கோவேறு கழுதைகள் - 25: மீள்பார்வை
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இமயத்தின் கோவேறு கழுதைகள் நாவலைப் படிக்கும்போது ஒரு விஷயம் பளிச்சென்று புலப்படுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நாவல் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதுதான் அது.
உயிர்ப்புடன்
இருப்பது நாவல் மட்டுமல்ல. நாவல் வெளிவந்த காலத்தில் இதுபோல இன்னொரு நாவல் இல்லை என்று கூறப்பட்டது. மூத்த எழுத்தாளரும் இலக்கியப் பிரதிகள் குறித்த கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தவருமான சுந்தர ராமசாமி இந்த நாவலை முன்னுதாரணமற்ற
நாவல் எனக் குறிப்பிட்டார். அன்று
பெரும் விவாதத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளான அந்தக் கூற்று, 25 ஆண்டுகளுக்குப் பின்னாலும் உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தக் கூற்றுக்கு எதிரான விமர்சனங்கள் இன்று தம் மதிப்பை இழந்துவிட்டன.
முன்னுதாரணமற்ற
நாவல் என்று சுந்தர ராமசாமி சொன்ன வாக்கியத்தைச் சற்றே நீட்டித்து பின்னுதாரணமும் அற்ற நாவல் என்று
கூறலாம். 25 ஆண்டுகள் கழித்து நாவலை மீண்டும் படிக்கையில் இப்படித்தான் தோன்றுகிறது.
விளிம்பு
நிலை மக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வைச் சொன்ன படைப்புகள் பல கோவேறு கழுதைகள்
எழுதப்படுவதற்கு முன்பும் பின்பும் வந்திருக்கின்றன. தொண்ணூறுகளில் பெரும் உத்வேகத்துடன் உருவாகிவந்த தலித் இலக்கியப் போக்கு இதுபோன்ற படைப்புகளைத் தந்திருக்கிறது. அதற்கு முன்பும் பலர் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வை எழுதியிருக்கிறார்கள்.
இத்தகைய எழுத்துகளிலிருந்து இமையத்தின் கோவேறு கழுதைகள், எப்படி வேறுபடுகிறது?
உள்ளிருந்து பார்க்கும் கோணம்
விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் வாழ்வைச் சொல்வதில் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று அவர்களை உள்ளிருந்து பார்க்கும் கோணத்தில் எழுதுவது. நேரடி அனுபவம், மிக நெருக்கமாக வாழ்ந்ததில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், வாழ்வைப் பதிவுசெய்வது. இன்னொன்று, வெளியிலிருந்து பார்த்து, தகவல்களைத் திரட்டி, தொகுத்து எழுதும் கோணம்.
விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் வாழ்வைச் சொல்வதில் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று அவர்களை உள்ளிருந்து பார்க்கும் கோணத்தில் எழுதுவது. நேரடி அனுபவம், மிக நெருக்கமாக வாழ்ந்ததில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், வாழ்வைப் பதிவுசெய்வது. இன்னொன்று, வெளியிலிருந்து பார்த்து, தகவல்களைத் திரட்டி, தொகுத்து எழுதும் கோணம்.
இரண்டாவது
கோணத்தில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வைச் சொன்ன பல படைப்புகள் தமிழில்
வந்திருக்கின்றன. அவற்றில் பல குறிப்பிடத்தக்க படைப்புகளாகவும்
உள்ளன. ஆனால், இத்தகைய கோணம் பெரும்பாலும் அந்த மக்களின் வாழ்வை
ஊடுருவிச் செல்வதில்லை. சருமத்தையும் சதைக் கோளத்தையும் எலும்புக்கூட்டையும் தாண்டிக் குருதியில் நனைந்து ஆன்மாவைத் தொடுவதில்லை. உள்ளிருந்து பார்க்கும் கோணம் அதைச் சாத்தியப்படுத்துகிறது. அனுபவத்தின் அசல் தன்மை தரும்
அனுகூலம் இது. இந்தக் கோணத்தையும்
அது தரும் சாதகங்களையும் இமையம் போன்ற சிலரது எழுத்துகளில் மட்டும் காண்கிறோம். கோவேறு கழுதைகள் இதற்கான சிறந்த உதாரணம்.
கோவேறு
கழுதைகள் நாவலில் வரும் ஆரோக்கியம், சவுரி, சகாயம், மேரி ஆகியோரை நாம்
நேரில் கண்டு பழகிய உணர்வை நாவல் தருகிறது என்றால் அதற்குக் காரணம் இந்தக் கோணம்தான். காலனியும், காலனிக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் சக்கிலியக் குடியும் பற வண்ணார் குடியும்
நமக்கு இவ்வளவு உயிர்ப்புடன் அறிமுகமாவதற்குக் காரணம் இந்தக் கோணம்தான். கூன் விழுந்த முதுகில்
அழுக்குத் துணி மூட்டையைச் சுமந்தபடி
சவுரி நடந்து செல்லும் காட்சி நம் கண்ணெதிரில் நடப்பதாகத்
தோற்றம் கொள்கிறது. “இந்த வண்ணாத்தி மவள
மறந்துடாதிங்க சாமி” என்ற குரல் நம்
காதில் ஒலிக்கிறது. ஊரென்றும் காலனியென்றும் அதற்கும் அப்பால் ஒதுக்கப்பட்டிருக்கும் வீடென்றும் பிரிந்து கிடக்கும் நமது வாழ்விடங்களின் காட்சிகள்
அழிக்க முடியாதபடி மனதில் தங்கிவிடுகின்றன. காலனியில் சாவு விழும்போது என்னவெல்லாம்
நடக்கும் என்பதைக் காட்டும் வாழ்வியல் சித்திரங்கள் சலனப் படம்போல கண் முன் நிழலாடுக்கின்றன.
அவர்களுடைய மொழி, தொழில்கள், பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், உறவு
முறைகள், வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட சுரண்டல்கள்,
மாடுபோல மனிதர்கள் உழைக்கும் தொரப்பாடு, கையேந்திப் பெறும் ராச்சோறு என அந்த முழு
வாழ்க்கையும் கண் முன் சுழல்கிறது.
நாவலைப்
படிக்கும் பலருக்கு ஒருபோதும் அனுபவத்திற்கு வந்திராத இந்தச் சலனங்கள் வாழ்ந்து பெற்ற அனுபவங்களாக, நேரடியாகப் பார்த்தறிந்த உண்மைகளாகத் தோற்றம் கொள்கின்றன. இந்த மாயத்தை நிகழ்த்துவது
இமையத்துக்கு வாய்த்த கோணம். இந்தக் கோணம்தான் ஒடுக்கப்பட்டோர் வாழ்வைச் சொல்வதில் மிக முக்கியமான வேறுபாட்டை
ஏற்படுத்துகிறது. விளிம்பு நிலை வாழ்வின் இலக்கியப்
பதிவுகளின் போக்கில் மாபெரும் உடைப்பை ஏற்படுத்துகிறது.
யதார்த்தவாதக் கதை மரபுக்குப் புத்துயிர் அளித்த படைப்பு
எல்லாப்
படைப்புகளும் ஒரு விதத்தில் ஆவணங்கள்தாம்.
ஆனால், எல்லா ஆவணங்களும் படைப்புகள் அல்ல. ஒடுக்கப்பட்டோர் வாழ்வை அனுதாபத்தின் உந்துதலாலும் அரசியல் செயல்திட்டங்களுடனும் பதிவுசெய்த படைப்புகள் பல இருக்கின்றன. இத்தகைய
படைப்புகளில் பெரும்பாலானவை ஆவணம் என்பதற்கு மேல் கலையாக உருப்பெறவில்லை.
வாழ்வின் பதிவுகள் என்பது வேறு, வாழ்வின் படைப்பூக்கம் மிகுந்த பதிவு என்பது வேறு. இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருப்பதுதான் கோவேறு கழுதைகள் நாவலின் இலக்கிய மதிப்பைத் தீர்மானிக்கிறது.
கோணம்
ஒருபுறம் இருக்க, பதிவின் படைப்பூக்கம் இதை முக்கியமான கலைப்
படைப்பாக ஆக்குகிறது. ஒடுக்கப்பட்டோரின் வாழ்வைச் சொன்ன பல நாவல்கள் கலைப்
படைப்பாக உருப்பெறவில்லை. எழுதுபவரின் அரசியல் பார்வை யதார்த்தத்தை வடிவமைக்கும் விபத்துக்குப் பெரும்பாலான படைப்புகள் ஆளாகியிருக்கின்றன. யதார்த்தத்தின் வீரியத்துக்கும் அதன் உண்மைத்தன்மைக்கும் முகம் கொடுக்காமல்,
அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து யதார்த்தத்துக்கு வடிவம் கொடுக்கும் அணுகுமுறை யதார்த்தத்தைச் சிதைத்திருக்கிறது. எழுதுபவரின் விருப்பு, வெறுப்புகளைப் பொறுத்து வாழ்நிலைகள், யதார்த்தங்களின் நிறம் மாறுகிறது. பிரச்சினையைச் சொல்வதோடு, தீர்வையும் சொல்வதற்கான விழைவினால் வாழ்நிலைப் பதிவுகள் உருமாறுகின்றன. காப்பாற்றியாக வேண்டிய மதிப்பீடுகளும் சமூகத்தை மாற்றுவதற்கான உத்வேகமும் பல திருப்பங்களைத் திணிக்கின்றன.
இதுபோன்ற பிறழ் புனைவு உத்திகளால் யதார்த்தம் சிதைக்கப்படுவதன் சாட்சியங்களாக நம் முன் பல
நாவல்கள் உள்ளன.
நல்ல
நோக்கத்துடன் எழுதப்பட்ட பல பிரதிகள் முன்முடிவுகளும்
அரசியல் நிலைப்பாடுகளும் இணைந்து சொல்லும் அழகான பொய்களாக, அரை உண்மைகளாக நம்
முன் உள்ளன. கலையம்சம் கூடாத, கலாபூர்வமான மெனெக்கெடல் இல்லாத நாவல்கள் என இவற்றைச் சொன்னாலும்
அவற்றின் அடிப்படைப் பிரச்சினை, யதார்த்தத்துக்கும் அவற்றுக்கும் இடையே உள்ள பலவீனமான உறவுதான்.
வெளியிலிருந்து
பார்க்கும் கோணமும் அரசியல் நிலைப்பாடுகள், நோக்கங்கள் சார்ந்த அணுகுமுறையும் சேர்ந்து யதார்த்தவாதக் கதை மரபையே கேலிக்குரியதாக்கிவிட்ட
காலகட்டத்தில் யதார்த்தவாத எழுத்தின் வீரியத்தை உணர்த்திய நாவல் என்றும், தமிழ் யதார்த்தவாதக் கதை மரபுக்குப் புத்துயிர்
அளித்த படைப்புகளில் ஒன்று என்றும் கோவேறு கழுதைகள் - நாவலைச் சொல்லலாம்.
பதறவைக்கும் யதார்த்தம்
ஊரிலிருந்து
ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள
காலனிக்கும் அப்பால், காலனிவாசிகளாலும் ஒடுக்கப்படும் வண்ணார்களான ஆரோக்கியம், சவுரி தம்பதியினரின் வாழ்வின் சில பக்கங்கள்தான் கோவேறு
கழுதைகள் நாவலின் கதைக் களம். அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் அசைவுகளை நாவலில் காணும்போது மனம் கசிகிறது. ஆனால்,
அவர்களுக்கு அது மிகவும் இயல்பாகிவிட்ட
அன்றாட வாழ்க்கை. காலனியில் ஒரு சாவு. அந்தச்
சாவுக்கான சடங்குகளில் பெரும்பகுதி வேலைகளைச் செய்வது வண்ணார்களான சவுரியும் ஆரோக்கியமும். எல்லா வேலைகளையும் முடித்த பிறகு அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமும் சோறும் அதிர்ச்சியூட்டும் அளவுக்குச் சொற்பமாக இருக்கின்றன. பணிவுக்குப் பேர்போன, அடங்கிப்போதலே வாழ்முறையாகக் கொண்ட ஆரோக்கியம் – சவுரி தம்பதியாலும் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள். அதற்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. அலட்சியமே அவர்கள் பெறும் எதிர்வினை. மனம் வெறுத்து வீடு
திரும்புகிறார்கள். ஆனால், அடுத்த நாள் அதே தெருவில்
அதே வீடுகளுக்குச் சென்று அழுக்குத் துணிகளை வாங்கி வந்து துவைக்கிறார்கள். இரவில் அதே வீடுகளுக்குப் போய்
மிச்சம் மீதி உள்ள சோற்றை
வாங்கிவந்து சாப்பிட்டுப் படுக்கிறார்கள். அவர்களுடைய கோபத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது.
அவர்கள் கோபித்துக்கொண்டு எங்கேயும் போக முடியாது. அழுக்குத்
துணியும் எச்சில் சோறும்தான் அவர்களுடைய அன்றாட வாழ்க்கை. இந்த வாழ்நிலைதான் அவர்களை
எல்லா நிலைகளிலும் அலட்சியப்படுத்துவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு மேலே உள்ள பிரிவினருக்கு
வழங்குகிறது.
பதறவைக்கும்
இந்த யதார்த்தம் அவர்களுக்கு இயல்பாகிப்போனதும், இதிலிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்னும் உணர்வுகூட இல்லாத அளவுக்கு இந்த இயல்புத்தன்மை அவர்கள்
வாழ்வாகவே மாறியிருப்பதுமான அவலம்தான் நாவலின் அடிநாதம். நவீனத்துவத்தின் நிழல்கூட அவர்கள் மீது படுவதில்லை. வளர்ச்சி,
முன்னேற்றம், சமத்துவம், உரிமை என்பதெல்லாம் அவர்கள் கேள்விப்பட்டிராத சொற்கள். இரவு வயிறாரச் சாப்பிட்டுப்
படுப்பது, அடுத்த நாள் காலையில் சாப்பிடுவதற்கு
மிச்சம் இருப்பது, கூலியை உரிமையாக வாங்க முடியாமல்போவது, கையேந்திப் பெற்ற சொற்ப உணவு தானியங்களை நெருக்கடி
காலங்களுக்காகச் சேமித்துவைப்பது, எப்போதாவது அந்தோணியார் கோவிலுக்குச் செல்வதற்கான செலவுக்குக் கையில் கொஞ்சம் ரொக்கம். இவைதான் அவர்களுடைய அதிகபட்ச லட்சியம். இந்த உளையிலிருந்து வெளியேற
வேண்டும் என்று அடுத்த தலைமுறைக்குத் தோன்றுகிறது. அந்த எண்ணமே தவறு
என்று எண்ணும் அளவுக்கு ஆரோக்கியத்தின் உளவியல் அடிமைச் சேவகத்தில் ஊறியிருக்கிறது. அடிமைத்தனத்தின் இழிவே இயல்பாகிப்போன வாழ்வை இதைவிடவும் வலுவாகச் சொன்ன தமிழ் நாவல் வேறு இல்லை.
கால மாற்றத்தின் பிரதிபலிப்பு
அவலமே
யதார்த்தமான வாழ்விலும் இளைப்பாறல்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கத்தான் செய்கின்றன. காதல், காமம், பாசம், மண் மீதான ஒட்டுதல்,
இறையுணர்வு ஆகியவற்றின் வடிவில் இளைப்பறுதலின் தருணங்களும் நாவலில் இடம்பெறுகின்றன. அவலத்தின் மறுபக்கத்தைக் காட்டுவதற்கான ஆசிரியரின் மெனெக்கெடல் எதுவுமின்றி, உச்சி வெயில் தணிந்து மாலையில் மென் காற்றின் குளிர்ச்சி
உடலைத் தழுவுவதுபோல இந்தச் சலனங்கள் இயல்பாக உருக்கொள்கின்றன. நாவலில் துருத்திக்கொண்டிருக்கும் சில அம்சங்களும் வாழ்நிலைப்
பதிவுகள் சார்ந்த செயற்கையான இணைப்பாக அல்லாமல், கதை சொல்லும் திறனின்
கச்சாத்தன்மையாகவே அடையாளப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன.
உதாரணமாக, மேரி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதன் சித்தரிப்பு.
உதாரணமாக, மேரி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதன் சித்தரிப்பு.
வாழ்வின்
அவல யதார்த்தத்தைச் சொல்லும் இந்த நாவல், சூழலிலிருந்து
விடுபட யத்தனிக்கும் திமிறலிலிருந்தே அடிமைச் சேவகத்துக்கான மாற்று பிறக்கும் என்பதையும், யதார்த்தத்தின் வழி நின்று கோடி
காட்டுகிறது. விடுதலை குறித்த கனவுகூட இல்லாத வாழ்வில் ஊறிய ஆரோக்கியம் – சவுரி
இணையரின் அடுத்த தலைமுறையினர் விடுதலை பற்றி யோசிக்கவும் பெற்றோரை மீறி அதற்கான முயற்சிகளை
முன்னெடுக்கவும் முனைகிறார்கள். சமூக அமைப்பினால் தங்கள்
மீது சுமத்தப்பட்ட வாழ்க்கையை இயல்பானதாக எடுத்துக்கொள்ளத் தயாராக இல்லாத தலைமுறையின் உதயத்தைக் கோடி காட்டுவதோடு நாவல்
முடிகிறது. ஆசிரியரின் விருப்பம் சார்ந்து யதார்த்தத்தைத் திரித்து இந்த மாற்றம் நாவலில்
திணிக்கப்படவில்லை. காலமாற்றத்தின் இயல்பான பிரதிபலிப்பாகவே வெளிப்படுகிறது.
சுரண்டலின் உள்முரண்கள்
தாழ்த்தப்பட்ட
மக்களிடையே இருக்கும் உள்முரண்களைப் பேசுவதன் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நாவல் வெளியான சமயத்தில் விமர்சனம் எழுந்தது. அடிமைப் பறையனாக இருந்த அழகன், தனக்குக் கீழே இருக்கும் வண்ணார்களைக்
கிட்டத்தட்ட அடிமைகளாகவேதான் நடத்துகிறான். அதில் அவனுக்கு எந்த உறுத்தலும் ஏற்படுவதில்லை.
ஆண்டான் – அடிமை அமைப்பு சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் தனது இருப்பை நிலைநிறுத்திக்கொண்டிருப்பதை
நாவலின் போக்கில் துல்லியமாக உணர முடிகிறது. இந்த
அமைப்பு மனிதர்களின் நடத்தையைத் தீர்மானிக்கிறது. சுரண்டுவதையும் சுரண்டப்படுவதையும் இயல்பானதாக உணரவைக்கிறது. இந்த இயல்பாக்கமே இந்த
அமைப்பு நீடித்திருப்பதற்கான எரிபொருள். இந்த இயல்பாக்கத்தைக் கேள்விக்கு
உட்படுத்தாமல், இதைக் கலைத்துப்போடாமல் மாற்றம் சாத்தியமல்ல. இதில் யாரையும் தனியாகக் குற்றம்சாட்ட இயலாது.
சுரண்டலின்
இயல்பு நாவலில் காட்டப்படுகிறது. வாழ்க்கை அதன் போக்கில் காட்சிப்படுத்தப்படுகிறது.
வாசகரின் அனுபவப் பரப்பிற்குள் வந்துவிடும் இந்தச் சலனங்கள் வாசிப்பவரின் பிரக்ஞையில் கலந்துவிடுகின்றன. சமூக அடுக்குகளின் நிலை
குறித்த பார்வைகளை விசாலப்படுத்துகின்றன. மனசாட்சியில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. சுரண்டலின் வகைகளை முழக்கங்கள் இன்றி, உணர்ச்சிப் பிசுக்கு இன்றி, குறுக்கீடு இன்றிக் காட்சிப்படுத்தும் இந்தப் பதிவு தனக்கான பார்வையை உருவாக்கிக்கொள்ள வாசகரை அனுமதிக்கிறது.
சுரண்டலின்
உள்முரண்களைப் பேச வேண்டுமா கூடாதா
என்பது அரசியல் சார்ந்த கேள்வி. கலை சார்ந்த கேள்வி
அல்ல. ஒரு படைப்பாளி தன்
அனுபவத்துக்கு உட்பட்ட யதார்த்தத்தை, தனக்கு முக்கியம் எனப்படும் உண்மையை, தனக்கு வசப்பட்ட வாழ்க்கையை நேர்மையாகவும் கலைத் திறனுக்கு ஏற்பவும் படைப்பாக்க வேண்டும். இதில் அரசியல் நிலைப்பாடோ, சமூக அதிகாரங்கள் சார்ந்த
கணக்குகளோ, படிமக் கனவுகளோ குறுக்கே வரக் கூடாது. ஒரு
எழுத்து கலாபூர்வமான படைப்பாக மாறுவதற்கான அடிப்படையான நிபந்தனை இதுதான். இந்த நிபந்தனையை இமையத்தின்
கோவேறு கழுதைகள் நாவல் முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது. நாவல் காட்டும் யதார்த்தத்தை ஜீரணிக்க இயலாதவர்களால் அதை மறுக்கவும் முடியவில்லை.
இவர்கள்தாம் நாவல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சாதிய அதிகாரம் சகல மட்டங்களிலும் ஊடுருவியிருப்பதன்
விளைவாக உருவான முரண்களும் உள் முரண்களும் சமூகத்தின்
எல்லா அடுக்குகளிலும் காணக் கிடைக்கும் என்பதே யதார்த்தம். இமையம் தன் அனுபவத்துக்கு வசப்பட்ட
யதார்த்தத்தை எந்த அரசியல் நிலைப்பாட்டின்
கறையும் படியாதவண்னம் நேர்மையாக அணுகியிருக்கிறார். அந்த நேர்மைதான் இந்த
நாவலைக் கலையம்சம் கூடியதாக ஆக்கியிருக்கிறது.
நாவலின் செவ்வியல் தன்மை
காலத்தின்
பதிவு, யதார்த்தம் ஆகியவற்றைத் தாண்டி இந்த நாவல் அதன்
பாத்திர வார்ப்புக்காக முக்கியமாகச் சொல்லப்பட வேண்டும். ஆரோக்கியத்தின் பாத்திரம் தமிழ் நாவல்களில் உருப்பெற்றுள்ள மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. ஆரோக்கியம் என்னும் ஒற்றைப் பாத்திரத்தைப் புரிந்துகொள்வதினூடே இந்தச் சமூக அமைப்பின் குறுக்குவெட்டுத்
தோற்றத்தை நாம் பார்த்துவிட முடியும்.
ஆரோக்கியத்தின் மன அமைப்பு, மதிப்பீடுகள்,
உறவுகளை அவள் பேணும் விதம்,
நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றும் விதம், துன்பங்களை எதிர்கொள்ளும் விதம் ஆகியவை காவிய நாயகியாக அவளை ஆக்குகின்றன. சூழல்
தன் மீது எத்தனை ஆயுதங்களை
எறிந்தாலும் அவள் மனதில் யார்
மீதும் வெறுப்பு இல்லை. நாள் தவறாமல் கசப்பையே
அவளுக்குத் தரும் வாழ்க்கையிடம் அவளுக்குச் சொல்ல அன்பான சொற்கள் இருக்கின்றன. மானுட இயல்பின் உன்னத நிலையாக இதைக் காணலாம். அடிமைத்தனத்தின் உச்சமாகவும் காணலாம். எப்படிப் பார்த்தாலும் ஆரோக்கியத்தை உங்களால் மறக்க முடியாது. அவளுடைய ஆளுமையின் ஒவ்வொரு பரிமாணமும் வாசகக்குள் பல விதமான அதிர்வுகளை
ஏற்படுத்த வல்லது.
ஆரோக்கியத்தின்
வாழ்க்கை காவியங்களில் காணப்படும் பாத்திரங்களுக்கு நிகரான வாழ்க்கை. காவிய நாயகர்களின் ஆளுமைகளில் காணப்படும் நுட்பங்களும் சிக்கல்களும் ஊடுபாவுகளும் முரண்களும் ஆரோக்கியத்தின் ஆளுமையிலும் காணப்படுகின்றன. சற்றும் மிகைப்படுத்தப்படாமலேயே, யதார்த்தச் சட்டகத்துக்குள்ளாகவே, இந்தக் காவியத் தன்மை உருப்பெறுகிறது. பல ஆண்டுகள் கழித்துப்
பார்க்கும்போதும் ஆரோக்கியத்தின் இயல்பு நம்மை நெகிழவைக்கத் தவறுவதில்லை. கழிவிரக்கத்தைக் கோரும் நெகிழ்ச்சி அல்ல இது.
நாவலின்
போக்கில் வெளிப்படும் பல சித்திரங்கள் வாசக
மனத்தில் அழியாமல் பதிவாகின்றன. சாவுச் சடங்குகள், ராச்சோறுக்கான அன்றாடப் பயணம், தொரப்பாட்டில் செலுத்தப்படும் அபாரமான உழைப்பு, நாவலின் கடைசியில் ஆரோக்கியமும் அவள் குடும்பமும் மேற்கொள்ளும்
பயணம் ஆகியவை காட்சி ஊடகத்துக்குரிய தன்மையுடன் உருப்பெறுகின்றன. இமையத்தின் கதையாடல் நாவலின் ஒவ்வொரு கட்டத்திலும் மானுட வாழ்வின் பக்கம் நிற்கிறது. கதையாடலின் மேற்பரப்பு அன்றாட வாழ்வின் படுதாவாக ஆடிக்கொண்டிருக்கையில் அடிப்பரப்பு, அன்றாடங்களைத் தாண்டிய தளங்களில் சஞ்சரிப்பது நாவலுக்குச் செவ்வியல் தன்மையைத் தந்துவிடுகிறது.
முன்முடிவுகளோ
நிலைப்பாடுகளோ யதார்த்தத்தைச் சிதைக்க அனுமதிக்காத சித்தரிப்பு, மனிதர்களையும் சம்பவங்களையும் நிலப்பரப்பையும் முன்வைப்பதில் கூடும் துல்லியம், அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்கும் தன்மை, கலையம்சத்தையோ ஆழத்தையோ கூட்டுவதற்காக எதையும் வலிந்து திணிக்காத போக்கு, வெளிப்படும் வாழ்வின் சலனங்களினூடே ஆசிரியரின் குறுக்கீடு அற்ற தன்மை ஆகியவை
இந்த நாவலுக்குத் தமிழ் நாவல்களில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தருகின்றன. இந்தத் தன்மைகளே 25 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த நாவலின் முக்கியத்துவத்தை
உறுதிப்படுத்துகின்றன. பிரதியின்
முக்கியத்துவத்தை உணர்ந்து ஒரு படைப்பாளியின் முதல்
நாவலைச் சிறப்பான முறையில் வெளியிட்ட க்ரியா பதிப்பகத்தின் பங்களிப்பும் இங்கு நினைவுகூரத்தக்கது.
கோவேறு
கழுதைகள் நாவலுக்குப் பிறகு, உள்ளிருந்து பார்க்கும் கோணத்திலும் கலாபூர்வமான தன்மையுடனும் விளிம்பு நிலை சார்ந்த நாவல்கள்
வந்திருக்கின்றன. ஆனால், ஆவணம் என்னும் தளத்தைத் தாண்டிய இலக்கியம் சார்ந்த வாழ்க்கைப் பதிவு என்ற முறையிலும், நுட்பங்களும்
எண்ணற்ற ஊடுபாவுகளும் நிறைந்த கலாபூர்வமான பிரதி என்ற முறையிலும் கோவேறு
கழுதைகள் இன்றளவிலும் தனித்து நிற்கிறது.
நன்றி: தடம் (விகடன் வெளியீடு)
அருமையான பதிவு. நாவலை வாசித்தபோது ஏற்பட்ட உள்ளுணர்வை உங்கள் கட்டுரை தந்துள்ளது. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDelete