற இத்தகைய சித்தரிப்புதான் இக்கதைகளைக்
கலைப் படைப்புகளாக ஆக்குகின்றன.
சமூக யதார்த்தங்கள், வாழ்நிலைகள்,
உறவுகள், வாழ்வின் சலனங்கள், உளவியல் கூறுகள் ஆகியவை இக்கதைகளின் அடிச்சரடுகள். சாதி
ஆணவம், சாதி வெறி, சாதியால் ஏற்படும் அவமானம் ஆகியவற்றை உணர்ச்சிப் பிசுக்கு இன்றிக்
காட்டுகிறார் இமையம். வாழ்வின் சிக்கலான தருணங்களை எதிர்கொள்வதில் ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையில் உள்ள வித்தியாசங்களைப் புரியவைக்கிறார். பெண் மனம் வெளிப்படும் விதம் அற்புதமாக
உள்ளது. பொது விளிகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் அழுத்தம் மிகுந்த சமகாலச் சூழலும்
தத்ரூபமாக வெளிப்படுகின்றன.
‘நன்மாறன் கோட்டைக் கதை’,
‘நம்மாளு’, ‘போலீசு’ ஆகிய கதைகள் சாதியுணர்வின் இன்றைய முகத்தை மிகத் துல்லியமாகக்
காட்டுகின்றன. ‘கட்சிக்காரன் கதை’ இன்றைய அரசியலின் நிஜ முகத்தை உணர்த்துகிறது. அரை
நூற்றாண்டுக்கும் மேற்பட்ட திராவிட இயக்க அரசியல் வென்றெடுத்த அம்சங்கள் பல இருந்தாலும்
அவை பரிதாபகரமாகத் தோற்ற இரண்டு புள்ளிகளை (சாதி அபிமானம், பொருளுக்கான பேராசை) இக்கதைகள்
பதைக்கவைக்கும் விதத்தில் அடையாளம் காட்டுகின்றன. இந்தத் தோல்விகளுக்குப் பின்னால்
உள்ள யதார்த்தங்கள் நம் மனசாட்சியை உலுக்குகின்றன.
சமகால வாழ்வின் கலாபூர்வமான
பதிவுகளான இக்கதைகள் வாசகருக்கும் சமகால யதார்த்தங்களுக்கும் இடையிலான திரைகளை விலக்கிக்
காட்டுகின்றன. இந்த தரிசனங்கள் நம் சூழலைப் பற்றி மட்டுமின்றி நம்மைப் பற்றியும் நமக்கு
மேலதிகமாக உணர்த்துகின்றன. இதுவே இந்தக் கதைகளின் சிறப்பு.
நன்றி: புதிய தலைமுறை
No comments:
Post a Comment