Thursday, June 2, 2022

சொல்லும் பொருளும் கொஞ்சம் சுரணையும்!


சொற்களின் வலிமை நாம் நினைப்பதைவிடவும் தீவிரமானது. இதை உணர்த்தும் விவாதம் ஒன்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதிமுகவின் தலைவர்களை விமர்சித்து துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி சொன்ன ஒரு சொல் இப்போது விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. குருமூர்த்தியின் விமர்சனம் பற்றிய பேச்சைக் காட்டிலும் இந்தச் சொல்லைப் பற்றிய பேச்சே காட்சி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாக உள்ளது.

அதிமுக தலைவர்களை Impotent leaders என்று குருமூர்த்தி விமர்சித்திருந்தார். ஆண்மையற்ற தலைவர்கள் என குருமூர்த்தி விமர்சித்ததாகச் சில ஊடகங்கள் பதிவுசெய்தன. இதற்குத் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாகப் பதிலடி கொடுத்தார். “நாங்கள் ஆண்மையற்றவர்கள் அல்ல, காங்கயம் காளைகள்என்றார்.

இதற்குப் பதிலளித்த குருமூர்த்தி, Impotent என்னும் சொல்லுக்குத் திறனற்ற, ஆற்றல் இல்லாத என்றுதான் பொருள் என்று விளக்கமளித்தார். அரசியல் சார்ந்த விமர்சனங்களில் இந்தச் சொல் திறனற்ற என்னும் பொருளில் பயன்படுவது குறித்து எழுத்தாளர் பி..கிருஷ்ணன் முகநூலில் பதிவிட்டிருந்தார். பாலியல் சார்ந்த சில சில சொற்களையும் குறிப்பிட்ட அவர், இதே சொற்கள் மாறுபட்ட பொருளில் பயன்படுத்தப்படுவதுண்டு என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குருமூர்த்தியின் பதிலுக்கும் ஜெயக்குமார் பதிலளித்தார். Impotent என்றால் திறனற்ற என்னும் பொருள் இருக்கலாம். ஆனால், அது நடைமுறையில் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றார். புறம்போக்கு என்பதற்கு விவசாயத்துக்குப் பயன்படாத நிலம் என்றும் பொது சமுதாய பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டு நிலவரி வசூலிக்காத நிலம் என்றும் அர்த்தம். அதற்காக, புறம்போக்கு என்று சொன்னால் சும்மா இருப்பார்களா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சூழலில் புழங்கும் பொருள்

ஒரு சொல்லுக்கு நிறைய பொருள் இருக்கலாம். பயன்பாட்டு ரீதியில் ஒரு சொல்லுக்கு பல senseகள் இருக்கலாம். ஆனால், ஒரு சமூகத்தில், ஒரு காலத்தில் அல்லது ஓர் இடத்தில் அந்தச் சொல் பிரதானமாக எந்த அர்த்தத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறதோ அந்த அர்த்தத்தில்தான் அதை மற்றவர்கள் அர்த்தம் செய்துகொள்ள முடியும். அதுவும், அந்தச் சமூகத்திலிருந்தே ஒருவர் மற்றவர்மீது அந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது அதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாதுஎன்று எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

Impotent என்கிற சொல்லுக்கு நமது சமூகத்தில் ஆண்மையற்றவர் என்பதுதான் முதன்மையான பொருள். அதன் வேறு பல senses களை நாம் அகராதியில் பார்த்துவேண்டுமானால் அறிந்துகொள்ள முடியுமே ஒழிய, பொதுப் புழக்கத்தில் அப்படி இல்லை என்று சொல்லும் செந்தில்நாதன், “யாரோ ஒரு வெளிநாட்டவர் நம்மைப் பற்றி இப்படி ஒரு சொல்லை உதிர்க்கிறார் என்றால், அவர் வேறு ஒரு senseஇல் அதைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று வாதாட முடியும். ஆனால், குருமூர்த்தி என்கிற உள்ளூர்க்காரர் சக உள்ளூர்க்காரர்களான பழனிசாமியையும் பன்னீரையும் இந்த வார்த்தையைக் கொண்டு அடையாளப்படுத்தினால் அதற்கு ஆண்மையற்றவர் என்று மட்டுமே பொருள் எடுத்துக்கொள்ளப்படும்என்கிறார்.

ஆங்கில மரபும் உள்ளூர்ச் சூழலும்

குருமூர்த்தி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்தில் அரசியல், பொருளாதாரம், இந்துத்துவம் முதலானவை குறித்துப் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதே பொருள்களில் பல உரைகளை ஆற்றியிருக்கிறார். இப்போது துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும், இவருடைய வெளிப்பாட்டு மொழி மிகுதியும் ஆங்கிலமாகவே இருந்துவருகிறது. துக்ளக்கில் இவர் எழுதிவந்த பத்திகளையும் தற்போது எழுதிவரும் கட்டுரைகளையும் இவரே தமிழில் எழுதுகிறாரா அல்லது அவை மொழியாக்கம் செய்யப்பட்டவையா என்பது தெரியாது. ஆனால், அவரது ஆங்கில அறிவைப் பற்றி ஐயம் கொள்ள முடியாத அளவுக்கு அவரது எழுத்தும் பேச்சும் பதிவாகியிருக்கின்றன.

பெரும்பாலும் ஆங்கிலத்தையே தனது தொடர்பு மொழியாகக் கொண்டுள்ள இவர், Impotent என்னும் சொல் திறனற்ற என்னும் பொருளில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுவது சகஜம்தான் எனச் சொல்லும்போது அதில் உள்ள நியாயத்தை நாம் மறுக்க இயலாது. அதேசமயம், இந்தச் சொல்லுக்கு ஆண்மையற்றவர் என்னும் பொருள் இருப்பது தனக்குத் தெரியாது என்று அவரால் சொல்ல முடியாது என்பதையும் மறுக்க முடியாது. ஆண்மையற்றவர் என்னும் பொருள் இருப்பது தெரிந்தும், ஆங்கில மரபை அடியொற்றி அவர் திறனற்ற என்னும் பொருளில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே அவருக்கான நியாயமாக இருக்க முடியும்.

Impotent என்பது மட்டுமல்ல. கிட்டத்தட்ட ஒவ்வொரு சொல்லுமே ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் கொண்டதுதான். ஒரு சொல்லின் பல விதமான பொருள்களில் ஏதேனும் ஒன்று வில்லங்கமானதாக, இழிவுபடுத்துவதாக, விபரீதமானதாக இருந்தால் அந்தச் சொல்லைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. விவாதத்துக்குள்ளான சொல் பாலியல் பரிமாணம் கொண்டது என்பதால் அதேபோன்ற ஓர் எடுத்துக்காட்டை வைத்து இதைத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

படுத்துக்கொள் என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். தனியாகப் பார்த்தால் இதில் எந்த வில்லங்கமும் இல்லை. ஆனால், ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் படுத்துக்கொண்டான் என எழுதினால் அதற்கு வேறு பொருள் வந்துவிடுகிறது. ஆங்கிலத்தில் Sleep with என்னும் தொடர் இதேபோன்ற பொருளைக் கொடுக்கிறது. Sleep அல்லது படு என்னும் சொல் சாதாரண பொருளையே தருகிறது. இன்னாருடன் படுத்தல் (sleep with someone) என்று பயன்படுத்தும்போது வேறு பொருள் கிடைத்துவிடுகிறது. உடன் படுத்தல் என்பதை அம்மாவையும் குழந்தையையும் வைத்துச் சொல்லும்போது அதில் சிக்கல் வருவதில்லை. வயதுக்கு வந்த ஆணையும் பெண்ணையும் வைத்துச் சொல்லும்போது பாலியல் சார்ந்த சொல்லாகவே இது பொருள் கொள்கிறது.

எழுத்தாளரை விடுங்கள், பொறுப்புள்ள ஒரு மனிதர் உடன் படுத்தல் அல்லது sleep with என்னும் சொல்லை கவனமில்லாமல் பயன்படுத்துவாரா? அப்படிப் பயன்படுத்திய பிறகு, அதனால் ஒருவர் புண்படுவதாகச் சொன்னால், தன் நோக்கத்தை மீறி அது நிகழ்ந்துவிட்டது என்று கூறி வருத்தம் தெரிவிப்பாரா அல்லது தான் செய்ததை நியாயப்படுத்துவாரா?

குருமூர்த்தி ஆங்கிலத்திலேயே வாசித்து, எழுதி, பேசி, சிந்தித்து வாழ்ந்துவரும் தமிழ் ஆங்கிலேயராக இருக்கலாம். ஆனால், தான் புழங்கும் சூழலில் ஒரு சொல் எப்படிப் புரிந்துகொள்ளப்படும் என்பது குறித்த புரிந்துணர்வு அவருக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தனது வாழ்நிலத்தின் பண்பாட்டுச் சூழல் குறித்த புரிதலில் அவருக்குப் போதாமை இருக்கிறது என்னும் முடிவுக்கே நாம் வர வேண்டும். இந்தப் போதாமை வெறும் மொழி சார்ந்த பலவீனம் அல்ல. தான் வாழும் பண்பாட்டுச் சூழலின் மீதான அவரது அக்கறையில் உள்ள போதாமையின் அடையாளம். சூழல் குறித்த நுண்ணுணர்விலும் சுரணையிலும் இருக்கும் குறைபாட்டின் அடையாளம்.

ஆங்கிலத்தில் இந்தப் பழக்கம் உள்ளது என்னும் வாதத்தைக் காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் கேள்விக்கு உட்படுத்துகிறார். “ஆங்கிலத்தைச் சமகாலப் போக்கறிந்து பயன்படுத்துபவர்கள், பெண்ணியவாதிகள், மொழிசார்ந்த விமர்சனத்தையும் கணக்கில்கொள்வார்கள். ஆண் மையச் சொற்களைத் தவிர்ப்பார்கள். Market penetration என்பது நேற்று இயல்பான பயன்பாடு. இப்போது அதைத் தவிர்ப்பது நலம். Potent அல்லது வீரியம் ஆகியவை அத்தகைய சொற்கள்தாம். Manliness, seminal போன்றவையும் தவிர்க்கப்பட வேண்டிய சொற்களேஎன்று சொல்லும் கண்ணன், “இவற்றின் பயன்பாடு மொழியின் ஆணாதிக்கப் பண்பை வலுப்படுத்துகிறது. மொழியிலும் தோற்றத்திலும் ஆண்மையைப் பிரகடனப்படுத்துதல் தமது ஆற்றல் பற்றிய பதற்றத்தின் வெளிப்பாடுஎன்கிறார்.

இழிவுபடுத்தும் சொற்கள்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியம் சுவாமி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை International Pariah என்று விமர்சித்தார். இது குறிப்பிட்ட சாதியினரை இழிவான பொருளில் பயன்படுத்தும் சொற்பிரயோகம் என எதிர்ப்பு எழுந்தபோது ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் Pariah என்னும் சொல்லுக்கு விலக்கப்பட்டவர், ஒதுக்கப்பட்டவர் என்னும் பொருள்தான் இருக்கிறது என்று சுவாமி சப்பைக்கட்டு கட்டினார். அதிலுள்ள சாதியப் பரிமாணத்தையும் சாதி சார்ந்த சொற்களின் தீய விளைவுகளையும் பற்றிப் பலரும் சொன்ன பிறகு, தனக்கு அது தெரியாது என்று சொன்ன சுவாமி, அந்தச் சொல்லையே நீக்கும்படி கோரி நான் ஆக்ஸ்ஃபோர்டு அகராதிக் குழுவினருக்குக் கடிதம் எழுதுவேன் என்றார். அவர் எழுதினாரா என்பது தெரியாது. ஆனால், அந்தச் சொல் இன்னமும் அந்த அகராதியில் இருக்கிறது. இணையத்திலும் அதற்கான பதிவு இருக்கிறது.

இந்த உதாரணத்தில் ஆறுதலளிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், முதலில் நியாயப்படுத்தினாலும், பிறகு தன் தவறை சுவாமி ஒப்புக்கொண்டார்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியைநீச் ஆத்மிஎன்று மணி சங்கர் அய்யர் குறிப்பிட்டதையொட்டி பெரும் சர்ச்சை எழுந்தது. இழிவான மனிதர் என்று பொருள்படும் இந்தச் சொல் வடஇந்தியாவின் பல பகுதிகளில் சாதி ரீதியாக இழிவுபடுத்தும் சொல்லாகவே இருக்கிறது. அத்தகைய பொருளில் சொல்லவில்லை என மணி சங்கர் சப்பைக்கட்டு கட்டினாலும், தேசிய அரசியலில் பல ஆண்டுகளாக ஊறியிருக்கும் அவருக்கு இந்தச் சொல்லின் சாதியப் பரிமாணம் தெரியாது என்று நம்ப இடமில்லை. காங்கிரஸ் கட்சி உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுத்தது இதில் ஆரோக்கியமான அம்சம்.

பிழைபட்ட பார்வைகளின் வெளிப்பாடு

ஒரு சூழலில் புழங்கும் சொற்கள் அந்தச் சூழலைப் பற்றிப் பல்வேறு அம்சங்களை நமக்கு உணர்த்தக்கூடியவை. சமூக விரோதிகளுக்கு எதிரான சட்டத்துக்குக் குண்டர் தடுப்புச் சட்டம் எனப் பெயரிட்டிருப்பது குண்டாக இருப்பவர்கள் குறித்த பொதுச் சமூகத்தின் ஒவ்வாமையைக் குறிக்கும் அம்சத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆண்மை என்னும் சொல்லை வீரம், செயல் திறன், துணிச்சல் போன்ற பண்புகளோடு தொடர்புபடுத்தும் பழக்கம், ஆண்களுக்கு மட்டுமே இந்தப் பண்புகள் இருக்கும் என்னும் பொதுப் புத்தியின் மதிப்பீட்டிலிருந்து பிறந்தது. வீரமும் செயல்திறனும் துணிவும் பெண்களுக்கு இருக்காது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், ஆண்மை என்று சொன்னதும் இந்தப் பண்புகள் நம் மனதில் குதித்துக்கொண்டு வருகின்றன என்றால் அது ஆண்பெண் குணங்கள் குறித்த நமது பிழைபட்ட பார்வைகளின் வெளிப்பாடுதானே?



Impotent என்னும் சொல்லுக்கு ஆண்மையற்றவர் என்பதாக அமைச்சரும் பிறரும் பொருள் கொண்டு எதிர்ப்புத் தெரிவித்ததில் நியாயம் இருக்கிறது. அதே சமயம், அதற்கு பதில் சொல்லும்போது, நாங்கள் காங்கயம் காளைகள் என்று பதில் சொல்வது விவாதத்தை மலினமான தளங்களுக்கே கொண்டுசெல்கிறது. ஆண்மையற்ற என்ற பொருள் வரும் சொல்லை வைத்துக்கொண்டு ஒருவர் அரசியல்வாதிகளை விமர்சிக்கிறார் என்றால் இத்தகைய சொல்லுக்கு அரசியலில் என்ன இடம் என்று கேட்க வேண்டுமே தவிர, எங்களுக்கு ஆண்மை இருக்கிறது என்று காளை மாட்டை சாட்சிக்கு அழைத்துப் பிரகடனம் செய்யக் கூடாது.

குருமூர்த்திக்குக் கண்டனம் தெரிவித்த வேறு சில பதிவுகளும் மொழியில் இருக்கும் விபரீதங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத நிலையிலேயே வெளிப்பட்டன. “… இவர்கள் ஆண்மையற்றவர்கள் என்பதை அறிய குருமூர்த்தி கையாண்ட உத்தி என்ன?” என ஒரு பதிவை முகநூலில் பார்க்க முடிந்தது. மொழியிலும் சமூகத்திலும் நிலவும் ஆண்மை என்னும் கருத்தாக்கத்தையும் அதன் பின்னால் உள்ள பார்வையையும் கேள்விக்குட்படுத்துவதற்குப் பதிலாக அந்தப் பார்வையை அடியொற்றியதாகவே இத்தகைய எதிர்வினைகள் உள்ளன.

ஒருவரது குணத்தையும் திறனையும் குறிப்பிட ஆண்மை, பொலிகாளை முதலான சொற்களைப் பயன்படுத்துவது பிற்போக்குத்தனமானது என்பதை உணரும் நவீனத்துவப் பார்வையும் பகுத்தறிவுச் சிந்தனையும் இருந்தால் இந்த விவாதம் வேறு தளத்தில் நிகழும்.

சொற்கள் தரும் நிரந்தரக் களங்கம்

சொற்களின் வலிமை நாம் நினைப்பதைவிடவும் தீவிரமானது. சில சொற்கள் சொல்லப்படுபவரின் ஆளுமையின் மீது அழுத்தமாகப் படிந்துவிடும். அதைப் பயன்படுத்தியவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டோ கேட்காமலோ அதைக் கடந்து சென்றுவிடலாம். ஆனால், சில அவதூறுகள் எந்த மறுப்பினாலும் மன்னிப்பினாலும் கழுவ முடியாதவை. நாளுக்கு நாள் மெலிந்துவரும் ஒருவரைப் பார்த்து அவருக்குப் பால்வினை நோய் இருக்கலாம் என்று ஒருவர் பகிரங்கமாகச் சொல்லிவிட்டுப் பிறகு மன்னிப்புக் கேட்டுவிடலாம். ஆனால், அந்தச் சொல் அந்த மனிதரின் வாழ்நாள் முழுவதும் அவரைத் துரத்தக்கூடும்.

சொல்லின் வலிமையை அலட்சியப்படுத்துவது சக மனிதர்களுக்குச் செய்யும் அநீதி. அதிலும் எழுத்தாளர்கள் அப்படிச் செய்வது சக மனிதர்களுக்குச் செய்யும் அநீதி என்பதோடு எழுத்துக்குச் செய்யும் துரோகம்.


நன்றி: மின்னம்பலம்.காம்
டிசம்பர் 29, 2017