கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை பல விதம். காவல் நிலைய
விசாரணைக் கைதிகள், நீதிமன்ற விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என இது
பல விதமானது. இவர்களில் விசாரணைக் கைதிகளின் நிலை பரிதாபகரமானது. நீதிமன்ற
அனுமதியுடன் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களைவிடவும்,
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் காவல் நிலையத்திலேயே விசாரணைக் கைதிகளாக
வைக்கப்படுபவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. இவர்களுக்கு எதிராக
ஏதேனும் ஆதாரம் கிடைத்தாலொழிய இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது,
குறைந்தபட்சம் இவர்களது வாக்குமூலமாவது வேண்டும். அதாவது, காவலர்கள்
சுமத்தும் குற்றத்தை இவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். இவர்களில்
பெரும்பாலானவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் பிடிக்கப்படுபவர்கள். உண்மையான
குற்றவாளிகள் கிடைக்காததால் பிடிக்கப்படுபவர்கள்.
‘மாற்று’ வழி தேடவைக்கும் நிர்ப்பந்தம்
இத்தகைய விசாரணைக் கைதிகளின் பாடுகளைப் பற்றிப் பேசும் ‘விசாரணை’ திரைப்படம், அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கும் அமைப்பின் ஓட்டைகளைப் பற்றிப் பேசுவதால் அரசியல் படமாக வெளிப்படுகிறது. யாருமே கிடைக்காவிட்டால், கிடைக்கும் யாரையாவது பிடித்துவந்து அவர்களை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்பது சோம்பேறிக் காவலர்கள் கண்டுபிடித்த வழிமுறை அல்ல. இத்தகைய காரியத்தில் அவர்களை ஈடுபடுத்துவது அமைப்பு. வழக்கை எப்படியாவது முடிப்பதற்கான நிர்ப்பந்தமே அவர்களை ‘மாற்று’ வழிகளை நாடச் சொல்கிறது. அதுவும் பெரிய இடம் தொடர்பான குற்றம் என்றால் நிர்ப்பந்தம் அதிகரிக்கிறது. இந்நிலையில், தன் கையில் சிக்குபவர்களிடம் மனிதாபிமானம் காட்டும் மனநிலையைக் காவலர்கள் துறந்துவிடுகிறார்கள். சமுதாயத்தின் உதிரிகளாக வாழ்பவர்கள் எளிதாக இவர்கள் கையில் சிக்குகிறார்கள். யாரைப் பிடித்தாலோ, அடித்தாலோ கேட்க நாதியில்லையோ அவர்களைப் பிடித்துவந்து அடித்துத் துவைத்துக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள். அவர்களது நியாயமான எதிர்ப்பை - அது எத்தனை வலிமையானதாக இருந்தாலும் - உடைப்பதற்கான அனைத்துத் தந்திரங்களையும் கற்றவர்கள்தான் நமது காவலர்கள்.
இதையெல்லாம் துல்லியமாகப் பதிவுசெய்யும் இயக்குநர் வெற்றி மாறன், இதோடு நிற்கவில்லை. எந்த அமைப்பு இவர்களை அப்படிச் செய்ய நிர்ப்பந்திக்கிறது என்பதையும் காட்டுகிறார். அமைப்பின் இந்தக் குரூரமான விளையாட்டில் யார் வேண்டுமானாலும் பலியாகலாம் என்பதையும் காட்டுகிறார். உதிரிகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மற்றவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு இருக்கிறது என்பதுதான். ஆனால், முழுமையான பாதுகாப்பு யாருக்குமே இல்லை என்பதைப் பார்வையாளர்களின் முதுகுத் தண்டு சில்லிடும் விதத்தில் காட்டிவிடுகிறார்.
படத்தின் முதல் பகுதி, விசாரணைக் கைதிகளான விளிம்பு நிலை மனிதர்களின்
வேதனையைச் சொல்கிறது. ஒரு கொள்ளைச் சம்பவம், ஆதாரம் கிடைக்காத நிலை,
யாரையேனும் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம்,
அதற்கான கைதுகள், சித்திரவதைகள், தந்திரங்கள் என்று அமைப்பின் குரூர முகம்
நேரடியாக வெளிப்படும் காட்சிகள் இவை. இதோடு நின்றிருந்தால் படம்
அப்பாவிகளின் துயரத்தையும் அதற்குப் பின்னுள்ள அதிகார அமைப்பின் கோளாறையும்
சொல்லும் இன்னொரு யதார்த்தமான பதிவாக நின்றிருக்கும். வெற்றி மாறன்
யதார்த்தத்தின் ஆழமான அடுக்குகளுக்குச் செல்கிறார். அதிகார அமைப்பு எந்த
அளவுக்கு நம் ஒவ்வொருவரின் வாழ்வுக்குள்ளும் ஊடுருவக்கூடியது என்பதைக்
காட்டுகிறார்.
உயர் மட்டத்தின் குற்ற உலகில் புழங்கும் கணக்குத் தணிக்கையாளர் ஒருவர் காவல் துறையிடம் சிக்குகிறார். இவரிடம் நடக்கும் விசாரணை, அவரது வசதி, சமூக அந்தஸ்துக்கு ஏற்ப மென்மையாக நடக்கிறது. அவர் பிடிவாதம் தளராத நிலையில் காவலர்களின் அணுகுமுறை மாறுகிறது. அவரைப் பேசவைப்பதற்கான நிர்ப்பந்தம் அதிகரிக்கையில், அவரும் சாதாரண விசாரணைக் கைதிபோலவே நடத்தப்படுகிறார். அதிகாரத்துக்கு வேண்டாதவராக ஆகிவிட்டால் ஆடிட்டர்களின் கால்சட்டையும் கழற்றப்படும் என்பதைக் காட்டுகிறது படம். ஆடிட்டரின் இடத்தில் யாரை வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம். அதிகார பீடத்தின் தரப்பில் நிற்கிறீர்களா அல்லது எதிர்த் தரப்பில் நிற்கிறீர்களா என்பதைப் பொறுத்தே உங்கள் நிலை தீர்மானிக்கப்படும்.
இந்த இடத்தில் வெற்றி மாறன் நுட்பமான ஒரு விஷயத்தைக் கொண்டுவருகிறார். வசதி படைத்தவர்கள், வருமான வரி கட்டுபவர்கள் ஆகியோருக்கு நமது சட்டத்தில் சில சலுகைகள் உள்ளன. அவர்களைக் கைதுசெய்வது, விசாரிப்பது, ஆகியவை எல்லாம் அத்தனை எளிதல்ல. ஆனால், இங்கே விசாரிக்கப்படுபவர், சட்டப்படி ‘முறை’யாகக் கைதுசெய்யப்பட்டவர் அல்ல. எனவே, அவரை விடுவிப்பதற்கான முயற்சிகளில் அவரைச் சேர்ந்தவர்களோ அவரது மேலிடமோ உடனடியாக இறங்க முடியாது. அவர்கள் சுதாரித்துக்கொள்வதற்குள் உண்மைகளைக் கறந்துவிட வேண்டும். மேற்படி ஆசாமியோ அழுத்தமானவர். விசாரணையில் எளிதாக வாயைத் திறப்பவர் அல்ல. எனவே, அவர் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பிடிவாதத்துக்கு இணையாகச் சித்திரவதையும் அதிகரிக்கும்போது அவர் இறந்துவிடுகிறார். விசாரணைக் கைதி இறந்துவிடுவது காவலர்களுக்குப் பெரும் தலைவலியாக மாறக்கூடியது. அதிலும் முறையாகக் கைது செய்யப்படாதவர் என்பதால் இரட்டைத் தலைவலி.
இந்நிலையில், தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக் காவல் துறை அமைப்பு தங்களில் ஒருவரைப் பலிகொடுக்கத் தீர்மானிக்கிறது. அவருக்குத் தப்ப வழியில்லை.
கேட்பாரற்ற உதிரி மனிதர்கள் பாதுகாப்பற்ற நிலையில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள் என்றால், பெரிய இடத்தைச் சேர்ந்தவர்களை வலை விரித்துப் பிடிக்க இன்னும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதிகார அமைப்பின் தேவைகளோடு முரண்பட்டால் காவல் துறை அதிகாரிக்கும் பாதுகாப்பு இருக்காது. இந்த ‘மரண தண்டனை’யைத் திட்டமிட்டு அரங்கேற்றும் உயரதிகாரிகள் மட்டும் பாதுகாப்பானவர்களாக இருக்க முடியுமா என்னும் கேள்வி படத்தில் எழுப்பப்படவில்லை. ஆனால், படம் எடுக்கப்பட்டுள்ள விதத்தில் இந்தக் கேள்வி நம் மனதில் எழுகிறது.
நாம் பாதுகாப்பான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்னும் கேள்வியை மிகவும் தீவிரமாக எழுப்பிவிடுகிறது வெற்றி மாறனின் ‘விசாரணை’. அபரிமிதமான பண பலம் அல்லது அதிகார பலம் அல்லது இரண்டும் உள்ளவர்கள்தான் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சட்டம் உத்தரவாதமளிக்கும் வாழ்வுரிமை, மனித உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் முழுமையாக அனுபவிப்பவர்கள் அவர்கள் மட்டும்தான். மற்றவர்களுக்கு இந்தச் சட்டம் உதவாதா என்றால் உதவும். ஆனால், அதிகாரத்துக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் உறவைப் பொறுத்து உங்களது பாதுகாப்புக்கான உத்தரவாதத்தின் அளவு மாறும். நடைபாதையில் வசிக்கும் அநாதைகளைப் பின்னி எடுப்பது மிகவும் எளிது என்றால், ஒரு ஆடிட்டரையோ அரசியல் கட்சித் தலைவரையோ தொழிலதிபரையோ அப்படிச் செய்வது ஒப்பீட்டளவில் கடினம்; அவ்வளவுதான். படத்தின் முன்பாதியிலும் பின்பாதியிலும் நடக்கும் சம்பவங்களின் பின்புலங்கள் வேறு. பாதிக்கப்படுபவர்களின் பின்னணிகள் வேறு. ஆனால், அடிப்படையில் எல்லாமே ஒன்றுதான் என்பதைக் காட்சிபூர்வமாக உணர்த்திவிடுகிறார் வெற்றி மாறன்.
இந்தியாவில் சிறையில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு விசாரணைக் கைதிகள் என்கிறது நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோவின் (NCRB) 2014-ம் ஆண்டின் புள்ளிவிவரம். 2009 - 2013 வரையிலான ஐந்து ஆண்டுகளில் காவல் நிலையங்களில் 11,820 கைதிகள் மரணமடைந்திருக்கிறார்கள்.
யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பலியாக்கப்படலாம் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். இதை அப்பட்டமாக அம்பலப்படுத்தும் இந்தப் படம், மக்களின் கவனத்தை மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரின் கவனத்தையும் கோரி நிற்கிறது. இந்தியச் சட்டங்கள் அவற்றின் உயரிய நோக்கங்களுக்கேற்பப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றால், அதைச் செய்யக்கூடியவர்கள் அதிகார வர்க்கத்தினர்தான். தங்கள் மனசாட்சியை நோக்கி ஒரு கலைஞன் விடுக்கும் செய்திக்கு அவர்கள் காதுகளும் மனங்களும் திறக்குமா?
No comments:
Post a Comment