Saturday, July 2, 2011

அடர்த்தியான ஆரண்ய காண்டம்

ஆரண்ய காண்டம் படம் பார்த்ததும் நண்பர்களுக்கு அதைப் பரிந்துரைக்கத் தொடங்கினேன். அவசியம் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்தப் படம் பிடித்திருந்தது. பரிந்துரைத்த எனக்கும் அதை ஆமோதித்த என் நண்பர்களுக்கும் படத்தின் மீது விமர்சனமற்ற பாராட்டுணர்வு எதுவும் கிடையாது. ஆரண்ய காண்டம் பல குறைகள் கொண்ட படம்தான். குறிப்பாக அதன் திரைக்கதையில் ஏகப்பட்ட பிரச்சினைகள். இதைப் பற்றி எழுத்தாளர் ராஜன் குறை தன் முகநூலில் விரிவாக எழுதியிருக்கிறார். திரைக்கதையின் பிரச்சினைகளை அப்பதிவு விரிவாகப் பேசுவதால் அதை விட்டுவிட்டு மற்ற விஷயங்களைப் பற்றிச் சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ராஜன் குறை குறிப்பிடும் குறைபாடுகளில் பெரும்பாலானவை முக்கியமானவை என்று உணர்கிறேன். ஆனாலும் இது முக்கியமான படம் என்றே கருதுகிறேன். காரணம் இந்தப் படத்தின் காட்சி மொழியும் சில்லறைத்தனங்கள் இல்லாமல் படம் எடுத்த விதமும். நிழல் உலகம், ரவுடிக் குழுக்கள் குறித்த நூற்றுக்கணக்கான படங்கள் வந்துவிட்டன. செல்வராகவனின் புதுப்பேட்டை, வெற்றி மாறனின் பொல்லாதவன் போன்ற சில படங்களில் சென்னை நகரின் ரவுடிகளின் ராஜ்ஜியம் ஓரளவு யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆரண்ய காண்டத்தையும் அந்த வரிசையில் சேர்க்கலாம். ஆனால் திரையில் காட்சிப்படுத்தப்படும் நிலக்காட்சிகளும் அவற்றின் வண்ணங்களும் சென்னைக்கு மிகவும் அந்நியமாக இருப்பதல் அதைச் சென்னையோடு தொடர்புபடுத்திக்கொள்வது கடினமாக இருக்கிறது. எனவே புவியியல் சார்ந்த அடையாளத்தை மறந்துவிட்டே படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது இரண்டு ரவுடிக் குழுக்கள், அவற்றுக்கிடையே நடக்கும் தொழில் போட்டி, குழுவினருக்குள் நடக்கும் உள்குத்து வேலைகள் ஆகியவற்றைப் பற்றிய படம் என்னும் அளவில் படத்தோடு ஒன்ற முடிகிறது. சீண்டப்படும் சுய படிமங்கள் சார்ந்த ஆக்ரோஷங்களும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வின் வெற்றி, தோல்விகள் அவரவரது அண்மையச் சூழலைப் பாதிக்கும் விதமும் பிழைத்திருப்பதற்கான வழியே ஆகச் சிறந்த வாழ்க்கை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதையும் படம் வலுவாகவே சொல்கிறது.

திரைக்கதையில் தர்க்க ரீதியான பிழைகள் உள்ளன. ஆனால் காட்சியமைப்புகளும் அவை எடுக்கப்பட்ட விதமும் வலுவாக உள்ளன. கதையின் திருப்பங்கள் பார்வையாளரின் மூளையை மதித்து, நுட்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அடியாட்களின் உரையாடல்கள் யதார்த்தத்துக்கு நெருக்கமாக உள்ளன. பாத்திரப் படைப்புகளில் ஜமீனின் வாரிசாக வருபவர் மற்றும் அவரது மகனின் பாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. அண்மையில் வந்த திரைப்படங்களில் இந்த ஜமீன் பாத்திரத்துக்கிணையான ஒரு பாத்திரத்தைச் சட்டென்று சுட்டிக்காட்டிவிட முடியவில்லை. ஆடுகளத்தில் வரும் பேட்டைக்காரரை வேண்டுமானால் சொல்லலாம். தேவையில்லாமல் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளும் ஜமீன், வெளியே வந்ததும் தான் ஒன்றுமே செய்யாததுபோலப் புலம்பும் இடம் அவரது பாத்திரத்தைக் கச்சிதமாக உணர்த்துகிறது. சப்பை, சுப்பு ஆகிய பாத்திரங்கள் அந்த அளவுக்கு வலுவானவையாகத் தோன்றவில்லை. அவற்றின் நாடகீய அம்சம் யதார்த்தத்தைக் குலைத்துவிடுகிறது.

சில காட்சிகள் மனத்தில் அழியாமல் நிற்கின்றன. படுக்கையில் தோல்வி அடையும் ஏமாற்றமும் ஆத்திரமும் கொப்பளிக்கும் ஜாக்கி ஷ்ராஃபின் முகம் அவற்றில் ஒன்று. அப்பாவின் விவஸ்தையற்ற போக்கால் சிக்கலில் மாட்டிக்கொள்வதை எண்ணிக் கோபப்படும் பையன் அழுதுகொண்டே அப்பாவைப் போட்டு அடிக்கிறான். அப்பா அடிவாங்கிக்கொண்டே பையனைக் கட்டிப்பிடித்து அழுகிறார். அடித்துக்கொண்டே இருக்கும் பையன் ஒரு கட்டத்தில் அழுகை பொங்கிவர அப்பாவைக் கட்டிப்பிடித்துக்கொள்கிறான். இருவரும் குலுங்கி அழுகிறார்கள். இங்கே காட்சி உறைந்து நிற்கிறது. மிக அழுத்தமான காட்சிப் படிமம் இது.

காட்சி மொழி சிறப்பாக அமைந்துள்ள இந்தப் படத்தில் உரையாடல்கள் குறைவாகவும் அழுத்தமாகவும் உள்ளன. ‘உங்க அப்பாவை உனக்கு ரொம்பப் பிடிக்குமோ?’ என்ற கேள்விக்கு அந்தப் பையன் ‘அப்படி இல்ல... ஆனா அவர்தான் எங்க அப்பா’ என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவான்.

படம் இதே வகைமையைச் சேர்ந்த சில வெளிநாட்டுப் படங்களை நினைவுபடுத்துகிறது என்பது உண்மைதான். ஆனால் தமிழில் பெரிதாகப் பேசபப்டும் பல படங்களின் மீதும் அந்த விமர்சனத்தை வைக்கலாம். தமிழில் ரவுடியிஸம் பறிய படங்களின் பொதுத்தன்மையிலிருந்து மேலெழும்பி நிற்பது இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். பார்வையாளர்களை அசத்துவதற்காக வலிந்த காட்சிகளைத் திணிக்காமல், சில்லறைத்தனங்கள் இல்லாமல், மிகை நாயக அம்சங்கள் இல்லாமல் இதைச் சாதித்திருப்பது இந்தப் படத்தின் வெற்றி. யுவன் ஷங்கர் ராஜா கற்பனை வளம் மிகுந்த ஓசைகளாலும் பொருள் பொதிந்த மௌனங்களாலுல் படத்துக்கு இசைப் பரிமாணத்தைக் கூட்டியுள்ளார்.

படத்தின் முக்கியமான குறை என்று எனக்குப் படுவது, படத்தின் ஆதாரமான அம்சம் படம் தேர்ந்துகொண்ட சட்டகத்தை விட்டு மேலெழும்பிப் பொதுத்தன்மை பெறத் தவறுவதுதான். எது தேவையோ அதுவே தர்மம் என்னும் சொற்களின் விளக்கமாக விரியும் படம், இந்தச் சொற்கள் முன்னிறுத்தும் வாழ்க்கைப் பார்வை பெரும்பாலான மக்களிடம் தொழிற்படுவதைக் கோடிகாட்டத் தவறுகிறது. ஒரு கலைப் படைப்பு அது தேர்ந்துகொண்ட களத்தில் தீவிரமாகவும் ஆழமாகவும் பயணம் செய்யும்போது அதன் உள்ளார்ந்த அம்சம் குறிப்பிட்ட களத்தைத் தாண்டி மேலெழும்பிவிடும் அற்புதம் நிகழ்கிறது. அந்த அற்புதம் ஆரண்ய காண்ட்த்தில் நிகழவில்லை. படத்தின் ஆதாரமான செய்தியும் அதில் பிரதிபலிக்கப்படும் வாழ்க்கையும் படத்தின் சட்டகத்துக்குள் நின்றுவிடுவது படத்தின் முக்கியமான குறை அல்லது போதாமை. ராஜன் குறை சுட்டிக்காட்டும் திரைக்கதைக் குறைகளைவிட முக்கியமானதாக எனக்கு இது படுகிறது.

இப்படிப் பல அம்சங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். படத்தைக் குறை சொல்பவர்களில் சிலர் அது குறித்த மிகையான பாராட்டுதல்களுக்கு எதிர்வினை ஆற்றும் முனைப்புடன் பேசுகிறார்கள். இந்தப் படத்தை உலகப் படம் என்றெல்லாம் கொண்டாட வேண்டியதில்லை. கறாராகச் சொல்லப்போனால் உலகப் படம் என்பதே தவறான ஒரு சொற்றொடர். உலகத் தரமான படம் அல்லது படைப்பு என்று சொல்லலாம். ஆரண்ய காண்டத்தை அப்படிச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் தமிழ்ப் பின்னணியில் இது ஒரு முக்கியமான படம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. வாராவாரம் திரையரங்குகளின் திரையில் கடை விரிக்கப்படும் அத்தனை குப்பைகளையும் தவறாமல் பார்க்கும் நிர்ப்பந்த்த்துக்கு ஆளானவன் என்ற முறையில் இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். குப்பைகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டுத்தான் குன்றிமணிகளைப் பொறுக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட மணிகளில் ஒன்று ஆரண்ய காண்டம். படத்தைப் பற்றி என்ன குறை சொன்னாலும் அதை ஒரு பாசாங்கான படம் என்று சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.

தமிழில் அகிரா குரோசவாக்களோ விக்டோரியா டி சிகாக்களோ ஏஞ்சலோபோலோக்களோ சத்யஜித் ராய்களோ அடூர் கோபாலகிருஷ்ணன்களோ கிடையாது. அப்படிப்பட்டவர்கள் உருவாவதற்கு இசைவான காலம் இருந்தபோதே யாரும் உருவாகவில்லை. இப்போதைக்கு அப்படிப்பட்ட கலைஞர்கள் உருவாவதற்கான சூழல் இங்கே இல்லை. இந்தப் பின்னணியில்தான் தமிழின் புதிய முயற்சிகளைப் பற்றிப் பேச வேண்டும். அப்படிப் பார்க்கும்போது காட்சி மொழியிலும் பாத்திர வார்ப்பிலும் உரையாடல்களிலும் காட்சிகளை எடுத்த விதத்திலும் கவனத்துக்குரிய படமாக ஆரண்ய காண்டத்தை உருவாக்கியிருப்பதற்காக இயக்குநர் குமாரராஜாவையும் தயாரிப்பாளர் சரணையும் வஞ்சனை இல்லாமல் பாராட்டலாம்.

1 comment:

  1. என்னுடைய முக்கப்புத்தக குறிப்பை கவனப்படுத்தியதற்கு நன்றி. தேவை-தர்மம் வாக்கியம் குறித்தும் முதலிலேயே ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். https://www.facebook.com/note.php?note_id=231284286884076. ரசிக்கக் கூடிய தருணங்களை அவரவர் அனுபவம் உருவாக்குவது நல்லதுதான் என்பதால் அதுகுறித்து விவாதிப்பது அவசியமில்லை. ஆனால் என்னுடைய முக்கியமான அக்கறை எந்த விதமான வித்தியாசத்தை நாம் தமிழ் படங்களில் எதிர்பார்க்கிறோம் என்ற கேள்விதான். கதையாடல் முடிவு என்ற கோணத்தில் பார்த்தால் "பூ" திரைப்படம் போன்ற வித்தியாசமான படம் தமிழில் வேறு ஒன்று இருக்குமா என்று தெரியவில்லை. கட்டாந்தரையில் மணமான பெண் தன் மாறாக் காதலுக்கு உரியவனான மாமனின் வாழ்வை நினைத்துக் கதறும்போது அவர்கள் வாழ்க்கைக்கு எந்த ஒரு தீர்வையும் கொடுக்காமல் படம் முடிகிறது. "யாருக்காக அழுதான்" படத்தை வேண்டுமானால் ஒப்பிடலாம். ஆனால் யாருக்காக அழுதான் படத்தை விட பலநூறு மடங்கு செய்நேர்த்தியும், கலை நேர்த்தியும் கொண்டது பூ திரைப்படம். என் கவலையெல்லாம் தமிழ் வாழ்வின் கூறுகளை மூலப்பொருளாகக் கொள்ளாமல் அன்னிய சூழலையும், கதையாடலையும் மூலப்பொருளாகக் கொள்ளும் வித்தியாசங்களை வரவேற்பது தவறான திசையில் படைப்பாற்றலை வழிநடத்திவிடக்கூடாது என்பதுதான். அதன் பொருட்டே ஆரண்ய காண்டம் கதையாடல் தர்க்கத்தைப் பற்றி எழுதினேன் என்பதை விளக்கவே இந்தக் குறிப்பு.

    ReplyDelete