மகாபாரதத்தை எப்படிப் புரிந்துகொள்ளுவது? வரலாறாகவா, கதையாகவா, கவிதையாகவா,
அல்லது தத்துவமாகவா? அது சமய தத்துவ நூலா அல்லது இலக்கியமா அல்லது மதம்,
தத்துவம், இலக்கியம் எல்லாம் கலந்த ஒரு படைப்பா? மகாபாரதம் என்னும்
மாபெரும் கடலில் சற்றேனும் கால் நனைத்தவர்கள்கூட இந்த எல்லாக்
கேள்விகளுக்கும் ஆமாம் என்று பதில் சொல்லத் தக்க ஒரு அம்சமாவது
மகாபாரதத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நூலை எப்படி அணுகுவது?
எப்படி மகாபாரதம் எண்ணற்ற வகையிலான பிரதிகளின் சங்கமமோ அப்படியே மகாபாரத
வாசிப்பும் எண்ணற்ற வகையிலானதாகவே இருக்கும். ஒவ்வொரு வாசிப்பும் இந்தக்
காவியத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சக்கூடியது. பிரபஞ்சனின் முயற்சி
அத்தகைய ஒன்று.
மகாபாரதம் அளவுக்கு வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் உட்பட்ட பிரதி உலகில்
வேறு ஏதேனும் இருக்குமா என்பது சந்தேகம்தான். பிரபஞ்சன் மகாபாரதக் கதையை,
அதன் பாத்திரங்களை, தருணங்களைத் தன் பார்வையில் தனக்கே உரிய கோணத்தில்
அணுகுகிறார். பிரபஞ்சன் பாரதக் கதையைத் திருப்பிச் சொல்லவில்லை. அந்த
உலகினுள் திரும்பச் செல்கிறார்.
மகாபாரதத்தைப் பலர் சுருக்கி எழுதியிருக்கிறார்கள். ராஜாஜி, அ.இலெ.
நடராஜன், வ.ஜோதி ஆகியோர் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள். முழுக் கதையையோ
அல்லது சில பகுதிகளையோ தம் பாணியில் புனைகதையாகச் சொன்னவர்கள் பலர்
இருக்கிறார்கள். மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர், கன்னடத்தில் பைரப்பா
எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். தமிழ்ப் புனைவுலகில் எஸ். ராமகிருஷ்ணன்
எழுதிய ‘உப பாண்டவம்’, ஜெயமோகன் எழுதிவரும் ‘வெண்முரசு’ ஆகிய உதாரணங்கள்
உள்ளன.
பிரபஞ்சனின் அலசல்கள், புனைகதைக்குரிய தன்மையுடன் மிளிர்கின்றன. மிகுதியும்
கதை வடிவிலேயே அவரது விசாரணைகள், தேடல்கள், வாதப் பிரதிவாதங்கள்,
கேள்விகள், ஐயங்கள் முடிவுகள் ஆகியவை அமைந்திருக்கின்றன. இந்த நூலைப்
படித்தால் மகாபாரதத்தை முதலிலிருந்து கடைசிவரை தெரிந்துகொள்ளலாம். ஆனால்
அதே வரிசையில் அல்ல. அர்ச்சுனனைப் பற்றிச் சொல்லும்போது கிருஷ்ணனைப் பற்றிய
சந்தேகம் வரும். கிருஷ்ணனைப் பற்றிய கட்டுரையில் அதற்கான விடை கிடைக்கும்.
பல கட்டுரைகள் சிறுகதையைப் போல ஆரம்பிக்கின்றன. சிறுகதைகளைப் போலவே
முன்னகர்ந்து சிறுகதைகளைப் போலவே அமைந்து படைப்பை வாசித்த அனுபவத்தைத்
தருகின்றன. சில பகுதிகள் கதைபோலத் தொடங்கிக் கட்டுரையாக வளர்ந்து
துல்லியமான அலசலாக முடிகின்றன. குறிப்பிட்ட எந்த முறைமையையும் பிரபஞ்சன்
வகுத்துக்கொள்ளவில்லை. பீஷ்மர், திருதராஷ்டிரன், வியாசர், கிருஷ்ணர்,
பீமன், திரௌபதி ஆகியோரைப் பற்றிப் பல இடங்களிலும் பல விதங்களில்
பேசுகிறார். ஒவ்வொன்றும் அவர்களைப் பற்றி மேலும் துலக்கமாக நாம்
புரிந்துகொள்ள உதவுகின்றன.
பிரபஞ்சன் மகாபாரதத்தை அணுகுவதில் நவீன மனதின் அணுகுமுறையே
மேலோங்கியிருக்கிறது. பெரும்பாலும் பகுத்தறிவு சார்ந்த தர்க்கம்
விசாரணைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. மகாபாரதச் சட்டகத்தை மீறாமல் அதைச்
செய்கிறார். நம்பிக்கையின் அடிப்படையில் இப்பிரதியை அவர் அணுகவில்லை.
முற்றிலும் பகுத்தறிவு சார்ந்த தர்க்கத்தையும் அவர் கைக்கொள்ளவில்லை.
பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பரிமாணங்களின் மீது முற்றிலுமாகச் சாய்வு
கொள்ளாமல், அதே சமயம் அவற்றைப் புறந்தள்ளவும் செய்யாமல் புனைவின்
இலக்கணத்துக்குட்பட்டு அணுகுகிறார். சற்றே நெகிழ்ச்சியான நவீனத்துவப்
பார்வையில் மகாபாரதத்தை அணுகுகிறார். இதன் மூலம் இன்றைய பார்வைக்கு
நெருக்கமாக மகாபாரதத்தைக் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
கரிசனமும் விமர்சனமும்
பிரபஞ்சனின் ரசனையும் தர்க்க அறிவும் கறாரான மதிப்பாய்வும் சமநிலை கொண்டவை.
அபிமன்யுவின் அநியாயமான மரணத்தை எண்ணிக் கசியும் அவர் பாண்டவர்களின்
அத்துமீறல்களைக் கண்டிக்கத் தவறவில்லை. திரௌபதிக்கு ஏற்பட்ட அவமானத்தைக்
கண்டு குமுறும் அவர் கர்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காகவும் தலைகுனிகிறார்.
பலராலும் வஞ்சிக்கப்பட கர்ணனை அனுதாபத்துடன் பார்க்கிறார். அதேசமயம்,
கர்ணனின் இழிவான செயல்களைக் கண்டிக்கத் தவறவில்லை.
குந்தி, காந்தாரி, மாத்ரி, சத்யமாபா எனப் பெண்களின் பாத்திரங்கள் மீது
கூடுதலான அக்கறை எடுத்துக்கொள்கிறார். பீஷ்மரின் வாழ்வின் வியர்த்தத்தை
வெளிப்படுத்துகிறார். போர் என்பது பொருளற்ற சாகசம் என்பதை மனம் பதைக்கச்
சொல்கிறார். கிருஷ்ணன் என்னும் மாபெரும் புதிரை மிக நுணுக்கமாக
ஆராய்கிறார். கிருஷ்ணனின் ஆளுமையின் வீச்சையும் ஆழத்தையும்
புரியவைக்கிறார். அர்ச்சுனன், சாத்யகி, அசுவத்தாமன், குந்தி, பலராமன்
முதலான பல ஆளுமைகள் குறித்து இதுவரை அதிகம் பேசப்படாத கோணங்களில்
பேசுகிறார். பாரதக் கதையில் பாம்புகளின் பங்கு, தேவர்கள், அசுரர்களின்
பங்கு முதலானவை பற்றி விசேஷக் கவனம் செலுத்துகிறார். வியாசரின் படைப்புத்
திறனையும் தத்துவப் பார்வையும் பிரமிப்புடன் பார்க்கிறார்.
மகாபாரதத்தை நுட்பமாகவும் அதன் பாத்திரங்களை விமர்சனபூர்வமாகவும் அணுகும்
வகையில் பிரபஞ்சன் மகாபாரதத்தை மறுவார்ப்பு செய்கிறார். மகாபாரதத்தின்
புனைவம்சத்தை அழகாக விளக்கி வியக்கவைக்கிறார். பிரபஞ்சன் மகாபாரதத்தின் பல
முடிச்சுகளை அவிழ்க்கவும், முடிவு தெரியாத பல கேள்விகளுக்கு முடிவு காணவும்
விழைகிறார். தருமனின் சூதாட்ட ஆசை, பாண்டுவின் திக்விஜயம், மாத்ரி
உடன்கட்டை ஏறியது, அரவானைப் பலி கொடுத்தது எனப் பல கேள்விகளுக்குப்
பிரபஞ்சன் தன்னளவில் முடிவுகளைக் கண்டு சொல்கிறார்.
ஒரு பக்கம் கறாரான அளவுகோல்களைப் பிரயோ கிக்கும் இவர் சில சமயம் தீர்ப்புகளை
வழங்குமளவுக்குப் போய்விடுகிறார். திருதராஷ்டிரனையும் துரியோதனனையும்
பெருமளவில் மோசமான மனிதர்களாகவே சித்தரிக்கிறார். கிட்டத்தட்ட எல்லாப்
பாத்திரங்களைப் பற்றியும் பொதுப் புத்தியில் படிந்த பிம்பங்களுக்கு மாற்றான
உண்மைகளைப் பேசும் பிரபஞ்சன், அந்த உண்மைகளைப் பேருண்மையின் பகுதிகளாகக்
காட்டிப் புதிய தரிசனங்களுக்கான வாசலைத் திறந்து வைக்கவில்லை. நல்லவன், கெட்டவன் என்னும் இருமைகளுக்குள் பலரைச் சிக்கவைத்து இடைப்பட்ட
குணங்களைப் புறக்கணித்துவிடுகிறார். பிரபஞ்சனால் பிரமிப்புடன்
பார்க்கப்படும் வியாசர் யாரைப் பற்றியும் எந்தத் தீர்ப்பையும் எழுதவில்லை.
அவர் எல்லா உண்மைகளையும் பதிவுசெய்கிறார். பாத்திரங்கள்தான் விமர்சனங்களை
முன்வைக்கின்றன. பிரபஞ்சன் பாத்திரங்களை மதிப்பிட்டுத் தீர்ப்பு வழங்கத்
தலைப்படுகிறார். இதுபோன்ற இடங்களில் மேலும் திறந்த அணுகுமுறையை அவர்
மேற்கொண்டிருக்கலாம். ஆழம் நோக்கிய பயணத்தைக் கோரும் பல இடங்களில்
பிரபஞ்சன் சுருக்கமாகவே முடித்துக்கொள்கிறார்.
மகாபாரதம் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்க ஒரு ஆயுள் போதாது. பிரபஞ்சன்
அந்த முயற்சியைச் செறிவாகத் தொடங்கியிருக்கிறார். இம்முயற்சியை அவர்
தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்போது மகாபாரதம் மேலும் துலக்கமாகத் தன்னை
வெளிப்படுத்திக்கொள்ளும்.
பாரதக் கதையை வழக்கமான பார்வைக்கு அப்பாற்பட்டு அணுக உதவுகிறது இந்நூல்.
இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் மகாபாரதத்திற்குள் தனக்கான தேடலை
முன்னெடுத்துச் செல்லலாம்.
மகாபாரதம்
பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம்
பழைய எண்.123 ஏ/புதிய எண். 243 ஏ,
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
விலை: ரூ.300,
சென்னை- 05
தொலைபேசி: 044 28482818
பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம்
பழைய எண்.123 ஏ/புதிய எண். 243 ஏ,
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
விலை: ரூ.300,
சென்னை- 05
தொலைபேசி: 044 28482818
No comments:
Post a Comment