Tuesday, October 27, 2015

நீ ஒரு தனிப்பிறவி




"உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி. ஆனால் அவற்றை நான் பின்பற்றாமல் இருந்ததற்காக என்னை மன்னியுங்கள். நான் என் வழியில் ஆடினேன்" என்று சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றபோது சேவாக் கூறினார். சேவாகுக்கு யாராலும் அறிவுரை சொல்ல முடியாது. ஏனென்றால் ஆகிவந்த அத்தனை விதிமுறைகளையும் அடித்து நொறுக்கியவர் சேவாக்.

அடித்து நொறுக்குவது என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். பந்து வீச்சாளரின் திறமை, அனுபவம், தடுப்பு வியூகம் என எதையும் மதிக்காதவர் அவர். முதல் ஓவரா, கடைசி ஓவரா, சதத்தை நெருங்கும் நேரமா என எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். போட்டி எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். அவருக்குத் தெரிந்ததெல்லாம் பந்தை அடிப்பது மட்டும்தான்.

20 ஓவர் போட்டிகளில் மட்டையாளர்கள் எல்லாப் பந்துகளையும் அடித்து ஆடவே விரும்புவார்கள். ஒரு நாள் போட்டியில் பெரும்பாலான பந்துகளுக்கு இந்தமரியாதைகிடைக்கும். ஆனால் டெஸ்ட் போட்டிகள் அப்படி அல்ல. அதில் விக்கெட் முக்கியம். சில சமயம் ரன்னே வராவிட்டாலும் பரவாயில்லை, விக்கெட் இழக்காமல் இருந்தால் போதும் என்பது முக்கியமாக இருக்கும். எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் இதெயெல்லாம் அனுசரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் சேவாக் மட்டும் விதிவிலக்கு. அவர் தொடக்கத்திலிருந்தே வீச ஆரம்பித்துவிடுவார். எந்தச் சூழ்நிலையிலும் அவர் அப்படித்தான் ஆடுவார். இந்த அணுகுமுறையால் அவருக்கு அதிக ரன்களும் கிடைத்திருக்கின்றன. பல முறை விக்கெட்டும் பறிபோயிருக்கிறது.

மட்டை என்னும் மந்திரக்கோல்

இப்படிப்பட்ட ஒருவரை அணியில் எப்படி வைத்திருந்தார்கள்? இவருக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு கிடைத்தது? சேவாக் ஒரு தனிப்பிறவி. அவரை எந்தக் கணக்கிலும் சேர்க்க முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் விலக்கவும் முடியாது. அதுதான் சேவாக்.

மட்டையை அதிரடியாகச் சுழற்றி ரன் அடிப்பவர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் ரன் எடுப்பதில்லை. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு உதாரணம். ஆனால் சேவாக் அப்படியல்ல. சர்வதேச அரங்கில் 38 சதங்களை அடித்திருக்கிறார். அவற்றில் 5 இரட்டைச் சதங்கள், இரண்டு முச்சதங்கள். ஆறு முறை 200 ரன்களைத் தாண்டியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 278 பந்துகளில் அவர் அடித்த 319தான் உலகிலேயே மிக வேகமாக அடிக்கப்பட்ட முச்சதம். உலகின் ஆகச் சிறந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாக .சி.சி. இந்தச் சதத்தை அறிவித்துள்ளது. 2008-ம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர் என்னும் விருதையும் இவர் பெற்றார்.

சேவாக் முழு வீச்சில் ஆடுவதைப் பார்க்கும்போது அவர் கையில் இருக்கும் மட்டை, மந்திரவாதியின் மந்திரக்கோல்போலத் தெரியும். பல சமயம் அவர் மட்டையில் பட்டதும் பந்து தடுப்பாளருக்கு சிரமம் கொடுக்காமல் எல்லைக் கோட்டை நோக்கி விரையும். பிறர் அடிக்கத் திணறும் பந்துகளை சேவாக் அநாயாசமாக அடித்துவிடுவார். அவருக்கென்று சிறப்பான ஷாட் எதுவும் இல்லை. பிறர் அடிக்கும் கட், ட்ரைவ், புல், ஸ்வீப் முதலான ஷாட்களில்தான் சேவாகும் ரன் அடித்தார். ஆனால் அவரால் மட்டும் பிறரைக் காட்டிலும் அதிகமான பந்துகளில் இத்தகைய ஷாட்களை அடிக்க முடிகிறது? நாடி நரம்புகளில் எல்லாம் கிரிக்கெட் உணர்வு ஊறிய பலர் இருக்கிறார்கள். கிரிக்கெட்டில் அவர்களுக்கு அத்தனையும் அத்துப்படி. ஆனால் அவர்களால்கூட முடியாதபடி சேவாக் மட்டும் எப்படி இந்த ஷாட்களை அதிகமாக அடிக்கிறார்?

சேவாகின் நாடி நரம்புகளில் ஊறியிருப்பது வெறும் கிரிக்கெட் அல்ல. அடிக்கும் வெறி. பந்தை அடித்துத் துவைக்கும் வெறி. இந்த வெறிதான் அவரது ஆளுமை. அதனால்தான் அவரால் எந்தப் பந்து வீச்சாளரையும் எந்தப் பந்தையும் எந்தக் களத்திலும் அடிக்க முடிகிறது.

சேவாக் கண்ணை மூடிக்கொண்டு மட்டையைச் சுற்றும் காட்டடி மட்டையாளர் அல்ல. கண்ணை மூடிக்கொண்டு ஆடும் ஒருவரால் 38 முறை 100 ரன்களைக் கடக்க முடியும் என்றால் அவருக்குக் கண்ணை மூடிக்கொண்டதும் ஞானக் கண் திறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அலாதியான ஆட்ட நுட்பம்

சேவாகின் ஆட்டம் பற்றிப் பேசுபவர்கள் அவருக்குத் தடுப்பு ஆட்டம் அவ்வளவாக வராது என்பார்கள். பந்தை ஏன் தடுக்க வேண்டும், அடித்தால் போதாதா என்று கேட்பவரிடம் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? அப்படிச் சொல்வதோடு அடி அடி என்று அடித்தும் காட்டினால் அதன் பிறகு என்ன சொல்ல முடியும்?

சேவாக் ஆட்ட நுட்பம் தெரியாதவர் அல்ல. அவர் காலை நகர்த்தாமலேயே ஆடுவதாகப் பலரும் சொல்கிறார்கள். காலையே நகர்த்தாமல் ஒருவர் இவ்வளவு ரன் அடிக்கிறார் என்றால் அந்தக் காலை எதற்காகத்தான் நகர்த்த வேண்டும் என்றுதான் பதில் சொல்ல வேண்டும். உண்மை என்னவென்றால், சேவாக் காலை நகர்த்தி ஆடுவார் என்பது மட்டுமல்ல, மிகவும் நுட்பமான முறையில் அதைச் செய்வார். எவ்வளவு நுட்பமாக என்றால், அதைப் பார்த்து இன்னொருவரால் அதைச் செய்ய முடியாது. அவ்வளவு நுட்பமாக. பந்தை அடிப்பதற்குத் தோதான இடத்தில் இருப்பதும் பந்தை எதிர்கொள்ளும் நேரமும்தான் ஒரு ஷாட்டின் வெற்றிக்கு முக்கியம். இவை இரண்டையும் சேவாக் அபாரமான கண் பார்வை, அதைத் துல்லியமாகப் பின்தொடரும் கை அசைவு ஆகியவற்றின் கச்சிதமான ஒருங்கிணைப்பினால் சாதித்துக்கொள்கிறார். கண் - கை ஒருங்கிணைப்புக்குப் பக்க பலமாகக் கால்கள் நகரும் - சிறிய அளவில், வேகமாக, நுட்பமாக.

சுழல் பந்தை ஆடும் நுட்பம் பற்றி அண்மையில் பேசிய ராகுல் திராவிட், "எங்கள் எல்லோரையும்விடச் சுழல் பந்துக்கு ஏற்ற வகையில் காலை நகர்த்தி ஆடுவதில் வல்லவர் சேவாக்" என்று சொன்னார். சுழல் பந்துகளை மிட் ஆன், மிட் ஆஃப், எக்ஸ்ட்ரா கவர், மிட் விக்கெட் ஆகிய இடங்களில் எல்லைக் கோட்டைத் தாண்டி சேவாக் அனுப்பும் பந்துகளைப் பார்த்தால் அவர் கால் முன்புறம் நகரும் அழகைக் காணலாம். பாயிண்டிலும் தேர்ட் மேனிலும் அவர் வெட்டி அனுப்பும் பந்துகளைப் பார்த்தால் மின்னலைப் பழிக்கும் வேகத்தில் அவரது பின் கால் நகரும் அதிசயத்தைக் காணலாம். முழு அளவில் வீசப்படும் பந்துகளை அடிக்கும்போது அவர் கால்களுக்கு ஓய்வு கொடுத்துவிடுவார். பந்து விழும் இடத்தில் துல்லியமான நேரத்தில் மட்டையைக் கச்சிதமாக இறக்குவார்.

அணியின் சுமையைக் குறைத்த சக்தி

அடிக்க முடியாத பந்துகளையும் அடிக்கும் வல்லமை படைத்த சேவாக் சில சமயம் மிகச் சாதாரணமான பந்துக்கு ஆட்டமிழந்துவிடுவார். நல்ல பந்துகளை அடிக்க முயன்று தவறுவதும் அடிக்கடி நடக்கும். குறிப்பாக ஸ்டெம்புக்கு நெருக்கமாக வந்து ஸ்விங் ஆகும் பந்துகளில் ஆட்டமிழப்பார். கணிக்க முடியாத அளவில் எழும்பி அல்லது தாழ்ந்து வரும் பந்துகளிலும் அவர் ஏமாந்துவிடுவார். பொதுவாக எல்லாருக்கும் இருக்கும் பிரச்சினைதான் இது என்றாலும் சேவாகுக்கு இவை கூடுதலாக இருக்கும். இதுபோன்ற பந்துகளை எதிர்கொள்வதற்கான முக்கியமான அம்சம் கவனத்துடனும் நிதானத்துடனும் ஆடுவது. இது அவரிடம் சுத்தமாக இல்லை.

ஆனால் அப்படியும் இவர் தொடர்ந்து அணியில் இடம் பெற்றார். தொடர்ந்து தன் பாணியிலேயே ஆடிக்கொண்டிருந்தார். இதற்குக் காரணம், இவரது அலாதியான ஆட்டத்தின் தாக்கத்தை அணி நிர்வாகம் உணர்ந்திருந்ததுதான். டெஸ்ட் பந்தயங்களில் நின்று ஆடிப் போட்டிகளை வென்றுதரும் பணியை நிர்வாகம் இவரிடம் எதிர்பார்க்கவில்லை. எதிரணிப் பந்து வீச்சாளர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் அளவுக்கு அடித்து நொறுக்கக்கூடிய இவரிடம் அதையே அணி விரும்பியது. அவர் அடிக்கும் ஷாட்கள் பந்து வீச்சாளர்களின் சமநிலையைக் குலைக்கக்கூடியவை. அந்நிலையில் அடுத்து வருபவர்களால் தங்கள் திறனை மேலும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். சேவாக் ஆடத் தொடங்கிய பின்தான் திராவிட் தனது அபாரமான பல இன்னிங்ஸ்களை ஆடினார். சேவாக் உச்சத்தில் இருந்த 2008-2009-ல்தான் இந்தியா டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றது. சேவாக் வந்த பிறகுதான் ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சுமை குறைந்தது. சச்சின், திராவிட், லட்சுமணனுடன் சேவாகை ஒப்பிட முடியாது. அதே சமயம் சேவாக் தந்த அதிரடித் தொடக்கம் இவர்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருந்தது.

2008-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியை நினைவுகூர்ந்தால் இதைத் தெளிவாக உணர முடியும். நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்குப் பின் சிறிது நேரத்தில் இங்கிலாந்து 311-8 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இந்தியா வெல்வதற்கான இலக்கு 387. அதுவரை இந்தியாவில் டெஸ்ட் போட்டியை வெல்ல எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் 276. சென்னையில் நான்கவது இன்னிங்ஸில் வெற்றிகரமாகத் துரத்தப்பட்ட அதிகபட்ச இலக்கு 155. அதே சென்னையில் 387 ரன் இலக்கு. ஆடுகளம் சுழல் பந்துக்குத் தோதாக உள்ளது. இங்கிலாந்தின் பந்து வீச்சு வலுவானது. போட்டி இங்கிலாந்தின் கையில் வந்துவிட்டது என்றே எல்லோரும் நினைத்தார்கள்.

எந்தப் பதற்றமும் இல்லாமல் களம் இறங்கிய சேவாக் ஆடுகளம், எதிரணி, ஆட்ட நிலவரம் ஆகிய எதைப் பற்றியும் கவலைப்படாமல் பந்து வீச்சைச் சிதற அடித்தார். 68 பந்துகளில் 83 ரன் அடித்தார். நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 131-1. இன்னும் 256 ரன் எடுத்தால் போதும். முழுதாக ஒரு நாள் மிச்சம் இருந்தது. அடுத்த நாள் கணிக்க முடியாத அளவில் எழும்பியும் தாழ்ந்தும் வந்த பந்துகளுக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. காம்பீர், திராவிட், லட்சுமணன் ஆகியோர் ஆட்டமிழந்தார்கள். ஆனால் சச்சின், யுவராஜ் அணியைக் கரைசேர்த்தார்கள். இந்தியா வென்றது. சச்சின் சதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். ஆனால் ஆட்ட நாயகன் விருது 83 ரன் அடித்த சேவாகுக்கே வழங்கப்பட்டது. காரணம் அவ்வளவு விரைவாக அவர் அடித்த அந்த ரன்கள்தான் வெற்றிக்கு முக்கியக் காரணம். ஐந்தாம் நாளுக்கான இலக்கை 300 ரன்களுக்குக் கீழே கொண்டுவந்தது மகத்தான பங்களிப்பு.

கண்ணிமைக்கவும் இடம் தராமல் ரசிகர்களை மகிழ்வித்த அந்த மட்டை இன்று ஓய்வுபெற்றுவிட்டது. ஓய்வை அறிவிப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னதாகவே சேவாகின் மட்டையின் திறன் மங்கிவிட்டது. கண் - கை ஒருங்கிணைப்பும் உடலின் வேகமும் சிறிதளவு குறைந்தாலும் பழையபடி ஆட முடியாது. அதுபோன்ற தருணங்களில் தன் ஆட்டத்தில் மாற்றம் செய்துகொண்டு தன்னை மறுகண்டுபிடிப்பு செய்துகொண்டவர்கள் இருக்கிறார்கள். 35 வயதுக்குப் பிறகு மீண்டும் உச்சம் பெற்ற சச்சின் ஒரு உதாரணம். 38-வது வயதில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்னும் .சி.சி. விருதைப் பெற்றார் சச்சின். பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள், வயது ஆகிய தடைகளைத் தாண்டி அவரால் தன்னை மாற்றிக்கொண்டு தன் ஆட்டத்தை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள முடிந்தது. சேவாகால் அது முடியவில்லை. காரணம் உள்ளுணர்வையும் வேகத்தையும் நம்பும் அவரது அலாதியான பாணி. அதுவே அவரது பலம். அதுவே பலவீனம்.

ஆனால், அந்தப் பாணிதான் அவரை சச்சின், திராவிட் ஆகியோரைக் காட்டிலும் அதிக இரட்டைச் சதங்களைக் குவிக்க உதவியது. அவர்கள் அடிக்காத முச்சதங்களை அடிக்க உதவியது. ஒப்பிட யாருமற்ற விதத்தில் ஆடிய சேவாக் கிரிக்கெட் அரங்கில், குறிப்பாக டெஸ்ட் ஆட்டத்தில், தனிப் பிறவியாகவே வரலாற்றில் நினைவுகூரப்படுவார்.

No comments:

Post a Comment